நீரா ராடியாவாக நடிக்கும் லட்சுமி ராய்!!


விரைவில் தயாராகவிருக்கும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் படத்தில் நீரா ராடியா வேடத்தில் நடிக்கிறார் லட்சுமி ராய்.

சத்யராஜ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை ஜான் மனோகர் இயக்குகிறார். ஈரோடு ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தில் நீரா ராடியா வேடம்தான் பிரதானமாக வைக்கப்பட்டுள்ளது.

ரூ 1.76 லட்சம் கோடி 2 ஜி முறைகேடுகள் குறித்த பல விவரங்கள் வெளியில் வந்ததே, இவரும் முன்னாள் அமைச்சர் ராசா - கனிமொழி- டாடா போன்றவர்களும் பேசிய ஆடியோ டேப் வெளியானதால்தான்.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் லட்சுமி ராய் நடிக்கிறார்.

தமிழில் அஜீத்தின் மங்காத்தாவில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் லட்சுமிராய். 2 ஜி ஸ்பெக்ட்ரம் படத்தில் நடிப்பதன் மூலம், மீண்டும் பரபரப்பான சுற்றுக்கு தயாராகிறார் லட்சுமி ராய்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, இன்னும் படம் குறித்து முழுமையாக எனக்குத் தெரியவில்லை. நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். மற்றவற்றை இயக்குநர்தான் சொல்ல வேண்டும், என்றார் லட்சுமி ராய்.
 

'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து


ஈரோடு: வடிவேலுவுடன் சேர்ந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, "என்னது, வடிவேலு நடிக்கிறாரா?" என்று திருப்பிக் கேட்டார் நடிகர் சிங்கமுத்து.

வடிவேலுவுடன் நடித்து பிரபலமானவர் சிங்கமுத்து. ஆனால் நில மோசடியில் இவருக்கும் வடிவேலுவுக்கும் பகை ஏற்பட்டது. தன்னை பலகோடி ஏமாற்றிவிட்டதாக வடிவேலு கொடுத்த புகாரில் சிங்கமுத்து கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

கடந்த தேர்தலில் வடிவேலு திமுகவுக்கு ஆதரவாகவும், சிங்கமுத்து அதிமுகவுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்தனர்.

தேர்தலில் திமுக தோற்றபிறகு, வடிவேலுவை திரையுலகில் முற்றாக ஓரங்கட்டியுள்ளனர். அவருக்கு கைவசம் புதுப்படம் ஏதுமில்லை. அவரும் அதுபற்றி வெளிப்படையாக அலட்டிக் கொள்ளாமல் உள்ளார்.

இந்த நிலையில் ஈரோட்டுக்கு இன்று வந்திருந்த சிங்கமுத்துவிடம் வடிவேலு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

உடனே, "வடிவேலுவுக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது. சினிமாவிலேயே நான் எழுதிக் கொடுத்த வசனங்களைப் பேசித்தான் அவர் முன்னுக்கு வந்தார்," என்றார்.

மீண்டும் வடிவேலுவுடன் சேர்ந்து நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, "என்னது வடிவேலு நடிக்கிறாரா!? போங்க தம்பீ... தமாஷ் பண்ணாதீங்க!" என்றார் கிண்டலாக.
 

ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்?


ஏஆர் முருகதாஸும் விஜய்யும் இணைகிறார்கள் என்பதுதான் கோடம்பாக்கத்தன் இன்றைய ஸ்பெஷல் செய்தி

முழுக்க முழுக்க ஆக்ஷன் அட்வென்சராக உருவாகும் இந்தப் படத்தை மும்பை நிறுவனம் ஒன்று தயாரிக்கிறது பட்ஜெட் ரூ 65 கோடி என்கிறார்கள்.

முருகதாஸுக்கு மட்டும் ரூ 12 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது.

இப்போது சூர்யாவை வைத்து முருகதாஸ் இயக்கி வரும் ஏழாம் அறிவு படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிகிறது. அதன்பிறகு இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

கதை, நடிகர்கள் தேர்வு குறித்தெல்லாம் ஏற்கெனவே முருகதாஸும் விஜய்யும் பேச்சு நடத்தி முடிவு செய்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தால் சீமான் இயக்குவதாக அறிவித்துள்ள பகலவன் பணிகள் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

ரெக்கார்டிங் தியேட்டரில் மகளை நினைத்து கதறி அழுத சின்னக் குயில்


பாடகி கே. எஸ். சித்ரா தனது மகள் நந்தனா இறந்த பிறகு சில மாதங்கள் கழித்து தற்போது மீண்டும் பாடத் துவங்கியுள்ளார். ஆனால் ரெக்கார்டிங் தியேட்டரில் பாடிக் கொண்டிருக்கையிலே சோகம் தாங்க முடியாமல் கதறி அழுதார்.

தமிழ் திரையுலகின் முன்னணி பாடகி கே. எஸ். சித்ரா. தமிழ் ரசிகர்கள் அவரை அன்பாக சின்னக் குயில் என்றே அழைக்கின்றனர். பிறப்பால் மலையாளியாக இருந்தாலும் அவர் தமிழில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இது வரை 15 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். 6 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் விஷு அன்று துபாயில் சித்ராவின் ஒரே மகள் நந்தனா நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தார். இதையடுத்து பாடுவதை நிறுத்தினார் சித்ரா.

இந்நிலையில் மலையாளத்தில் தாய் தன் மகள் மீது கொண்டிருக்கும் பாசத்தைப் பற்றி ஒரு பாடல் பாட சித்ராவை அணுகினர். பாசத்திற்காக ஏங்கும் அவர் உடனே ஒப்புக் கொண்டார். ஷஇஷம் + ஸ்நேகம் = அம்மா என்ற படத்தில் தான் அந்த பாடல் வரவிருக்கிறது.

சென்னையில் எம்ஜி ஸ்ரீகுமார் இசையில் அந்த பாடலை பாடிக் கொண்டிருக்கையில் நந்தனா நினைவு வரவே அவர் கதறி அழுதார். அவர் அழுகை அங்குள்ளவர்களை கலங்கச் செய்தது.

 

இலங்கை போகும் தமன்னாவுக்கு கடும் கண்டனம்... வேங்கை படத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!!


சென்னை: தமிழர்களை இனப்படுகொலை செய்த நாடான இலங்கையின் பொருள்களை வாங்கக் கூடாது, இலங்கைக்கு யாரும்செல்லக் கூடாது, குறிப்பாக திரையுலகினர் போகவே கூடாது என நாம் தமிழர் உள்ளி்டட கட்சிகள் வலியுறுத்திவரும் சூழலில், நடிகை தமன்னா படப்பிடிப்புக்காக இலங்கை செல்லப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமன்னாவுக்கு எதிராக கண்டனக் குரல்களும், ஆர்ப்பாட்ட அறிக்கைகளும் வெளிவரத் துவங்கியுள்ளன.

தமன்னா நடித்து வெளியாகியுள்ள வேங்கை படத்தை ஓட விடமாட்டோம் என்றும் ஆவேசமடைந்துள்ளனர்.

ஒரு தெலுங்குப் படத்தின் படப்பிடிப்புக்காக தமன்னா இலங்கை செல்கிறார். இதனை அவரே ஒரு பேட்டியிலும் கூறியுள்ளார்.

இந்தத் தகவல் வெளியானதும், தமன்னாவை இனி தமிழ்ப் படங்களில் யாரும் ஒப்பந்தம் செய்யக் கூடாது என்றும், அவர் நடித்து வெளியாகியுள்ள வேங்கை படத்தை திரையரங்குகளிலிருந்து தூக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

 

'2 ஜி ஸ்பெக்ட்ரம்'.... நாட்டை உலுக்கிய ஊழல் சினிமாவாகிறது!


அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்புகிற எந்த விஷயமாக இருந்தாலும் அடுத்த சில தினங்களில் சினிமாவாகிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் இப்போது நாட்டையே உலுக்கி வரும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் திரைப்படமாகிறது.

பொதுவாக இந்தமாதிரிப் படங்கள் இந்தியில்தான் தயாராகும். இந்த முறை தமிழ் சினிமாக்காரர்கள் முந்திக் கொண்டார்கள்.

படத்துக்கு, ’2ஜி ஸ்பெக்ட்ரம்’ என்றே பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த படத்தை ஜான் மனோகர் என்பவர் இயக்குகிறார். ஈரோடு ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.

இதுகுறித்து ஜான் மனோகர் கூறுகையில், “நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை மையப்படுத்தி, நடந்த நிகழ்வுகள், அதன் பின்னணி போன்றவற்றை முழுமையாக சொல்ல இந்தப் படத்தை உருவாக்குகிறோம்.

இதில் லட்சுமி ராய், புதுமுகம் சாந்தினி, ரியாஸ்கான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சத்யராஜை ஹீரோவாக நடிக்க வைக்க பேசி வருகிறோம்,” என்றார்.