குமரி: 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய வாச்சாத்தி பட இயக்குனர் ஐஸ்டஸ் ரவி கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே இருக்கும் நெய்யூரைச் சேர்ந்தவர் ஐஸ்டஸ் ரவி(43). அவர் பனிமலர்கள், வாச்சாத்தி போன்ற படங்களை இயக்கியுள்ளார். அவர் தக்கலை அருகே உள்ள சித்திரங்கோட்டையைச் சேர்ந்த அனிதா பால்நேசம் என்ற பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ரவியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதால் அனிதாவுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர் விசாரித்ததில் பூதப்பாண்டி அருகே உள்ள கீரிப்பாறை சுருளக்கோட்டைச் சேர்ந்த ஷீபா என்ற செல்வகுமாரியை மணந்தது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அனிதாவும், ஷீபாவும் சேர்ந்து ரவியின் லீலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடிவு செய்தனர்.
ரவியின் லீலைகள் குறித்து அவர்கள் மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் போலீசார் விசாரணையை துவங்கினர். சென்னையில் இருந்த ரவியை வரவழைக்க அவருடன் அனிதாவின் குழந்தையை பேச வைத்தனர். குழந்தையின் பேச்சை கேட்டு ரவி திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வருவதாக தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலயைத்தில் வந்திறங்கிய ரவியை அனிதா மற்றும் ஷீபா ஆகியோர் கூட்டாக வரவேற்று காரில் குமரி மாவட்டத்திற்கு அழைத்து வந்தனர்.
வரும் வழியில் களியக்காவிளையில் வைத்து ரவியை மார்த்தாண்டம் மகளிர் போலீசார் கைது செய்தனர். அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போது அவர் பல திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளார்.
ரவி முதலில் பனச்சமூடு பகுதியைச் சேர்ந்த சைலஜாவையும், அதன் பிறகு கேரள மாநிலம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த பிந்துவையும் மணந்துள்ளார். பின்னர் சித்திரங்கோட்டையைச் சேர்ந்த அனிதாவையும், கேரள மாநிலம் திருமலையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரையும் திருமணம் செய்துள்ளார். இத்தனை திருமணம் செய்த அவர் 5வதாக சுருளக்கோடு பகுதியைச் சேர்ந்த ஷீபாவையும் மணந்துள்ளார்.
இது தவிர தற்போது அவர் மேல்மருவத்தூரில் வசிக்கும் பூஜா என்ற இளம் பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஜாலியாக பேசி பெண்களை மயக்குவதில் ரவி வல்லவர். அவ்வாறு தன் பேச்சில் மயங்கிய பெண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறித்துள்ளார்.