சென்னை: படப்பிடிப்பின்போது இந்தோ-சீனா எல்லையோர கிராமத்தில் சுற்றிய விதார்த்தை, சந்தேகத்தின் அடிப்படையில் சீன ராணுவம் பிடித்துச் சென்றுவிட்டதாம்.
சுசி கணேசனின் உதவியாளர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கி வரும் படம் "ஆள்". இதில் விதார்த் ஹீரோவாக நடிக்கிறார். கார்த்திகா ஷெட்டி என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது விதார்த் சீன ராணுவத்திடம் பிடிபட்டுள்ளார்.
சிக்கிம் மாநிலத்தின் எல்லையோர பகுதியில் படப்பிடிப்பு நடத்திவிட்டு திரும்பியிருக்கும் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இதுபற்றி கூறியதாவது, 'சிக்கிம் மாநிலத்தில் பேராசிரியராக வேலை செய்யும் விதார்த், சென்னைக்கு தன் காதலியையும், தாயையும் சந்திக்க வருகிறார். அவரை இங்கு ஒரு கும்பல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஒரு காரியத்தை செய்ய சொல்கின்றனர். அதி பயங்கரமான அந்த காரியத்தை அவர் செய்கிறாரா? அவரை ஏன் அந்த கும்பல் செய்ய வைக்கிறது என்பதற்கு சிக்கிமில் நடந்த ஒரு சம்பவம் காரணம்.
சென்னையில் படப்பிடிப்புகளை முடித்து விட்டு சிக்கிம் போர்ஷனை எடுப்பதற்காக கடந்த வாரம் சிக்கிம் சென்றோம். அங்கு பத்து நாள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தோம். இந்தோ-சீனா எல்லையோர கிராமம் ஒன்றில் படப்பிடிப்பு நடத்தினோம். மைனஸ் 7 டிகிரி குளிரில் அங்கேயே தங்கியிருந்து படப்பிடிப்பு நடத்தினோம். கதைப்படி அந்த கிராமத்திலிருந்து தினமும் பைக்கில் விதார்த் கல்லூரிக்கு போவது போன்ற காட்சிகளை படமாக்கினோம். ஒரு நாள் காலை விதார்த் ஜாலியாக பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றிப் பார்க்க கிளம்பிப் போனார். காலை 6 மணிக்குச் சென்றவர் 11 மணிக்கு படப்பிடிப்பு துவங்கும் வரை திரும்பி வரவில்லை. அதனால் அவரை நாலா புறமும் கிராமத்து ஆட்கள் துணையுடன் தேடினோம்.
கடைசியல் அவரை சீன ராணும் பிடித்து வைத்திருப்பதாக உள்ளூர் போலீசில் இருந்து தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்றோம். அங்கு சீன ராணுவத்தின் செக் போஸ்ட்டில் விதார்த்தை உட்கார வைத்திருந்தார்கள். விதார்த்தின் ஆங்கிலம் அவர்களுக்கு புரியவில்லை. அவர்களது சீன மொழி விதார்த்துக்கு புரியவில்லை. பிறகு உள்ளூர் மக்கள் விபரத்தை சொன்னார்கள். அதன் பிறகு அந்த பகுதியில் இருந்த இந்திய ராணுவ அலுவலகத்தில் விபரம் சொல்லி அங்கிருந்த அதிகாரியிடம் இருந்து உத்தரவாத கடிதம் வாங்கிக் கொடுத்து அவரை மீட்டு வந்தோம். மோட்டார் சைக்கிளில் சென்றவர் பாதை தெரியாமல் சீனாவின் எல்லைக்குள் சென்று விட்டதால் இந்த பிரச்னை ஏற்பட்டுவிட்டது. அன்று விதார்த் ரொம்பவே அப்செட். அதனால் அன்று ஒரு நாள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு மறுநாள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினோம்' என்றார்.