மக்களை அச்சுறுத்தும் டேம் 999 படத்தைத் திரையிட மாட்டோம்- தியேட்டர் அதிபர்கள்


சென்னை: மக்களை அச்சுறுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள டேம் 999 படத்தை தமிழகத்தில் திரையிட மாட்டோம் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சம்மேளனத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அப்போது டேம் 999 படம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பின்னர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், பழமையான அணை உடைவதாக கூறி மக்களை அச்சுறுத்தும் வகையில் டேம் 999 படம் எடுக்கப்பட்டுள்ளதாக பல்வேறு அமைப்புகள், கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்தப் படம் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தலையிடுவதாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே இந்தப் படத்தை எங்களது திரையரங்குகளில் திரையிடுவதில்லை என்ற முடிவினை சம்மேளனம் எடுத்துள்ளது என்றனர்.
 

அந்த டேமை சொல்லவில்லை- ஆனா முல்லைப் பெரியாறை இடிக்கணும்! - மலையாள இயக்குநரின் பல்டி


சென்னை: 'டேம் 999' படத்தில் இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ள எந்த அணைகள் பற்றியும் நான் சொல்லவே இல்லை. இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம், என்று பல்டியடித்துள்ளார் மலையாள இயக்குநர் சோஹன் ராய்.

ஆனால் முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டு, அதற்கு பதிலாக பெரிய அணை கட்டினால்தான் தமிழர்களுக்கு நிறைய தண்ணீர் கிடைக்கும் என்றும் அவர் சந்தடி சாக்கில் 'பிட்'டைப் போட்டு தனது உண்மையான நோக்கம் என்ன என்பதையும் அவரே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். ஒரு சினிமாக்காரருக்கு அணை குறித்த பேச்சு எதற்கு என்ற கேள்வியையும் இவரின் பதில் எழுப்பியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை உடைவது போல 'டேம் 999' என்ற ஆங்கிலப் படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது என்று செய்தி வெளியானதால், மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்று கூறி தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் படத்துக்காக நேற்று ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது. பிரசாத் லேப் இனி இந்தப் படத்துக்கு எந்த ஒத்துழைப்பும் தர முடியாது என்று கூறியுள்ளது.

'டேம் 999' படம், ஐக்கிய அரபு நாடுகளில் வியாழக்கிழமையும், இந்தியாவில் வெள்ளிக்கிழமையும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் எங்கும் இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இந்த நிலையில், டேம் 999 படத்தின் இயக்குனர் சோஹன் ராய் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக மக்கள் அனைவருக்கும் உளப்பூர்வமான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது 'டேம் 999' திரைப்படம், தமிழக மக்களின் கலாசாரத்தையோ, உணர்வுகளையோ இழிவுபடுத்தக்கூடிய படம் அல்ல.

'டேம் 999' முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கபட்ட படம். சீனாவின் பாங்கியூ அணை 1975-ல் உடைந்ததால் ஏற்பட்ட பேரழிவில் சுமார் 2,50,000 பேர் பலியான சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.

மக்கள் பலரின் வாழ்க்கையை ஓர் அணை பேரழிவின் மூலம் எப்படி மூழ்கடித்தது என்பதையை இந்தப் படம் எடுத்துரைக்கிறது. மாறாக, இந்தியாவில் உள்ள அணைகளைப் பற்றியோ, குறிப்பாக தமிழகத்தில் உள்ள அணைகளைப் பற்றியோ சொல்லவில்லை.

தமிழக மக்கள் மீது எனக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு. அவர்களது கலாசாரத்தையும், உணர்வுகளையும் பாதிக்கும் எந்த செயலலிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

எனது 'டேம் 999' படத்தில், தமிழ் மக்களுக்கோ அல்லது தமிழகத்துக்கோ தவறான எண்ணம் ஏற்படும் வகையில் எந்த ஒரு வசனமும் காட்சியும் இடம்பெறவில்லை என்று உறுதிகூறுகிறேன். இந்தியாவில் உள்ள எந்த ஒரு அணையையோ அல்லது தமிழக அணைகளையோ இந்தப் படத்தில் நான் குறிப்பிடவே இல்லை.

தமிழக மக்களின் உணர்வுகளை 'டேம் 999' எந்த விதத்திலும் பாதிக்காது என்று என்னால் நிச்சயமாக சொல்லமுடியும். இது, உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சினிமா மட்டுமே என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஒரு நல்ல நோக்கத்துக்காகவும், விழிப்பு உணர்வுக்காகவும் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை தயவு செய்து தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மதிப்புமிக்க அரசியல் தலைவர்களுக்கு இந்தப் படத்தை பிரத்யேக காட்சி மூலம் திரையிட்டு காட்ட தயாராக இருக்கிறேன். அவர்கள் தவறானது எனச் சொல்லும் காட்சிகளையோ அல்லது வசனங்களையோ நீக்குவதற்கும் தயாராக இருக்கிறேன்.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தேவை என்பது எனது தனிப்பட்ட கருத்து. கேரளாவுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் நிலையில், பழைய அணையை இடித்துவிட்டு, விரைவில் பெரிய அணை ஒன்றை கட்டுவதே இதற்கு தீர்வு. அப்போது ன், தமிழக மக்களுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும்; கேரள மக்களின் வாழ்வாதாரமும் காக்கப்படும்," என்று கூறியுள்ளார்.

எந்த அணையைப் பற்றியும் குறிப்பிடவே இல்லை என்று சொல்லிவிட்டு, பின்னர் முல்லைப் பெரியாறு அணையை இடித்து புதிய அணை கட்ட வேண்டும் என்று கூறுகிறார் சோஹன் ராய். இதிலிருந்தே, அவரது நோக்கம் முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்பதே எனத் தெளிவாகியுள்ளது.
 

அன்றைய 'டாப்' கதாநாயகிகளுடன் 'ஹாட் ட்ரிங்க்ஸ்' சாப்பிட்டவன் நான் - கவிஞர் வாலி கலகல பேட்டி


வசந்த் தொலைக்காட்சியின் ‘வாலி 1000′ என்ற சிறப்பு நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. 60 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் பல தலைமுறைகளைக் கடந்து சாதனை புரிந்து வரும் கவிஞர் வாலியை, அவருடன் பழகியவர்கள், பணியாற்றுபவர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், நடிகைகள், பத்திரிகையாளர்கள் என பலரும் பேட்டி காண்கிறார்கள். கூடவே வாலியின் தேர்ந்தெடுத்த 1000 பாடல்களை சாதகப்பறவைகள் சங்கர் குழுவினர் பாடுகிறார்கள்.

மருதுசங்கர் இயக்கும் இந்நிகழ்ச்சியின் நிர்வாகத் தயாரிப்பாளர் சங்கர் கிருஷ்ணமூர்த்தி. ஜனவரி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, பாடலை பெற்ற ஸ்தலம், கோலிவுட் vs வாலிவுட், நினைவோ ஒரு பறவை, உன்னால் முடியும் தோழா, காஃபி வித் கவிஞர் என்ற ஐந்து பிரிவாக ஒளிபரப்பாகவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்காக ஏவி.எம் ஸ்டூடியோவில் கண்ணைக் கவரும் அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்துவருகிறது. பிரபலங்கள் ஏ.வி.எம் சரவணன், இயக்குனர்கள் எஸ்பி.முத்துராமன், மகேந்திரன், எஸ்.ஜே.சூர்யா, கார்டூனிஸ்ட் மதன், கதிர், வெங்கட் பிரபு, இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, நடிகை குஷ்பு உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்களை சந்திக்க வைத்து கலந்துரையாடல் நிகழ்ச்சியை எடுத்து முடித்துவிட்டார்களாம்.

இந்த நிகழ்ச்சிக்கான அறிமுக சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது.

வாலியின் அறிமுக உரைக்குப் பிறகு, கேள்வி பதில் ஆரம்பமானது.

இந்த நிகழ்ச்சியில் எத்தனையோ பேருடன் சந்திப்பு இருப்பதாக சொன்னீர்கள். கலைஞரைச் சந்திப்பீர்களா…

ரொம்ப அருமையான கேள்வி. 45 ஆண்டுகால நட்பு எனக்கும் கலைஞருக்கும். நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். அதேநேரம் ஆட்சியில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்து நட்பு பாராட்டாதவன். இன்றைக்கும் கலைஞருடன் என் நெருக்கமான நட்பு தொடர்கிறது. நான் கூப்பிட்டால் கலைஞர் கட்டாயம் இந்த நிகழ்ச்சிக்கு வருவார்.

ஆனால் இதுவரை இந்த நிகழ்ச்சியில் பல நடிகர், நடிகைகள், இலக்கியவாதிகள் என பலரும் என்னுடன் கலந்துரையாடினார்கள். ஆனால் இவர்கள் யாரையும் நான் நேரடியாக அழைக்கவில்லை. என் மீது உள்ள அன்பினால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைத்ததும் வந்தார்கள். ஆனால் நானே அழைக்க வேண்டிய சூழல் வந்தால், நிச்சயம் கூப்பிடுவேன்.

'நினைவு நாடாக்கள் தொடரில் எழுதியதைப் போல இந்த வாலி 1000 நிகழ்ச்சியிலும் ஒளிவு மறைவில்லாமல் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வீர்களா?

நிச்சயமாக. அதைவிட 200 சதவீதம் ஒளிமறைவில்லாமல் பல விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் சொல்லியிருக்கிறேன். அன்றைய முன்னணி கதாநாயகிகளுடன் அமர்ந்து நான் மது அருந்தியது உள்பட. ஆனா இப்ப அதெல்லாம் இல்ல.

கண்ணதாசனுக்கும் எனக்குமான உறவு, எம்ஜிஆர், கலைஞர் என அரசியல் ஜாம்பவான்களுடன் இருந்த நெருக்கம், பிணக்கு என அனைத்தையும் சொல்லியிருக்கிறேன். எனக்கு இதில் தயக்கமில்லை. இனி என்ன இருக்கிறது ஒளித்து மறைக்க!

அன்றைய கவிஞர்கள் அரசர்களை வாழ்த்தியது மட்டுமல்ல, குறைகளை சுட்டிக்காட்டவும் தவறவில்லை. ஆனால் பெரிய கவிஞரான உங்களால் அப்படிச் சொல்ல முடிந்ததா.. ஜெயலலிதா பதவிக்கு வந்ததும் ரங்கநாயகி என்று புகழ்ந்து கவிதை எழுதினீர்களே?

இலங்கை பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை பாராட்டித்தான் அந்த கவிதையை எழுதினேன். ஆனால் நான்தான் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது பார்வதியம்மாளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழ்நாட்டில் அனுமதி மறுத்ததை கண்டித்தும் கவிதை எழுதினேன். அந்த கவிதையை பாராட்டி நிறைய பேர் பேசினார்கள். வைகோ கூட அதை தன் சங்கொலி பத்திரிகையில் வெளியிடவா என்று அனுமதி கேட்டு வெளியிட்டார். சமீபத்தில் தீக்குளித்த செங்கொடி பற்றியும் கவிதை எழுதியிருக்கிறேன். அதற்காக நாட்டில் நடக்கிற அன்றாட பிரச்சனைகள் பற்றி எழுதிக் கொண்டிருந்தால் அதை தவிர வேறு வேலை எதுவும் செய்ய முடியாதே…

எம்ஜிஆரைப் பார்க்கும் வரை நான் சோற்றுக்கு வழியில்லாமல் இருந்தேன், அவரைப் பார்த்தபிறகு சோற்றில் கைவைக்கக் கூட நேரமில்லாமல் போய்விட்டது என நீங்கள் முன்பு சொன்னீர்களே….

இல்லை. அது எம்ஜிஆருக்காக நான் சொல்லவில்லை. உண்மையில் எம்ஜிஆர்தான் என்னை வாழ வைத்தார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர் படங்கள்தான் என்னை புகழில் உட்கார்த்தி வைத்தன. ஆனால் எம்எஸ் விஸ்வநாதன்தான் அதற்கும் காரணம். ஏனென்றால் நான் எம்ஜிஆருக்கு நல்லவன் வாழ்வான் படத்திலேயே பாடல் எழுதினேன். ஆனால் அவருக்கு என்னை நினைவில்லை. அதன் பிறகு 3 ஆண்டுகள் கழித்து எம்எஸ் விஸ்வநாதன்தான் எனக்கு எம்ஜிஆர் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். என் பாட்டைக் கேட்டு, உடனே எம்ஜிஆர் கூப்பிட்டார். என் வாழ்க்கை பிரகாசமானது. அதனால் நீங்கள் குறிப்பிட்ட அந்த வாக்கியத்தை நான் எம்எஸ் விஸ்வநாதனுக்குதான் சொன்னேன். இதை பின்னர் ரஜினி அவர்கள் தன் குரு பாலச்சந்தரைக் குறிப்பிட பயன்படுத்திக் கொள்ளட்டுமா என என்னைக் கேட்டு பயன்படுத்திக் கொண்டார்.

கடற்கரையில்லாத பகுதியில், ஒரு நகர்ப் புற வாழ்க்கையை அனுபவித்த உங்களால், மீனவர் வாழ்க்கையை அத்தனை துல்லியமாக சொல்ல முடிந்தது எப்படி?

வாழ்க்கையில் துன்பம் என்பதன் பரிமாணம் ஒருவருக்கொருவர் சற்று வித்தியாசப்படலாம். ஆனால் அடிப்படையில் கஷ்டம் ஒன்றுதானே. அடுத்தவர் கஷ்டத்தை உணரும் மனசிருந்தா போதும். அது வார்த்தைகளில் வெளிப்படும். எதையும் பார்க்காமல் கேட்காமல் படிக்காமல் இருந்தால் எந்தக் கவிஞனுக்கும் ஒன்றும் தெரியாமலே போய்விடும். அப்படி கேட்டும் படித்தும் எழுதியதுதான் ‘தரைமேல் பிறக்க வைத்தான்….’!

கண்ணதாசனுக்கும் உங்களுக்கும் தொழில் ரீதியாகப் போட்டியிருந்ததுண்டா?

சினிமா என்பதே அணா பைசா கணக்குதானே. நானும் கண்ணதாசனும் சமகால கவிஞர்கள். ஒரு ஆண்டு நான் 45 படங்களுக்கு பாட்டெழுதினேன். அவர் 24 படங்களுக்குத்தான் எழுதியிருந்தார். அதற்காக அவரை விட நான் பெரிய கவிஞன் என்று எண்ணிக் கொள்ளவும் இல்லை. அவர் என்னை போட்டியாளன் என்று சொல்லிக் கொள்ளவும் இல்லை. சொல்லப்போனால் எந்த சபையிலும் என்னை அவர் விட்டுக் கொடுத்ததே இல்லை. அதுதான் கண்ணதாசனின் பெருந்தன்மை!

பல பாடல்கள் இன்றைக்கும் எது கண்ணதாசன் எழுதியது, எது வாலி எழுதியது என்று தெரியவில்லை என ரசிகர்கள் கூறுகிறார்கள். இது உங்களை வருத்தப்பட வைத்திருக்கிறதா…

இல்லை. தங்கத்தோடுதானே என்னை ஒப்பிட்டார்கள். தகரத்தோடு இல்லையே! கண்ணதாசன் பாடல்களுக்கு இணையாக என் பாடல்களைச் சொல்கிறார்கள் என்றால்… அதைவிட ஒரு பெருமை உண்டா. நண்பர்களே- உங்களில் பலர் கண்ணதாசன் உயிரோடு இருந்த காலத்தைப் பார்க்காதவர்கள். அந்த நாளில் இருந்தவர்கள் இப்படிச் சொல்ல மாட்டார்கள்.

கண்ணதாசனின் பாதிப்பு உங்கள் பாடல்களில் இருந்தது என்கிறீர்களா?

பட்டுக்கோட்டைதான் எங்கள் இருவரையுமே பாதித்தவர். எனக்கு ஆரம்ப நாளிலிருந்தே பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளில் மயக்கம் அதிகம். ஆனால் பட்டுக்கோட்டை பாமரத் தமிழில் எழுதி மனதை ஆக்கிரமித்தார். பின்னாளில் கண்ணதாசன் அதை பக்குவமான தமிழில் தந்தார். அந்தத் தமிழை நானும் காதலித்தேன். அந்த பாதிப்பு நிச்சயம் என் பாடல்களில் இருக்கும். அப் கோர்ஸ், கண்ணதாசன் பாதிப்பு இல்லாதவர்கள் யார்?

15000 பாடல்கள் எழுதியிருக்கிறீர்கள். இவற்றில் எந்தப் பாட்டிலாவது நீங்கள் முன்பு எழுதிய அதே வரியை அல்லது கருத்தை திரும்ப எடுத்தாண்டிருக்கிறீர்களா…

ஒரு பாட்டில் அல்ல…. கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பாடல்களில் அப்படி எடுத்தாண்டிருப்பேன்!

தேசிய விருது பெற்ற ஒரேயொரு கிராமத்திலே, மகுடி போன்ற படங்களுக்குப் பின் நீங்கள் கதை வசனம் எழுதியதை நிறுத்திக் கொண்டீர்களே… ஏன்?

இந்த இரண்டு படங்கள் மட்டுமல்ல… கிட்டத்தட்ட 19 படங்களுக்கு நான் கதை வசனம் எழுதியிருக்கிறேன். நீங்கள் இந்த இரண்டைத்தான் சொல்கிறீர்கள்.

இல்லை.. இந்தப் படங்களுக்குப் பிறகு எழுதவில்லையே என்று கேட்டேன்…

ஆமா.. அதற்குப் பிறகு எழுதவில்லை. காரணம், நடிப்பு, தொடர்கள், வசனம் என என்ன எழுதினாலும், என்னை ஒரு கவிஞனாக அடையாளம் காண வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.

திமுக மீது மட்டும் உங்களுக்கென்ன தனி பாசம்…

ஏன்னா… அது ஒண்ணுதான் தமிழுக்கும் தமிழறிஞர்களுக்கும் உரிய மரியாதை கொடுக்கிற கட்சி. தமிழறிஞர்கள் சொல் சபையேறும் என்றால் அது திமுக ஆட்சிக்காலத்தில்தான்.

அப்படின்னா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சியில் அப்படி நடக்கவில்லையா…

உண்மைதான். அவரும் தமிழுக்கு அபார முக்கியத்துவம் கொடுத்தார். அவரும் நானும் 25 ஆண்டுகாலம் கட்டிப் புரண்டவர்கள். ஆனால் அவரும்கூட திமுகதான். மனதளவில் திமுகதான்.

இன்றைய கவிஞர்கள் பற்றி உங்கள் கருத்தென்ன…

அற்புதமாக எழுதுகிறார்கள். விகடனுக்காக முன்பு வாலி 80- என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தயாரித்தார்கள். அதில் இன்றைய கவிஞர்கள் அத்தனை பேரும் என்னுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அவர்களை உற்சாகப்படுத்துவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

இன்றைய முன்னணி இசையமைப்பாளர்கள் பலரும் உங்கள் வீட்டுக்கே வந்து காத்திருந்து பாடல் வாங்கிச் செல்கிறார்கள். இளையராஜா, ரஹ்மான் கூட வீட்டுக்கு வந்து பாடல் வாங்கியதாக கூறியிருந்தீர்கள்…

உண்மைதான். அது அவர்கள் என் தமிழ் மீதும் என் மீதும் வைத்துள்ள அன்பின் அடையாளம். ஒருநாள் ரஹ்மான் என்னை ஸ்டுடியோவுக்கு அழைத்தார். என்னால் போக முடியவில்லை. மாலை 6 மணிக்கு வந்து வாங்கிக் கொள்ள முடியுமா என்று கேட்டேன். வருகிறேன் என்றார். பின்னர் 6 மணிக்கு பழனிபாரதி வருவதாக சொல்லியிருந்ததால், இரவு 9 மணிக்கு மேல் வரமுடியுமா என்று கேட்டேன். அவரும் அப்படியே வந்தார். இரவு நோன்பைக்கூட என் வீட்டில்தான் முடித்தார். எனக்கு பழனிபாரதியும் முக்கியம், ரஹ்மானும் முக்கியம். அந்த இருவரும் என்மீது வைத்துள்ள அன்பு ஒன்றுதான். இளையராஜாவும் என் வீட்டுக்கே வந்து பாடல் வாங்கியதுண்டு. அதற்கு என் வயது மட்டுமல்ல, அதைத் தாண்டிய அன்புதான் காரணம்!

இந்த நிகழ்ச்சியில் குஷ்பு உங்களை பேட்டி எடுத்ததாக சொன்னீர்கள்… இது உங்கள் விருப்பமா அல்லது தயாரிப்பாளர் விருப்பமா…

எனக்கென்னய்யா விருப்பம் இதில். தயாரிப்பாளர் விருப்பம். அது ஒரு பக்கமிருக்கட்டும். குஷ்பு உண்மையிலேயே நல்ல ஞானம் உள்ளவர். ஆர்டி பர்மன், லட்சுமிகாந்த் பியாரிலால், உஷா கன்னா, பப்பிலஹரி என பல இந்தி இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றிய தமிழ்க் கவிஞன் அநேகமாக நானாகத்தான் இருப்பேன். அந்த அனுபவங்களைத்தான் குஷ்பு மூலம் என்னிடம் கேட்க வைத்தார்கள். வாசகர்களுக்குத் தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்களை இதில் சொல்லியிருக்கிறேன்.

-இவ்வாறு அவர் கூறினார்.
 

கையப் புடிச்சி இழுத்தியா...' ஸ்டைலில் மழுப்பும் சினேகன் - ஜமுனா கலாதேவி


சென்னை: சினேகன், ஜமுனா கலாதேவி கள்ளத் தொடர்பு புகார் குறித்த விசாரணையில் இருவருமே சரியான பதில் சொல்லாததால், கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வருமாறு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. புகார் கொடுத்த பிரபாகரனையும் கூப்பிட்டுள்ளனர் போலீசார்.

நடிகரும், பாடல் ஆசிரியருமான சினேகன் மீது மடிப்பாக்கம் என்ஜினீயர் பிரபாகரன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்த புகார் மனுவில், நடன கலைஞரான தனது மனைவி ஜமுனா கலாதேவியையும், தனது 5 வயது பெண் குழந்தையையும், நடிகர் சினேகன் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்றும், அவர்கள் இருவரையும் மீட்டு தன்னோடு வாழ வைக்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

சினேகனும் ஜமுனாவும் 'ஒன்றாக இருந்ததை' தான் நேரில் பார்த்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

பிரபாகரனின் இந்த புகாருக்கு நடிகர் சினேகன் மறுப்பு தெரிவித்தார். ஜமுனா கலாதேவியை, பிரபாகரனின் விருப்பத்தோடு தான் நடித்துள்ள 'உயர்திரு 420' என்ற படத்தில் நடன உதவி இயக்குனராக ஒருநாள் மட்டும் பயன்படுத்தியதாகவும், அதன்பிறகு பிரபாகரன் சந்தேகப்பட்டதால் ஜமுனா கலாதேவியை நடன உதவி இயக்குனராக பணியாற்ற அனுமதிக்கவில்லை என்றும், ஜமுனா கலாதேவியை தான் கடத்தவில்லை என்றும் சினேகன் கூறினார்.

இந்த பிரச்சினையில் பிரபாகரனுக்கும், ஜமுனா கலாதேவிக்கும் இடையே ஒரு சுமுக தீர்வை ஏற்படுத்துவதற்காக பெண் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் மூலம் கவுன்சிலிங் முறையில் விசாரணை நடத்தப்படும் என்றும், ஜமுனா கலாதேவி மீதும், சினேகன் மீதும் கொடுக்கப்பட்டுள்ள புகார் உண்மையானதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்திருந்தனர்.

பிரபாகரன் மீது குற்றச்சாட்டு

இந்த நிலையில், போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரிகள், ஜமுனா கலாதேவியிடம் நேற்று முன்தினம் செல்போனில் பேசி விளக்கம் கேட்டனர். அதற்கு ஜமுனா கலாதேவி, பிரபாகரன் மீது குற்றம்சாட்டினார்.

"எந்தவித வேலையும் செய்யாமல், என்னுடைய சம்பாத்தியத்தில் வாழ்ந்து வந்தார் பிரபாகரன். அவரது சந்தேக குணத்தால் அவரோடு வாழமுடியாது என்று முடிவு எடுத்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினேன். இந்த நிலையில், தன்னை அவமானப்படுத்தும் நோக்கத்தில் பிரபாகரன் பொய் புகார் கொடுத்துள்ளார்," என்று ஜமுனா கலாதேவி கூறினார்.

சினேகனிடம் விசாரித்தபோது அவர் இந்தப் பிரச்சினையில் சம்பந்தமே இல்லாததுபோல பதில் அளித்தாராம்.

இதில் சினேகன், ஜமுனா, பிரபாகரன் மூவருமே உண்மையை மறைப்பதாக போலீசார் கருதுவதால், மூவரையும் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நடன இயக்குநர்கள் சங்கம் மறுப்பு அறிக்கை

இந்த நிலையில், சினிமா- டி.வி. நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுந்தர பிரேம்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "ஜமுனா கலாதேவி எங்கள் சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்யவில்லை. அவர் 'உயர்திரு 420' படத்திலும் நடன இயக்குனராக பணியாற்றவில்லை.

நடன இயக்குனராக பணியாற்ற வேண்டுமென்றால் பிரபல நடன இயக்குனர் ஒருவரிடம் 10 ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்க வேண்டும். மேலும் எங்கள் சங்கத்திலும் உறுப்பினராக பதிவு செய்திருக்க வேண்டும். ஜமுனா கலாதேவி எங்கள் சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்யவில்லை. மேலும் அவர் சினிமா நடன இயக்குனராகவும் 'உயர்திரு 420' படத்தில் பணியாற்றவில்லை என்பதையும், இந்த அறிக்கை மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்," என்று கூறியுள்ளார்.
 

எரியும் தணல்... டிசம்பரில் தொடங்கும் பாலா!


இயக்குநர் பாலா தனது அடுத்த படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகளை கிட்டத்தட்ட முடித்துவிட்டார்.

இந்தப் படத்துக்கு எரியும் தணல் என அவர் பெயர் சூட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் வெளியான 'எரியும் பனிக்காடு' என்ற நாவலைத்தான் பாலா எரியும் தணல் என்ற பெயரில் படமாக்கப் போகிறாராம்.

அதர்வா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், இரு பிரபல நடிகர்கள் அவரது பெற்றோராக நடிக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷ் முதல் முறையாக பாலாவின் படத்துக்கு இசையமைக்கிறார். தேனியின் சிறு கிராமம் ஒன்றில் டிசம்பரில் இந்தப் படத்தை தொடங்குகிறார் பாலா.
 

விஜய் படம் கைமாறியது!-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்!!


'வேலாயுதம்' படத்துக்குப் பிறகு விஜய்யை வைத்து, ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு படம் இயக்குகிறார்.

இந்த படத்தை ஜெமினி நிறுவனமும் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரனும் தயாரிப்பதாக இருந்தது. படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்க திட்டமிட்டிருந்தனர். இந்த படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

படத்துக்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படப்பிடிப்பு, மும்பையில் 26-ந் தேதி தொடங்குவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், படம் ஜெமினி நிறுவனத்திடம் இருந்து எஸ்.தாணுவுக்கு கை மாறியிருக்கிறது.

இதுபற்றி எஸ்.தாணுவிடம் கேட்டபோது, "செய்தி உண்மைதான். முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்து விட்டது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது'' என்றார்.
 

'கொஞ்சம் ஓவராத்தான் போய்க்கிட்டிருக்கு' ஜெய்- அஞ்சலி அக்கப்போர்!


வடிவேலு பாணியில் சொன்னால், 'கொஞ்சம் ஓவராத்தான் போய்க்கிட்டிருக்கு' ஜெய்- அஞ்சலி அக்கப்போர்.

ஏழாம் அறிவு இசை வெளியீட்டுவிழாவில், தனக்கும் ஜெய்க்கும் இடையில் 'ஏதோ இருப்பதாக' வாக்குமூலம் கொடுத்து பப்ளிசிட்டி பண்ணியவர்தான் அஞ்சலி. இதை வைத்து இருவருக்கும் காதல் என்று செய்திகள் வரத் தொடங்கின.

இப்போது தனக்கும் 'அந்த நடிகரு'க்கும் (ஜெய்க்கும்) காதல் இல்லை, 'அந்த நடிகரு'டன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று அறிக்கை விட்டார். என்னமோ ஜெய் என்ற நடிகரையே தெரியாது என்ற அளவுக்கு இருந்தது அஞ்சலியின் அறிக்கை.

சும்மா இருப்பாரா 'அந்த நடிகர்'... இப்போது அவரும் பதிலுக்கு அறிக்கை விட்டிருக்கிறார்.

"நடிகை அஞ்சலியுடன் எனக்கு காதல் இல்லை. அதே நேரம் நான் நிச்சயமாக ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்'' என்று ஜெய் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், "நானும், அஞ்சலியும் `எங்கேயும் எப்போதும்' படத்தில்தான் முதல்முதலாக ஜோடி சேர்ந்து நடித்தோம். அதன்பிறகு, '7-ஆம் அறிவு' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்தான் அவரை சந்தித்தேன்.

இடையில், நாங்கள் வேறு எங்கும் சந்தித்துக்கொள்ளவில்லை. வேறு எந்த படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை. எங்களுக்குள் காதல் இல்லை.

நிச்சயம் நடிகையை மணக்கமாட்டேன்

நான், நிச்சயமாக காதல் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். அதுவும் குறிப்பாக, ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன். என் குடும்பத்தினர் பார்க்கும் பெண்ணை சந்தோஷமாக திருமணம் செய்து கொள்வேன்.

என் கவனம் எல்லாம் என் தொழிலில்தான் இருக்கிறது. ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளேன். என் கவனம், அந்த படத்தின் மீதுதான்!,'' என்று ஜெய் கூறியுள்ளார்.

நம்பிட்டோம் ராசா!
 

ஷாரூக்கானின் காஸ்ட்லி பரிசை மறுத்த ரஜினி!


ஷாரூக்கான் தந்த காஸ்ட்லியான பிஎம்டபிள்யூ கார் பரிசை அன்புடன் மறுத்துவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ஷாரூக்கான் நடித்து தீபாவளி அன்று வெளியான படம் 'ரா 1'. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு காட்சியில் தோன்ற வேோண்டும் என விரும்பிய ஷாரூக்கான், அதற்காக அவரை அணுகினார். தன் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல், மும்பைக்கே போய் அந்தக் காட்சியில் நடித்துக் கொடுத்துவிட்டு வந்தார் ரஜினி.

ரஜினி ஒரு காட்சியில் தோன்றுகிறார் என்பதற்காகவே, இந்தப் படத்தை பெரும்பாலான ரசிகர்கள் திரண்டு வந்து பார்த்தனர். இதனால் தென்னிந்தியாவிலும் நல்ல ஆரம்ப வசூலைப் பெற்றது ரா ஒன்.

எனவே தனக்காக நடித்த ரஜினிக்கு மரியாதை செய்யும் விதமாக, காஸ்ட்லியான 'பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ்' காரை பரிசாக தருவதாக அறிவித்தார்.

ஆனால், புகழச்சி மற்றும் பரிசுகளை விரும்பாத சூப்பர் ஸ்டார், 'ஆடம்பர கார்களை நான் பயன்படுத்துவதே இல்லை. எனவே எனக்கு இந்த பரிசு வேண்டாம்' என அன்போடு மறுத்துவிட்டார்.

மேலும், 'உங்கள் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். உங்கள் அன்பிற்கு நன்றி' என ஷாரூக்கானிடம் கூறினார்.

ரஜினியின் இந்த பதில் ஷாரூக்கானை மலைக்க வைத்துவிட்டது. "இப்படியொரு எளிமையான மனிதரை நான் திரையுலகில் கண்டதில்லை. ரஜினியின் அன்பு என்னை கண்கலங்க வைத்தவிட்டது," என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
 

தனுஷே எழுதி, தனுஷே பாடிய 'ஒய் திஸ் கொலை வெறி டி' பாடலுக்கு 18 லட்சம் ஹிட்!


தமிழ்த் திரை இசை ரசிகர்கள் ஒரு புதிய சாதனை படைத்துள்ளனர். நடிகர் தனுஷ் தமிழையும், ஆங்கிலத்தையும் மிக்ஸ் செய்து, எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியாக உருவாக்கிய ஒய் திஸ் கொலை வெறி டி என்ற தமிங்கிலீஷ் பாடலுக்கு யூடியூபில் இதுவரை 18 லட்சம் ஹிட்கள் கிடைத்துள்ளதாம்.

3 என்ற படத்தில் தனுஷ் நடித்துள்ளார். அவரது மனைவி ஐஸ்வர்யாதான் இதன் இயக்குநர். ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில்தான் இந்த ஒய் திஸ் கொலை வெறிடி என்ற வித்தியாசமான பாடல் இடம் பெற்றுள்ளது.

தமிழையும் ஆங்கிலத்தையும் போட்டுக் குழைத்து எந்த மொழிப் பாடல் என்று அறுதியிட்டுக் கூற முடியாத அளவுக்கு ஒரு வித்தியாசமான பாடலாக இது உருவாகியுள்ளது. இந்தப் பாட்டுக்குத்தான் திரை இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
'Why this Kolaiveri di' rocks!
இந்தப் பாடலை அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் வெளியிட்டனர். அதற்கு முன்பே இந்த பாடல் இணையதளங்களில் லீக் ஆகி விட்டது. இப்போது அந்தப் பாட்டுக்கு இதுவரை 18 லட்சம் ஹிட்கள் கிடைத்துள்ளதாம்.

தென்னிந்திய திரை இசை வரலாற்றிலேயே ஒரு பாடலை இத்தனை பேர் மாய்ந்து மாய்ந்து கேட்டது இதுவே முதல் முறையாகுமாம். அந்த வகையில் இது ஒரு சாதனை என்கிறார்கள்.

பாடல் வெளியாகி 4 நாட்களிலேயே இத்தனை பேர் கேட்டிருப்பது பெரிய சாதனை என்று கூறப்படுவதால் தனுஷும், ஐஸ்வர்யாவும் சந்தோஷமாகியிருக்கிறார்களாம்.