சென்னை: ஆகஸ்ட் 18... சரியாக 38 ஆண்டுகளுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினி அறிமுகமான அபூர்வ ராகங்கள் படம் வெளியான தேதி இது.
இந்த நாளில் ரஜினியின் ஆரம்ப காலம், சினிமாவில் அவர் சந்தித்த போராட்டங்கள், சாதனைகள், தனிப்பட்ட வாழ்க்கை, ரசிகர்கள் பலம் என பல விஷயங்கள் குறித்தும் 2 மணிநேரம் அசத்தலாக உரையாற்றி, வந்திருந்தவர்களைப் பரவசப்பட வைத்தார் நடிகர் மோகன் ராம்.
சென்னை நகரம் உருவான தினத்தைக் கொண்டாடும் விதமாக ஆண்டு தோறும் சென்னையின் பாரம்பரியம் குறித்த சென்னை ஹெரிடேஜ் டாக் எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
ரஜினி 38
இதற்கு முந்தைய ஆண்டுகளில் மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகிய சாதனையாளர்கள் பற்றிய பேச்சு இடம்பெற்றது.
இந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து நடிகர் மோகன் ராம் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ரஜினி திரையுலகில் அடியெடுத்து வைத்து 38 ஆண்டுகள் பூர்த்தியடையும் தினத்தன்றே இந்த பேச்சு இடம்பெற்றது இன்னொரு சிறப்பாகும்.
இதற்காக ரஜினியை ஏற்கெனவே நேரில் சந்தித்துப் பேசினார் மோகன்ராம். அப்போது இரண்டு நிமிட ஆடியோ பேட்டி ஒன்றையும் கொடுத்திருந்தார் சூப்பர் ஸ்டார்.
நேற்று சென்னை ஐடிசி சோழா கிராண்ட் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு ரஜினியின் குரு கே பாலச்சந்தர், சகோதரருக்கு நிகரான இயக்குநர் எஸ் பி முத்துராமன் உள்பட பலரும் வந்திருந்தனர்.
இரண்டுமணி நேரம்
நிகழ்ச்சியில் சுமார் இரண்டு மணி நேரம் பேசினார் மோகன் ராம். ரஜினியின் ஆரம்ப நாட்கள் தொடங்கி, இன்றைய சாதனைகள் வரை அற்புதமாகப் பேசினார். ரஜினியின் ஒவ்வொரு ரசிகரும் தவறவிடக்கூடாத பேச்சாக அமைந்தது அது. பேச்சின் இடையிடையே ரஜினி பற்றிய ஆடியோ - வீடியோ காட்சிகளை போட்டுக் காட்டி இன்னும் சுவாரஸ்யம் கூட்டினார் மோகன் ராம்.
தனது முதல் படத்தை ரஜினி பார்த்த அனுபவம்..
ரஜினி தன் முதல் படமான அபூர்வ ராகங்களை முதன் முதலில் பார்த்தது திநகர் பஸ் நிலையம் எதிரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில்தான்.
படம் முடிந்ததும், யாருக்காவது தன்னை அடையாளம் தெரிகிறதா... தன்னிடம் வந்து பேசுவார்களா என்ற எதிர்ப்பார்ப்புடன் நின்றாராம் ரஜினி. அப்போது ஒரு பத்து வயது சிறுமிதான் ரஜினியைத் தேடி வந்து, அங்கிள் நீங்கதானே அந்தப் படத்துல கடைசியா வந்தது?, என்று கேட்க, ரஜினிக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டதாம். சிறுமிக்கி ஒரு பாப்கார்ன் வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்தாராம்!
ஸ்ரீதேவியை முகத்தில் துப்பச் சொன்ன ரஜினி
பதினாறு வயதினிலே படம்... ஒரு காட்சியில் வில்லன் ரஜினி முகத்தில் ஸ்ரீதேவி துப்புவதாக காட்சி. ஆரம்பத்தில் இருமுறை சோப்பு நுரையைத் தெளித்துப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் அது ரஜினி முகத்தில் தெளிக்கப்பட்ட சில நொடிகளில் கரைந்துபோனது. உடனே ரஜினி, 'பரவால்ல.. ச்சும்மா துப்புங்க... உண்மையாகவே துப்புங்க" என்று சொன்னாராம். அதன் பிறகுதான் அந்தக் காட்சி சரியாக வந்ததாம். இந்தப் படத்தில் நடிக்கும்போது, ரஜினி ஏற்கெனவே தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 15 படங்களை முடித்துவிட்டிருந்தார்!
சென்னை எக்ஸ்பிரஸ்...
மோகன்ராம் தன் பேச்சை, சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாரூக்கான் எப்படி ரஜினிக்கு மரியாதை செலுத்தினார் என்ற குறிப்போடு முடித்தபோது எழுந்த கைத்தட்டல் அடங்க வெகு நேரமானது!