விஷால், சித்தார்த்திடம் பாராட்டுப் பெற்ற சௌந்தரராஜா!

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜிகர்தண்டா படத்தில் வளர்ந்து வரும் நடிகர் சௌந்தரராஜா 'திண்டுக்கல் பொன்ராம்' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படம் பிரமாண்ட வெற்றிபெற்ற சந்தோசத்தோடு, கூடவே விஷால், சித்தார்த் பாராட்டிய சந்தோசமும் சேர்ந்து கொண்டிருக்கிறது சௌந்தரராஜாவிற்கு.

விஷால், சித்தார்த்திடம் பாராட்டுப் பெற்ற சௌந்தரராஜா!

இதுபற்றி சௌந்தரராஜா கூறுகையில், "ஜிகர்தண்டா படத்தையும், அதில் என் கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டு பாராட்டி கௌரவித்த அத்தனை மீடியா நண்பர்களுக்கும், அத்தனை மீடியாக்களுக்கும் ஜிகர்தண்டா குழுவில் ஒருவனாக நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

ஜிகர்தண்டா படம் பிரிமியர் ஷோவில் என்னைக் கட்டிப்பிடித்து பாராட்டினார் படத்தின் ஹீரோ, சித்தார்த். ஹைதராபாத்தில் படம் பார்த்துவிட்டு, சௌந்தர் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு, நீங்க ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்க என்று வாட்ஸ்ஆப்பில் மெசெஜ் பண்ணார் விஷால்.

வளர்ந்து வரும் நடிகனை பெருந்தன்மையோடு பாராட்டிய விஷால், சித்தார்த்துக்கு என் சந்தோசம் நிறைந்த நன்றிகள்.

எப்போதும் எனக்கு பக்கபலமாக இருக்கும் அண்ணன், இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், நண்பர்கள் விஜய்சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ், பாடலாசிரியர் முருகன் மந்திரம் உள்பட அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பின் நன்றிகள்.

சுந்தர பாண்டியனில் ஆரம்பித்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், அதிதி, என்று தொடர்ந்த என் பயணத்தில் ஜிகர்தண்டா முக்கியமான படம். இப்போ, எல்.ஜி.ரவிச்சந்தர் இயக்கும் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தில் பரத்தின் நண்பனாகவும், ஹரி இயக்கும் பூஜை படத்தில் விஷால் நண்பனாகவும் நடித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் மலையாளத்தில் அறிமுகமாக இருக்கிறேன்.

என் வளர்ச்சியில் உறுதுணையாக இருக்கும் அனைத்து மீடியா நண்பர்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்," என்றார்.

 

இரண்டாவது திருமணம் செய்த ஊர்வசிக்கு ஆண் குழந்தை!

சென்னை: இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நடிகை ஊர்வசிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ், மலையாள பட உலகில் முன்னணி நாயகியாகத் திகழ்ந்தவர் ஊர்வசி. இவருக்கும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் 2000-ல் திருமணம் நடந்தது.

இரண்டாவது திருமணம் செய்த ஊர்வசிக்கு ஆண் குழந்தை!

எட்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தேஜாலட்சுமி என்று அந்தக் குழந்தைக்கு பெயர் சூட்டினர்.

2008 - ல் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். விவாகரத்தும் செய்து கொண்டனர். தேஜாலட்சுமி அப்பாவுடனே வசிக்கிறார். ஊர்வசி மீண்டும் அக்கா, அம்மா வேடங்களில் நடித்துக் கொண்டுள்ளார்.

கடந்த வருடம் சிவபிரசாத் என்பவரை ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சிவிபிரசாத் சென்னையில் கட்டுமான தொழில் செய்து வருகிறார்.

இரண்டாவது திருமணம் மூலம் கர்ப்பமான ஊர்வசிக்கு நேற்று தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

 

ஜிகிர்தண்டா - விமர்சனம்

எஸ் ஷங்கர்

நடிப்பு: சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, கருணாகரன்

ஒளிப்பதிவு: கேவ்மிக்

இசை: சந்தோஷ் நாராயணன்

தயாரிப்பு: கதிரேசன்

இயக்கம்: கார்த்திக் சுப்பராஜ்

இரண்டாவது படம் என்ற கண்டத்தை எப்படித் தாண்டுவோரோ பீட்சா புகழ் கார்த்திக் சுப்பராஜ்? என்று ஆவலோடு காத்திருந்த கோடம்பாக்கத்துக்கு, அந்த கோடம்பாக்க சென்டிமென்டை உடைத்து விருந்தே வைத்திருக்கிறார் இயக்குநர்.

அடிதடி, வன்முறை, காதல், நகைச்சுவை எந்தப் பிரிவிலும் சேராமல், அதே நேரம் பொழுதுபோக்கு சமாச்சாரங்களையும் கைவிடாமல் ஒரு புது முயற்சியாக ஜிகிர்தண்டாவைத் தந்துள்ளார் கார்த்திக்.

ஜிகிர்தண்டா - விமர்சனம்  

சித்தார்த் ஒரு குறும்பட இயக்குநர். ஆடுகளம் நரேன் உதவியுடன் அவருக்கு ஒரு பெரும்படம்.. அதாவது சினிமா இயக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு அதிரடி ஆக்ஷன் கதையை ரத்தமும் வன்முறையும் தெறிக்கும் ஒரு கதையை படமாக்க விரும்புகிறார்.

அப்போது மதுரையில் இருக்கும் அசால்ட் சேது (பாபி சிம்ஹா) என்ற மெகா ரவுடி பற்றிச் சொல்லும் நரேன், அவர் வாழ்க்கையையே படமாக்கக் கூறுகிறார். மதுரைக்கே போய் நண்பன் வீட்டில் தங்கி சேதுவின் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள முயல்கிறார் சித்தார்த்.

ஜிகிர்தண்டா - விமர்சனம்

சேதுவுக்கு இட்லி தரும் பெண்ணின் மகள் லட்சுமி மேனன் மூலம் சேதுவின் வாழ்க்கையை அறிந்து கொள்ள முயற்சிக்கும்போது, வில்லனிடம் சிக்கிக் கொள்கிறார் சித்தார்த். பிறகு... அந்தக் கதையில் தானே நாயகனாக நடிக்க ஆசைப்படுகிறார் வில்லன்.. அப்புறம் என்ன ஆச்சு என்பதை கொஞ்சம் ஜவ்வாக இழுத்திருக்கிறார் இயக்குநர்.

படத்தின் நாயகன் சித்தார்த் அந்தப் பாத்திரத்துக்குள் பொருந்த முயற்சித்தாலும் நம்மால் அவரை ஒரு கஷ்டப்படும் சினிமா இயக்குநராக ஏற்க முடியவில்லை. படம் சிறப்பாகவே இருந்தாலும், பொருத்தமான நாயகன் அமையாதது ஒரு மைனஸ்தான்.

லட்சுமி மேனனுக்கு நிறைய வேலை இல்லை. ஆனால் அவர் வரும் காட்சிகள் அனைத்தும் நிறைவாக உள்ளன. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு இவரை மிஞ்ச நடிகைகளில்லை!

கருணாகரன் சில காட்சிகளில் சிரிப்பை வரவழைத்தாலும், படத்தில் ஹீரோவையே தூக்கிச் சாப்பிடுகிறார் வில்லனாக வரும் பாபி சிம்ஹா. ஆரம்பத்தில் டெர்ரர் ரவுடியாகவும், பின்னர் சினிமா ஹீரோவாக கலகலக்க வைப்பதிலும் நூறு சதவீதம் ஸ்கோர் செய்கிறார் மனிதர்.

எடுக்க நினைத்தது காமெடிப் படம். அதற்கு ஆக்ஷன் படம் என்ற பயங்கர பில்ட் அப் கொடுத்து எதிர்ப்பார்ப்பை எகிற வைத்து, கடைசியில் பக்கா காமெடியாக்கியிருக்கிறார்கள்.

படத்தின் பெரிய குறை, இரண்டாம் பாதியை அத்தனை இழு இழுத்திருப்பதுதான். கொஞ்சம் கூட தயங்காமல் ஒரு 25 நிமிடக் காட்சிகளை வெட்டித் தள்ளியிருக்கலாம்!

கேவ்மிக் யுஆரியின் ஒளிப்பதிவு ஓகே. அந்த கிணற்றுப் பாட்டில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசை பரவாயில்லை. கண்ணம்மா பாட்டு கேட்கலாம் ரகம்.

முதல்பாதி வேறு ரகம்... இரண்டாம் பாதி வேறு ரகம். ஆனாலும் சொன்ன விதத்தில் படத்தைப் பார்க்கவைத்து, தானும் பாஸாகியிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.

 

பி.கே. படத்தின் ஆபாச போஸ்டரை அமீர்கான் நீக்க வேண்டும்: காங்கிரஸ் எம்.எல்.ஏ

மும்பை: பி.கே. திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய ஆபாச படத்தை அமீர்கான் நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.கிருஷ்ணா ஹெக்டே தெரிவித்து உள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடிக்கும் ‘பி.கே' திரைப்படத்தில், அவர் நிர்வாணத்துடன் போஸ் கொடுக்கும் காட்சி இடம்பெற்று உள்ளது. சமீபத்தில், இந்த புகைப்படங்கள் இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இது ஆங்கிலப்படத்தின் அப்பட்ட காப்பி என்பதும் தெரியவந்தது.

பி.கே. படத்தின் ஆபாச போஸ்டரை அமீர்கான் நீக்க வேண்டும்: காங்கிரஸ் எம்.எல்.ஏ

அதேசமயம், இந்தப் போஸ்டர் ஆபாசம் இல்லை என்றும், பி.கே. திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இந்த போஸ்டரை வெளியிடவில்லை என்று நடிகர் அமீர்கான் தெரிவித்தார்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய ஆபாச படத்தை பி.கே. படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று வில்லேபார்லே காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிருஷ்ணா ஹெக்டே வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக மும்பையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

அமீர்கானின் ஆபாச படங்கள் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகின. அவற்றை குழந்தைகளும், குடும்பத்தினரும் பார்ப்பார்கள் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.

அந்த போஸ்டர் அறுவெறுக்கத்தக்கதாக இருக்கிறது என்பதை ஊடகங்கள் மூலம் நான் அமீர்கானுக்கு தெரியப்படுத்துகிறேன். மேலும், அவை எதார்த்தங்களை அவமதிக்கின்ற காரணத்தால் சர்ச்சைக்குரிய அந்த ஆபாச காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி,) மும்பையில் அமீர்கானின் நிர்வாண படம் அடங்கிய கட்-அவுட்டுக்கு ஆடைகள் அணிவித்து எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். என்று எம்.எல்.ஏ. கிருஷ்ணா ஹெக்டே தெரிவித்தார்.

 

இணையதளத்தில் த்ரிஷாவின் போலி திருமணப் படம்!

இணையதளத்தில் த்ரிஷாவின் போலி திருமணப் படம்!

இப்போதெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் திருமணப் படத்தைக் கூட நிஜப் படம் என்று கூறி பரபரப்பேற்படுத்துகிறார்கள். மீடியாவின் அபார வளர்ச்சியால் வந்துள்ள அபாயம் இது!

இந்த ஆண்டில் இதுபோல பலமுறை நடிகைகளின் திருமணப் படங்கள் வெளியாகி மறுக்கப்பட்டிருக்கிறது.

இந்த முறை நடிகை த்ரிஷா. திருமணமே இப்போதைக்கு வேண்டாம் என்று கூறி பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் அவருக்கு அடிக்கடி திருமணம் செய்து பார்த்தி திருப்திப்பட்டுக் கொள்கின்றன பத்திரிகைகளும் இணையதளங்களும்.

சமீபத்தில் த்ரிஷாவுக்கு திருமணமாகிவிட்டது என்று கூறி ஒரு படத்தை இணைய தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அவருக்குப் பக்கத்தில் மணமகனாக அமர்ந்திருப்பவர், வேறு யாருமல்ல நடிகர் புனித் ராஜ்குமார். கன்னடத்தின் முன்னணி நடிகர்.

ஆனால் இதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் அல்லது அதற்கு விரும்பாமல், த்ரிஷாவுக்கு திடீர் திருமணம் என்று செய்தி வேறு வெளியிட்டுள்ளனர்!

 

விபத்தில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு காயம்!

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகரும் எம் எல் ஏவுமான பாலகிருஷ்ணாவுக்கு படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் காயம் ஏற்பட்டது.

என்.டி.ராமராவ் மகனும் தெலுங்கு முன்னணி நடிகருமான பாலகிருஷ்ணா, பெயர் சூட்டாத புதிய தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ருத்ரபாட்டி ரமணாராவ் தயாரிக்கிறார். சத்திய தேவ் இயக்கி வருகிறார்.

விபத்தில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு காயம்!

இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் வாரங்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது.

சண்டை காட்சி ஒன்றில் பாலகிருஷ்ணா நடித்துக் கொண்டிருந்தார். இதில் ஒரு காரை கயிறு கட்டி மேலே தூக்குவது போன்ற காட்சி இடம் பெற்றது. அப்போது கயிறு அறுந்ததில், கார் பாலகிருஷ்ணா இடது காலில் விழுந்தது.

இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஹைதராபாத்தில் உள்ள காமினேனி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எலும்பு முறிவு இல்லாததால் சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்பினார்.