மும்பை: பிரபல நடிகை ரதி அக்னிஹோத்ரி தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்திய ஹீரோயின் ரதி அக்னிஹோத்ரி. பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படம் மூலம் ஹீரோயின் ஆன ரதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
பாலிவுட் சென்ற ரதி 1985ம் ஆண்டு அனில் விர்வானி என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். அவரது மகன் தனுஜ் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரதி மும்பை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று தனது கணவர் மீது சனிக்கிழமை புகார் அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
என் கணவர் என்னை அடித்து துன்புறுத்துகிறார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்துகிறார். அவரின் கொடுமையை தாங்க முடியவில்லை. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது கணவர் அடித்ததால் தனது கையில் ஏற்பட்ட காயத்தையும் போலீசாரிடம் காண்பித்துள்ளார்.
இது குறித்து துணை கமிஷனர் எஸ். ஜெயகுமார் கூறுகையில்,
அண்மை காலமாக அனிலின் வியாபாரம் நல்லபடியாக போகவில்லை. அதனால் அவர் தனது மனைவியிடம் கோபமாக நடந்திருக்கலாம். ரதியின் புகாரின்பேரில் அனில் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.