சென்னை: சென்னை நந்தனம் ஒம்.எம்.சி.ஏ விளையாட்டு மைதானத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ தாய் மண்ணே வணக்கம்' இசைக்கச்சேரி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் எந்த பாடலை முதலில் பாடவேண்டும் என்று எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள் என்று இசை ரசிகர்களை ஜெயாடிவி கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக செய்தியாளர்களை சந்தித்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:
எப்பவும் ஹாலிவுட், இந்தின்னு இருக்கிறீங்க. எப்ப தமிழ் படங்களுக்கு அதிகமாக இசையமைக்கப் போறீங்க?
இப்பதான் கடல் முடிஞ்சுது. அடுத்து பரத்பாலா படம் பண்றேன். கோச்சடையான் வரப்போவுது. அது தவிர இன்னும் ரெண்டு படம் இருக்கு.
இந்திக்கு போனா, ஏன் தமிழ்நாட்டை விட்டு வர மாட்டேங்கிறீங்கன்னு கேட்கிறாங்க... என்று கூறிவிட்டு சிரித்தார்.
ஆஸ்கர் விருது ஏற்கனவே வாங்கிட்டீங்க. இதுக்கு பிறகும் வாங்குற எண்ணம் இருக்கா?
வீட்ல ரெண்டு இருக்கு. அது போதும்'.
சென்னையில் நடந்த திரைப்பட விழாவில் உங்க மகன் கீபோர்டு வாசிச்சார். அவரும் இந்த இசை நிகழ்ச்சியில் உங்களோட மேடை ஏறுவாரா?
இல்ல... அவர் இப்பதான் பிகினிங்ல இருக்கார் என்று பெருமிதத்தோடு சொன்னார்.
என்ன பாட்டு பாடணும்
'தாய் மண்ணே வணக்கம்' நிகழ்ச்சியை ஜெயா தொலைக்காட்சி நடத்தினாலும் சென்னையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இசைப்புயல் நடத்தும் கச்சேரி என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரோஜாவில் ஆரம்பித்து கடல் வரைக்கும் செலக்டிவாக முப்பது பாடல்களை பாடுகிற எண்ணம் இருக்கிறதாம். முக்கியமாக நாலைந்து பாடல்களை ரஹ்மானே பாடுகிறார். இதில் முதல் பாடலாக ஏ.ஆர்.ரஹ்மான் என்ன பாடலை பாடவேண்டும் என்று தேர்வு செய்யுமாறு ரசிகர்களுக்கு போட்டி அறிவித்துள்ளது ஜெயா டிவி. அதிக அளவில் ரசிகர்கள் தேர்ந்தெடுத்துள்ள பாடலை ஏ.ஆர். ரஹ்மான் பாட உள்ளார்.