அறிவும், துணிவும்.. எதிரெதிர் துருவங்களாய்.. பாலசந்தரின் நாயகிகள்!

சென்னை: இயக்குநர் பாலசந்தரின் பட நாயகிகள் எப்போதுமே அறிவையும், துணிவையும் பேசுவர்களாகவே அறியப்பட்டவர்கள். ஆனால், அவரது படங்களில் பெரும்பாலும் எதிரெதிர் துருவங்களாக பெண் பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக நாயகி துணிச்சலுடன் அநீதிக்கு எதிராக போராடுபவளாக சித்தரிக்கப் பட்டிருக்கும் சூழலில், அதே படத்தில் மற்றொரு பெண் கதாபாத்திரம் அஞ்சி ஒடுங்கும் வகையில் அமைந்திருக்கும்.

அறிவும், துணிவும்.. எதிரெதிர் துருவங்களாய்.. பாலசந்தரின் நாயகிகள்!

காலத்தால் அழியாத அவரது காவியங்களில் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த சில நாயகிகள் குறித்து ஒரு பார்வை...

அவள் ஒரு தொடர்கதை...

சுஜாதா நாயகியாக அறிமுகமான இப்படத்தில் குடிகார அண்ணன், ஓடிப் போன தந்தை இவர்களால் குடும்ப பாரத்தை சுமக்கும் கதாபாத்திரம். தியாகம், எதையும் எதிர் கொள்ளும் துணிச்சல் என வாழ்ந்து காட்டுவார் நாயகி. ஆனால், இதற்கு மாறாக அதே குடும்பத்தில் அவரது அம்மா, அண்ணி, சகோதரிகள் என எதிர்த்துப் பேசக் கூட திராணியற்றவர்களாக சித்தரிக்கப் பட்டிருப்பார்கள்.

சிந்துபைரவி...

இசையையே மூச்சுக் காற்றாக சுவாசிக்கும் பெண்ணிற்கும், இசை மேதை ஒருவருக்கும் இடையேயான காதலைச் சொல்லும் படம். இப்படத்தில் சுஹாசினி தனது காதல் பரிசாக காதலருக்கும், அவரது மனைவிக்கும் குழந்தைப் பெற்றுத் தந்து விட்டு தலைமறைவாகி விடும் புரட்சிப் பெண்ணாக நடித்திருப்பார். ஆனால், இதே படத்தில் சிவக்குமாரின் மனைவியாக வரும் சுலக்‌ஷனா, கல்லானாலும் கணவர், புல்லானாலும் புருஷன் என வாழ்பவராக வருவார்.

கல்கி...

கல்கியும் ஏறக்குறைய சிந்துபைரவியின் கதைக் கருவைக் கொண்டது தான். ஆனால், காதலுக்காக அல்லாமல் ஆண் ஒருவரின் திமிரை அடக்குவதற்காக கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று அதை அவரின் முதல் மனைவிக்கே பரிசாக அளிப்பார் ஸ்ருதி. இப்படத்தில் மூன்றாவது மனைவியாக ஸ்ருதி புரட்சி செய்திருக்க முதல் மற்றும் இரண்டாவது மனைவிகளாக வரும் கீதா மற்றும் ரேணுகா பயந்த சுபாவத்தில் நடித்திருப்பார்கள்.

இருகோடுகள்...

இரண்டு மனைவிகளைக் கட்டிக் கொண்ட கணவரின் வாழ்க்கையைச் சொல்லும் படம் இது. இப்படத்தில் முதல் மனைவியாக சவுகார் ஜானகி, கணவரால் ஏமாற்றப் பட்டபோதும் படித்து கலெக்டராகி இருப்பார். அதே சமயம், இரண்டாவது மனைவியாக வரும் ஜெயந்தி தன் வாழ்க்கையை மீட்க மட்டுமே போராடிக் கொண்டிருப்பார்.

தண்ணீர் தண்ணீர்...

சரிதா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த தண்ணீர் தண்ணீர் படத்தில் சமூகப்பிரச்சினையோடு, பெண்ணியம் குறித்தும் பேசியிருப்பார் பாலசந்தர். தன் சொந்த ஊருக்காகப் பாடுபடும் குற்றவாளி ஒருவருக்காக தனது போலீஸ் கணவரைத் தூக்கி எறியும் கதாபாத்திரம் சரிதாவுக்கு.

புன்னகை மன்னன்:

கமல் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் ரேவதி, ரேகா என இரண்டு நாயகிகள். காதலுக்காக உயிரை மாய்த்துக் கொள்ளும் கோழைக் கதாபாத்திரத்தில் ரேகாவும், போராடி ஜெயிக்கும் கதாபாத்திரத்தில் ரேவதியும் நடித்திப்பார்கள்.

மனதில் உறுதி வேண்டும்...

இதேபோல், மனதில் உறுதி வேண்டும் படத்தில் குடும்பத்திற்காகப் போராடும் சுஹாசினி தனது சொந்த வாழ்க்கைத் துயரங்களை மறைத்துப் போராடுவார்.

உன்னால் முடியும் தம்பி...

உன்னால் முடியும் தம்பி படத்தில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தவராக சீதா நடித்திருப்பார். குடிப்பழக்கத்திற்கு எதிராக போராடும் நாயகனையும் மிஞ்சும் வகையில் தனது புரட்சிகரமான நடிப்பில் அசத்தியிருப்பார் சீதா. தன் காதலனின் தந்தையிடம் தன் ஜாதி குறித்து பேசும் ஒரு காட்சியே ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்.

பார்த்தாலே பரவசம:

பாலசந்தரின் 100வது படமாக வெளியான இப்படத்தில் கணவரின் முன்னாள் காதலை அறிந்து, தாலியைக் கழற்றிக் கொடுத்து விட்டு செல்லும் பெண்ணாக நடித்திருப்பார் சிம்ரன். மேலும், இப்படத்தில் கணவரே தனது மனைவிக்கு இரண்டாம் திருமணத்திற்கு வரன் தேடுவது போல காட்சிகள் அமைத்திருப்பார் கே.பி.

 

இயக்குநர்களில் நிஜமான சிகரம் கே பாலச்சந்தர்... ஒரு பார்வை

‘கே.பி' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட கே.பாலசந்தர், மறைந்துவிட்டார்.

ஆனால் அசாதாரண சாதனைகளை விட்டுச் சென்றிருக்கிறார் அந்த திரையுலக மேதை. தமிழ் சினிமாவில் யாராலும் அழிக்க முடியாத அபார சாதனைக்குச் சொந்தக்காரர் கேபி.

அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் நன்னிலம் கிராமத்தில் பிறந்தவர் பாலசந்தர். சிறுவயதிலேயே மேடை நாடகங்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்தார். தன் 15-ம் வயதில் சில நாடகங்களை எழுதியும் இருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் படிப்பில் சேர்ந்து படித்தவர், தொடர்ந்து மேடை நாடகக் கலையுடன் தொடர்பிலேயே இருந்தார்.

இயக்குநர்களில் நிஜமான சிகரம் கே பாலச்சந்தர்... ஒரு பார்வை

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, திருவாரூர் அருகே உள்ள முத்துப்பேட்டையில் பள்ளி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். பிறகு சென்னைக்கு வந்து, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிக்குச் சேர்ந்தார். அந்தச் சமயத்தில்தான் யுனைட்டெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் நாடகக்குழுவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து சொந்தமாக ஒரு நாடகக்குழுவை ஏற்படுத்தினார். மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, மெழுகுவர்த்தி, நவக்ரஹம் போன்ற நாடகங்களை அவரே தயாரித்து இயக்கினார்.

எம்.ஜி.ஆர்தான் பாலச்சந்தரை திரையுலகுக்கு அழைத்து வந்தார். அவர் நடித்த 'தெய்வத்தாய்' படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பைத் தந்தார்.

அந்தச் சமயத்தில், அவர் பணியாற்றிய அலுவலகத்தில் கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு வந்தது. இதற்கிடையே இவரின் 'சர்வர் சுந்தரம்' நாடகத்தைப் படமாக்கும் உரிமையைப் பெற்ற ஏ.வி.எம் செட்டியார், அதை கிருஷ்ணன் - பஞ்சு இரட்டை இயக்குநர்களைக்கொண்டு நாகேஷை ஹீரோவாக நடிக்கவைத்து தயாரித்தார். படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. இவரின் இன்னொரு நாடகமான ‘மேஜர் சந்திரகாந்த்' இந்தியில் படமாக எடுக்கப்பட்டு, தேசிய விருது பெற்றது.

1965-ல் 'நீர்க்குமிழி' மூலம் இயக்குநராக அறிமுகமானார் கே.பி. அதைத் தொடர்ந்து 'நாணல், மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல் என தன் நாடகங்களையே படமாக எடுத்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் இவர் இயக்கிய ‘பாமா விஜயம்' இவரை டிரெண்ட் செட்டர் இயக்குநர் ஆக்கியது.

இயக்குநர்களில் நிஜமான சிகரம் கே பாலச்சந்தர்... ஒரு பார்வை

இவரின் ‘இருகோடுகள்' சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. ‘அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை, நான் அவன் இல்லை...' என இவர் இயக்கிய படங்கள் விமர்சனம், வியாபாரம், சர்ச்சை என ஏதோ ஒருவகையில் மக்களிடம் சென்றடைந்துகொண்டே இருந்தது. ‘ஏக் துஜே கே லியே' இவர் எழுதி இயக்கிய இந்திப் படம், 1981-ல் வெளிவந்து காதல் சினிமாக்களின் டிரெண்ட் செட்டராக அமைந்தது.

இவரின் படங்கள் வெவ்வேறு வடிவங்களில் இருந்ததாலும், அவை பெரும்பாலும் சமூக அரசியல் விஷயங்களையே மையப்படுத்தியவையாக அமைந்தன. இந்தியப் பெண்களின் நிலை, அவர்களின் பரிதாப நிலைகளை இவரின் படங்கள் பேசின. அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், கல்யாண அகதிகள், மனதில் உறுதி வேண்டும் போன்ற படங்களில் கேபியின் பெண் பாத்திரங்கள் சமூகப் புரட்சியாளர்களாகப் பார்க்கப்பட்டனர்.

சிந்து பைரவியை இசைச் சித்திரமாகத் தந்த அவர், உன்னால் முடியும் தம்பியை சமூக அரசியல் மாற்றத்துக்கான வித்தாகப் படைத்தார்.

இந்த நாட்டின் அரசியலை அவரைப் போல நய்யாண்டி செய்து படமெடுத்தவர்கள் யாருமில்லை. தண்ணீர் தண்ணீரும் அச்சமில்லை அச்சமில்லையும் அரசியல் எள்ளலின் உச்சம்.

இயக்குநர்களில் நிஜமான சிகரம் கே பாலச்சந்தர்... ஒரு பார்வை

‘பார்த்தாலே பரவசம்' இவரின் 100-வது படம். ‘பொய்' கே.பி இயக்கிய 101-வது படம். அதோடு சினிமா இயக்குவதை நிறுத்திக்கொண்டாலும் சினிமா ரசிகராக இளைய தலைமுறைக் கலைஞர்களை அவ்வப்போது உற்சாகப்படுத்தத் தவறியதில்லை.

சின்னத் திரையிலும் குறிப்பிடத்தக்க பல சாதனைகளை நிகழ்த்தினார். இவரின் முதல் தொலைக்காட்சி தொடர் 'ரயில் சிநேகம்.' 1990-ல் தூர்தர்ஷனுக்குகாக எடுத்தார். ‘கையளவு மனசு' இவரின் முத்திரை சீரியல்.

மெகா சீரியல் என்ற வழக்கத்தை ‘ரகுவம்சம்' மூலம் துவக்கி வைத்தார். இவர் தமிழ் சினிமாவில் 65-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். ரஜினிகாந்த், கமலஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டவர்கள் அதில் பிரபல ஆளுமைகள்!

இந்திய சினிமாவின் முக்கியத் தூணாகத் திகழ்ந்த கேபிக்கு மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கி, அந்த விருதுக்கு அர்த்தம் தேடிக் கொண்டது.

தன் கடைசி காலத்தில், மீண்டும் ஒரு நாடகம் நடத்த வேண்டும் என விரும்பினார் கேபி. அதில் தன் சீடர்கள் ரஜினி, கமல் நடிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். அதேபோல ரஜினியையும் கமலையும் வைத்து ஒரு படம் இயக்கிவிட வேண்டும் என்பதும் அவரது நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாகிவிட்டது.

 

'குரு' பாலச்சந்தர் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் 'சீடர்' கமல்ஹாசன்

சென்னை: அமெரிக்காவிலுள்ள நடிகர் கமல்ஹாசன் மறைந்த இயக்குநர் பாலச்சந்தர் உடல் தகன நிகழ்வில் பங்கேற்க இன்றிரவு சென்னை திரும்புகிறார். ஆனால் முன்கூட்டியே தகனம் நடைபெறுவதால் அவரால் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாது.

உத்தமவில்லன் திரைப்படம் சார்ந்த சூட்டிங்கிற்கு பிந்தைய பணிகளுக்காக அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் சென்றிருந்தார் கமல்ஹாசன். இந்நிலையில் இயக்குநர் பாலச்சந்தர் இறந்த செய்தி நேற்றிரவு அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அங்கிருந்து கிளம்பி சென்னைவர கமல் ஆயத்தமானார்.

'குரு' பாலச்சந்தர் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் 'சீடர்' கமல்ஹாசன்

இன்று காலை விமானத்தில் அவர் ஏறியுள்ளார். அந்த விமானம் மூலம் சென்னை வந்து சேர இரவாகிவிடும். பாலச்சந்தரின் இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று மாலையே உடல் தகனம் நடைபெற உள்ளதால் கமல்ஹாசனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்னை வந்தடைய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து பாலச்சந்தரின் மேலாளர் கூறுகையில் "பாலச்சந்தரின் இறுதி சடங்கு திடீரென இன்று மாலையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் கமல்ஹாசனால் அதில் கலந்துகொள்ள முடியாது. இருப்பினும் இன்று இரவு சென்னை வந்து, பாலச்சந்தர் குடும்பத்தாருக்கு கமல் ஆறுதல் தெரிவிப்பார்" என்றார்.

குழந்தை வேடங்களில் நடித்து வந்த கமல்ஹாசனை அரங்கேற்றம் திரைப்படத்தில் நல்ல கதாப்பாத்திரம் கொடுத்து முன்னுக்கு கொண்டுவந்தவர் பாலச்சந்தர். எனவே இருவருக்கும் இடையே நீண்ட காலமாக குரு-சிஷ்யன் உறவு இருந்து வருகிறது. மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைவின்போதும் கமல்ஹாசன் அமெரிக்காவில்தான் இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

 

எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட கே பாலச்சந்தர்!

இன்னிக்கு நான் இந்த நிலையில் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு முதல் காரணம் அமரர் எம்ஜிஆர் அவர்கள்தான். அவரைப் புரட்சித் தலைவர் என்பதில் மிகை ஏதுமில்லை.

-இது அமரர் கே பாலச்சந்தர் எம்ஜிஆர் பற்றிச் சொன்னது.

பாலச்சந்தரின் நாடகங்களைப் பார்த்து ரசித்த எம்ஜிஆர், 1964-ல் சத்யா மூவீஸ் பேனரில் தான் நடித்த தெய்வத்தாய் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பை கே பாலச்சந்தருக்கு வழங்கினார்.

எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட கே பாலச்சந்தர்!

அதுதான் பாலச்சந்தரின் திரையுலகப் பிரவேசம் நடந்த படம். அதன் பிறகு நீர்க்குமிழி மூலம் இயக்குநராகவிட்டார் கேபி.

அறுபது, எழுபதுகளில் ஏராளமான படங்களை இயக்கிக் கொண்டிருந்தார் பாலச்சந்தர். ஆனால் தன்னை அறிமுகப்படுத்திய எம்ஜிஆரை வைத்து அவர் ஒரு படம் கூட இயக்கவில்லை.

காரணம் கேட்டபோது, 'எம்ஜிஆர் படத்தை நான் இயக்கினால் அது எம்ஜிஆர் படமாகத்தான் இருக்கும். அதனால்தான் நான் இயக்கவில்லை. ஆனால் அவர் மீது நான் வைத்திருக்கும் மரியாதை அளவற்றது," என்று கூறினார்.

பொய் படத்தின் வெளியீட்டின்போது எம்ஜிஆரை நினைவு கூர்ந்த கேபி, "இன்னிக்கு நான் இந்த நிலையில் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு முதல் காரணம் அமரர் எம்ஜிஆர் அவர்கள்தான். அவரைப் புரட்சித் தலைவர் என்பதில் மிகை ஏதுமில்லை,' என்றார்.

இன்று அமரர் எம்ஜிஆரின் 27வது நினைவு நாள். அவரது நினைவு நாளுக்கு ஒரு நாள் முன்பு கே பாலச்சந்தர் மரணத்தைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

'உத்தம வில்லன்தான்' பாலச்சந்தர் நடித்த கடைசி படம்- ரமேஷ் அரவிந்த் உருக்கம்

சென்னை: கமலஹாசன் ஹீரோவாக நடிக்கும், உத்தமவில்லன் திரைப்படத்தில் பாலச்சந்தர் சிறு வேடத்தில் நடித்துள்ளதாகவும், தன்னை நடிகனாக்கிய பாலச்சந்தர் கடைசியாக நடித்த படத்தை தான் இயக்குவதில் பெருமிதம் அடைந்துள்ளதாகவும் கூறுகிறார் ரமேஷ் அரவிந்த்.

இதுகுறித்து ரமேஷ் அரவிந்த் கூறியுள்ளதாவது: கமல்ஹாசன் நடித்துள்ள 'உத்தமவில்லன்' திரைப்படத்தை நான் இயக்குகிறேன். அதில் என்னை திரையுலகத்திற்கு அறிமுகம் செய்த பாலச்சந்தரை சிறு வேடத்தில் நடிக்க அழைத்தேன். அவரும் ஆறு நாட்கள் பெங்களூருவில் தங்கி படத்தில் நடித்துக் கொடுத்தார்.

'உத்தம வில்லன்தான்' பாலச்சந்தர் நடித்த கடைசி படம்- ரமேஷ் அரவிந்த் உருக்கம்

அவருக்கு அளித்த வசனங்களை எடிட் செய்து கூர்தீட்டினார். என்னை திரையுலகத்திற்கு அறிமுகம் செய்த பாலச்சந்தர் நடித்த கடைசி திரைப்படத்தை இயக்கினேன் என்கிற பெருமை எனக்கு கிடைத்துள்ளது. உத்தமவில்லன் திரைப்படத்தை பாலச்சந்தருக்கே அர்ப்பணிக்க உள்ளேன்.

சினிமாவில் ஏதேனும் ஒரு பிரிவில் திறமைசாலிகளாக இருக்கும் இயக்குநர்கள் உண்டு. ஆனால் வசனம், கேமரா கோணம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலுமே திறமையானவர் என்றால் அது பாலச்சந்தர்தான். அனைத்து மொழி இயக்குநர்களுமே தெரிந்தோ, தெரியாமலோ அவரால் உந்தப்பட்டவர்கள்தான்.

பாலச்சந்தர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் வந்தாலே அங்கு பிற கலைஞர்களிடமும் சுறுசுறுப்பு தொற்றிக்கொள்ளும். அவரை பார்க்க வெள்ளை உடை உடுத்திய சிங்கம் போலவே இருக்கும்.

சுந்தர ஸ்வப்னகலு, மனதில் உறுதி வேண்டும், ருத்ரவீணா என முறையே, கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் அடுத்தடுத்து என்னை அறிமுகம் செய்தவர் கே.பி.சார்தான். இவ்வாறு ரமேஷ் அரவிந்த் கூறியுள்ளார்.

 

மூவிஃபண்டிங் ‘ என்றொரு மூடுமந்திரம் - 2

-இயக்குநர் முத்துராமலிங்கன்

'மூவிஃபண்டிங்' என்னும் கிரவுட் ஃபண்டிங் குறித்து இயக்குநர் ஜெய்லானி சொல்வதற்கு முன்பு நான் எதுவுமே கேள்விப்பட்டிராதது ஒரு தற்செயல்தான்.

'முதல்ல எனக்குப் புரியிறமாதிரி சொல்லுங்க சார். அப்புறம் இது சாத்தியமான்னு யோசிக்கலாம் ' என்றேன்.

'வெளிநாடுகள்ல ரொம்ப சாதாரணமா நடக்குறதுதான் இது. அதுக்கான வெப்சைட்டுகள் ஏராளம் இருந்தாலும்

'அவருக்குத் தெரியாம இவரு...இவருக்குத் தெரியாம அவரு...' - இயக்குநர் முத்துராமலிங்கன்

www.kickstarter.com, indiegogo.com இந்த ரெண்டு சைட்டுகளும் கொஞ்சம் பிரபலம்.

இதுக்குன்னே இருக்குற, இந்த மாதிரியான வெப்சைட்டுகள்ல தன்னைப்பற்றிய விபரங்கள், தான் எடுக்கப்போகும் படம், கதை, பட்ஜெட், போன்ற விபரங்களை லிஸ்ட் பண்ணிட்டு, குறிப்பிட்ட கால அவகாசம் அறிவிச்சி காத்திருப்பாங்க. அதனோட தாக்கம் எந்த அளவுக்கு இருக்கோ அந்த அளவுக்கு அதுக்கு பண சப்போர்ட் வந்து சேரும். இது படங்களுக்கு மட்டும்னு இல்லை. குறும்படம், டாகுமெண்டரி, ஃபோட்டோகிராஃபி, சுயதொழில், பெயிண்டிங் இப்பிடி சகல சங்கதிகளுக்கும் சப்போர்ட் கேட்டு லிஸ்ட் பண்ணுவாங்க.

அதுல சில சாம்பிள் பாருங்க... ஒருத்தர் நான் உலகம் முழுக்க சுத்தி அன்னை தெரசா படங்களை கலெக்ட் பண்ணப் போறேன். அதுக்கு இவ்வளவு பட்ஜெட் ஆகும். பத்துநாள்ல கிளம்பனும் ஃப்ரண்ட்ஸ் சப்போர்ட் மி'ன்னு லிஸ்ட் பண்ணுவார்.

'அவருக்குத் தெரியாம இவரு...இவருக்குத் தெரியாம அவரு...' - இயக்குநர் முத்துராமலிங்கன்

இன்னொருத்தர் ‘குடிகார கோமகன்களைப் பத்தி ஒரு டாகுமெண்டரி. கேமரா வாங்க, அவங்ககூட அல்லல்பட, நானும் கொஞ்சம் கூடசேர்ந்து குடிக்கன்னு இவ்வளவு பட்ஜெட் ஆகும்னு லிஸ்ட் பண்ணுவார்.

சமீபத்துல நான் பார்த்த இண்ட்ரண்டிஸ்டிங்கான லிஸ்டிங் இது. பாண்டிச்சேரியில செட்டிலான வெளிநாட்டுப்பொண்ணு. ஒரு ப்ளாக்கர் அவ. ‘நான் இந்தியா முழுக்க அலைஞ்சி திரிஞ்சி என் கிட்ட மாட்டுற அத்தனை வித்தியாசமான இந்திய முகங்களையும் ‘க்ளோசப்-அப்' எடுத்து புகைப்படங்களா கலெக்ட் பண்ணப்போறேன். அதுக்கு கேமரா வாங்க, டிராவல் செலவு, சாப்பாட்டுச் செலவுன்னு இவ்வளவு ஆகுதுன்னு லிஸ்ட் பண்ணியிருந்தா.

[நம்ம இந்திய முகங்களை க்ளோசப்-அப்ல பாக்குற துணிச்சல், அதுவும் ஒரு வெளிநாட்டுப்பொண்ணுக்கு... பாக்க பாவமாயிருந்தது]

'வெளிநாட்டுக் கதைகளை விடுங்க. நம்ம நாட்டுல, குறிப்பா நம்ம கோடம்பாக்கத்துல இப்பிடி எதுவும் நடந்ததா தெரியலையே?'

'அப்படி சுத்தமா நடக்கலைன்னு சொல்லமுடியாது. சில சில முயற்சிகள் நடந்திருக்கு. ஜீ.வி.முயற்சி பண்ணினார். சரியா ஒர்க்-அவுட் ஆகலை. சேரன் ‘பச்சை மனிதன்'னு ஒரு முயற்சி பண்ணினார். அவர் நினைச்ச பணம் வசூலாகலை. அப்பிடி வசூலான பணத்தை ரீஃபண்ட் பண்ணுனதுல அப்ப ஏகப்பட்ட குழப்பங்கள் நடந்துச்சி.

அப்புறம் சமீபத்துல வந்த ‘குறையொன்றுமில்லை' கூட கிரவுட் ஃபண்டிங்கில் உருவான படம்தான். டைட்டில்ல தயாரிப்பாளர்கள்னு ஒரு அம்பத்திச்சொச்சம் பேரோட பெயர் போட்டாங்க.

'அவருக்குத் தெரியாம இவரு...இவருக்குத் தெரியாம அவரு...' - இயக்குநர் முத்துராமலிங்கன்

இந்த மாதிரியான முயற்சிகள்ல வெற்றியும் நல்ல கவனிப்பையும் பெற்ற படங்கள்னா இந்தியில வந்த ‘முனிர்' கன்னடத்துல பவன்குமார் இயக்கத்துல வந்த ‘லூஸியா' ஆகிய ரெண்டு படங்களைச் சொல்லலாம்'.

இதுபோல் இன்னும் பத்து மடங்கு தகவல்களை ஜெய்லானி சொல்லி முடித்தபோது, மிகத் தெளிவாக குழம்பிவிட்டேன்.

'வெள்நாட்டுல இது சாத்தியமா இருக்கலாம். நம்ம ஊர்ல இது நடக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்லை சார். ஃபேஸ்புக்குல ஒரு நல்ல ஸ்டேட்டஸ் போட்டா, சும்மா போற போக்குல, வலிக்காம ஒரு ‘லைக்' போடக்கூட ‘இது நம்ம ஆளா'ன்னு பாக்குற கூட்டம் இது' என்றேன்.

‘நீங்க சொல்ற கருத்தை நான் நூறு சதவிகிதம் ஒத்துக்கிறேன். ஆனா நாம பாக்குற 200 தமிழ்ப் படங்கள்ல நூறு படம் கிரவுட் ஃபண்டிங்லதான நடக்குது?' என்றார்.

‘ஆனா வெளிய அறிவிக்காம நடக்குது' அவரே தொடர்ந்தார்....டைரக்டர் கையில கொஞ்சூண்டு காசை வச்சிக்கிட்டு ‘பசையுள்ள' ஒரு புதுமுக ஹீரோவைப் புடிக்கிறார். அவர் ‘காளை'யாயிருந்தாலும் கூட முடிஞ்ச வரைக்கும் 'கறக்குறது'. ஒரு வாரம் ஷூட்டிங் போனப்புறம், ஷூட்டிங் நடக்கிற ஏரியாக்கள்ல, வேடிக்கை பாக்க வர்ற ரெண்டு முதலாளிங்களை நடிக்க வச்சி உள்ள இறக்குறது. அடுத்து அந்த ஊர் ரியல் எஸ்டேட் திடீர் பணக்காரங்க ரெண்டு பேர் வில்லனா எண்ட்ரி குடுப்பாங்க. படம் முடியிற ஸ்டேஜ்ல இவருக்குத் தெரியாம அவரு, அவருக்குத்தெரியாம இவரு, இவிங்க ரெண்டு பேருக்குமே தெரியாம இன்னும் ஒரு நாலு பேருன்னு அது ஒரு கிரவுட் ஃபண்டிங் படமா மாறியிருக்கும்.

‘இப்ப சொல்லுங்க தமிழ்ல இது மாதிரி வருஷத்துக்கு பாதி 'கிரவுட் ஃபண்டிங்' படங்கள்தான வருது?'

‘ம்ம் நீங்க சொல்றது சரிதான். யாரோட கழுத்தை அறுத்தாவது படம் பண்ணிக்கிட்டே இருப்பேன்ங்கிற பார்ட்டிகளை விட இவிங்க கொஞ்சம் பெட்டரு. ஆனா இது ஒரு மாதிரி டகால்டி வேலை தெரிஞ்ச ஆளுகளுக்குத்தான ஒத்து வரும்? நாமதான் டம்மி பீஸுங்களாச்சே??'.

‘எதுவும் சும்மா வராது சார். இப்ப நாம ப்ளான் பண்றது நாம ரெண்டு பேரு மட்டும் படம் பண்றதுக்கு இல்லை. நல்ல படங்கள் பண்ணிட்டு அடுத்த படம் கிடைக்காத சில இயக்குநர்களைத் தொடர்ந்து லிஸ்ட் பண்ணுவோம். பாருங்க கொஞ்ச நாளைக்கு முந்தி இறந்து போனாரே ருத்ரையா ‘அவள் அப்படித்தான்' மாதிரி ஒரு காவியத்தைப் படைச்சிட்டு 35 வருஷமா அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்காம அல்லாடியிருக்கார். அவர் செத்ததும் ஒரே தினசரியில ஏழெட்டு இரங்கல் கட்டுரை போடுறாங்க. அவர்லாம் கிரவுட் ஃபண்டிங்ல ட்ரை பண்ணியிருந்தார்னா எத்தனை ஆயிரம் பேர் இன்வெஸ்ட் பண்னியிருப்பாங்க.... அவ்வளவு ஏன், கடந்த அஞ்சாறு வருஷ பட்டியலைப்பார்த்தாலே ‘ஆரண்ய காண்டம்' மாதிரி அட்டகாசமான படத்தைக்குடுத்து அடுத்த படம் கிடைக்காம திண்டாடுற தியாகராஜன் குமாரராஜாக்களே ஒரு ஆறு ஏழுபேர் தேறுவாங்க. நல்ல ஐடியா ரொம்ப யோசிக்காதீங்க. ட்ரை பண்ணித்தான் பாப்போமே?'

‘நம்ம ஆளுங்க 'செத்தா' நல்லா செய்வாங்க. ஆனா உயிரோடு இருக்கப்ப பச்சைத்தண்ணி கூட தரமாட்டாங்க'.

தொடர்ந்து நான் நெகடிவ்வாகவே பேச கோபமாய் அலுவலகத்தை விட்டு எழுந்துபோனார் ஜெய்லானி

(நாளை மறுநாள் தொடர்வேன்...)

தொடர்புக்கு: muthuramalingam30@gmail.com

 

பெரும் வெற்றிபெற்ற கே பாலச்சந்தர் - இளையராஜா கூட்டணி

மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தர் - இளையராஜா கூட்டணி, தமிழ் சினிமாவில் மிக வெற்றிகரமாக அமைந்த கூட்டணியாகும்.

இந்த இருவரும் இணைந்து 6 படங்களைப் படைத்துள்ளனர். அவற்றில் 2 படங்களுக்கு இளையராஜா தேசிய விருது பெற்றார். அந்த அளவு சகாப்தம் படைத்த கூட்டணியாக அமைந்தது.

பெரும் வெற்றிபெற்ற கே பாலச்சந்தர் - இளையராஜா கூட்டணி

கே பாலச்சந்தர் இயக்கத்தில் முதல் முறையாக இளையராஜா இசையமைத்தது சிந்து பைரவி படத்துக்குத்தான். அந்தப் படத்தின் இசை ஒரு க்ளாஸிக் ஆக அமைந்தது. தேசிய விருதும் கிடைத்தது. இளையராஜாவுக்கு கிடைத்த இரண்டாவது தேசிய விருது அது.

பின்னர், 1986-ல் பாலச்சந்தர் இயக்கிய புன்னகை மன்னன் படத்துக்கு புதுமையான முறையில் இசையமைத்தார் இளையராஜா. பாடல்கள் அனைத்தும் பெரும் வெற்றி பெற்றன.

1987-ல் பாலச்சந்தர் இயக்கிய படம் மனதில் உறுதி வேண்டும். இதிலும் அருமையான பாடல்கள் தந்திருந்தார் இளையராஜா.

1988-ல் பாலச்சந்தர் தமிழிலும் தெலுங்கிலும் இயக்கிய படம் ருத்ர வீணை மற்றும் உன்னால் முடியும் தம்பி. ருத்ர வீணையில் சிரஞ்சீவி நாயகன். உன்னால் முடியும் தம்பியில் கமல். இரண்டு படங்களுக்கு இளையராஜா இசையமைத்தார். மிக அருமையான பாடல்கள், நுட்பமான பின்னணி இசை. ருத்ரவீணைக்கு சிறந்த இசைக்கான தேசிய விருது கிடைத்தது.

கே பாலச்சந்தர் - இளையராஜா இருவரும் இணைந்து பணியாற்றிய கடைசி படம் புதுப்புது அர்த்தங்கள். அனைத்துப் பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன.

ஒரு தயாரிப்பாளராக 14 படங்களில் இளையராஜாவுடன் பணியாற்றியுள்ளார் பாலச்சந்தர். அவற்றில் மேற்கண்ட 6 படங்கள் தவிர, நெற்றிக் கண், புதுக்கவிதை, நான் மகான் அல்ல, பூ விலங்கு, எனக்குள் ஒருவன், ஸ்ரீராகவேந்திரர், வேலைக்காரன், சிவா, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை போன்றவை இருவரும் இணைந்த வெற்றிப் படங்களாகும்.

 

முத்தத்தால் பிரிந்த ராக்கி சாவந்த்-மிகா சிங் ஜோடி செல்ஃபியால் இணைந்தது!

டெல்லி: 2006ம் ஆண்டு சண்டை போட்டு பிரிந்த காதலர்களான பாப் பாடகர் மிகா சிங் மற்றும் பாலிவுட் நடிகை முத்தத்தால் பிரிந்த ராக்கி சாவந்த்-மிகா சிங் ஜோடி செல்ஃபியால் இணைந்தது!

இதன்பிறகு இருவருமே எதிரிகளை போலவே இருந்தனர். ஆனால், ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியொன்றில் இருவரும் இணைந்து ஆடியோ கேசட்டை வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளனர். நிருபர்களிடம் மிகா சிங் கூறுகையில் "நானும், ராக்கி சாவந்த்தும் இணைந்து ஒரு பாப் ஆல்பத்தில் நடிக்க உள்ளோம்" என்றார்.

மேலும் விமானத்தில் ஒன்றாக பயணித்து செல்ஃபி படத்தையும் எடுத்து தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார். சல்மான் கான் தங்கை திருமணத்தையொட்டி, ஷாருக்-சல்மான் இணைந்தனர். இப்போது ராக்கி-மிகாசிங் இணைந்துள்ளனர். 2014ம் ஆண்டு பாலிவுட்டுக்கு இணைப்பு ஆண்டாக அமைந்துவிட்டது.

 

பொங்கலுக்கு மோதும் மூன்று போலீஸ் படங்கள்!

இந்த பொங்கலுக்கு மூன்று போலீஸ் படங்கள் மல்லுக்கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை நெருங்குகிறது. தமிழ் சினிமாவில் பெரிய சீஸன் பொங்கல்தான். எப்படியும் பத்து நாட்கள் தொடர்ந்தாற் போல விடுமுறைக் காலம் என்பதால், இந்த சீஸனில் படங்களை வெளியிடவே பலரும் விரும்புகின்றனர்.

இந்த முறை பொங்கலுக்கு ஐ, என்னை அறிந்தால், ஆம்பள, காக்கிச் சட்டை மற்றும் கொம்பன் ஆகிய படங்கள் வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு மோதும் மூன்று போலீஸ் படங்கள்!

இவற்றில் ஆம்பள, காக்கிச் சட்டை மற்றும் என்னை அறிந்தால் ஆகிய மூன்றுமே போலீஸ் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம்பள படத்தில் விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். சுந்தர் சி இயக்கியுள்ள படம் இது.

பொங்கலுக்கு மோதும் மூன்று போலீஸ் படங்கள்!

காக்கிச் சட்டையில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக போலீசாக நடித்துள்ளார். எதிர்நீச்சல் படம் எடுத்த செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

என்னை அறிந்தாலில் அஜீத்தின் வேடம் எல்லோரும் அறிந்தது. கம்பீரமான போலீஸ் கெட்டப்பில் கலக்கலாக உள்ளன அவரது ஸ்டில்கள்.

பொங்கலுக்கு மோதும் மூன்று போலீஸ் படங்கள்!

ஆக இது போலீஸ் பொங்கல்... ரசிகர்களுக்கு திகட்டத் திகட்ட காத்திருக்கிறது விருந்து!

 

ரயில் சிநேகத்தின் மூலம் இல்லத்தரசிகளிடம் சிநேகமான பாலச்சந்தர்

சென்னை: தமிழ் சினிமா உலகின் பிதாமகர் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய கே. பாலச்சந்தர் இயக்கிய தொலைக்காட்சி தொடர்கள் இன்றைக்கும் அனைவராலும் விரும்பி ரசிக்கப்படுகிறது.

எத்தனையோ சீரியல்கள் இயக்கியிருந்தாலும் சேட்டிலைட் சேனல்களின் வருகைக்கு முன்னர் 1990ல் தூர்தர்சனில் அவர் தயாரித்து இயக்கிய ‘ரயில் சிநேகம்' இன்றைக்கும் ரசிக்கப்படும் தொடராகும்.

ரயில்சிநேகத்தின் டைட்டில் பாடலும், கதாநாயகியின் கதையைச் சொல்லும் "இந்த வீணைக்குத் தெரியாது... இதை செய்தவன் யாரென்று..." என்ற பாடலும் ரசிகர்களின் மனதை விட்டு நீங்காத நினைவுகளாக இருக்கின்றனர்.

ரயில் சிநேகத்தின் மூலம் இல்லத்தரசிகளிடம் சிநேகமான பாலச்சந்தர்

ரயில்சிநேகம் எப்போ வரும் என்று காத்திருக்க ஆரம்பித்தனர் டிவி ரசிகர்கள். ஆணாதிக்க சமூகமாக இருந்த சினிமாவில் பெண்ணியத்தை புகுத்திய பாலச்சந்தர், டிவி சீரியல்களிலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்.

சன்டிவியின் வருகைக்குப் பின்னர் கையளவு மனசு, காசளவு நேசம், காமெடி காலனி உள்ளிட்ட தொடர்கள் மூலம் இல்லத்தரசிகளுக்கும் பிடித்த இயக்குநராகிப் போனார்.

ஜெயா டிவியில் ஒளிபரப்பான ‘அண்ணி' தொடரில் அங்கயற்கண்ணி கதாபாத்திரத்தை அசத்தலாக படம்பிடித்திருப்பார். 15க்கும் மேற்பட்ட "டிவி' சீரியல்களை இயக்கிய பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம், சிறப்பு வாய்ந்த பல டிவி சீரியல்களையும் தயாரித்தது. இன்றைக்கு வெளியாகும் குப்பையான மெகா தொடர்களுடன் ஒப்பிடும் போது பாலச்சந்தரின் சீரியல்கள் காலம் பொற்காலம் என்கின்றனர் டிவி ரசிகர்கள்.

 

பாலசந்தர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து படப்பிடிப்புகள் ரத்து- இன்று உடல் தகனம்!!

சென்னை: உடல்நலக்குறைவால் நேற்று காலமான பழம்பெரும் இயக்குநர் பாலசந்தர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட இயக்குநர் கே.பாலசந்தர் செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாலசந்தர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து படப்பிடிப்புகள் ரத்து- இன்று உடல் தகனம்!!

அவரது மறைவு செய்தி கேட்ட உடன் திரை உலக பிரபலங்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்த குவிந்தனர். பாலச்சந்தரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கே.பாலசந்தர் மறைவையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ் திரையுலக படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக இயக்குநர் விக்ரமன் அறிவித்துள்ளார்.

இயக்குநர் பாலசந்தரின் உடல் இன்று மதியம் 2 மணிக்கு அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது. மாலை 4.30 மணியளவில் பெசன்ட் நகர் மின்மாயானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்படும் என பாலசந்தரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

என்னை ஒரு மகனாகவே பார்த்துக் கொண்டவர் கே பாலச்சந்தர் - ரஜினிகாந்த்

சென்னை: என்னை தன்னுடைய மகனாகவே பார்த்துக் கொண்டவர் கே பாலச்சந்தர். அவர் மறைவு, என்னையே நான் இழந்ததைப் போல இருக்கிறது, என்றார் நடிகர் ரஜினிகாந்த்.

இந்திய சினிமாவுக்கு ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டாரைத் தந்தவர் கே பாலச்சந்தர். 1975-ல் அபூர்வ ராகங்கள் படத்தில் இரண்டாவது நாயகனாக ரஜினியை அறிமுகம் செய்தார்.

அதன்பிறகு ரஜினிகாந்த் என்பவர் இந்திய சினிமாவின் ஆளுமையாக மாறிப் போனது தனி வரலாறு.

என்னை ஒரு மகனாகவே பார்த்துக் கொண்டவர் கே பாலச்சந்தர் - ரஜினிகாந்த்

பாலச்சந்தர் மீது அளவுக்கு அதிகமான மரியாதை பாசம் வைத்திருந்தார் ரஜினி. எந்த மேடை, நேர்காணல் என்றாலும் பாலச்சந்தரின் பெயரைக் குறிப்பிட மறந்ததில்லை ரஜினி.

தனது குருநாதர் உடல்நலம் குன்றியிருந்தபோது நேரில் போய் பார்த்துவிட்டு வந்தார் ரஜினி. மீண்டும் அவர் உடல்நலம் பெற்று வந்துவிடுவார் என நம்பினார் அவர்.

நேற்று பாலச்சந்தர் மறைந்த செய்து கேட்டு அதிர்ச்சியடைந்த ரஜினி, உடனடியாக அவர் வீட்டுக்குப் போய் தனது மரியாதையைச் செலுத்தினார்.

என்னை ஒரு மகனாகவே பார்த்துக் கொண்டவர் கே பாலச்சந்தர் - ரஜினிகாந்த்

ருத்துவமனையிலிருந்து மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு பாலசந்தரின் உடல் செவ்வாய்க்கிழமை இரவு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

வெகுநேரம் பாலசந்தரின் உடலுக்கு அருகே அமைதியாக அமர்ந்திருந்தார்.

பின்னர், 10.30 மணியளவில் வெளியில் காத்திருந்த செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசியதாவது: இயக்குநர் பாலசந்தர் எனது குரு மட்டுமல்ல. எனக்கு தகப்பன் போன்றவர். என்னை அவர் நடிகனாகப் பார்க்கவில்லை. மகனாகப் பார்த்தார். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று. என்னை நானே இழந்து விட்டதாக உணர வைத்து விட்டது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்," என்றார்.

 

தம்பி விஷால், அவர் கமல்ஹாசனா கூட இருந்திருக்கலாம்.. !!

சென்னை: நடிகர் விஷால் துபாய் விமான நிலையத்தில் பார்க்க கமல் ஹாஸன் போன்று இருந்த நபரை சந்தித்துள்ளார்.

விஷால் சுந்தர் சி. இயக்கி வரும் ஆம்பள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தில் வரும் பாடல் காட்சிகளை படமாக்க விஷால், ஹன்சிகா உள்ளிட்டோர் இத்தாலி சென்றனர்.

தம்பி விஷால், அவர் கமல்ஹாசனா கூட இருந்திருக்கலாம்.. !!

அப்போது துபாய் விமான நிலையத்தில் விஷால் கண்ட காட்சியை அவராலேயே நம்ப முடியவில்லையாம். காரணம் விமான நிலையத்தில் ஒருவர் பார்க்க உலக நாயகன் கமல் ஹாஸன் போன்று இருந்துள்ளார். அதிலும் அவரின் கண்கள் அப்படியே கமல் போன்று இருந்துள்ளது.

இதை பார்த்த விஷால் அவரை அணுகி அவருடன் ஒரு புகைப்படத்தை எடுத்தார். உடனே அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கமல் சார் போன்று இருந்தவரை துபாய் விமான நிலையத்தில் பார்த்தேன் என்று விஷால் ட்வீட் செய்துள்ளார்.

 

நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியது ஏன்? விஷால் விளக்கம்

ஆம்பள படத்தை பொங்கலுக்கு வெளியிட வேண்டிய வேலைகளில் பிஸியாக இருப்பதாலேயே நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலிருந்து தான் விலகிக் கொண்டதாக நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

நடிப்பு, தயாரிப்பு, இசை வெளியீடு என ஏக பிஸியாக உள்ளார் விஷால்.

நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியது ஏன்? விஷால் விளக்கம்

இப்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், படங்களில் பிசியாக இருப்பதால், அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் விஷால் விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளிவந்தன.

இதுகுறித்து, இத்தாலியில் படப்பிடிப்பில் இருக்கும் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு சினிமாவில் நடிப்பதுதான் முதலில் முக்கியம். ஆம்பள படம் பொங்கலுக்கு வெளிவர தயாராக உள்ளது. இதற்கான வேலைகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். ஆகையால், நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் இருந்து நான் விலகுகிறேன்," என்று கூறியுள்ளார்.

நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் தமிழ் நடிகர்கள் அணிக்கு கேப்டனாக இருந்தார் விஷால். இப்போது ஆண்டுக்கு இரு படங்கள் என்று ரசிகர்களுக்கு தான் அளித்த வாக்கைக் காப்பாற்றும் வகையில் படங்களைத் தருவதில் மும்முரம் காட்டுகிறார்.

 

சூர்யாவின் மாஸ் ரிலீஸ் எப்போது?

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ் படம் வரும் மார்ச் மாதம் வெளியாகிறது.

அஞ்சான் படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் மாஸ். இப்படத்தை வருகிற தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி ரிலீஸ் செய்ய முதலில் முடிவு செய்திருந்தனர்.

சூர்யாவின் மாஸ் ரிலீஸ் எப்போது?

ஆனால், மார்ச் 27-ந் தேதியே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னதாக வரும் பொங்கலுக்கு இப்படத்தின் டீசரை வெளியிடவிருக்கிறார்கள்.

மாஸ் படத்தில் பிரேம்ஜி, கருணாஸ், ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சூர்யா, இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு பிறகு ஏஆர் ரஹ்மான் இசையில், விக்ரம் குமார் இயக்கும் ‘24' என்கிற படத்தில் நடிக்கிறார் சூர்யா.

 

இந்த ஆண்டை போலவே அடுத்த ஆண்டும் 'தல' பொங்கல் தான்

சென்னை: 2014ம் ஆண்டை போன்ற வரும் ஆண்டிலும் பொங்கல் தல பொங்கல் தான்.

இந்த ஆண்டு பொங்கல் அஜீத் ரசிகர்களுக்கு தல பொங்கலாக அமைந்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த வீரம் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸானது. இந்நிலையில் 2015ம் ஆண்டு பொங்கலும் தல பொங்கலாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டை போலவே அடுத்த ஆண்டும் 'தல' பொங்கல் தான்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் முதன்முறையாக நடித்துள்ள என்னை அறிந்தால் படம் வரும் ஜனவரி மாதம் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது. முன்னதாக பட ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம் என்று கூறப்பட்டது. அதன் பிறகு தான் படம் ஜனவரி 14ம் தேதி நிச்சயம் ரிலீஸாகும் என்று தயாரிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜனவரி 1ம் தேதி நடக்கும் என்று கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் அசத்தியுள்ள ஐ படம் ஜனவரி 9ம் தேதி ரிலீஸாகிறது. ஆனால் ஐ ஜனவரி 14ம் தேதி ரிலீஸாகலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பொங்கல் ரேசில் விஷாலின் ஆம்பள, சிவகார்த்திகேயன் நடித்துள்ள காக்கிச் சட்டை, கார்த்தி நடித்துள்ள கொம்பன் ஆகிய படங்களும் உள்ளன.

 

ஜெயப்ரதாவுக்காக ரஜினி செய்யும் இன்னொரு உதவி!

ஒரு காலத்தில் தன்னுடன் நடித்தவர்களாக இருந்தாலும் நட்பை மறக்காமல் அவர்களைச் சந்திப்பதும், கேட்ட உதவிகளைச் செய்வதும் ரஜினியின் குணம்.

ஜெயப்பிரதாவும் ரஜினியும் நினைத்தாலே இனிக்கும் படத்தில் நடித்திருக்கிறார்கள். அந்த நட்பின் அடிப்படையில் ரஜினியிடம் இரண்டு உதவிகள் கேட்டுள்ளார் ஜெயப்ரதா.

ஜெயப்ரதாவுக்காக ரஜினி செய்யும் இன்னொரு உதவி!

ஒன்று அவர் மகன் சித்து நாயகனாக அறிமுகமாகும் உயிரே உயிரே படத்தின் ட்ரைலரை, லிங்காவுடன் இணைத்து வெளியிடக் கோரியது. தனது பிறந்த நாளன்று இந்த கோரிக்கையோடு வந்த ஜெயப்ரதாவிடம் உடனே ஓகே சொல்லிவிட்டார் ரஜினி.

அடுத்து உயிரே உயிரே படத்தில் கவுரவ தோற்றத்தில் ஒரு காட்சியில் தோன்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம் ஜெயப்ரதா. அதற்கும் சம்மதித்துவிட்டார் ரஜினி என ஜெயப்ரதா தரப்பு தெரிவித்துள்ளது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ரஜினி தரப்பில் எந்தத் தகவலும் இல்லை.

உயிரே உயிரே படத்தில் சித்துவும், ஹன்சிகாவும் நடிக்கின்றனர். படத்தை ஜெயப்ரதாவே தயாரிக்கிறார்.

 

கருத்த மச்சான் கூட நடிக்க ரூ.2.5 கோடி கேட்ட கண்ணழகி

சென்னை: உயரமான கருத்த மச்சான் நடிகரின் புதிய படத்தில் நடிக்க முட்டை கண்ணழகி நடிகை ரூ.2.5 கோடி சம்பளம் கேட்டாராம்.

உயரமான கருத்த மச்சான் நடிகர் லிங்கமான இயக்குனரின் சண்டை போடும் படத்தில் நடித்தார். அந்த படம் ஹிட்டானது. இந்நிலையில் அந்த படத்தின் 2ம் பாகத்தை எடுக்க உள்ளார்கள். இரண்டாம் பாகத்தில் முட்டை கண்ணழகி நடிகையை நடிக்க வைக்க இயக்குனர் நினைத்துள்ளார்.

இதையடுத்து நடிகையை அணுகி எங்கள் படத்தில் நடிங்களேன் என்று கேட்டதற்கு அவரோ ஒரேயடியாக ரூ.2.5 கோடி சம்பளம் கேட்டுள்ளார். சரி படத்தை தமிழ், தெலுங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளதால் இரண்டு மொழிகளுக்கும் சேர்த்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்களாம். ஆனால் நடிகை மசிவதாக தெரியவில்லையாம்.

தளபதி நடிகருடன் நடிகை நடித்த படம் ஹிட்டானதில் இருந்து அவர் தமிழில் ரூ.1 கோடியும், தெலுங்கில் ரூ.1.5 கோடியும் வாங்கினார். தற்போது ரூ.2.5 கோடி கேட்டுள்ளார்.

இதற்கிடையே அந்த நடிகைக்கு கொட்டிக் கொடுக்கலாமா அல்லது நடிகருடன் ஏற்கனவே 2 ஹிட் படங்களில் நடித்த மேனன் நடிகையை நடிக்க வைக்கலாமா என்று ஆலோசனை நடந்து வருகிறதாம். மேனன் நடிகை, உயரமான நடிகரின் ஜோடிப் பொருத்தம் ஏற்கனவே நன்றாக ஒர்க்கவுட் ஆனதால் இந்த படத்திலும் அவர்கள் ஜோடி சேர வாய்ப்பு உள்ளதாம்.

 

100 படங்களை இயக்கிய இயக்குநர் கே. பாலசந்தர் காலமானார்!!

சென்னை: 100 படங்களை இயக்கிய 'இயக்குநர் சிகரம்' கே. பாலசந்தர் (வயது 84) உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் இன்று காலமானார்.

'இயக்குநர் சிகரம்' கே. பாலசந்தருக்கு அண்மையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த திங்கள்கிழமை அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் பரவின.

100 படங்களை இயக்கிய இயக்குநர் கே. பாலசந்தர் காலமானார்!!

இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்து வந்தனர். அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று பாலசந்தர் காலமானர்.

பாலசந்தர் வாழ்க்கை குறிப்பு

1930 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடியில் பிறந்தவர் பாலசந்தர். பள்ளிப் பருவத்தில் நாடகங்களை நடத்தி வந்தார்.

பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து சென்னைக்கு அரசுப் பணிக்காக வந்தார்.

அப்போது நாடகத்துறையில் கால் பதித்தார். 1965 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அழைப்பை ஏற்று தெய்வத்தாய் படத்துக்கு கதை வசனம் எழுதினார். பின்னர் நீர்க்குமிழி படத்தை இயக்கி இயக்குநரானார்.

அபூர்வ ராகங்கள், எதிர்நீச்சல், அவள் ஒரு தொடர் கதை, வறுமையின் நிறம் சிவப்பு, புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி உட்பட 100 படங்களை இயக்கியவர் பாலசந்தர். இவர் இயக்கிய கடைசி படம் பொய். இதில் பொய் படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

அபூர்வ ராகங்கள் படம் மூலமாக நடிகர் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியதும் இயக்குநர் கே. பாலசந்தர்தான். நடிகர் கமலஹாசன் புகழ்பெறுவதற்கும் காரணமாக இருந்தவரும் பாலசந்தர்தான். அத்துடன் எஸ்.வி.சேகர், மெளலி, ஒய்.ஜி. மகேந்திரன், பிரகாஷ்ராஜ், ராதாரவி, சுஜாதா, ஷோபா, சரத்பாபு, மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்ட பிரபலங்களை தமிழ்த் திரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர்.

மேலும் ரெட்டைச் சுழி படத்தில் இயக்குநர் பாரதிராஜாவுடன் சேர்ந்து நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் கமலஹாசனின் உத்தம வில்லன். விரைவில் இந்த திரைப்படம் வெளிவர இருக்கிறது.

மனித உறவுகள் மற்றும் சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து திரைப்படங்களை இயக்கியவர். இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை, வசனகர்த்தா என பல முகங்களைக் கொண்டவர் பாலசந்தர்.

1987 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 2010 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதையும் பாலசந்தர் பெற்றார். மனைவி பெயர் ராஜம். மகள் புஷ்பா கந்தசாமி. பாலசந்தருக்கு இரண்டு மகன்கள். இதில் மூத்த மகன் கைலாசம் சமீபத்தில் காலமானார்.