எண்பதுகளின் இறுதியில் இளையராஜா இசையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற அக்னி நட்சத்திரம் படத்தை மீண்டும் ரீமேக் செய்கிறார்கள்.
அந்தப் படத்தில் கதாநாயகர்களாக நடித்த பிரபு - கார்த்திக் இருவரின் மகன்களையும் வைத்து இந்தப் படத்தை ரீமேக் செய்யப் போகிறார்கள் என்பதுதான் இதில் விசேஷம்.
அக்னி நட்சத்திரம் படத்தின் ரீமேக் உரிமையை பாலாஜி ரியல் மீடியாவின் ரமேஷ் பெற்றுள்ளார்.
பிரபு மகன் விக்ரம் பிரபு இப்போது கும்கி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும், அக்னி நட்சத்திரம் ரீமேக்கில் நடிக்க பேச்சு நடத்தி வருகிறார்கள். அதே போல, கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக் இப்போது மணிரத்னத்தின் கடல் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்த பிறகு அவரும் குழுவில் இணைந்து கொள்ள ஏற்பாடுகள் நடக்கின்றன.
இதுகுறித்து தயாரிப்பாளர் ரமேஷ் கூறுகையில், "பிரபு - கார்த்திக் மகன்களை வைத்து அக்னி நட்சத்திரம் ரீமேக் எடுக்க முயற்சித்து வருகிறோம். இப்போது இரு தரப்பிலும் பேசியுள்ளோம். விரைவில் விவரங்கள் தருவோம்," என்றார்.
அக்னி நட்சத்திரம் 1988-ம் ஆண்டு வெளியானது. இளையராஜாவின் இசையில் அத்தனைப் பாடல்களும் மெகாஹிட். குறிப்பாக நின்னுக்கோரி வர்ணமும் ராஜாதி ராஜனிந்த ராஜாவும் ஒலிக்காத இடமே இல்லை. இசையில் புது முயற்சியாக டெக்னோ இசையைக் கையாண்டிருந்தார் ராஜா.
ஆனந்த் தியேட்டர் உமாபதி வில்லனாக நடித்திருந்தார்.
இப்போது யாரை வைத்து வேண்டுமானாலும் படத்தை எடுத்துவிடலாம். ஆனால் அந்தப் பாடல்கள் ஏற்படுத்திய மேஜிக், மீண்டும் சாத்தியமாகுமா?
பார்க்கலாம்!!