பாலுமகேந்திராவுக்கு ஒரு பாராட்டு விழா!


தமிழ் சினிமாவில் பாலுமகேந்திரா எப்போதுமே ஸ்பெஷல். அவரது படைப்புகள் காட்டுவது இன்னொரு உலகம்.

பாலுமகேந்திராவின் படப் பாடல்கள் என்றுமே தனித்த சிறப்பு மிக்கவை. காரணம் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை... இசைஞானி இளையராஜா. அழியாத கோலங்கள் (சலீல் சவுத்ரி) என்ற ஒரு படம் தவிர, பாலு மகேந்திராவின் மீதி எல்லா படங்களுக்கும் ராஜாதான் இசையமைப்பாளர்.

முதல்முறையாக பாலு மகேந்திராவின் பட பாடல்களை மட்டுமே பாடும் கச்சேரி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார், தமிழ் சினிமாவின் தலைசிறந்த கலைஞர்களை தேடிப் பிடித்து பாராட்டு நடத்துவதில் தனி இடம்பிடித்துவிட்ட ஸ்ரீதேவி பைன் ஆர்ட்ஸ் தலைவர் சிவசங்கர்.

பாலுமகேந்திரா ஹிட்ஸ் என்ற தலைப்பில் அவர் படங்களில் வந்த மறக்கமுடியாத பல பாடல்களைப் மேடையில் பாடவிருக்கிறார்கள் எஸ்பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பிரபல பாடகர்கள்.

4-12-11 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு காமராஜர் அரங்கத்தில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். குருநாதரை கவுரவிக்க அவரது சிஷ்யர்களான பாலா, அறிவுமதி, சீமான், வெற்றிமாறன், சீனு ராமசாமி போன்றவர்கள் வரவிருக்கிறார்களாம்.

பாட்டோடு நின்றுவிடாமல், பாலு மகேந்திரா குறித்த பல சுவையான தகவல்களை மேடையில் சொல்லி சுவாரஸ்யம் தரவிருக்கிறார்கள்.

இலங்கை மட்டக்களப்பு அருகே அமர்தகழி என்ற ஊரில் பிறந்தவர் பாலுமகேந்திரா. இவரது அண்டை வீட்டுக்காரர்தான் கவிஞர் காசி ஆனந்தன். பாலுமகேந்திரா இயக்கிய முதல் படமான அழியாத கோலங்கள் படத்தில் வரும் மூன்று சிறுவர்களில் ஒருவர் காசி ஆனந்தன் என்றால் நம்ப முடிகிறதா!

உங்களுக்குத் தெரியாத இதுபோன்ற சுவாரஸ்யமான சமாச்சாரங்களை இந்த விழாவில் ரசிகர்களுக்கு பந்தி வைக்கப் போகிறார்கள்!
 

எனக்கு கிடைத்த மரியாதையை என் மகனுக்கும் பெற்றுத் தரும் 'மம்பட்டியான்'! - தியாகராஜன்


மலையூர் மம்பட்டியான்... எண்பதுகளில் ஒரு புதிய மாற்றத்தையே தமிழ் சினிமாவில் உருவாக்கிய படம். இளையராஜா இசையில் வெளியான சின்னப் பொண்ணு..., காட்டு வழி... போன்ற பாடல்களை முணுமுணுக்காத உதடுகளே இருக்காது எனும் அளவுக்கு பட்டி தொட்டியெங்கும் படு பிரபலம்!

இந்தப் படத்தை மறைந்த ராஜசேகர் இயக்கியிருந்தார். இதே படத்தை பின்னர் ரஜினியை வைத்து இந்தியில் கங்குவா என்ற பெயரில் இயக்கி பெரும் வெற்றி பெற்றார் ராஜசேகர்.

கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து அந்தப் படத்தை 'மம்பட்டியான்' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் தியாகராஜன். இந்தப் படத்தில் மம்பட்டியானாக வருபவர் தியாகராஜனின் மகன் பிரசாந்த்.

தனது லட்சுமி சாந்தி மூவீஸ் பேனரில் இந்தப் படத்தை தயாரித்து இயக்கும் தியாகராஜன், படம் குறித்து பேசுகையில், "எனக்கு இந்த இன்டஸ்ட்ரியில் ஒரு இமேஜையும் பெரிய புகழையும் தந்த படம் மலையூர் மம்பட்டியான். அதைவிட பெரிய புகழை என் மகனுக்கும் இந்தப் படம் தரும் என நம்புகிறேன்.

இந்த வேடத்தை பிரசாந்த் மிகச் சிறப்பாக செய்துள்ளார் என்று சொல்வது வழக்கமான வார்த்தை ஆகிவிடும். நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள். அன்றைக்கு என்னை தியாகராஜன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். மம்பட்டியான் என்றே கூப்பிடுவார்கள். நாளை இந்தப் படம் வந்தபிறகு பிரசாந்தையும் அப்படி அழைத்தால் ஆச்சரியமில்லை," என்றார்.

படத்தின் நான்கு பாடல்கள் மற்றும் ஒரு அசத்தலான ட்ரெயிலரை சமீபத்தில் திரையிட்டுக் காட்டினார்கள். பொன்னர் சங்கருக்கு ஒளிப்பதிவு செய்து பலரின் பாராட்டுக்களையும் பெற்ற ஷாஜி குமார் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர்.

தமன் இசையமைத்துள்ளார். இளையராஜாவின் புகழ்பெற்ற அந்த இரு பாடல்களையும் இதில் ரீமிக்ஸ் செய்திருக்கிறார் தமன்.

அன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப மலையூர் மம்பட்டியான் வந்தது. இன்றைய இளைஞர்களை மனதில் வைத்து மாற்றங்கள் செய்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். பிரசாந்த் எதிர்ப்பார்த்த பிரேக் இதில் கிடைக்கும்," என்கிறார் தியாகராஜன் நம்பிக்கையுன்.

நல்ல நடிகரான பிரசாந்துக்கு இந்த நம்பிக்கை பலிக்க வேண்டும் என்பதே நமது வாழ்த்தும்!
 

மனைவிக்கு மரியாதை தந்தா... கணவனுக்காக அவள் எதையும் செய்வாள்! - செல்வராகவன்


ஒரு கணவன் தன் மனைவிக்கு குறைந்தபட்ச மரியாதை அளிக்க ஆரம்பித்தால் கூடப் போதும், அவள் அவனுக்கா எதையும் செய்வாள், என்கிறார் இயக்குநர் செல்வராகவன்.

செல்வராகவன் இயக்கியுள்ள புதிய படம் மயக்கம் என்ன நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது. பலரும் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர்.

படத்தின் மனைவிக்கு முக்கியத்தும் அளித்திருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது, "ஒரு பெண்ணுக்கு உரிய மரியாதையைத் தர வேண்டும். குறிப்பாக வாழ்க்கைத் துணை என்ற அந்தஸ்துக்குரிய மனைவிக்கு, கணவர்கள் மரியாதை தரவேண்டும்.

குறைந்தபட்ச மரியாதை தந்தாலே, அவர்கள் கணவனுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். மயக்கம் என்ன படத்தில் அந்தக் கருத்தை ஒரு பிரச்சாரமாக சொல்லாமல், லேசாக தொட்டுக் காட்டியிருப்பேன்.

இந்தப் படத்தில், பெண்களை, அவர்களின் உணர்வுகளை ஆண்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன்," என்றார்.

அடுத்ததாக வரலாற்றுப் படம் ஒன்றை இயக்குகிறார் செல்வராகவன். இந்தப் படத்தில் ஆர்யா - அனுஷ்கா ஜோடியாக நடிக்கின்றனர்.
 

மகள் இயக்கத்தில் ரஜினிகாந்த்?


ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் 3 படத்தில் அவரது தந்தையும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படம் 3 . தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிக்கும் இந்த படத்தில் வரும் 'ஒய் திஸ் கொலைவெறி டி' பாடல் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கேட்கிறது. யாரைப் பார்த்தாலும் ஒய் திஸ் கொலைவெறிப் பாட்டைத் தான் பாடுகிறார்கள். அந்த அளவுக்கு பிரபலமாகிவிட்டது.

அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கூட இந்த பாட்டைக் கேட்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்நிலையில் 3 படத்தில் தனது செல்ல மகளுக்காக ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

உடல் நிலைத் தேறியதும் ஷாருக் கானுக்காக மும்பை சென்று ரா ஒன் படத்தில் நடித்துக் கொடுத்துவிட்டு வந்தார் ரஜினி. தனது மகள் இயக்கி, மருமகன் ஹீரோவாகவும், தனது நண்பர் கமல் மகள் ஸ்ருதி ஹீரோயினாகவும் நடிக்கும் படத்தில் கௌரவத் தோற்றத்தில் வரமாட்டாரா என்ன?

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 3 படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளது. இந்நிலையில் ரஜினி வேற நடித்தால் படம் நிச்சயம் சூப்பர் ஹிட் தான்.
 

ட்விட்டர், பேஸ்புக்கில் போலி கணக்கு: சைபர் கிரைம் போலீசில் நயன்தாரா புகார்!


ட்விட்டர் மற்றும் பேஸ்புக் சமூகத் தளங்களில் தன் பெயரில் போலியாக கணக்கு தொடங்கி ரசிகர்களுடன் உரையாடி வரும் நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார் நடிகை நயன்தாரா.

டுவிட்டர், பேஸ் புக்கில் தனது பெயரில் மோசடி நடப்பதாக நடிகை நயன்தாரா குற்றம் சாட்டி இருந்தார். அடையாளம் தெரியாத சிலர், நயன்தாரா பெயரில் இவற்றை உருவாக்கி ரசிகர்களுடன் தொடர்பு வைத்து இருந்தனர். அதை உண்மை என நம்பி நிறைய பேர் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களும், அவர் நடித்த படங்கள் பற்றிய விமர்சனங்களும் அனுப்பி வைத்தனர்.

அத்துடன் முல்லைப் பெரியாறு அணை உடைவது போன்று எடுக்கப்பட்ட `டேம் 999' படத்துக்கு நயன்தாரா ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்து இருப்பது போன்ற செய்தியும் அதில் இடம் பெற்று இருந்தது.

இது குறித்து நயன்தாரா, கவனத்துக்கு கொண்டு சென்றதும் அதிர்ச்சியானார். நான் டுவிட்டரிலோ பேஸ் புக்கிலோ இல்லை. போலியாக அவை உருவாக்கப்பட்டு உள்ளது. அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் நீக்க வேண்டும் என்று நேற்று அறிவித்தார்.

ஆனால் அப்படியும் அவர் பெயரில் அந்த தளங்களில் பக்கங்கள் தொடர்ந்து இயங்கின.

இதையடுத்து அவர் சைபர் க்ரைம் போலீஸ் உதவியை நாடியுள்ளார். இதுகுறித்து நயன்தாரா கூறுகையில், "நடிகை என்பதால் டுவிட்டரில் என் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது நான் இல்லை என்று தெளிவுப்படுத்தி விட்டேன். போலியாக உருவாக்கப்பட்ட எனது பெயரை ட்விட்டரில் இருந்து நீக்கி விடும்படி சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் அது நடக்கவில்லை. எனவே சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளேன்," என்றார்.
 

கோச்சடையான் தொடங்க ரஜினியின் உடல்நலம் காரணமல்ல!! - சௌந்தர்யா


சென்னை: ராணாவை நிறுத்திவிட்டு கோச்சடையானை ஆரம்பிக்க, ரஜினியின் உடல்நிலை காரணமல்ல. அவர் நலமுடன் இருக்கிறார். இந்தப் படத்திலும் முழுமையாக அவர்தான் நடிக்கப் போகிறார், என சௌந்தர்யா ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.

கோச்சடையான் என்ற புதிய படத்தை ரஜினி அறிவித்ததிலிருந்து அது தொடர்பாக பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சௌந்தர்யா கூறுகையில், "தென்கிழக்கு ஆசியாவில் மோஷன் கேப்சரிங் என்ற தொழில்நுட்பத்தில் ஒரு நடிகருக்கு படம் தயாராவது அப்பாவுக்குதான் (ரஜினி). கோச்சடையான் என்பது சிவபெருமானின் பெயர். இந்தப் படம் சுல்தான் அல்ல. இது முற்றிலும் புதிய படம்.

அதேநேரம் ராணா படத்தை நிறுத்தவில்லை. தள்ளி வைத்திருக்கிறோம். நிச்சயம் ஆகஸ்ட் 2012-ல் தொடங்கிவிடும்.

கோச்சடையான் வெறும் அனிமேஷன் படம் அல்ல. இந்தப் படத்தில் முழுமையாக அப்பா நடிக்கிறார். அவரது காட்சிகள் ஒரு ஸ்டுடியோவுக்குள் படமாக்கப்பட்டு, மோஷன் கேப்சரிங் முறையில் மாற்றப்படும். உடல்ரீதியாக அவர் மிகவும் ஃபிட்டாக இருக்கிறார். கோச்சடையான் தொடங்க அவர் உடல்நலம் காரணமல்ல. இந்தப் படத்தில் நடிக்க அப்பாவே விரும்பி, ஆரம்பிக்கச் சொன்னார்.

பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும்," என்றார்.
 

அன்புக்கு ஒன்று... ஆசைக்கு ஓன்று! - தன்ஷிகாவுக்கு கிளி சொன்ன ஜோசியம்


தனக்கு வரும் கணவர் அன்புக்கு ஒன்றும் ஆசைக்கு ஒன்றும் என இரண்டு மனைவிகள் கொண்டவராக இருப்பார் என கிளி ஜோசியம் சொன்னதால், ஷாக் ஆனார் நடிகை தன்ஷிகா.

பாலிமர் டிவியில் ஞாயிறுதோறும் ஒன்பது மணியளவில் ஒளிபரப்பாகி வரும் சம்திங் சம்திங் வித் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் "பேராண்மை'' மற்றும் ''அரவான்'' படங்களின் நாயகி தன்ஷிகா கலந்துகொண்ட சிறப்பு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளது.

'அயன்' ஜெகன் தொகுப்பாளராக இருந்து நடிகை தன்ஷிகாவோடு மிகவும் மாறுபட்ட முறையில் சுவாரஸ்யமாக கலந்துரையாடிய இந்த நிகழ்ச்சி படமாக்கப்பட்டபோது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது.

நிகழ்ச்சியின் ஒரு அம்சமான கிளி ஜோசியத்தில் தன்ஷிகா என் வருங்காலக் கணவர் எப்படி இருப்பார்? எப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவராக இருப்பார் என்று கேட்டார்.

அதற்கு கிளி எடுத்துக் கொடுத்த சீட்டை வைத்து ஜோசியர், "உங்கள் கணவர் அன்புக்கு ஒன்றும் ஆசைக்கு ஒன்றும் வச்சிருப்பார் என்று பதிலளித்தார்."

உடனே பதறிய தன்ஷிகா, "அய்யய்யோ எனக்கு அப்படிப்பட்ட கணவரே வேண்டாம்... என் கணவர் எனக்காக மட்டுமே வாழும் அன்புகொண்டவராக அவர் இருக்கவேண்டும்," என்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்களோடுஆடிப்பாடி நிகழ்ச்சியை கலகலப்பூட்டிய நடிகை தன்ஷிகா தனது நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் 'அரவான்' படம் பற்றிய வெளிவராத தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த சுவாரசியமான நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை பாலிமர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது!