ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைய வேண்டிய ரசிகர்கள் பல்வேறு வகைகளில் பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர். கோவிலில் தங்கத் தேர் இழுப்பது, அன்னதானம், கூட்டுப் பிரார்த்தனை என ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினி ரசிகர் ஒருவர் ரஜினிக்கு தனது சிறுநீரகத்தை தானம் தருவதற்காக தற்கொலைக்கு முயன்றுள்ள செயல் கோவையில்நடந்துள்ளது.
கோவை, குறிச்சி, சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் ரஜினி ராஜா ஆரோக்கியசாமி. 40 வயதாகும் இவர் தீவிர ரஜினி ரசிகர். அப்பகுதி ரஜினி ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். ரஜினிகாந்த்துக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப் போவதாக செய்திகள் வெளியானதால் பெரும் சோகமடைந்தார் ஆரோக்கியசாமி. இதையடுத்து அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அவர் தற்கொலைக்கு முயன்றார்.
அவர் மயங்கிய நிலையில் கிடப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் ஆரோக்கியசாமியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவர் உயிர் தப்பினார். பின்னர் அவர் கூறுகையில், எனது சிறுநீரகங்களை ரஜினிக்கு தானமாக கொடுப்பதற்காகவே நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று கூறினார் ஆரோக்கியசாமி.