பள்ளியின் அலட்சியத்துக்கு மகன் பலியாகிவிட்டானே.. - சினிமா இயக்குநர் கண்ணீர்

Carelessness The School Killed My Child

சென்னை: பள்ளியின் அலட்சியப் போக்கால் என் மகன் அநியாயமாக இறந்துவிட்டான், என்று திரைப்பட இயக்குநர் மனோகர் கண்ணீர் விட்டு கதறினார்.

கேகே நகர் பத்மா சேஷாத்ரி பள்ளியின் நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான மாணவன் ரஞ்சன், பிரபல இயக்குநர் மனோகரின் மகன் ஆவார்.

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய மாசிலாமணி மற்றும் வேலூர் மாவட்டம் படங்களை இயக்கியவர் மனோகர். இப்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

பொதுவாக சினிமா பிரபலங்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பத்மா சேஷாத்ரி போன்ற பள்ளிகளைத்தான் நாடுகிறார்கள். அந்த வகையில் பெரிய சிபாரிசிக்கிடையில் தன் மகனை இந்தப் பள்ளியில் சேர்த்திருக்கிறார் மனோகர்.

நீச்சல் பயிற்சியும் இங்கேயே தரப்படுவதால் மகனை அதில் சேர்த்துவிட்டிருக்கிறார்.

காலையில் பள்ளியில் மகனை விட்டுவிட்டு வந்த அடுத்த சில மணி நேரங்களில் அவன் நீச்சல் குளத்தில் விழுந்து மயங்கிக் கிடப்பதாகக் கூறியுள்ளனர். பதறியடித்துக் கொண்டு வந்து பார்த்தபோது, ரஞ்சன் மூச்சுப்பேச்சின்றி கிடந்திருக்கிறான். உடனே பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் காட்டியுள்ளனர். சிறுவன் ரொம்ப நேரத்துக்கு முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அலட்சியம்...

"குழந்தையை பயிற்சிக்கு கூட்டிச் சென்றவர்கள், அவன் மூழ்கிவிட்டது கூட தெரியாமல் அலட்சியமாக இருந்துள்ளனர். அந்த அலட்சியம் என் மகனின் உயிரைப் பறித்துவிட்டது. இவர்களின் அலட்சியத்துக்கு என் மகனைப் பறிகொடுத்து நிற்கிறேன்..." என்று கதறினார் ரஞ்சனின் தந்தை மனோகர்.

பள்ளி நீச்சல் குளத்தில் ரஞ்சன் உள்ளிட்ட 26 மாணவர்கள் நீச்சல் பயிற்சி மேற்கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ராஜசேகர் என்ற ஒரே ஒரு பயிற்சியாளர் மட்டுமே பயிற்சி அளித்துள்ளார். 15 மாணவர்களுக்கு ஒரு பயிற்சியாளர், 2 கண்காணிப்பாளர்கள் உதவியுடன் பயிற்சியளிக்க வேண்டிய இடத்தில் ஒரே ஓரு பயிற்சியாளர் மட்டுமே இருந்துள்ளார். போதிய அளவில் பயற்சியாளர்கள் இல்லாததே விபத்துக்கு காரணம் என புகார் கூறும் பொதுமக்கள் பள்ளி நிர்வாகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

பெரிய இடத்தில் செல்வாக்குள்ளவர்கள் இந்தப் பள்ளியை நடத்துபவர்களாக இருப்பதால், விசாரணை எப்படி நடக்கும் என்பதில் அவநம்பிக்கை தெரிவித்தனர் மனோகருக்கு ஆதரவாக வந்த மற்ற பெற்றோர்கள். அதற்கேற்ப இதுவரை யாரையும் போலீசார் கைது செய்யக்கூட இல்லை.

இந்த அவநம்பிக்கையைப் போக்குவது மாநகர போலீசின் கடமை...

 

புதியதலைமுறையின் ‘விடை தேடும் விவாதங்கள்’

Talk Show Vidai Thedum Vivathanga

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விடை தேடும் விவாதங்கள் நிகழ்ச்சியில் இளைய தலைமுறையினர் பங்கேற்று தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். கபிலன் வைரமுத்து தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் சமூகத்தில் நடைபெறும் அவலங்களையும், அதற்கான தீர்வுகளையும் அலசுகின்றனர்.

விவாத நிகழ்ச்சிகள் என்றாலே அதில் பங்கேற்பவர்கள் பேசுவதை விட நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் அதிகம் பேசுவார்கள். சன் டிவியின் அரட்டை அரங்கம் தொடங்கி, விஜய் டிவியின் நீயா நானா வரை இதற்கு விதி விலக்கில்லை. இவற்றிர்கிடையே புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விடை தேடும் விவாதங்கள் நிகழ்ச்சி சற்றே வித்தியாசமானதாக, சுவாரஸ்யமாக இருப்பதாக ரசிகர்களிடையே பரவலாக பேச்சு கிளம்பியுள்ளது.

புதிய தலைமுறையில் ஞாயிறு தோறும் இரவு 9.30 மணிமுதல் 10.30 மணிவரை ஒளிபரப்பாகும் இந்த விவாத நிகழ்ச்சிக்கு தற்போது ரசிகர்களின் எண்ணிக்கை கூடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திச் செல்லும் கபிலன் வைரமுத்துவின் பேச்சு பெரும்பாலானவர்களை கவர்ந்துள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

வரும் ஞாயிறுக்கிழமை விடை தேடும் விவாதங்கள் நிகழ்ச்சியில் வாரிசு அரசியல் பற்றி விவாதிக்க இருக்கின்றனர்.

இந்தியாவில் நேரு காலம் தொட்டு தற்போதையை காலம் வரை வாரிசு அரசியல் கலாச்சாரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றி சூடாகாவும், சுவையாகவும் விவாதிக்கின்றனர் இளைய தலைமுறையினர். ஞாயிறு இரவு நேரம் இருப்பவர்கள் பார்த்து ரசியுங்களேன்.

 

சூரியன் ரீமேக்கில் விஷால்?

Vishal Suriyan Remake

ரீமேக் பட லிஸ்டில் லேட்டஸ்டாக சேர்ந்திருக்கிறது சரத்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த சூரியன்.

1992-ல் கேடி குஞ்சுமோன் தயாரிக்க பவித்திரன் இயக்கத்தில் வந்த படம் இது. இந்தப் படத்தின் இணை இயக்குநர் ஷங்கர். படத்தில் கவுண்டமணியின் காமெடி மிகப் பிரபலம்.

அதிரடி ஆக்ஷன் - காமெடி, நல்ல பாடல்கள் என சரியான கமர்ஷியல் கலவையான இந்தப் படத்தை மீண்டும் ரீமேக் செய்யும் முயற்சியில் உள்ளாராம் பவித்திரன்.

ஹீரோவாக விஷால் - ஹீரோயினாக சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் விஷால் தரப்பில் விசாரித்தபோது, அவருக்கு இந்தப் படத்தில் ஆர்வம் இருந்தாலும், இயக்குநர் விஷயத்தில் மட்டும் அத்தனை திருப்தியில்லையாம். பவித்திரன் தவிர வேறு யாராவது இயக்கினால் நடிக்கலாம் என்று நினைக்கிறாராம்.

பவித்திரன் பல வருடங்கள் கழித்து மாட்டுத்தாவணி என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் வந்த சுவடே தெரியவில்லை. இடையில் சில படங்களை அவர் அறிவித்திருந்தாலும் அவை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

நான் ரியல் எஸ்டேட்டை நம்பல... ரீல் எஸ்டேட்டைதான் நம்பறேன்! - கருணாஸ்

I M Always Investing Cinema Only Says Karunaas   

சென்னை: என் நினைப்பு முழுக்க சினிமாதான். 24 மணிநேரமும் சினிமாவைப் பற்றித்தான் சிந்திக்கிறேன். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே முதலீடு செய்கிறேன் என்கிறார் நடிகர் கருணாஸ்.

அம்பா சமுத்திரம் அம்பானி படத்தை அடுத்து கருணாஸ் சொந்தமாகத் தயாரிக்கும் படம் ரகளைபுரம். ஹீரோவும் அவர்தான். இந்தப் படம் முடிந்துவிட்டது. விரைவில் வெளிவரப் போகிறது.

அடுத்து மேலும் இரு படங்களைத் தயாரிக்கப் போகிறார். இவற்றிலும் ஹீரோவாக நடிக்கிறார்.

முழுநேரமும் சினிமா தயாரிப்பில் குதிக்கத் திட்டமா.. காமெடி வேஷம் பண்ணமாட்டீங்களா, என்று அவரிடம் கேட்டபோது, "ஆமாண்ணே.. நான் முழுநேர சினிமாக்காரன்தான். வேற சைட் பிஸினஸ்கூட கிடையாது.

அதேநேரம், நான் ஹீரோதான்னு சொல்லிக்க விரும்பல. கதைக்கேத்த ரோல்ல நான் நடிப்பேன். காமெடி, ஹீரோன்னாலும் பாக்க மாட்டேன்.

சினிமாவில் சம்பாதித்த காசை வச்சி நான் ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்ணல. இந்த 'ரீல் எஸ்டேட்'டைத்தான் நம்பறேன். மேல மேல பிலிம் ரோல்தான் வாங்கிக் குவிக்கிறேன். வட்டிக்கு வாங்கித்தான் சினிமா எடுக்கிறேன்.

ஒரு செகண்டுக்கு 24 பிரேம் என்ற கணக்கில் பிலிம் ஓடும்... நான் 24 மணி நேரத்தில் ஒரு செகண்டு கூட சினிமாவைத் தவிர வேறு எதையும் நெனக்கிறதில்லை.

ஆனா ஒரு நம்பிக்கை. செய்யும் விஷயத்தை திருத்தமா நேர்மையா செஞ்சா ஜெயிக்கலாம்," என்றார் கருணாஸ்.

 

'நான் தீவிர பக்தை' - கோயில் கோயிலாக சுற்றும் கமல் மகள் ஸ்ருதி!

Shruthi S Regular Visit Popular Temples   

அப்பா கமல் தன்னை தீவிர நாத்திகவாதி என்று கூறிக் கொள்வதோடு, மேடைகளில் அதுகுறித்த வெளிப்படையான பிரச்சாரங்களும் செய்து வருகிறார். ஆனால் அவரது மகள் ஸ்ருதியோ கமலுக்கு நேரெதிர்.

சமீபத்தில் கூட திருப்பதி, காளஹஸ்தி, திருவனந்தபுரம், குருவாயூர் என பிரபல கோயில்களுக்கெல்லாம் ஒரு விசிட் அடித்து சாமி கும்பிட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "ஆமாம் நான் தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவர்தான்.

வீட்டில் பூஜை ரூம் இல்லை. அப்பாவும் சாமி கும்பிட சொல்லித் தரலை. ஆனா, கடவுள் இருக்காருனு நான் முழுசா நம்புறேன். திருப்பதி, திருவனந்தபுரம் கோயில்களுக்கு மட்டும் இல்லை... இன்னும் நிறையக் கோயில்களுக்குச் சத்தம் இல்லாமல் போயிட்டுதான் இருக்கேன். அது கடவுளுக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப்.

இந்த சாமி மட்டும்தான் பிடிக்கும்னு கிடையாது. எப்பப்ப எந்த சாமி பிடிக்குதோ, அப்பப்ப அவங்களைக் கும்பிட்டுக்குவேன். அப்பா இதைப் பத்தி எதுவும் கேட்டது இல்லை. நானும் சொன்னது இல்லை!'' என்றார்.

ஸ்ருதிஹாஸன் தனது ஒவ்வொரு படம் தொடங்கும்போதும், முடிந்த போதும் தவறாமல் கோயிலில் அர்ச்சனை செய்துவிடுவாராம். சமீபத்தில் அவர் நடித்த கப்பர் சிங் வெற்றிக்கு இப்படி செய்தவர், அடுத்து பிரபு தேவா படத்தில் ஒப்பந்தமானதும் இன்னும் தீவிர நம்பிக்கையுடன் போகத் தொடங்கியுள்ளாராம்.

யாருக்கும் தொந்தரவில்லாத நம்பிக்கை... இருந்துவிட்டுப் போகட்டுமே என்று கமல் அனுமதித்திருப்பாரோ!

 

ரொம்ப கஷ்டப்பட்டேன்: ‘முகமூடி’ அனுபவம் பற்றி ஜீவா

Vijay Tv Special Show Mugamoodi Nammil Oruvan

சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் டிவியில் நம்மில் ஒருவன் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். இதில் முகமுடி படத்தின் இயக்குநர் மிஷ்கின், ஜீவா, நரேன் ஆகியோர் பங்கேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். சூப்பர் ஹீரோவாக மாறுவது சாதாரண விசயமில்லை. முகமூடி படத்தில் ஜீவாவின் உடைகள், மேக் அப் அதை உணர்த்தியது.

சினிமாவிற்காக நடிப்பது என்பது வேறு, அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவது வேறு. சில கதாநாயகர்கள் தான் கதாபாத்திரத்திற்காக தங்களை வருத்திக்கொள்வார்கள். கமல், விக்ரமிற்கு அடுத்தபடியாக இன்றைய இளம் தலைமுறை நாயகர்களில் அஜீத், ஷ்யாம், ஜீவா, ஜெயம்ரவி, ஆர்யா போன்ற கதாநாயகர்கள் தங்களின் கதாபாத்திரத்திற்காக பெருமளவில் தங்களை வருத்திக்கொண்டு நடிக்கின்றனர்.

விஜய் டிவியின் சுதந்திர தின நிகழ்ச்சியில் முகமூடி படத்தின் அனுபவங்களை சூப்பர் ஹீரோ ஜீவா, சூப்பர் வில்லன் நரேன், படத்தின் இயக்குநர் மிஷ்கின் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

குங்பு பழகும் சாதாரண மனிதன் எப்படி சூப்பர் ஹீரோவாக உருவாகிறான் என்பதுதான் முகமூடி படத்தின் கதை. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள ஜீவா முகமூடி படத்திற்காக பல சிரமங்களை அனுபவித்ததாக மிஷ்கின் தெரிவித்தார்.இதற்காக ஜீவா அணிந்த உடைகளையும், அவர் போட்டுக்கொண்ட மேக் அப் போன்றவைகளை ஒளிபரப்பினார்கள். மிஷ்கின் சொன்னதை விட சிரமமாகவே இருந்தது.

கதையை கேட்காமலேயே முகமூடி படத்தில் வில்லனாக நடிக்க ஒத்துக்கொண்டதாக டிராகன் ரோலில் நடித்த நரேன் தெரிவித்தார்.

ஜீவாவின் அமைதி குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளினி பாவனா, கேள்வி எழுப்பினார். சூப்பர் மேன் உடைகளை போட்டுக்கொண்டு பேசக்கூட முடியாமல் தவித்ததாக ஜீவா வருத்தப்பட்டு தெரிவித்தார். அந்த படத்தின் தாக்கம் இன்னும் தொடர்வதாகவும், நகைச்சுவையோடு பேசும் தன்னை சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் இந்த அளவிற்கு மாற்றிவிட்டதாகவும் கூறினார் ஜீவா.

இது குழந்தைகளுக்கான நகைச்சுவை கலந்த திரைப்படம் என்று மூவருமே கூறினர். நிகழ்ச்சிக்குப் பின்னர் சூப்பர் ஹீரோ திரைப்படம் முகமூடி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

நிகழ்ச்சியின் இடையே சிறுவர்களின் கராத்தே நிகழ்ச்சி இடம்பெற்றது. சிறுவர்களின் சாகசங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. இதற்காக விஜய் டிவிக்கு ஸ்பெசல் பாரட்டுக்களை தெரிவிக்கலாம்.

 

இளைஞர்களை சந்திப்பேன்... என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வேன்! - இசைஞானி இளையராஜா

I Will Meet The Young Generation Says Ilayaraaja

சென்னை: இளம் தலைமுறையை சந்திப்பேன்... என் அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன், என்றார் இசைஞானி இளையராஜா.

தமிழ் சினிமாவின் இன்றைய ஸ்பெஷல் இளையராஜாவின் நீதானே என் பொன்வசந்தம் இசைதான்.

இதுவரை இந்தப் படத்தின் இசைக்கான மூன்று முன்னோட்ட வீடியோக்கள் வந்துவிட்டன. மூன்றும் ரசிகர்களைப் பரவசப்பட வைத்துள்ளன.

இந்த நிலையில், இந்தப் படத்தின் இசை உருவாக்கம் குறித்து ஆகஸ்ட் 15-ம் தேதி ஜெயா டிவியில் இளையராஜாவும் இயக்குநர் கவுதம் மேனனும் கலந்துரையாடினர்.

அப்போது ஒரு பரம ரசிகனாக மாறி கவுதம் மேனன் கேள்விகளை எழுப்ப, இசைஞானி தனக்கே உரிய பாணியில் பதில்களைச் சொன்னார். பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அமைந்திருந்தது இந்த உரையாடல். இளையராஜாவும் ஆங்கிலத்திலேயே பேசினார்.

அப்போது, 'உங்களிடம் பேச வேண்டும், உங்கள் அனுபவங்களை நீங்கள் சொல்லக் கேட்க வேண்டும் என இன்றைய தலைமுறை மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால் நீங்கள் அதற்குத் தயாரா என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களைச் சந்திப்பீர்களா..?'

"நிச்சயமாக கவுதம், இன்றைய இளம் தலைமுறையினருக்கு என் அனுபவங்களைச் சொல்ல, அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர்களுடன் பேச விரும்புகிறேன். நிச்சயம் அவர்களை நான் சந்திப்பேன்," என்றார்.

உங்களுடன் பணியாற்ற வேண்டும் என்பது என்னைப் போன்ற பலருக்கும் ஆசை என்றாலும், ஒரு அச்சம் காரணமாக வரத் தயக்கமாக இருக்கிறது, என்று கவுதம் மேனன் கூறியபோது, "என்னைப் பார்த்து ஏன் நீங்கள் பயப்பட வேண்டும்... அதற்கு அவசியமில்லையே.." என்றார் இளையராஜா.

நீதானே என் பொன்வசந்தம் படத்தில் உங்களுக்குப் பிடித்த பாட்டு எது என்று கேட்டபோது, "படத்தின் ஆல்பத்தில் உள்ள 8 பாடல்களுமே எனக்குப் பிடித்தவைதான். மாற்றம் வேண்டுமானால் சொல்லுங்கள்... இப்போதும் மாற்றித் தருகிறேன், என்றார் ராஜா.

உடனே கவுதம் மேனன், ஆத்மார்த்தமாக சொல்கிறேன்... எனக்கு அனைத்துப் பாடல்களுமே மிகத் திருப்தியாக இருந்தன, என்றார்.

இந்த நேர்காணலின் முடிவில் கவுதம் மேனன் ராஜாவைப் பார்த்து இப்படிச் சொன்னார்:

"சார்... நீங்க எனக்கு ஒரு பாட்டு எழுதினீங்க... என்னோடு வாவா என்று சொல்ல மாட்டேன்.. உன்னை விட்டு தூரம் எங்கும் போக மாட்டேன் என்று. நானும் அதையே உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். 'என்னோடு வாவா என்று சொல்லமாட்டேன், உங்களைவிட்டு நானும் போகமாட்டேன்' என்ற போது ராஜாவின் முகத்தில் அந்த அக்மார்க் சிரிப்பு.

இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்காக, சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது... பாடலைப் பாடி பியானோ இசைத்தார் இசைஞானி!!

 

வீணா... என்னா அழகு, என்னா அழகு... புகழ்ந்து தள்ளிய லாலு பிரசாத் யாதவ், பாஸ்வான்!

Veena Malik Launches Sahara S New News Channel

சகாரா தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய செய்திச்சேனல் தொடக்க விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை வீணாமாலிக்கை, பிரபல அரசியல் தலைவர்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

சகாரா குழுமத்தில் இருந்து புதிதாக செய்திச் சேனல் ஒன்று உதயமாகி உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் இந்தி செய்திகளை ஒளிபரப்பும் இந்த சேனலை தொடக்கி வைக்க பிரபல பாலிவுட் நடிகை வீணா மாலிக்கிற்கு அழைப்பு விடுத்திருந்தார் சகாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய். இந்த விழாவில் பங்கேற்ற வீணா மாலிக், தனக்கு இது மிகச்சிறந்த தருணம் என்றார். சகாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் தன்னை சிறப்பு விருந்தினாராக அழைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார்.

புதிய செய்தி சேனல் தொடக்க விழாவில் பாலிவுட் திரைப்படப் பாடகர் அனுமாலிக், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் பங்கேற்றனர்.

வீணாவைப் பற்றி விழாவில் பங்கேற்ற லாலு பிரசாத் யாதவ் புகழ்ந்து பாராட்டினார். வீணா சிறந்த நடிகை மட்டுமல்ல கவித்துவமான அழகும் கொண்டவர் என்று பாராட்டினார் லாலு. இதை விட ஒரு படி மேலே சென்ற ராம் விலாஸ் பஸ்வான் இந்த தருணத்தில் வீணாவின் வருகை சிறப்பு வாய்ந்ததாகவும், நிகழ்ச்சிக்கு கூடுதல் கவர்ச்சியையும் அளித்துள்ளது என்றார்.

 

என்ன செஞ்சா பிரபுதேவா டென்ஷனாவாரு... ரூம் போட்டு யோசிக்கிறாராம் நயனதாரா!

Nayanthara Her War Against Prabudev
விட்ட குறை தொட்ட குறையாக, பிரபுதேவாவை விட்டுப் பிரிந்து விட்டாலும் கூட பிரபுதேவாவை அவ்வப்போது டென்ஷனாக்கியபடியே இருக்கிறாராம் நயனதாராம். மேலும் எதைச் செய்தால் பிரபுதேவாவுக்கு டென்ஷன் ஜாஸ்தியாகும் என்றும் ஆர் அன் டி செய்து அட்டாக் செய்தபடி இருக்கிறாராம்.

பிரபுதேவா, நயனதாரா ஏன் பிரிந்தார்கள் என்ற உண்மையான காரணம் அவர்களுக்கு மட்டுமே தெரியும். பூடகமாகக் கூட அதுகுறித்து இருவரும் பேசவில்லை, பேசவும் விரும்பவில்லை. இப்போது பிரபுதேவாவை விட்டுப் பிரிந்து விட்டாலும் கூட அவரை மறைமுகமாக டீஸ் செய்தபடி இருக்கிறாராம் நயனதாரா - விவரம் தெரிந்தவர்கள் கிசுகிசுக்கிறார்கள்.

பிரபுதோவுக்கு ஆர்யாவைப் பிடிக்காது போல. ஆர்யாவுடன் இணைந்து நடிக்காதே என்று முன்பே நயனதாராவிடம் கண்டிஷன் போட்டுநெருக்கி வந்தாராம் பிரபுதேவா. இதை மனதில் வைத்துக் கொண்டிருந்த நயனதாரா இப்போது ஆர்யாவுடன் நல்ல நெருக்கமும், நட்பும் பாராட்டி வருகிறாராம்.

அதேபோல தனது பரம எதிரியாக கருதி வந்த தனது முன்னாள் காதலர் சிம்புவையும் சமீபத்தி் தனியாக சந்தித்து தனிமையில் ஆற அமர பேசி விட்டுத் திரும்பினார். இதுவும் கூட பிரபுதேவை சீண்டிப் பார்க்கும் வேலை என்கிறார்கள்.

இப்படி அடுத்தடுத்து பிரபுதேவாவை டென்ஷனாக்கும் வகையில் நடந்து கொண்டு வருகிறாராம் நயனாரா. ஏன் இப்படி ஒரு கெட்ட பழக்கம் என்று விசாரித்தால், எல்லாம் ஒரு சுய சந்தோஷத்திற்காகத்தான் என்று கூறுகிறார்கள்.
 

பிரபு தேவா... அடுத்த காதலில் மும்முரம்?

Prabhu Dheva Has New Ladylove

சென்னை: பொதுவாக நடிகைகளைப் பற்றித்தான் விடாமல் வதந்திகள் துரத்தும். ஆனால் பிரபு தேவா விஷயத்தில் இது தலைகீழ்.

நயன்தாராவுக்குப் பிறகு அவர் வாழ்க்கையில் இடம்பெற்றுவிட்ட ஒரு பெண்ணைப் பற்றித்தான் இப்போது வதந்திகள் வட்டமடிக்கின்றன. இவர் ஒரு நடிகையா என்றால், இருக்கலாம், என்கிறார்கள்.

பிரபுதேவா மும்பையில் குடியேறிய பிறகு அந்தப் பெண்ணுடன் நெருக்கமான உறவை மெயின்டெய்ன் பண்ணுவதாக மும்பை பத்திரிகைகளில் செய்திகள் வரத் தொடங்கியுள்ளன.

நயன்தாராவைப் பிரிந்த பிறகு, தன் மகன்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுவதாகக் கூறியிருந்தார் பிரபுதேவா. சமீபத்தில்கூட மகன்களுடன் வெளிநாடு போய் வந்தார். மகன் பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினார்.

இந்த நிலையில் இப்போது பிரபுதேவாவைப் பின்னிப் பிணைந்திருக்கும் அந்த புதிய காதலி குறித்த பரபரப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து பிரபுதேவாவிடம் கேட்டபோது, அவர் பதிலேதும் சொல்லவில்லை. மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்த உறவு இப்போது புதிதாக வந்ததில்லை என்றும், இதுகுறித்து ஏற்கெனவே நயன்தாராவுக்கும் தெரியும் என்றும் கூறுகிறார்கள்.

விஷயத்தை நயன்தாரா மூலம் கன்பர்ம் செய்ய சிலர் ஆர்வத்துடன் தொடர்பு கொண்டபோது, அவர் தொடர்பு எல்லைக்கு வெளியிலிருப்பதாக தகவல் கிடைத்ததாம்!

 

மணிரத்னம் படத்துக்கு ரூ 50 கோடி பட்ஜெட்!!

Mani Rathnam S Kadal Rs 50 Cr Budget

சென்னை: முழுக்க முழுக்கப் புதுமுகங்களை மட்டுமே வைத்து மணிரத்னம் எடுத்துக் கொண்டிருக்கும் கடல் படத்துக்கு ரூ 50 கோடி பட்ஜெட் என்ற தகவலை வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.

நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம், நடிகை ராதா மகள் துளசி ஜோடியாக அறிமுகமாகிறார்கள் இந்தப் படத்தில்.

இவர்களைத் தவிர, அர்ஜுனும் நடிக்கிறார். படத்தின் உண்மையான ஹீரோவாக ஏ ஆர் ரஹ்மான் இருப்பார் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில் படம் குறித்தப் பேசியுள்ள, அப்படத்தின் கதை வசனகர்த்தா எழுத்தாளர் ஜெயமோகன், "நானும் மணிரத்னமும் சேர்ந்து பணியாற்ற கடந்த நபல வருடங்களாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமையவில்லை. கடலில் அது கைகூடியுள்ளது. கடல் படம் ரூ 50 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அளவு பட்ஜெட் போட்டிருப்பதால், நினைத்ததை எடுக்கும் சுதந்திரம் கிடைத்திருக்கிறது," என்றார்.

முற்றிலும் புதுமுகங்கள், ஓபனிங் வேறு இருக்காது...ரூ 50 கோடி என்பது அதிகமாகப் படவில்லையா என்றால், "புதுமுகங்களைப் பார்க்காதீர்கள்... இது மணிரத்னம் படம். அது போதாதா?" என்றார்.

ரூ100 கோடி பட்ஜெட்டில் எடுத்ததாக விளம்பரப்படுத்தப்பட்ட ராவணனுக்கு நேர்ந்த கதி வராமல் இருந்தால் சரி!

 

புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை!

Scv Attempts Block Puthiya Talaimurai Channel

சென்னை: எஸ் சி வி எனப்படும் சன் குழும நிறுவனத்தின் கேபிள் இணைப்பு பெற்றவர்களால் புதிய தலைமுறை தொலைக்காட்சியை காண இயலவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

சென்னையின் ஒரு பகுதியில் எஸ்.சி.வியில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சேவை தெரியவில்லை என்று நேயர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து எஸ்சிவி நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டும் சரியான விளக்கம் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எஸ்.ஆர்.எம் குழுமத்தினரால் தொடங்கப்பட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி சேனல் பல்வேறு செய்திகளை உடனுக்குடன் ஒளிபரப்பி வருகிறது. புதிய தலைமுறை டிவியில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், இலங்கை இனப் படுகொலை, மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்ற செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதனால் இந்த தொலைக்காட்சியினை பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதிய தலைமுறை டிவி ஒளிபரப்பு தொடங்கிய உடன் சன் நியூஸ் செய்தியின் டிஆர்பி குறையத் தொடங்கியது. இதனால் இரு சேனல்களுக்கு இடையே போட்டி மனப்பான்மை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் புதிய தலைமுறை டிவியை முடக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாகவே, சென்னையில் ஒளிபரப்புக்கு தடங்கல் என கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தினர். எந்த நெருக்கடிகளுக்கும் அஞ்சாமல் எங்களுடைய கடமையை தொடர்ந்து செய்வோம் கூறியுள்ளனர். உண்மைக்கு மக்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்பதை தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

'இப்படிக்கு தோழர் செங்கொடி' ஆவணப்படம் ஆக.19ல் வெளியீடு

Reel Protest Against Death Penalty

சென்னை: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி உயிர் நீத்த செங்கொடியின் நினைவாக 'இப்படிக்கு தோழர் செங்கொடி' ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் உணர்வாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த ஆவணப்படம் ஆகஸ்ட் 19 அன்று வெளியிடப்படுகின்றது.

ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் எனக்கோரி கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைத் சேர்ந்த செங்கொடி என்ற இளம் பெண் மூவரின் தண்டனை செய்ய வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த பெண்ணின் வாழ்க்கை வரலாறு "இப்படிக்கு தோழர் செங்கொடி" என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் உணர்வாளர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ஏஸ் சினிமாஸ் என்ற நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் "பொன்னுசாமி" என்ற புனை பெயரில் எழுதி வரும் வெற்றிவேல் சந்திரசேகர் என்பவர் இந்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இவர், இயக்குநர் "பாலை" ம.செந்தமிழனிடம் துணை இயக்குநராக பணியாற்றிவருகிறார்.

இப்படத்தின் வெளியீட்டு விழா, வரும் 19 அன்று சென்னை கீழ்ப்பாகத்தில் அமைந்துள்ள டான் போஸ்கோ அரங்கில், மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவில் திரைப்பட நடிகர் சத்யராஜ் படத்தை வெளியிட, பேரறிவாளின் தாயார் அற்புதம் அம்மையார் முதல் சிடியினை பெற்றுக் கொள்கிறார். விழாவின் போது, படம் திரையிடப்பட உள்ளது.