2014-ல் நான்கு வெற்றிகளை ருசித்த ஹன்சிகா!

ஹன்சிகாவுக்கு இது பெரிய ஆண்டு. 'மான் கராத்தே', 'பவர்', 'அரண்மனை', 'மீகாமன்' என நான்கு படங்கள் அடுத்தடுத்து வெற்றியைக் கண்டுள்ளன. அதிலும் அரண்மனை மெகா வெற்றி.

அந்த வெற்றிக் களிப்புடன் அவர் அனுப்பியுள்ள புத்தாண்டு வாழ்த்து இது.

2014-ல் நான்கு வெற்றிகளை ருசித்த ஹன்சிகா!

உங்களின் அளப்பறியா அன்பாலும், ஆதரவாலும் 2014 ஆம் ஆண்டு வெற்றிகரமாய் அமையப் பெற்றது.

'மான் கராத்தே', 'பவர்', 'அரண்மனை', 'மீகாமன்' என இவ்வருடத்தில் வெற்றி வித்தாய் இருந்த இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள், நடிகர்- நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் எனது ஆதரவாளர்கள்அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அனைவரின் அன்புக்கும், ஆதரவிற்கும் எனது உள்ளம் நிறைந்தநன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

2015 ஆம் ஆண்டும் உங்கள் ஆதரவை நல்கிட விழைகிறேன்

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

என்றும் அன்புடன்

ஹன்சிகா

இவ்வாறு தனது புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார் ஹன்சிகா.

 

சிம்புவுக்கு வாய்ஸ் கொடுக்க மறுத்த தனுஷ்

சென்னை: சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் பாட்டு பாட தனுஷ் மறுத்துவிட்டாராம்.

பாண்டிராஜ் இயக்கத்தில் முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் இது நம்ம ஆளு. முன்னாள் காதலர்கள் ஜோடி சேர்ந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தில் வரும் ஓரிரு பாடல்களை மட்டுமே படமாக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.

சிம்புவுக்கு 'நோ' சொன்ன தனுஷ்

இந்நிலையில் படத்தில் வரும் பாடல் ஒன்றை தனது நண்பேன்டா தனுஷை பாட வைக்கலாம் என்று சிம்பு தெரிவித்தாராம். சிம்பு படத்தில் தனுஷ் பாடினால் பப்ளிசிட்டி தானாக கிடைக்கும் என்று பாண்டிராஜும் நினைத்துள்ளார்.

இதைடுத்து பாண்டிராஜ் தனுஷை அணுகி என் படத்தில் ஒரு பாட்டு பாடுங்களேன் என்று கேட்டாராம். ஆனால் தனுஷோ சாரி பாட முடியாது என்று தெரிவித்துவிட்டாராம். இது நம்ம ஆளு படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

நயன்தாராவோ அடுத்தடுத்த படங்களில் நடிக்க சென்றுவிட்டார். பாண்டிராஜோ ஜோதிகாவை வைத்து புதிய படத்தை எடுக்கத் துவங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வி4 விருதுகள்... பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்பு

வி 4 விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

எம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி சார்பில் ஆண்டுதோறும் புத்தாண்டின் முதல் நாளில் சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

வி4 விருதுகள்... பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்பு

2014 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று (01.01.2015) மாலை 6.30 மணியளவில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

[வி4 விருது படங்கள்]

என்.கே.விஸ்வநாதன், பிலிம் நியூஸ் அனந்தன், ஜூடோரத்னம், மித்ராதாஸ், தோட்டாதரணி, வியட்நாம்வீடு சுந்தரம், ரங்கம்மாள், சங்கர்கணேஷ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் நெப்போலியன், சத்யராஜ், பிரபு, சந்திரசேகர், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், பட்டியல் சேகர் மற்றும் கே.ராஜன், அமுதா துரைராஜ், ருக்மாங்கதன், கவிஞர் பிறைசூடன், தயாரிப்பாளர் காட்ரகட்ட பிரசாத், நளினி, பாண்டியராஜன், எஸ்.எ.சந்திரசேகர், டி.ஜி.தியாகராஜன், சுஹாசினி மணிரத்தனம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறந்த இயகுநர்களுக்கான விருது, இயக்குநர்கள் வினோத் ( சதுரங்கவேட்டை ), பார்த்திபன் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்), எழில் ( வெள்ளக்காரதுரை), ராஜபாண்டி (என்னமோ நடக்குது), முத்துராமலிங்கன் ( சினேகாவின் காதலர்கள்), விஜய்மில்டன் (கோலிசோடா) ஞானராஜசேகரன் ( ராமானுஜன்) டீகே ( யாமிருக்க பயமேன்), கார்த்திக்கிரிஷ்( கப்பல்), மகிழ்திருமேணி ( மீகாமன்), பிரவீன்காந்த் (புலிப்பார்வை), சுசீந்திரன் ( ஜீவா), வேல்ராஜ் (வேலை இல்லா பட்டதாரி), கிருஷ்ணா( நெடுஞ்சாலை) இளையதேவன் ( ஞானகிருக்கன்), பிரபுசாலமன் ( கயல்) ஆனந்த்சங்கர் ( அரிமாநம்பி), கெளரவ் ( சிகரம்தொடு) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த கதைக்கான விருதினை பொன்குமரன் ( லிங்கா) பெற்றார்.

மற்ற விருதுகளைப் பெற்றவர்கள் விவரம்:

சிறந்த இசையமைப்பாளர்கள் (இமான், அனுருத்)
சிறந்த வசனம் - பாலாஜி மோகன் (வாயை மூடி பேசவும்)
சிறந்த நகைச்சுவை நடிகர் விருது - நடிகர் (விவேக், சூரி)
சிறந்த குழந்தை நட்சத்திரம் சத்யதேவ் (புலிப்பார்வை)
சிறந்த திரைக்கதை கார்த்திக் சுப்பராஜ் ( ஜிகர்தண்டா)
சிறந்த ஒளிப்பதிவாளர் - கே.எஸ்.செல்வராஜ்
சிறந்த படத்தொகுப்பாளர் - விஜயகுமார் ( அப்புச்சி கிராமம்)
சிறந்த படத்தொகுப்பாளர்- தேவா ( மஞ்சப்பை )
சிறந்த ஸ்டன்ட் இயக்குனர் -ஸ்டன்ட் சிவா
சிறந்த டிசைனர்- மேக்ஸ்
சிறந்த நடன இயக்குனர்- காயத்ரி ரகுராம்
சிறந்த புகைப்படக் கலைஞர் விருது - சுரேஷ் (டாப் டென் சினிமா )
சிறந்த ப்ரிவியு தியேட்டர் - 4 பிரேம்ஸ்
சிறந்த பி.ஆர்.ஓ - கண்ணதாசன், பாரிவள்ளல்,ஈ.வெ.ரா.மோகன்
சிறந்த போட்டோ லேப் - போட்டோ சைன்ஸ்

சிறந்த புதுமுக நடிகர்கள் - சந்தோஷ் ( கதை திரைக்கதை வசனம் இயக்கம்), சந்திரன் (கயல்), கஜேஷ் ( கல்கண்டு), வீரா ( மொசக்குட்டி)

சிறந்த புதுமுக நடிகைகள் - ஷிவதா ( நெடுஞ்சாலை), நந்திதா

சிறந்த நடிகர்கள்- ஆரி (நெடுஞ்சாலை), விமல் (மஞ்சப்பை ), சிபிராஜ் ( நாய்கள் ஜாக்கிரதை), நகுல்( வல்லினம் ), பாலாஜி ( நாய்கள் ஜாக்கிரதை) யோகி தேவராஜ் (கயல்), பிளாரன்ட் பெரைரா(கயல்), அபினய் ( ராமானுஜன் ), சதீஷ் (மான் கராத்தே)

சிறந்த நடிகை - தன்ஷிகா,

சிறந்த குணச்சித்திர நடிகை - சஞ்சனாசிங்

சிறந்த தயாரிப்பாளர் - மனோபாலா (சதுரங்கவேட்டை)

-போன்ற விருதுகள் வழங்கப்பட்டது.

விழாவில் லஷ்மன் ஸ்ருதி குழுவினரின் இசை நிகழ்ச்சியும், நடன இயக்குனர் காயத்ரிரகுராம் குழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 

பொங்கல் அன்று ட்விட்டரில் படத் தலைப்பை அறிவிக்கும் விஜய்

சென்னை: பொங்கல் அன்று விஜய் தான் நடித்து வரும் படத்தின் தலைப்பை ட்விட்டரில் ரசிகர்களிடம் தெரிவிக்க உள்ளார்.

விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் பேன்டஸி படத்தில் நடித்து வருகிறார். படத்தில் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா என இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். மேலும் இந்த படம் மூலம் பல காலம் கழித்து கோலிவுட்டுக்கு வந்துள்ளார் ஸ்ரீதேவி.

பொங்கல் அன்று ட்விட்டரில் படத் தலைப்பை அறிவிக்கும் விஜய்

இந்நிலையில் விஜய் படத்திற்கு மாரீசன், புலி, கருடா என பெயர் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. படத்தில் விஜய் குள்ள மனிதராக நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனா் அவர் குள்ள மனிதராக நடிக்கவில்லையாம்.

மேலும் தனது படத்தின் தலைப்பை விஜய் பொங்கல் அன்று ட்விட்டரில் அறிவிக்க உள்ளாராம். விஜய் ட்விட்டரில் அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஹீரோயின்களை விட ஸ்ரீதேவிக்கு தான் அதிக சம்பளம் என்று கூறப்படுகிறது.

 

பாசமா பேசினாலே பொளந்து கட்டுவேன்.. பந்தயம் வேற போட்டிருக்கீங்க.. - விஷால்

விஷால் - ஹன்சிகா நடிப்பில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆம்பள பொங்கலுக்கு தயாராகி வருகிறது.

படத்தில் பிரபு, வைபவ்,கிரண், ரம்யா கிருஷ்ணன்,மனோபால்ல உள்பட பல நடித்துள்ளனர். இதன் டிரைலர் புத்தாண்டு நள்ளிரவு வெளியிடபட்டது.

"ஆம்பள" படம் வழக்கமான சுந்தர் சி பாணி பொழுதுபோக்குப் படமாக உருவாக்கபட்டுள்ளது. இதை ட்ரைலர் பார்க்கும்போதே புரிந்து கொள்ளலாம்.

விறு விறு சண்டை காட்சிகள், விஷால் மற்றும் ஹன்சிகாவின் குத்தாட்டம் என ட்ரைலர் முழுக்க மசாலா மயம்.

விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்துள்ள இத்திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஹிப் ஹாப் தமிழா புகழ் ஆதி.

பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு வசனம்.. "பாசமா பேசினாலே பொளந்து கட்டுவேன்.. பந்தயம் வேற போட்டிருக்கீங்க.. பட்டயைக் கிளப்பறேன் பாருங்க," என யாருக்கோ சவால் விடுகிறார் விஷால்.

சமீபத்தில், பொங்கலுக்கு எத்தனை படங்கள் வந்தாலும் கவலையில்லை.. எவனா இருந்தாலும் வெட்டுவேன் என விஷால் கூறியது நினைவிருக்கலாம்.

 

என்னை அறிந்தால் இசை வெளியீடு... ரசிகர்கள் எடுத்த விழா

அஜீத்தின் ‘என்னை அறிந்தால்' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை வெளியானது. இதனை விழா எடுத்துக் கொண்டாடினர் அஜீத் ரசிகர்கள்.

டிரைலர் வெளியாகி 15 மணி நேரத்தில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதனைப் பார்த்துள்ளனர்.

என்னை அறிந்தால் இசை வெளியீடு... ரசிகர்கள் எடுத்த விழா

இப்படத்தின் பாடல்களை படக் குழுவினர் எந்த விழாவும் இல்லாமல் வெளியிட்டுள்ளதால், ரசிகர்கள் இந்த படத்தின் பாடல்களை விழாவாகக் கொண்டாடினர்.

சென்னையின் ரேடியோ மார்க்கெட் என்று அழைக்கப்படும் ரிச்சி தெருவில் இந்த விழா நடந்தது. அஜீத் ரசிகர்கள் சிலர் மட்டும் இதில் பங்கேற்றனர். இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ள எம்.சி.ஜாஸ் இந்த விழாவில் கலந்துகொண்டு கேக் வெட்டி பாடல்களை வெளியிட்டார்.

 

அமெரிக்காவில் கலக்கும் லிங்கா.. புதிய படங்களை விட அதிக வசூலுடன் 4வது வாரமாக தொடர்கிறது!

டிசம்பர் 12-ம் தேதி உலகெங்கும் வெளியான ரஜினியின் லிங்கா படம் நல்ல வசூலுடன் இன்னும் ஓடிக் கொண்டுள்ளது.

அமெரிக்காவில் நூற்றுக்கும் அதிகமான அரங்குகளில் வெளியான இந்தப் படம் நான்காவது வாரமாக பல அரங்குகளில் தொடர்கிறது.

லிங்கா படத்தை ரசிகர்கள் குடும்பம் குடும்பமாகப் பார்த்து ரசிக்கிறார்கள். ஆனால் சில பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்கள் வேண்டுமென்றே இந்தப் படத்துக்கு எதிர்மறையாக பிரச்சாரம் செய்வதாக ரஜினி ரசிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கருதுகிறார்கள்.

அமெரிக்காவில் கலக்கும் லிங்கா.. புதிய படங்களை விட அதிக வசூலுடன் 4வது வாரமாக தொடர்கிறது!

இதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது லிங்கா வசூல்.

அமெரிக்காவில் ஒரு படம் நான்கு வாரங்கள் நல்ல வசூலுடன் தாக்குப் பிடிப்பது சாதாரண விஷயமல்ல. இதுவரை 1.6 மில்லியன் டாலர்களைக் குவித்துள்ள லிங்கா, இன்னும் பெருமளவு அரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படம் லிங்கா. பிகே போன்ற படங்கள்கூட அங்கு பெரிய வசூலை ஈட்டவில்லை.

சமீபத்தில் கிறிஸ்துமஸுக்கு வெளியான நான்கு புதுப் படங்கள் கயல், கப்பல், மீகாமன் மற்றும் வெள்ளக்கார துரையைக் காட்டிலும் நல்ல வசூலுடன் லிங்கா ஓடுவதாக அமெரிக்க விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். இந்தப் படங்களைக் காட்டிலும் அதிக காட்சிகளுடன் ஓடுகிறது லிங்கா.

"ஏன் தொடர்ந்து லிங்காவுக்கு எதிராக தமிழ் மீடியாக்கள் எழுதி வருகின்றன என்று புரியவில்லை. மக்கள் ரசித்துப் பார்க்கிறார்கள். வசூலும் நன்றாக இருக்கிறது. இதில் மீடியாவுக்கு என்ன பிரச்சினை? ஏன் லிங்காவை தொடர்ந்து விமர்சிக்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் அந்த விநியோகஸ்தர்.

படத்தை வெளியிட்டுள்ள அட்மஸ் நிறுவனமும் இதே கேள்வியைக் கேட்கிறது.

மலேசியாவில்

லிங்காவுக்கு மலேசியாவில் அபரிமிதமான வரவேற்பு கிடைத்துள்ளது. இங்கு லிங்காவுக்கு இணையாக வெளியிடப்பட்ட பிகே படம், வசூலில் லிங்காவை நெருங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

புத்தாண்டை ஒட்டி வேலூர் பாலமுருகன் கோவிலில் நமீதா வழிபாடு

வேலூர் : புத்தாண்டை ஒட்டி வேலூர் ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் நடிகை நமீதா வழிபாடு நடத்தினார்.

புத்தாண்டை ஒட்டி வேலூர் பாலமுருகன் கோவிலில் நமீதா வழிபாடு

உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மக்கள் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டனர். இதற்கென நள்ளிரவு முதலே கோயில் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

புத்தாண்டை ஒட்டி வேலூர் பாலமுருகன் கோவிலில் நமீதா வழிபாடு

புத்தாண்டோடு வைகுண்ட ஏகாதசியும் சேர்ந்து கொண்டதால் தமிழகத்தின் கோவில்களில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அந்தவகையில், வேலூரில் உள்ள ரத்திரகிரி பாலமுருகன் கோவிலில் நடிகை நமீதா வழிபாடு நடத்தினார்.

 

ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேனை ரொமான்ஸ் செய்யும் இந்தி 'சிங்கம்'?

மும்பை: பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தான் தயாரித்து, இயக்கி, நடிக்கும் ஷிவாய் படத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்(45) ஷிவாய் என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடிக்க உள்ளார். ஷிவாய் படம் உபேந்திரா நடித்து வரும் கன்னட படமான ஷிவமை காப்பியடித்து எடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஷிவாய் படத்தில் நடிக்குமாறு அஜய் ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேனை(47) கேட்டுள்ளார். இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இருப்பினும் நிக்கோல் இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை.

ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேனை ரொமான்ஸ் செய்யும் இந்தி 'சிங்கம்'?

ஓம் நமச்சிவாய என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து அஜய் தனது படத்திற்கு தலைப்பை எடுத்துள்ளார். அஜய் தனது மார்பில் ஷிவாய் என்று பச்சை குத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிவாய் படத்தில் வரும் நடிகர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டவர்கள் என்றும், படப்பிடிப்பின் பெரும்பகுதி வெளிநாடுகளில் நடத்தப்படுகிறது என்றும் அஜய் தெரிவித்துள்ளார்.

நிக்கோல் கிட்மேன் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் முன்னாள் மனைவி ஆவார்.

 

புத்தாண்டு பார்ட்டியில் செம ஆட்டம் போட்ட நடிகை கவ்ஹர் கான்

மும்பை: மும்பையில் நடந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை கவ்ஹர் கான் அசத்தலாக நடனம் ஆடினார்.

புத்தாண்டை வரவேற்க நள்ளிரவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நடிகைகளை ஆட வைப்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் கன்ட்ரி கிளப் மும்பையில் நடத்திய புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகையும், மாடலுமான கவ்ஹர் கான் கலந்து கொண்டு நடனம் ஆடினார்.

அவரது நடனம் மிக அருமை என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் ட்விட்டரில் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

புத்தாண்டு பார்ட்டியில் செம ஆட்டம் போட்ட நடிகை கவ்ஹர் கான்

இந்நிலையில் இது குறித்து கவ்ஹர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுடன் சேர்ந்து புத்தாண்டை வரவேற்றேன். கன்ட்ரி கிளப் இந்தியாவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி கவ்ஹர் மும்பையில் நடந்த டிவி நிகழ்ச்சி ஒன்றின் ஷூட்டிங்கில் இருந்தபோது அவர் முஸ்லீமாக இருந்து கொண்டு அரைகுறை ஆடை அணிந்து ஆடுவதாகக் கூறி வாலிபர் ஒருவர் அவரின் கன்னத்தில் அறைந்தார்.

 

கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் பிரேசில்

தமிழில் விளையாட்டை மையப்படுத்தி வெளியாகும் படங்கள் ரொம்பவே குறைவு.

சமீப காலமாகத்தான் வெண்ணிலை கபடிக் குழு, வல்லினம் போன்ற படங்கள் வெளியாகி அந்தக் குறையைத் தீர்த்தன.

கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் பிரேசில்

அந்த வரிசையில் மேலும் ஒரு படம் வருகிறது. படத்துக்கு பிரேசில் என தலைப்பிட்டுள்ளனர். பிரேசில் என்றாலே கால்பந்துதான் நினைவுக்கு வரும். இந்தப் படமும் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திதான் உருவாகியுள்ளது. இந்நிலையில் அம்ஜத் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தின் டேக் லைனில், தெருவிலிருந்து மைதானத்துக்கு என்று குறிப்பிட்டுள்ளனர்.

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

அஜீத்தின் மங்காத்தா, வீரம், என்னை அறிந்தால் படங்களுக்கு ஸ்டன்ட் அமைத்தவர் சில்வா என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிகே திரைப்படம் மத உணர்வுகளை புண்படுத்துகிறது.. ஆமீர்கானுக்கு எதிராக போலீசில் புகார்!

ஜெய்ப்பூர்: ஆமீர்கான் நடித்து பாலிவுட்டில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ள திரைப்படமான 'பிகே', மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமீர்கான் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் பிகே. வேற்றுகிரகவாசியாக பூமிக்கு வரும் கதாநாயகன் பாத்திரம், இந்தியாவில் பின்பற்றப்படும் மத சடங்குகளை கேலி செய்வதுபோலவும், கேள்வி கேட்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. எனவே இந்து அமைப்புகள் இப்படத்திற்கு தடைகோரி போராட்டங்களை நடத்தி வருகின்றன.

பிகே திரைப்படம் மத உணர்வுகளை புண்படுத்துகிறது.. ஆமீர்கானுக்கு எதிராக போலீசில் புகார்!

இந்நிலையில் பசந்த் கெலாட் என்பவர் ராஜஸ்தான் தலைநகரம் ஜெய்ப்பூரிலுள்ள பஜாஜ்நகர் காவல் நிலையத்தில் பிகே படம் தொடர்பாக ஒரு புகார் அளித்துள்ளார். இதையடுத்து இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 295ஏ, 153ஏ ஆகிய பிரிவுகளின்கீழ், படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, மத உணர்வுகளை புண்படுத்துதல், இருவேறு மதப்பிரிவுகள் அல்லது இனங்களுக்கு நடுவே சண்டையை மூட்டுதல் ஆகியவை இந்த சட்டப் பிரிவுகளின்கீழ் குற்றச்செயல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முதல் தகவல் அறிக்கையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை.

 

கீழக்கரையில் யுவன் சங்கர் ராஜா - ஜபருன்னிசா திருமணம்

முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கும் கீழக்கரையைச் சேர்ந்த ஜபருன்னிசாவுக்கும் நேற்று திருமணம் நடந்தது.

இது யுவன் சங்கர் ராஜாவின் மூன்றாவது திருமணமாகும். ஏற்கெனவே இருமுறை அவருக்கு திருமணம் நடந்து விவாகரத்தில் முடிந்தது.

அதன் பிறகு அவர் இஸ்லாம் மதத்தைத் தழுவினார். தனது பெயரை அப்துல் ஹலிக் என்று மாற்றிக் கொண்டுள்ள யுவன், கீழக்கரையைச் சேர்ந்து ஜபருன்னிசாவை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார்.

கீழக்கரையில் யுவன் சங்கர் ராஜா - ஜபருன்னிசா திருமணம்

ஜபருன்னிசா துபாயில் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.

யுவன் - ஜபருன்னிசா திருமணம் நேற்று மாலை கீழக்கரையில் நடந்தது.

கீழக்கரையில் யுவன் சங்கர் ராஜா - ஜபருன்னிசா திருமணம்

இளையராஜா வரவில்லை

இந்தத் திருமணம் நடந்த போது யுவனின் தந்தை இளையராஜா குடும்பத்துடன் திருவண்ணாமலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது குடும்பத்திலிருந்து வேறு யாரும் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.