எங்கேயும் காதல்- பட விமர்சனம்

Tags:


நடிப்பு: ஜெயம் ரவி, ஹன்ஸிகா மோத்வானி, ராஜு சுந்தரம், சுமன்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு: நீரவ் ஷா
திரைக்கதை - இயக்கம்: பிரபு தேவா
தயாரிப்பு: கல்பாத்தி அகோரம்
வெளியீடு: சன் பிக்சர்ஸ்

ஒரு மென்மையான காதல் கதையை முற்றிலும் வெளிநாட்டு லொகோஷனில் கவிதையாய் சொல்ல வேண்டும் என்பது இயக்குநரான பிரபு தேவாவின் ஆசை. அதில் தப்பேதுமில்லை. அதற்காக காட்சியமைப்புகளில் கொஞ்சம் மெனக்கெட்டிருப்பதும் தெரிகிறது. ஆனால் மனதைத் தொடாத திரைக்கதை, ஈர்ப்பில்லாத வசனங்களால், பத்தோடு பதினொன்றாகியிருக்கிறது எங்கேயும் காதல்.

பெண்களை ருசிப்பதையே பொழுதுபோக்காகக் கொண்ட, காதலை வெறுக்கும் கார்ப்பரேட் ஜாலிப் பேர்வழி ஜெயம் ரவியைப் பார்த்த மாத்திரத்தில் உருகி உருகிக் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார் பாரீஸ் பெண் ஹன்ஸிகா மோத்வானி. ஆனால் காதலைச் சொல்லாமல் விட்டுவிடுகிறார். இருவரும் காதலில் சேர்ந்தார்களா இல்லையா என்பது மீதிக் கதை.

படத்தின் ஆரம்பம் இளமைக் கவிதை. குறிப்பாக பிரபுதேவாவின் அறிமுகக் காட்சியும், எங்கேயும் காதல் பாட்டுக்கு அவர் ஆடும் நடனமும் 'க்ளாஸ்' ரகம்!

காட்சிகளை படமாக்கிய விதத்தில் இளமையும் கவிதைத்தனமும் கலந்துகட்டி மயக்குகின்றன. ஆனால் இத்தனை நல்ல விஷயங்களும் அடிபட்டுப்போவது எதிர்ப்பார்க்கும் திருப்பங்களும் சுவாரஸ்யமும் இல்லாத ஒரு 'சவ சவ' திரைக்கதையால்.

படத்தின் நாயகன் ஜெயம் ரவிக்கு ஏற்ற வேடம்தான். ஆனால் ஏனோ ஒரு முழுமை பெறாத சிலை மாதிரி நிற்கிறது அவரது பாத்திரப் படைப்பு.

ஹன்ஸிகா மோத்வானிக்கு சுட்டுப் போட்டாலும் நடிப்பு வரவில்லை. உடலளவில் சீக்கிரமே இன்னொரு நமீதாவாகிவிடுவார் போலிருக்கிறது.

ராஜூ சுந்தரம் நகைச்சுவை என்ற பெயரில் காதில் ரத்தம் வர வைக்கிறார். ஒரு காட்சியில் வந்தாலும் பிரகாஷ் ராஜ் ஈர்க்கிறார். ஹீரோயினுக்கு அப்பாவாக வருகிறார் சுமன்.

படத்தின் நிஜமான ஹீரோக்கள் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மற்றும் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ். முன்னவரின் ஒளிப்பதிவு கண்களைக் கொள்ளையடிக்கிறது. பின்னவரின் 'எங்கேயும் காதல்..' கேட்டதும் காதுகளை விட்டு அகல மறுத்து உதடுகளில் உட்கார்ந்துவிடுகிறது. மைக்கேல் ஜாக்ஸன் பாடலைக் காப்பியடித்து 'நங்கை...'யைத் தந்துள்ளார் என்றாலும்கூட மன்னிக்க வைக்கிறது, அந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம். ஆன்டனியின் எடிட்டிங் இந்தப் பாடலில் ஷார்ப்.

சின்னச் சின்ன விஷயங்களுக்கு இவ்வளவு தூரம் மெனக்கெட்ட இயக்குநர் பிரபுதேவா, மனதை வருடும்படியான ஒரு நல்ல திரைக்கதையை உருவாக்கத் தவறியது, எங்கேயும் காதலை, என்ன படம் போங்க என்று கிண்டலடிக்க வைத்துள்ளது.

சன் வெளியிட்ட படங்களில் இதுவும் ஒன்று... அவ்வளவுதான்!!
 

தபாங் ரீமேக்கில் சிம்புவின் ஜோடி ரிச்சா... திங்கள்கிழமை படத் துவக்கவிழா!

Tags:



தில், தூள், கில்லி என வெற்றிப் படங்களாகத் தந்த தரணி, இடையில் பங்காரம், குருவி என லேசாக சறுக்கினார். ஒரு கட்டத்தில் என்ன ஆனார் என்றே தெரியாமல் போய்விட்டது.

இப்போது அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்குகிறார். இவற்றில் ஒரு படத்தில் ஹீரோ சிம்பு.

சல்மான்கான் இந்தியில் நடித்து பெரும் வெற்றி பெற்ற தபாங் படத்தின் தமிழ் ரீமேக் இது. நாயகியாக தெலுங்கு நடிகை ரிச்சா அறிமுகமாகிறார்.

கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, மணிராஜ் கலை இயக்கத்தை கவனிக்கிறார். தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்திற்கான பூஜை 9ம் தேதி திங்கள்கிழமை காலை ஏ.வி.எம் விநாயகர் கோவிலில் வைத்து நடைபெற உள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தி டபாங் படத்தின் தயாரிப்பாளரும் சல்மான்கான் சகோதராருமான அர்பாஸ் கான் பங்கேற்கிறார்.

படத்தின் பெயர் பூஜையன்று அறிவிக்கப்படும்.

 

மே 12-ல் அழகர்சாமியின் குதிரை!!

Tags:


பெரும் எதிர்பார்ப்பைக் கிளறியுள்ள சுசீந்திரனின் அழகர்சாமியின் குதிரை படம் வரும் மே 12-ம் தேதி வெளியாகிறது.

இளையராஜா இசையில், அப்புக்குட்டி, சரண்யா மோகன், யோகி தேவராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள அழகர்சாமியின் இரண்டு மாதங்களுக்கு முன்பே தயாராகிவிட்டது அழகர்சாமியின் குதிரை படம்.

ஆனால் உலகக் கோப்பை கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகள் காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது.

இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது, அதன் விநியோக உரிமையை பெற்றுள்ள தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் நிறுவனம். அடுத்தவாரம் அதாவது மே 12-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.

மேலும் சீனாவில் நடக்கும் ஷாங்காய் திரைப்பட விழா, கனடாவின் டொரண்டோ உலகப் பட விழா, ரஷ்ய சர்வதேச திரைப்பட விழா மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடக்கும் உலகப் படவிழாக்களிலும் அழகர்சாமியின் குதிரை பங்கேற்கிறது.
 

எப்படி இருக்கிறார் ரஜினி... என்ன சொல்கிறார் மருத்துவர்?

Tags:


சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீரடைந்து வருவதாகவும் அவர் இப்போதே டிஸ்சார்ஜ் ஆகும் அளவுக்கு தெம்புடன் உள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் சாய் கிஷோர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 29-ந் தேதி ராணா படப்பிடிப்புக்காக சென்னையில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றிருந்தார். அங்கிருந்து வீடு திரும்பிய அவர் ஜீரண கோளாறு காரணமாக வாந்தி எடுத்தார். அதைத் தொடர்ந்து அவர் மைலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று அன்று மாலையே ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி இரவில் அவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. கடும் குளிர் ஜூரம், இருமல் ஏற்பட்டது. எனவே மீண்டும் இசபெல்லா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கிஷோர் கூறியதாவது:

ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட போது இருமல், சளி மற்றும் காய்ச்சல் இருந்தது. எனவே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். தற்போது அவரது உடல் நிலை சீரடைந்து விட்டது.

இருமல், சளி மற்றும் காய்ச்சல் உடனடியாக குறைந்து விட்டது. அவர் டிஸ்சார்ஜ் ஆகும் தகுதியுடன் உள்ளார். ஆனால் மேலும் 2 நாட்கள் ஓய்வில் இருக்க ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே பாதுகாப்பு கருதி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவரை வைத்துள்ளோம். நாளை அவர் வீட்டுக்கு செல்வார்," என்றார்.
 

வானம் திரைப்படத்தை தடை செய்ய தமுமுக கோரிக்கை மனு!

Tags:


திருநெல்வேலி: நடிகர் சிம்பு நடித்த வானம் திரைப்படத்தை தடை செய்ய நெல்லை போலீஸ் கமிஷனரிடம் தமுமுக கோரிக்கை மனு அளித்தனர்.

தமுமுக மாவட்ட நிர்வாகிகள் கையெழுத்திட்டு நெல்லை கமிஷனர் வரதராஜீடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது

நடிகர் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள வானம் திரைப்படத்தில் மன்சூர்கான் என்ற பெயரில் நடிக்கும் நடிகர் தீவிரவாதியாகவும், திருக்குர்ஆன் படிப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என உணர்த்தும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த காட்சி முஸ்லிம் மதத்தினர் அனைவரும் தீவிரவாதி என்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது மனவேதனையை அளிக்கிறது.

அது போல் நசீர் என்ற நடிகர் அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார். தீவிரவாத செயல்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த வார்த்தை திரைப்படத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், நசீர் என்ற நடிகரை தேடி சென்று சிலரிடம் கேட்கும் காட்சியில், நசீர் திருவல்லிக்கேணி மசூதியில் போய் தேடும்படி கூறுகின்றனர். இந்த காட்சி தீவிரவாதிகளுக்கு மசூதியில் அடைக்கலம் கொடுப்பது போல் காட்டப்பட்டுள்ளது. இது போனற காட்சிகள் பள்ளிவாசல்களை இழிவுபடுத்து போன்றதாகும்.

மேலும் கதாநாயகன் சிம்பு படத்தின் இறுதி காட்சியில் தீவிரவாதிகளாக தோன்றும் நபர்களிடம் மனிதர்களை பாருங்கள், கடவுளை பார்க்காதீர்கள் என கூறுகிறார். இந்த காட்சி அல்லாஹ்வை விட மனிதன் உயர்ந்தவன் என காட்டப்பட்டுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

அமைதிப்பூங்காவாக உள்ள தமிழகத்தில் எங்களது இயக்கத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக வானம் திரைப்படம் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குநர், நடிகர்கள் உட்கருத்துடன் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர்.

எனவே முஸ்லிம்களின் மத உணர்வுகளையும், நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தும் வானம் திரைப்படத்தை தொடர்ந்து திரையிடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அன்த மனுவில் கூறியுள்ளனர்.
 

செக்ஸ் லேகிய விளம்பரத்தில் என் படமா? - ஸ்வேதா மேனன் கொந்தளிப்பு

Tags:


செக்ஸ் லேகிய விளம்பரத்தில் தனது படத்தை வெளியிட்டவர்கள் மீது பல கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகை ஸ்வேதா மேனன்.

குத்தாட்ட புகழ் கவர்ச்சி நடிகை ஸ்வேதா மேனன் நடித்த மலையாளப் படம் 'காயம்'. கிட்டத்தட்ட செக்ஸ் படம் எனும் அளவுக்கு காட்சிகள் அமைந்திருந்தன. இந்தப் படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இதை இப்போது தமிழில் 'தாரம்' எனும் பெயரில் டப் செய்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ஸ்வேதா மேனனின் படு கவர்ச்சியான ஸ்டில்களை ஒரு செக்ஸ் லேகிய தயாரிப்பு நிறுவனம் தனது விளம்பரத்தில் பயன்படுத்திக் கொண்டது.

அப்படிப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்திருப்பவர், இந்த காயம் படத் தயாரிப்பாளர்தான் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் கடும் கோபமடைந்த ஸ்வேதா மேனன், உடனடியாக நீதிமன்றம் போய்விட்டார்.

லேகிய நிறுவனம் மீதும், அந்த நிறுவனத்துக்கு அனுமதி தந்த 'காயம்' தயாரிப்பாளர் மீதும் பல கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் ஸ்வேதா மேனன்.
 

நடிகர் பிரபுவுக்கு டாக்டர் பட்டம்!!

Tags:


நடிகர் பிரபுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது ஜேப்பியாரின் சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக் கழகம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகன் நடிகர் பிரபு. சங்கிலி படம மூலம் அறிமுகமானார். கோழி கூவுது, சின்னத் தம்பி, அக்னி நட்சத்திரம், செந்தமிழ்ப் பாட்டு என ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இதுவரை 200 படங்களில் நடித்துள்ள அவர், மன்னன், சந்திரமுகி போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.

அவரது கலைச் சேவையை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்குவதாக சத்யபாமா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. பட்டமளிப்பு விழா வருகிற மே 12-ந் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது.

ஏற்கெனவே கமல்ஹாஸன் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது சத்யபாமா பல்கலைக் கழகம்.