நடிகை நமீதாவை கார் டிரைவர் கடத்த முயன்ற விவகாரத்தில் பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி விமான நிலையத்தில் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளவி்ல்லை என்று நமீதா கூறியிருக்கிறார். தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வரும் நடிகை நமீதாவுக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்து வருவதால் மானாட மயிலாட போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் அதிக அளவில் கலந்து கொள்கிறார். சினிமாவில் 30 நாள் 50 நாள் கால்ஷீட் கொடுத்து கஷ்டப்பட்டு நடிப்பதை விட, பொது நிகழ்ச்சிகளில் ஒரு மணிநேரம், 2 மணி நேரம் கலந்து கொண்டாலே லட்சங்களில் சம்பளம் கிடைக்கிறது என்பதால் அவர் பொது நிகழ்ச்சிகளில் அதிக ஈடுபாட்டுடன் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் மூத்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கரூரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என்று நமீதாவுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நமீதா தனது மேனேஜருடன் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றார். திருச்சி விமான நிலையத்தில் டிரைவருக்கான சீருடை அணிந்த ஒரு இளைஞர், ``கரூர் நிகழ்ச்சிக்கு உங்களை அழைத்துச்செல்ல என்னைத்தான் அனுப்பி இருக்கிறார்கள் என்று நமீயிடம் கூறியிருக்கிறார். நமீதாவும் அதை நம்பி காரில் ஏறினார்.
கார் மின்னல் வேகத்தில் புறப்பட்டது. சினிமா நடிகை என்பதால் மெதுவாக சென்றால் ரசிகர்கள் மொய்த்து விடுவார்கள் எனவேதான் வேகமாக செல்கிறேன் என்று அந்த டிரைவர் கூறியிருக்கிறார். இதற்கிடையில் நமீதாவை அழைத்துச் செல்வதற்காக வந்த உண்மையான டிரைவர், நமீதா வேறு காரில் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக விழாக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். நமீதாவை அழைத்து சென்ற மர்ம நபர் யார் என தெரியாமல் விழாக்குழுவினர் குழம்பினார்கள். நமீதா கடத்தப்பட்டது பற்றி அங்கிருந்த முக்கிய பிரமுகர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து விழாக்குழுவை சேர்ந்தவர்கள் 6 கார்களில் திருச்சிக்கு விரைந்தனர். நமீதாவை ஏற்றி வந்த காரை அவர்கள் பார்த்து மறி்த்து நிறுத்தினர். நமீதாவை கடத்த முயன்ற மர்ம ஆசாமியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் பெரியசாமி (26) என்றும், திருச்சியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. நமீதாவை கடத்தியது ஏன்? என்று போலீசார் அவரிடம் கேட்டதற்கு, தான் நமீதாவின் தீவிர ரசிகன். அவர் கரூரில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக திருச்சி வருதாக கேள்விப்பட்டேன். நமீதாவை நேரில் பார்த்து பேச வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஒரு ரசிகனாக அவர் முன்னால் போய் நின்றால் பேச மாட்டார் என்பதால், கார் டிரைவர் வேடத்தில் அவரிடம் சென்று பேசினேன். அவரும் அதை நம்பி காரில் ஏறினார். அவரை பத்திரமாக கரூரில் கொண்டு வந்து விட வேண்டும் என்றுதான் நினைத்தேன். அதனால்தான் கரூர் நோக்கி வந்தேன். அதற்குள் விழாக்குழுவை சேர்ந்தவர்கள் வந்து என்னை மடக்கி விட்டனர். ஆனாலும் நமீதாவுடன் ஒரே காரில் சென்றது சந்தோஷமாக இருக்கிறது, என்று கூறியிருக்கிறார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடந்த சம்பவம் குறித்து நமீதா கூறுகையில், திருச்சி விமான நிலையத்துக்கு கார் அனுப்பி வைப்பதாக விழாக்குழுவினர் தெரிவித்திருந்தனர். அதனால்தான் அந்த டிரைவரை உண்மையான டிரைவர் என்று நம்பி காரில் ஏறினேன். விழாக்குழுவினர் வந்து அந்த காரை மறித்தபோதுதான் உண்மை நிலவரமே எனக்கு தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் ரொம்ப அதிர்ச்சியாகி விட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னமும் மீளவில்லை, என்றார். இந்த கடத்தல் முயற்சி சம்பவத்தால் விழாக்குழுவினரிடையே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் நமீதா நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்னை புறப்பட்டு சென்றார்.