நல்லா பேசுங்க… நல்லதையே பேசுங்க….ஐ. லியோனியின் விவாத நிகழ்ச்சி

Nalla Pesunga Nallathaye Pesunga

கலைஞர் டிவியில் ‘நல்லா பேசுங்க.... நல்லதையே பேசுங்க' என்ற விவாத நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை திண்டுக்கல் ஐ. லியோனி தொகுத்து வழங்குகிறார்.

அரட்டை அரங்கம் தொடங்கி நீயா நானா, களம் காணும் விவாதங்கள் வரை பல விவாத நிகழ்ச்சிகள் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன. கலைஞர் தொலைக்காட்சியிலும் புதிய விவாத நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.

இளம் தலைமுறையினரின் பேச்சுத் திறமையை வளர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 32 மாவட்டங்களில் இந்த விவாத நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 6 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் சமூக அவலங்களைப் பற்றியும், சமுதாயத்தில் நடைபெறும் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றியும் பேசுகின்றனர்.

திண்டுக்கல் ஐ. லியோனி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கடந்த வாரம் திருப்பூரில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இந்த நிகழ்ச்சியில் குடும்பம் மகிழ்ச்சியானது என்று ஒரு பிரிவினரும் குடும்பம் மகிழ்ச்சியாக இல்லை என்று மற்றொரு பிரிவினரும் பேசினார்கள்.

இதற்கு ஏன் நல்லா பேசுங்க... நல்லதே பேசுங்க என்று பெயர் வைக்கப்பட்டது என்று தொடங்கி நல்லா பேசுவதைப் போல நல்லதைப் பேசனும் என்று கூறினார். புதிய நிகழ்ச்சியை திறம்பட நடத்தினர் லியோனி. ஏற்கனவே பட்டிமன்றம் நடத்தி பல ஆண்டுகள் அனுபவம் இருப்பதால் இந்த விவாத நிகழ்ச்சியை நன்றாகவே நடத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

 

நடிகர் கோபிசந்துக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்!

Actor Gopichand Marry Reshma

ஜெயம் பட வில்லனும் பிரபல தெலுங்கு ஹீரோவுமான கோபிசந்துக்கு மீண்டும் திருமணம் நிச்சயமாகிறது.

நாளை ஹைதராபாதில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக உள்ள கோபிசந்துக்கு ஏற்கனவே திருமணம் முடிவானது. ஹரிதா என்ற பெண்ணுடன் கோபிசந்துக்கு நிச்சயம் நடந்தது. திருமண தேதியும் முடிவானது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த திருமணம் ரத்தானதால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது மீண்டும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ரேஷ்மா என்ற பெண்ணுடன் கோபிசந்துக்கு திருமணம் முடிவாகியுள்ளது. நடிகர் ஸ்ரீகாந்தின் உறவினர்தான் இந்த ரேஷ்மா என்பது குறிப்பிடத்தக்கது.

கோபிசந்த - ரேஷ்மா திருமண நிச்சயதார்த்தம் நாளை டிசம்பர் 21-ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கிறது.

வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோபிசந்த் தற்போது டாப்ஸியுடன் ஒரு தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார்.

 

ஏதாவது ஒரு வேடத்தில் ரஜினியுடன் நடிக்கணும்!- தமன்னா பிறந்த நாள் பேட்டி

Tamanna S Birthday Special   

மும்பை: நடிகை தமன்னா இன்று தனது 23 வது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார்.

பிறந்த நாள் ஸ்பெஷலாக நிருபர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அந்தப் பேட்டியிலிருந்து...

குறிப்பிட்ட வயது வரை பிறந்த நாள் என்பது கேக் வெட்டுவதற்காக மட்டும்தான் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் விவரம் தெரிந்ததிலிருந்து, அதை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொண்டேன். நான் பிறந்த நாள் நாலு பேருக்காவது நல்லதாக அமைய வேண்டும் என்பதுதான் அந்த மாற்றம்.

ரொம்ப சின்ன வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். இன்று என் சினிமா வாழ்க்கைக்கு வயது 8. இத்தனை ஆண்டுகளில் நான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை ஏழை மக்களுக்கு, நெருக்கடியில் இருப்பவர்களுக்கு உதவ செலவழித்து வருகிறேன்.

என் உதவிகள் எதையும் இதுவரை நான் வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததே இல்லை. அப்படி விளம்பரப்படுத்தினால் நான் செய்யும் உதவிகளுக்கு அர்த்தமிருக்காதே.

இந்த சினிமாவில் எனக்கு யாரும் பெரிதாக உதவவில்லை. அதை ஒரு குறையாக சொல்லவில்லை. எந்த துறையாக இருந்தாலும் நாமாகத்தான் கஷ்டப்பட்ட நமக்கான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.

சினிமாவை நான் எந்த அளவு நேசிக்கிறேன் என்பதை வார்த்தைகளில் சொல்ல முடியாது. அப்படியொரு காதல். மொழிகளைத் தாண்டி அனைத்து மொழி சினிமாவிலும் நடிக்க ஆசை.

இந்தப் பிறந்த நாளில் எனக்கொரு ஆசை. விரைவில் ரஜினி சாருடன் ஏதாவது ஒரு ரோலில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நடக்கிறதா பார்க்கலாம்!

 

டிடிஎச்சில் வெளியாகும் படங்களுக்கு ஒத்துழைப்பில்லை! - தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள் அறிவிப்பு

Theatre Owners Sistributors Against

டிடிஎச்சில் வெளியாகும் விஸ்வரூபம் உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் திரையரங்குகள், விநியோகஸ்தர்கள் தரப்பில் இனி ஒத்துழைப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கூட்டாக இதனை அறிவித்துள்ளனர்.

இந்த இருதரப்பினரின் கூட்டுக் கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. கூட்டத்தின் முடிவில், "தியேட்டரில் வெளியாகும் முன்பே டிடிஎச் அல்லது வேறு எந்தத் தொழில்நுட்பத்தில் படங்கள் வெளியானாலும் அதனை வாங்குவதில்லை. விஸ்வரூபம் மட்டுமல்ல, இந்த முறையில் வெளியாகும் அனைத்துப் படங்களுக்கும் இதேதான் முடிவு.

இந்த முடிவுக்கு ஒருமனதாக ஆதரவளித்துவரும் அபிராமி ராமநாதன், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கமல் பாணியில் மேலும் சில படங்களை பொங்கல் முதல் டிடிஎச்சில் ஒளிபரப்ப தயாரிப்பாளர்கள் சிலர் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

 

இன்று கள்ளத்துப்பாக்கி, சட்டம் ஒரு இருட்டறை!

Friday Releases

கோலிவுட்டில் இந்த வெள்ளிக்கிழமை ரிலீஸாகவிருக்கும் புதிய படங்கள் கள்ளத்துப்பாக்கி மற்றும் சட்டம் ஒரு இருட்டறை.

கள்ளத்துப்பாக்கிக்கு புதிய அறிமுகமே தேவையில்லை. அவ்வளவு பப்ளிசிட்டியை பெற்றுவிட்டது, விஜய்யின் துப்பாக்கியுடன் மோதியதன் மூலம்.

முற்றிலும் புதியவர்கள் நடித்துள்ள இந்தப் படத்தை, ரவிதேவன் தயாரித்துள்ளார். லோகித்தாஸ் இயக்கியுள்ளார். சிறுவர்கள் கையில் துப்பாக்கி கிடைத்தால் என்னவாகும் என்பது கதை.

சட்டம் ஒரு இருட்டறை

இன்னொரு படம் சட்டம் ஒரு இருட்டறை. எண்பதுகளின் ஆரம்பத்தில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வந்து, அவருக்கும் நடித்த விஜயகாந்துக்கும் திருப்புமுனை தந்தபடம். அதை கதையை இன்றைய சூழலுக்கேற்ப காட்சிகளை மாற்றி எடுத்திருக்கிறார்களாம்.

எஸ் ஏ சந்திரசேகரின் பேத்தி சினேகா பிரிட்டோ இயக்கியிருக்கிறார். ஆனால் கதை திரைக்கதை வசனம் இயக்க மேற்பார்வை எல்லாம் எஸ்ஏ சிதான்.

இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கு முந்தைய வெள்ளி இது. கடந்த வாரம் வெளியான இரு பெரிய படங்களும் முழுமையான நிறைவைத் தராத நிலையில், இன்று வெளியாகும் படங்களாவது தேறுமா... பார்க்கலாம்!

 

ஏன் தற்கொலை செய்து கொண்டார் மகாதேவன்? - நித்யஸ்ரீ வாக்குமூலம்

Nithyasri S Confession On Her Husband Suicide

சென்னை: தன் தாயார் மீது அளவுக்கதிகமான பாசம் வைத்திருந்த மகாதேவன், அவர் இறந்ததைத் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார், என்று வாக்குமூலம் அளித்துள்ளார் பாடகி நித்யஸ்ரீ.

பிரபல கர்நாடக மற்றும் சினிமா பின்னணி பாடகியான நித்யஸ்ரீ மகாதேவன், மார்கழி இசை விழாவில் பிஸியாக இருக்கும் நேரம் இது. திடீரென்று அவரது கணவர் நேற்று அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், நித்யஸ்ரீயிடம் வாக்குமூலம் பெற்றனர். அதில் நித்யஸ்ரீ கூறியிருப்பதாவது:

எனது கணவர் மகாதேவன் பகல் 12 மணியளவில் காரை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினார். கார் பேட்டரியை மாற்றுவதற்கு செல்வதாகத்தான் சொல்லிவிட்டுச் சென்றார்.

அடுத்த 10 நிமிடத்துக்குள் அவர் ஆற்றில் குதித்துவிட்டார் என்ற செய்தியை டிரைவர் சுரேஷ், என்னிடம் சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை.

நானும் கோட்டூர்புரம் பாலத்துக்கு ஓடிச் சென்றேன். அவரை, தீயணைப்பு வீரர்கள் தேடிக்கொண்டிருந்தனர். அதற்குமேல் என்னால் அங்கு நிற்கமுடியவில்லை. எப்படியும் அவர் உயிரோடு நல்லபடியாக வருவார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார்? என்று என்னால் சொல்லமுடியவில்லை.

எனது கணவர், அவரது தாயார் சாந்தா மீது அதிகமாக பாசம் வைத்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி எனது கணவரின் தாயார் சாந்தா இறந்துபோனார். அந்த சோகம், எனது கணவரை மனதளவில் மிகவும் பாதித்துவிட்டது. எப்போதும் தாயாரை நினைத்தபடி மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டார்.

இதற்காக அவருக்கு, டாக்டரிடம் சிகிச்சை அளித்து வந்தோம். தாயாரை பறிகொடுத்த சோகம்தான் அவரை இந்த முடிவுக்கு தள்ளிவிட்டது என்று நான் நினைக்கிறேன். மற்றபடி தனிப்பட்ட முறையில் அவருக்கும், எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை," என்றார்.

 

ரஜினியுடன் இணைந்து நடிப்பது ரொம்ப காஸ்ட்லி - கமல்

Working With Rajinikanth Is Costly Question Kamal

ரஜினியுடன் இணைந்து நடிப்பது ரொம்ப காஸ்ட்லியான விஷயம். அப்படி ஒரு படத்தைத் தயாரிக்க பணம் போதாது. எக்கச்சக்கமாக பணமிருந்தால் மட்டுமே அந்தப் படத்தைத் தயாரிக்க முடியும், என்கிறார் கமல்ஹாஸன்.

கமல் - ரஜினி என்றிருந்த காலத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். அது எப்போது ரஜினி - கமல் என மாறியதோ, அன்றிலிருந்து இருவரும் தனித் தனி பாதைகளில் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர்.

ரஜினியே சொன்னதுபோல, இதுதான் தனக்கான பாதை என ரஜினி தீர்மானித்த பிறகு, தனக்கென தனி பாணியை பின்பற்ற ஆரம்பித்தார். அதில் மிகப்பெரிய வெற்றிகளை சாதித்திருக்கிறார்.

இப்போது அடிக்கடி பேசப்படுவது, மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிப்பது சாத்தியமா? என்பதுதான். இருவரும் கடைசியாக சேர்ந்து நடித்த படம் தமிழில் அலாவுதீனும் அற்புத விளக்கும் (1979). இந்தியில் கிராப்தார் (1985). இடையில் தில்லுமுல்லு, அக்னிசாட்சி போன்ற படங்களில் இருவரும் ஒரு காட்சியில் தோன்றுவார்கள்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிப்பது சாத்தியமா? என்ற கேள்வியை ரசிகர்கள் மட்டுமல்ல, திரையுலகினரும்கூட ஆவலுடன் கேட்கிறார்கள்.

கமலிடம் இதைக் கேட்டபோது, "ரஜினியுடன் பணியாற்றுவது என்ற கேள்வியே ரொம்ப ரொம்ப காஸ்ட்லியானது. ஒருவேளை நாங்கள் சேர்ந்து நடித்தால், அதைத் தயாரிக்க தேவையான பணத்துக்கு எங்கே போவீர்கள்? அவ்வளவு பணம் உள்ள தயாரிப்பாளர் யார்? ஏராளமான பணம் இருந்தால்... செலவழிக்க தாயாராக இருந்தால் ஒருவேளை நாங்கள் சேர்ந்து நடிப்பது சாத்தியமாகலாம்," என்றார்.

 

சூர்யாவுக்கு டிவி நிகழ்ச்சி கசந்தது ஏன்?

Why Surya Opts From Vijay Tv Game Show

விஜய் டிவியின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியிலிருந்து சூர்யா விலகிவிட்டார். அவருக்குப் பதில் அந்த ஷோவை நடத்துகிறார் பிரகாஷ் ராஜ். இதன் பின்னணி சூர்யா கால்ஷீட் பிரச்சினை இல்லை... தொடர்ந்து அவர் நடித்த படங்கள் விழுந்ததுதான் என்கிறார்கள்.

இந்த ஆண்டு அதிகம் கவனிக்கப்பட்ட மற்றும் விமர்சிக்கப்பட்ட டிவி ஷோக்களில் ஒன்று நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி. பார்வையாளர்களை ஈஸியாக ஈர்க்க எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் என்கிற ரேஞ்சுக்கு கேள்வி கேட்டு வந்தார் சூர்யா.

இந்த நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்புதான் முடிந்தது. இதன் இரண்டாம் பாகம் விரைவில் வரும் என விஜய் டிவிக்காரர்கள் விளம்பரம் செய்து வந்தனர். இதிலும் சூர்யாதான் நிகழ்ச்சி நடத்துநராக வருவார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில், அவருக்கு பதில் பிரகாஷ் ராஜ் நிகழ்ச்சியை நடத்துகிறார்.

இதுகுறித்து சூர்யாவிடம் கேட்டபோது, "என்னிடம் தேதியில்லை. அதனால்தான் நான் வெளியில் வந்துவிட்டேன். மற்றபடி கடந்த முறை ரொம்ப என்ஜாய் பண்ணி அந்த நிகழ்ச்சியை நடத்தினேன்," என்றார்.

ஆனால் உண்மையில், இந்த நிகழ்ச்சி மூலம் சினிமா ரசிகர்களுக்கு சூர்யா போரடித்துவிட்டார் என்பதே உண்மை. அவரது இரண்டு படங்கள் அடுத்தடுத்து மண்ணைக் கவ்வின. முக்கியமாக மாற்றான் தோல்வி சூர்யாவுக்கு பெரிய அடி. ஒரு பெரிய ஹீரோ டிவியில் நேரடியாக தினமும் தோன்றிக் கொண்டே இருந்தால் மக்கள் மத்தியில் மவுசு குறைந்துவிடும் என்பது திரையுலகில் அடிக்கடி பேசப்படும் விஷயம். அது புரிந்துதான் சூர்யா விலகிவிட்டார் என்கிறார்கள்!

 

நீதானே என் பொன்வசந்தம் - விமர்சனம்

நடிப்பு: சமந்தா, ஜீவா, சந்தானம்
இசை: இசைஞானி இளையராஜா
தயாரிப்பு: எல்ரெட் குமார்
இயக்கம்: கவுதம் வாசுதேவ மேனன்


நீதானே என் பொன்வசந்தம்... இந்த ஆண்டு முழுவதும் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட படம். இளையராஜாவின் இனிய இசை வேறு எக்கச்சக்க எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால்...?

ஜீவாவும் சமந்தாவும் குட்டியூண்டு இருக்கும்போதே ஆரம்பித்துவிடுகிறது நட்பும் சண்டையும்.

அந்த நட்பை 10ம் வகுப்பு படிக்கும்போது மீண்டும் புதுப்பிக்கிறார்கள். ப்ளஸ் டூவில் மீண்டும் பிரிகிறார்கள். காரணம் பொஸஸிவ்னஸ்.. ஈகோ.

ஒரு இடைவெளிக்குப் பிறகு கல்லூரி கலை நிகழ்ச்சியில் சந்திக்கிறார்கள். காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்தக் காதலுடன் கூடவே வருகிறது இருவரின் ஈகோவும். ஒரு கட்டத்தில் இனி பிரிவே நிரந்தரம் என்று தனித்தனி திசையில் போகிறார்கள். ஜீவாவுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்து, தாலிகட்டுவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன் மீண்டும் இருவரும் சந்திக்கிறார்கள்... இருவரும் இணைந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.

neethane en ponvasantham review   

நிறைய காட்சிகளை ஏற்கெனவே இதே கவுதம் மேனன் படத்தில் பார்த்த நினைவு படம் முழுக்க வந்துபோகிறது, க்ளைமாக்ஸ் தவிர. போதாக்குறைக்கு விண்ணைத்தாண்டி வருவாயாவை காமெடிக்காக உல்டா பண்ணியிருக்கிறார்.

படத்தின் உண்மையான ஹீரோ இசைஞானி இளையராஜாதான். படம் முழுக்க அவரது பாடல்களும் இசையும் நம்முடன் பயணிப்பதால், கவுதம் மேனன் ஜவ்வாய் இழுத்திருக்கும் காட்சிகளைக் கூட பொறுத்துக் கொள்ள முடிகிறது. சற்று முன்பு பார்த்த மேகம்... பாடலும் இசையும் அந்த சூழலும் நம்மை எங்கோ அழைத்துப் போகின்றன. இந்த இசையை, பாடல்களையும்கூட சிலர் விமர்சிக்கும்போது.. மணிவண்ணன் அடிக்கடி சொல்வது போல, 'என்னடா டேஸ்டு உங்க டேஸ்டு' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது!

சமந்தா... சமீப ஆண்டுகளில் ஒரு நடிகைக்காக படம் பார்க்கலாம் என்று தோன்றியது அநேகமாக இவருக்காகத்தான் இருக்கும். அழகு, நடிப்பு என அனைத்திலும் அசத்துகிறார். ஜீவாவை பல காட்சிகளில் க்ளீன்போல்டாக்குகிறார்.

நண்பன் பட கேரக்டரின் நீட்சியாகவே படம் முழுக்க தெரிகிறார் ஜீவா. அவரது டல்லடிக்கும் மாடுலேஷன் சில பத்து கொட்டாவிகளுக்கு உத்தரவாதம். அதிலும் தவறையெல்லாம் இவர் செய்துவிட்டு, அதை சமந்தா மீது சுமத்துவது, 'நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே' என கமெண்ட் அடிக்க வைக்கிறது.

அண்ணனுக்கு பெண் பார்க்கப் போய், அந்தஸ்து பிரச்சினையால் அவமானப்பட்டு வருகிறார் ஜீவாவின் அப்பா. அதன்பிறகு வரும் காட்சிகள் இருக்கிறதே... 'ஏன்டா இந்தப் படத்துக்கு வந்தே' என நம்மை நாமே கன்னத்தில் அடித்துக் கொள்ளலாம் போல அத்தனை நாடகத்தனம்.

ஜீவாவை விட, சில காட்சிகளில் மீசையில்லாமலும் சில காட்சிகளில் மீசையோடும் வரும் சந்தானம் பரவாயில்லை என்று சொல்ல வைக்கிறது. ஆனாலும் கல்லூரி மாணவராக அவரை ஏற்க முடியவில்லை.

ஒளிப்பதிவாளர், எடிட்டர் இருவருமே மகா அசட்டையாக இருந்திருக்கிறார்கள் என்பது படம் முழுக்க தெரிகிறது. ஆனால் இத்தனை குறைகள் இருந்தாலும், அந்த க்ளாமாக்ஸ் காட்சி, அனைத்தையும் மறக்கடிக்க வைத்துவிட்டதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

தாலி கட்ட 3 மணி நேரமே மிஞ்சியிருக்கும் ஒரு அதிகாலை... அழகிய (முன்னாள்) காதலி... நெஞ்சுக்குள் முட்டித் தவிக்கும் மோகத்தீ... தாங்கள் பழகிய, பாதம் பதித்த இடங்களை கடைசியாய் பார்த்துவர கிளம்புகிறார்கள்... அந்த இரண்டு மணி நேர காதல் தவிப்பை கவுதம் மேனன் படமாக்கியிருக்கும் விதம்... கொள்ளை அழகு.

இந்த ரசனையை படம் முழுக்க காட்டியிருந்தால் நீதானே என் பொன்வசந்தத்தை காதலர்கள் கொண்டாடியிருப்பார்கள்!

-எஸ். ஷங்கர்

 

துப்பாக்கி... இன்னும் ஓயாத சர்ச்சை!

Thuppakki Controversy Still Continues

தீபாவளிக்கு வெளியாகி, பெரும்பாலான தியேட்டர்களில் கடந்த மாதமே தூக்கப்பட்டுவிட்ட விஜய்யின் துப்பாக்கி பட சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.

இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் நீக்கம் குறித்த வழக்கு இன்னும் உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் துப்பாக்கி படத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

அதில், இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறேன். கடந்த நவம்பர் 13-ந் தேதி, கலைப்புலி தாணு தயாரிப்பில், நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி சினிமா படம் வெளியிடப்பட்டது. அதில் முஸ்லீம் மக்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த காட்சிகளால் மற்ற சமுதாயத்தினருக்கும், முஸ்லீம் இளைஞர்களுக்கும் இடையே விரோத உணர்வு ஏற்படும். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எழக்கூடும். இந்தப் படத்துக்கு ‘யூ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இது, அரசியல் சாசனத்தின்படி தவறானதாகும். இந்த சினிமாவால் சமுதாய அமைதி கெட்டுவிடும். ‘யூ' சான்றிதழை ரத்து செய்யும்படி, மத்திய அரசு, தணிக்கைத் துறை, சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் புகார் கொடுத்தேன். எனது புகாரை பரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்," என்று கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் ஆர்.பானுமதி, கே.கே.சசீதரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் வக்கீல் விஜயராகவன், தமிழக அரசுத் தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் ஐ.எஸ்.இன்பதுரை, கலைப்புலி தாணு தரப்பில் வக்கீல் மஞ்சுளா, மனுதாரர் தரப்பில் வக்கீல் சங்கரசுப்பு ஆஜரானார்கள்.

இந்த வழக்கில் நேற்று நடந்த வாதங்களின் தொகுப்பை இங்கே தருகிறோம்...

சங்கரசுப்பு (மனுதாரர் தரப்பு): துப்பாக்கி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்கும் நிலையில் அதற்கு ‘யூ' சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த சான்றிதழை திரும்பப் பெறும்படி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இன்பதுரை (அரசு வழக்கறிஞர்): இந்த வழக்கில் தமிழக அரசு வாடிக்கையாக சேர்க்கப்பட்டுள்ளது.

சங்கரசுப்பு: இந்த படத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, தமிழக அரசும் இந்த வழக்கில் பதிலளிக்க வேண்டும்.

இன்பதுரை: துப்பாக்கிப் பட பிரச்சினை தொடர்பாக முஸ்லீம் சமுதாயத் தலைவர்கள் சிலர், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து, அந்த சினிமாவில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார்.

அதன்படி, அந்த படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டன. எனவே, அந்த சமுதாயத் தலைவர்கள், முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர் என்பதையும் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

நீதிபதிகள்: இந்த பிரச்சினையில் தயாரிப்பாளரின் கருத்து என்ன? ஏன் அவர்கள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை?

மஞ்சுளா (தயாரிப்பாளர் தரப்பு): தயாரிப்பாளர் வெளிநாடு சென்றிருப்பதால் பதிலளிக்க முடியவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.

வாதம் முடிந்ததும், வழக்கை வரும் ஜனவரி 3-ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

 

சென்னை சர்வதேச திரைப்பட விழா: வழக்கு எண் 18/9, சாட்டை திரைப்படங்களுக்கு விருது

10th Chennai International Film Festival

சென்னை: சென்னையில் நடைபெற்ற 10-வது சர்வதேச திரைப்படவிழாவில் வழக்கு எண் 18/9 படத்திற்கு முதல்பரிசு வழங்கப்பட்டது. விழாவில் சாட்டை படத்திற்கு 2 வது பரிசும், பீட்சா, மவுனகுரு படங்களுக்கு விசேச விருதுகளும் வழங்கப்பட்டன. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 11 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.

10 வது சர்வதேச திரைப்படவிழா சென்னையில் கடந்த 12-ந் தேதி தொடங்கி, 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதன் நிறைவு விழா, சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் நேற்று இரவு நடைபெற்றது. இந்தி நடிகர் அமிதாப்பச்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார்.

முதலில் வணக்கம் என்று தமிழில் பேச்சைத் தொடங்கிய அவர், பின்னர் ஆங்கிலத்தில் பேசினார். வாழ்க்கையில், பெண்களுக்கு 50 சதவீத பங்கு இருக்கிறது. பெண்களுக்கு எதிராக இப்போது நடக்கும் சில கொடுமைகளை கேள்விப்படும் போது, மனம் பதறுகிறது.

தியேட்டருக்கு போய் படம் பார்க்க போகும் போது கியூவில் நின்று டிக்கெட் வாங்குகிறோம். பக்கத்து இருக்கையில் யார் உட்கார்ந்திருக்கிறார்கள்? என்று பார்ப்பதில்லை. அவர் என்ன சாதி, என்ன மதம் என்று பார்ப்பதில்லை. படத்தில் வரும் நகைச்சுவைக்கு சிரிக்கிறோம். சோக காட்சியை பார்த்து அழுகிறோம். சாதி, மதம் பார்க்காமல், மனிதர்களை ஒன்றாக இணைப்பது சினிமா ஒன்று தான். அந்த சினிமாவில் நானும் இருப்பதற்காக பெருமைப்படுகிறேன்.

உலகிலேயே இந்தியாவில் தான் அதிக படங்கள் தயாராகின்றன. அதிலும் குறிப்பாக, தென்னிந்தியாவில் தான் அதிக படங்கள் தயாராகின்றன. மிக சிறந்த திறமைசாலிகள் இங்கே தான் இருக்கிறார்கள்.

தமிழ் சினிமா கலைஞர்கள் ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள். இந்த ஒற்றுமை வேறு எங்கும் கிடையாது. மும்பையில் இல்லாத உழைப்பும், ஒழுக்கமும், நேரம் தவறாமையும் தமிழ் சினிமாவில் இருக்கிறது. சினிமா மட்டுமே எல்லோரையும் ஒற்றுமையாக வைத்து இருக்கிறது.

தமிழ் சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். பல தொழில்நுட்ப கலைஞர்களுடன் நான் வேலை செய்து இருக்கிறேன். நாங்கள், உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

சுஹாசினி இனி ஒவ்வொரு வருடமும் சர்வதேச பட விழாவுக்கு என்னை அழைக்க வேண்டும். விழா நடைபெறும் அரங்கை பெருக்கி துடைக்க நான் தயாராக இருக்கிறேன். இருக்கைகளை மேடைக்கு கொண்டு வந்து போடுவேன். வருகிற விருந்தினர்களை வரவேற்பேன்."என்று அமிதாப்பச்சன் பேசினார்.

11 லட்சம் நன்கொடை

இதனைத் தொடர்ந்து சர்வதேச படவிழாவுக்கு, அமிதாப்பச்சன் ரூ.11 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.

சர்வதேச படவிழா போட்டி பிரிவில், 12 தமிழ் படங்கள் திரையிடப்பட்டன. அதில், ‘வழக்கு எண் 18/9′ படத்துக்கு முதல் பரிசும், ‘சாட்டை' படத்துக்கு 2-வது பரிசும் வழங்கப்பட்டது. பரிசுகளை டைரக்டர்கள் பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, எம்.அன்பழகன், பிரபுசாலமன் ஆகியோர் அமிதாப்பச்சனிடம் இருந்து பெற்று கொண்டார்கள். ‘பீட்சா,' ‘மவுன குரு' ஆகிய 2 படங்களுக்கும் விசேஷ நடுவர் விருது வழங்கப்பட்டது.

 

என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்

Kamal Wont Remake His Classics

எனது பழைய படங்களை ரீமேக் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. அந்த வேடங்களுக்கு இனி நான் பொருத்தமாக இருக்கமாட்டேன், என்றார் கமல்ஹாஸன்.

20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான படங்கள் புத்தம் புதிய காப்பியாகவோ அல்லது ரீமேக் செய்யப்பட்டு வெளியாவதோ இப்போதைய ட்ரெண்டாகியுள்ளது.

கமல்ஹாஸன் நடித்து வெளியான காலத்தால் மறக்க முடியாத பல படங்களை ரீமேக் செய்தால் என்ன என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் கமல்ஹாஸனிடம் கேட்டபோது, "சத்மா, ஏக் துஜே கே லியே போன்ற படங்களை ரீமேக் செய்வது குறித்து பேசுவார்கள். ஆனால் அந்த வேடங்களுக்கு இனி நான் பொருத்தமாக இருக்க மாட்டேன்.

சத்மா (மூன்றாம் பிறை) படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாகக் கூறி என்னை அணுகினார்கள். படத்தில் ஹீரோயினுக்கு நினைவு திரும்பி மீண்டும் ஹீரோவைத் தேடி வருவது போல கதை. அந்தக் கதைக்கும் நான் பொருத்தமாக இருப்பேன் என்று தோன்றவில்லை. மேலும் அந்தப் படத்துக்கு சோகமான முடிவுதான் சரியாக இருந்தது. ஹீரோயின் திரும்ப வருவது போன்ற கதையமைப்பு எடுபடாது," என்றார்.

 

ஆனந்த் என்னையும், என் குடும்பத்தையும் கேவலப்படுத்தினார்: பூஜா காந்தி கண்ணீர்

Pooja Gandhi Blames Ex Beau Break Up

பெங்களூர்: தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட ஆனந்த் கவுடா ஒரு சந்தேகப் பிராணியாக இருப்பதால் அவரைப் பிரிந்துவிட்டதாக கன்னட நடிகை பூஜா காந்தி தெரிவித்துள்ளார்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா காந்திக்கும், பைன்ஸ் தொழில் செய்பவரான ஆனந்த் கவுடாவுக்கும் கடந்த மாதம் 15ம் தேதி பெங்களூரில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் அவர்கள் பிரிந்துவிட்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த பூஜா காந்தி கண்ணீர் விட்டார்.

அப்போது அவர் கூறுகையில், ஆனந்த் என்னையும், எனது குடும்பத்தாரையும் கேவலமாக நடத்தினார். நாங்கள் பிரிந்ததற்கு அவர் மட்டும் தான் காரணம். அவர் ஒரு சந்தேகப் பிராணி. அவர் என்னை சந்தேகப்பட்டார். இருப்பினும் அதை எல்லாம் பொறுத்துக் கொண்டேன். அவரால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். நிச்சயதார்த்த மோதிரத்தை அவரிடமே கொடுத்துவிட்டேன் என்றார்.

ஆனால் ஆனந்த் கூறுகையில்,

நாங்கள் ஒன்றும் 3 வருடங்களாக காதலிக்கவில்லை. பத்திரிக்கையாளர் ஒருவர் மூலம் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தான் பார்த்துக் கொண்டோம். அதன் பிறகு அவருக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளதை அறிந்து நாங்கள் சில மாதங்களாக பிரிந்திருந்தோம். பின்னர் மீண்டும் சேர்ந்தோம். பூஜாவின் அம்மா தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம். அவர் எனது நிறம் மற்றும் உண்ணும் பழக்கம் குறித்து தரக்குறைவாகப் பேசினார். அவருக்கு நாங்கள் ஒன்றாக இருப்பது பிடிக்கவில்லை. ஒரு நடிகையை மணக்க எனது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தும் காதல் என் கண்ணை மறைத்துவிட்டது. நாங்கள் பிரிந்ததற்கு பூஜா அல்ல அவரது அம்மா தான் காரணம் என்றார்.

 

போலீஸாரிடம் சண்டைக்குப் போன விஜய் தம்பி விக்ராந்த்.. பைன் போட்டு அனுப்பினர்

Actor Vikranth Fined Parking His Car

புதுச்சேரி: புதுச்சேரிக்கு வந்த நடிகர் விக்ராந்த், நோ பார்க்கிங்கில் காரை நிறுத்தியதோடு, அது கூடாது என்று கூறிய போலீஸாரிடமும் சண்டைக்குப் போனார். இதனால் கோபமடைந்த போலீஸார், விக்ராந்த்தின் காரை எஸ்.பி. அலுவலகத்திற்குக் கொண்டு போய் விட்டனர். அங்கு நடிகருக்கு அபராதம் விதித்து அதை வசூலித்த பின்னர் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

நடிகர் விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த். இவரும் நடிகர். கோரிப்பாளையம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தனது குடும்பத்துடன் புதுச்சேரிக்கு நேற்று வந்தார். வந்தவர் நேரு வீதியில் நோ பார்க்கிங் என்று போடப்பட்டிருந்த இடத்தில் தனது காரை நிறுத்தினார். இதைப்பார்த்த போலீஸார் மைக் மூலம், அது நோ பார்க்கிங் காரை நிறுத்தாதீர்கள் என்று கூறினர். ஆனால் அதை விக்ராந்த் கேட்கவில்லை.

இதையடுத்து காரை நோக்கி விரைந்து வந்த போலீஸார் விக்ராந்த்திடம் காரை எடுக்குமாறு கூறினர். ஆனால் அவர்களைப் பார்த்து விக்ராந்த் கோபமாக பேசியதாக கூறப்படுகிறது. இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.

இதைத் தொடர்ந்து விக்ராந்த்தின் காரை டோ செய்து எஸ்.பி. அலுவலகத்திற்குக கொண்டு சென்றனர் போலீஸார். அங்கு விக்ராந்த்திடமும், போக்குவரத்து போலீஸாரிடமும் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் விசாரணை நடத்தினார்.

அதன் பின்னர் விக்ராந்த்துக்கு நோ பார்க்கிங்கில் காரை நிறுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சமூகத்தில் பிரபலமாக இருக்கும் உங்களைப் போன்றவர்கள்,பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும், நீங்களே விதிமுறைகளை மீறுவது சரியா என்றும் இன்ஸ்பெக்டர் கேட்டார். இதுபோல மீ்ண்டும் நடக்கக் கூடாது என்றும் எச்சரிக்கையும் விடுத்து அனுப்பி வைத்தார்.

அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார் விக்ராந்த்.