வேலூர்: மோசடி வழக்கில் கைதான நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னையில் பாபா டிரேடிங் நிதி நிறுவனத்தை நடத்தி வந்த சீனிவாசனிடம், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ரங்கநாதன் (60) தனது தொழிலை விரிவுபடுத்த ரூ.20 கோடி கடன் கேட்டார்.
50 லட்சம் ரூபாய் கமிஷன் கொடுத்தால் கடன் வழங்க ஏற்பாடு செய்வதாக சீனிவாசன் கூறியுள்ளார். இதை நம்பி சீனிவாசனிடம் ரூ.50 லட்சம் கமிஷன் பணத்தை ரங்கநாதன் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட சீனிவாசன், 20 கோடி ரூபாய் கடன் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.
எனவே தாங்கள் கொடுத்த கமிஷன் பணத்தை திருப்பி கொடுக்கும்படி ரங்கநாதனின் மகன் சிவக்குமார் என்பவர் சீனிவாசனை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். பணத்தை கொடுக்க முடியாது என்று சீனிவாசன் கூறி மிரட்டியுள்ளார். இந்த புகாரின் பேரில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
வேலூருக்கு மாற்றம்
இதற்கிடையில், சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடந்த 26ம் தேதி நள்ளிரவு மாற்றப்பட்டுள்ளார்.
அவர் தற்போது வேலூர் மத்திய சிறையில் எச்.எஸ்,1 என்ற பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார்.
சாதாரண அறைதான்
பவர் ஸ்டார் சீனிவாசனை சந்திக்க மற்ற கைதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு முதல் வகுப்பு வசதிகள் கொடுக்கப்படவில்லை. சாதாரண வகுப்புக்கான அறையிலே அவர் தங்கியுள்ளார்.
படப்பிடிப்புகளுக்கு பாதிப்பு
பவர் கைதாகி சிறையில் இருப்பதால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரை புக் செய்துள்ள தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர். சுமார் நான்கு படங்கள் பவருக்காக காத்திருக்கிறதாம்.
ஜாமீன் கிடைக்குமா?
பவர் விரைவில் ஜாமீனில் வெளிவந்தால் மட்டுமே தங்கள் படங்களில் படப்பிடிப்புகளை நடத்த முடியும் என்று நான்கு இயக்குநர்கள் கூறி வருகின்றனராம். பல மோசடி வழக்குகள் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது கிளம்பி வருவதால் அவர் வருவாரா? அல்லது கேஸ் மேல் கேஸ் பாய்ந்து நிரந்தரமாக சிறையிலேயே தங்கிவிடுவாரா என்று யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.