சேரன் நடித்த அப்பாவின் மீசைக்கு இடைக்காலத் தடை!

சேரன் நடித்த அப்பாவின் மீசை படத்துக்கு சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ரவிபிரசாத் பிலிம்ஸ் லேப்ஸ் நிறுவனம் என்ற நிறுவனம் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், "தாமினி சினியோகிராபி நிறுவனம் சார்பில் ‘அப்பாவின் மீசை' என்ற தலைப்பில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் சேரன், நடிகை நித்யா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

Interim ban for Cheran's Appavin Meesai

இந்த படத்துக்கு தயாரிப்பு செலவுக்காக கடந்த 2012-ம் ஆண்டு ரூ 25 லட்சத்தை என்னிடம், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நிவேதா பிரியதர்ஷினி கடனாக வாங்கினார். அப்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பணத்தை திருப்பிக் கொடுக்கவேண்டும். அந்த படத்தின் காப்புரிமை எனக்கு வழங்க வேண்டும்.

ஆனால், தற்போது இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை பெற்றுள்ளனர். இந்த படத்தின் காப்புரிமை என்னிடம்தான் உள்ளது. எனவே, எனக்கு தரவேண்டிய பணத்தை திருப்பித்தரும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு 6-வது உதவி பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வருகிற 29-ந்தேதி வரை ‘அப்பாவின் மீசை' படத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

 

புலி டீசர்.. ஒரே நாளில் ஒரு மில்லியனைத் தாண்டியது!

விஜய் நடித்த புலி படத்தின் முதல் டீசர் எனும் சிறுபட முன்னோட்டக் காட்சியை 1 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

விஜய் நடிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில், விரைவில் வெளிவரவிருக்கும் புதிய படம் ‘புலி'. ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, நான் ஈ சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

Puli teaser touches one million mark

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும், டீசரும் வெளியிடப்பட்டது.

நேற்று முந்தைய தினம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. நேற்று டீசர் வெளியானது. யுடியூப் இணையதளத்தில் வெளியிடப்பட்ட டீசரை ஒரே நாளில் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

படத்தின் ஆடியோ விரைவில் வெளியாக உள்ளது. விநாயகர் சதுர்த்தி அல்லது விஜயதசமிக்கு இந்தப் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

 

காக்கா முட்டை சிறுவர்கள் மற்றும் குடும்பத்தை தத்தெடுத்தது ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம்!

காக்கா முட்டை படத்தில் நடித்த விக்னேஷ், ரமேஷ் குடும்பத்தை அப்படத்தின் தயாரிப்பாளர்களான பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தத்தெடுத்துள்ளது.

நடிகர் தனுஷ், வெற்றிமாறனுடன் இணைந்து பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்து வெளியிட்ட, ‘காக்கா முட்டை' படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இன்னும் வசூல் குவிந்து வருகிறது.

Fox Star adopted the family of Kakka Muttai boys

எம்.மணிகண்டன் இயக்கிய இந்த படம் பல விருதுகளையும் அள்ளிக் குவித்தது. இந்த படத்தில் நடித்திருந்த சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து, இந்த சிறுவர்களின் கல்விக்கான செலவுகளை தனுஷ், வெற்றிமாறன் ஏற்றனர். இப்போது விக்னேஷ், ரமேஷ் குடும்பம் மற்றும் அவர்களின் எதிர்காலத்துக்கான அனைத்து செலவுகளையும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதனை பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

இதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் தனுஷ் கூறுகையில், ‘'விக்னேஷ், ரமேஷ் குடும்பம் மற்றும் அவர்களின் எதிர்காலத்துக்கு தேவையான உதவிகளை பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் ஏற்றுள்ளது. ‘காக்கா முட்டை' போன்ற தரமான படங்களை தொடர்ந்து தயாரிக்க எங்கள் நிறுவனம் முயற்சிக்கும்," என்றார்.

 

முதல் முறையாக பெண் வேஷம் போடும் சிவகார்த்திகேயன்!

ஹீரோக்கள், காமெடியன்கள் வளர வளர.. ஒரு முக்கியமான கெட்டப்பில் தோன்றுவார்கள். அது பெண் வேஷம்.

அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், வடிவேலு இப்படி பல நடிகர்கள் தங்களது படங்களில் ஒரு காட்சியிலாவது பெண் வேடத்தில் எட்டிப்பார்ப்பார்கள். அதுவும் வடிவேலு தனது லேட்டஸ்ட் ரிலீசான எலி வரை அதைத் தொடர்கிறார்.

இப்போது அந்த பாணியை நடிகர் சிவகார்த்திகேயனும் பின்பற்ற ஆரம்பித்துள்ளார். இதுவரை 9 படங்களில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், தனது பத்தாவது படத்தில் பெண் வேடத்தில் நடிக்கிறார்.

Sivakarthikeyan to appear in woman get-up in his next

இந்தப் படத்தை அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் இயக்கப் போகிறார்.

ஹாலிவுட்டிலிருந்து ஸ்பெஷல் மேக்கப்மேனாக சீன் புட் என்பவரை வரவழைத்து சிவகார்த்திகேயனுக்கு மேக்கப் போடப் போகிறார்களாம். 'லார்ட் ஆப் தி ரிங்ஸ்' போன்ற மெகா படங்களுக்கு மேக்கப் மேனாகப் பணியாற்றியவர் இந்த சீன் புட்.

படம் குறித்து ரஜினிமுருகன் ரிலீசுக்குப் பிறகு மீடியாவுக்கு தெரிவிக்கும் திட்டத்தில் உள்ளார்களாம்.

 

மனைவி, பிள்ளைகளுடன் மாமியார் வீட்டில் பிறந்த நாள் கொண்டாடிய விஜய்!

சமீப காலமாய் தனது ரசிகர்களுடன் பிறந்த நாளைக் கொண்டாடி, நலத்திட்ட உதவிகள் வழங்கி, பிரியாணி விருந்து அளித்து வந்த நடிகர் விஜய், இந்த ஆண்டு சென்னையிலேயே இல்லை.

குடும்பத்துடன் லண்டனுக்குப் பறந்துவிட்ட விஜய், அங்கு தன் மாமியார் வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் பிறந்த நாளைக் கொண்டாடினார்.

புலி படப்பிடிப்பை முடித்த கையோடு லண்டனுக்கு குடும்பத்துடன் பறந்த விஜய், சுற்றுலாவை முடித்துக் கொண்டு இன்று பிறந்த நாளைக் கொண்டாடினார்.

Vijay celebrates his birthday at London

விஜய் இங்கே இல்லாவிட்டாலும் அவரது ரசிகர்கள் தமிழகமெங்கும் பிறந்த நாள் கொண்டாட்டங்களை நடத்தினர்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் உள்ள சினிமா நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

#HBDDearVijay ஹெஷ்டேக் ட்விட்டரில் 25 லட்சத்தைத் தொட தீயாய் வேலை செய்யும் விஜய் ரசிகர்கள்!

சென்னை: விஜய் இன்று தனது 41 வது பிறந்த நாளை லண்டனில் குடும்பத்துடன் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார். ஆனால் இங்கு அவரது ரசிகர்கள் தொடர்ந்து பல விதமான ஹெஷ்டேக்குகளை உருவாக்கி தொடர்ந்து இந்திய அளவில் டிவிட்டரில் விஜயை முதலிடத்தில் வைத்திருக்கின்றனர்.

இரு தினங்களுக்கு முன்னர் விஜய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது அதற்கு #PuliFirstLook என்னும் ஹெஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் டிவிட்டரில் முதலிடத்தைப் பிடிக்க வைத்தனர் விஜய் ரசிகர்கள்.

Vijay Birth Day Special – Twitter

நேற்று மதியம் புலி படத்தின் டீசர் வெளியானது இதற்கும் #PuliTeaser மற்றும் #PuliHasArrived என்னும் இரண்டு விதமான ஹெஷ்டேக்குகளை உருவாக்கி நேற்றும் தொடர்ந்து இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டில் விஜயை இடம்பிடிக்க வைத்தனர்.

இன்று அவரது பிறந்த நாள். சும்மா இருப்பார்களா ரசிகர்கள்... காலையில் இருந்து #HBDDearVIJAY என்னும் ஹெஷ்டேக்கை உருவாக்கி தீயாய் வேலை செய்து வருகின்றனர்.இந்த ஹெஷ்டேக்கில் இதுவரை 1,75,000 லட்சம் ட்வீட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

விஜயின் விதவிதமான ஹெஷ்டேக்குகளால் நிரம்பி வழிகின்றன ட்விட்டர் பக்கங்கள்.

இந்திய அளவில் மட்டும் விஜய் ட்ரெண்டில் இருப்பது அவரது ரசிகர்களுக்கு கவலையை அளித்ததால், உலக அளவில் விஜயை ட்ரெண்டில் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து, தற்போது 25 லட்சம் ட்வீட்டுகளை பதிவு செய்ய முடிவு செய்து தொடர்ந்து ட்விட்டரில் வாழ்த்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

 

தென்பாண்டி தேசத்து சிங்கக் குட்டி ஆன 'சிம்பா' பரத்

சென்னை: பரத் நடித்து வரும் புதிய படத்தின் பெயர் சிம்பா. சிம்பா என்றால் சிங்கக் குட்டி என்று அர்த்தமாம்.

பாய்ஸ் படம் மூலம் கோலிவுட் வந்தவர் பரத். அவருக்கு காதல் படம் திருப்புமுனையாக அமைந்தது. அவர் நடித்த எம் மகன் படம் பலரையும் கவர்ந்தது. பரத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக படங்கள் சரியாக ஓடவில்லை. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி ஆகும்.

Bharath becomes Simba for debutant director

இந்நிலையில் பரத் புதுமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு சிம்பா என்று பெயர் வைத்துள்ளனர். படத்தில் பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். முக்கியமான கதாபாத்திரம் என்றால் சும்மா இல்லை பரத்துக்கு இணையான கதாபாத்திரமாம்.

வழக்கமாக அவரது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் முக்கியமான கதாபாத்திரங்களில் பிரேம்ஜி நடிப்பார். இந்நிலையில் பரத் படத்தில் வெயிட்டான கதாபாத்திரத்தில் வருகிறார்.

அது என்ன படத்தின் பெயர் சிம்பா என்று கேட்டால், சிங்கக் குட்டி என்று பதில் அளித்துள்ளனர். லயன் கிங் ஹாலிவுட் படத்தில் வரும் சிங்க ராஜாவின் பெயர் சிம்பா என்பது குறிப்பிடத்தக்கது.

 

தன் பெயரில் இணையதளம் தொடங்கினார் சந்தானம்!

ஹீரோவாக தொடர்ந்து வெற்றியை ருசித்துவிட்ட காமெடியன் சந்தானம், அடுத்து தன் பெயரில் புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

www.actorsanthanam.com என்ற அந்த இணையதளத்தில் சந்தானம் மற்றும் அவரது படங்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

Santhanam launches own website

தமிழின் முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் பெயரில் சொந்தமாக இணையதளம் தொடங்கி, அதில் தங்கள் படங்கள் பற்றிய செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டு வந்தனர். பின்னர் சமூக வலைத் தளங்கள் வந்த பிறகு எல்லாருமே சொந்த இணையதளங்களை மூடிவிட்டனர். எல்லோருமே ட்விட்டர் அல்லது பேஸ்புக்கில் பக்கம் தொடங்கி பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நேரத்தில்தான் புதிய இணையதளத்தைத் தொடங்கியுள்ளார் சந்தானம்

இந்த இணையதளத்தில், சந்தானம் நடிக்கும் படங்கள், வெளிவந்த படங்கள், சந்தானம் படத்தை பற்றிய செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் பதிவேற்றி வைத்துள்ளார்.

 

ஆமீர்கானின் பிகே சாதனையைத் தகர்த்தது விஜய்யின் புலி!

ஆமீர்கானின் பிகே சாதனையை ஒரு விஷயத்தில் தகர்த்துள்ளது விஜய்யின் புலி.

பிகேவின் முதல் தோற்றப் போஸ்டர்கள் வெளியானபோது அதைப் பதிவிறக்குவதில் ஏக ஆர்வம் காட்டினர் ரசிகர்கள். இப்போது அதைவிட அதிகமானோர் புலியின் முதல் தோற்றப் போஸ்டரை பதிவிறக்கம் செய்துள்ளனர். இணையத்தில் அதிகம்பேரால் டவுன்லோடு செய்யப்பட்ட போஸ்டராக புலி போஸ்டர் மாறியுள்ளது.

Vijay's Puli beats Aamir's PK

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், சுதீப், தம்பி ராமையா, உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘புலி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்றைய முன் தினமும், டீஸர் நேற்றும் வெளியாகி இணையத்தில் டிரெண்டை உருவாக்கி வருகிறது.

டீஸரை மட்டும் இதுவரை 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். விஜய் படங்களில் வேறு எந்தப் பட டீசரையும் இத்தனை பேர் பார்த்ததில்லை.

 

விழித்திரு – 7 இசையமைப்பாளர்களைப் பாடவைத்த அறிமுக இசையமைப்பாளர்

சென்னை: விழித்திரு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாடகர் சத்தியன் மகாலிங்கம் இசையில் ஏழு இசையமைப்பாளர்கள் இந்தப் படத்தின் பாடல்களைப் பாடியுள்ளனராம்.

விழித்திரு படத்தின் இசை மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று தேவி திரையரங்கில் நடைபெற்றது. அவள் பெயர் தமிழரசி படத்தைத் தொடர்ந்து நீண்ட வருடங்கள் கழித்து விழித்திரு படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மீரா கதிரவன்.

VIZHITHIRU AUDIO LAUNCH

அதுமட்டுமின்றி தனது நண்பர்களுடன் இணைந்து படத்தையும் மெயின் ஸ்ட்ரீம் சினிமா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார் இயக்குநர் மீரா கதிரவன்.

கலைப்புலி தாணு, ரவிமரியா, பேரரசு,டி.ராஜேந்தர், ஆர்.வி.உதயகுமார், தம்பி ராமையா, விக்ரம் சுகுமாரன், கண்ணன், எஸ்.பி.ஜனநாதன், சீனு ராமசாமி, வெங்கட் பிரபு, லட்சுமணன் போன்ற இயக்குநர்கள் பாடல்களை வெளியிடும் நிகழ்விற்கு முன்பு மேடையில் விழித்திரு படத்தைப் பற்றிய தங்கள் கருத்துக்களை கூறினர்.

இவர்களைத் தவிர மேலும் பல இயக்குநர்களும் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

விதார்த் மற்றும் கிருஷ்ணா இரண்டு நாயகர்களுடன் இணைந்து நடிகைகள் தன்ஷிகா, அபிநயா நடித்துள்ள இந்தப் படம் ஒரே இரவில் நடப்பது போன்ற கதையாம்.

 

அச்சச்சோ ஆலியா ”பட்டு”க்கு தோள்பட்டையில் அடியாமே!!!

மும்பை: பாலிவுட் நடிகையான ஆலியா பட்டிற்கு அவரது இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாம்.

22 வயதான ஆலியா பட் "ஸ்டூடண்ட் ஆப் தி இயர்", "2 ஸ்டேட்ஸ்" ஆகிய படங்களில் நடித்த பாலிவுட் ஸ்டார். தற்போது "கபூர் அண்ட் சன்ஸ்" என்ற படத்தில் தமிழ்நாட்டின் குன்னூரில் படப்பிடிப்பில் உள்ளார்.

Alia Bhatt injures shoulder

இப்படப்பிடிப்பின் போதுதான் அவருக்கு அடிபட்டுள்ளது. எனினும், தான் நலமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். "எல்லோருடைய ஆறுதலுக்கும் நன்றி...சின்ன காயம்தான்...நான் நன்றாக இருக்கின்றேன்... 2 வாரத்தில் சரியாகிவிடுவேன்..." என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

ஆலியாவின் அம்மா சோனி ராஸ்டனும் தன்னுடைய பிளாக்கில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். "ஆலியாவின் உடல் நிலை குறித்து விசாரித்த அனைவருக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

"ஹம்ப்டி சர்மா கி துல்கானியா" படத்தில் வருண் தவானுடன் சமீபத்தில் நடித்திருந்த ஆலியா, அடுத்ததாக வெளியாக இருக்கும் "சந்தர்" படத்திலும் நடித்துள்ளார்.

 

நல்ல கதையோட வாங்க... காத்திருக்கும் நடிகை

சினிமாவில் பிரபலமாக இருந்த போதே உதவி இயக்குநரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர் முருகனின் முதல் மனைவியின் பெயரைக் கொண்ட நடிகை. இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர் சீரியல் பக்கம் ஒதுங்கினார்.

சூர்ய டிவி பக்கம் வந்தவரை இல்லத்தரசிகள் வரவேற்று ஏற்றுக்கொண்டனர். அபி அபி என்று கொண்டாடினர். எத்தனையோ சீரியல்களில் நடித்தாலும் முதல் சீரியல்தான் அவரின் மனம் கவர்ந்த சீரியலாம்.

Heroine is waiting for good storyline

என்ன காரணமோ சூர்ய டிவியில் இரட்டை வேடத்தில் நடித்த சீரியலில் இருந்து திடீரென்று வெளியேறினார். கணவரை ஹீரோவாகப் போட்டு நடித்த படம் பிளாப் ஆனதில் வருத்தமடைந்த அவர், பி.ஏ., படிக்கிறார், டீச்சராகிவிட்டார் என்றெல்லாம் செய்தி வெளியானது. ஆனாலும் கேப்டனின் மகன் படத்தில் சில காட்சிகளில் தலைகாட்டினார். தற்போது சீரியலில் நடிக்க ஆர்வத்தோடு இருக்கிறாராம். ஆனாலும் கதை சொல்ல வருபவர்கள் எல்லாம் பழைய கதையோடுதான் வருகிறார்களாம்.

ஆனால் நல்ல கதையோட வாங்க நடிக்கிறேன் என்று திருப்பி அனுப்பும் தேவ நடிகை, அதுவரை விளம்பரங்களிலும், கிடைக்கும் படங்களிலும் தலை காட்டுவோம் என்று முடிவு செய்துள்ளாராம்.

 

புலி விஜயின் 41 வது பிறந்தநாள் இன்று...

சென்னை: இளையதளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜயின் 41வது பிறந்தநாள் இன்று. தமிழ்த் திரை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பின்னணிப்பாடகி ஷோபா இருவருக்கும் 1974 ம் ஆண்டு ஜூன் மாதம் 22 ம் தேதி மகனாகப் பிறந்தவர்.

நடிகர், பின்னணிப்பாடகர், தயாரிப்பாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர் நடிகர் விஜய். முழுப்பெயர் ஜோசப் விஜய் சந்திரசேகர், படித்தது லயோலா கல்லூரியில்.

Vijay Turns 41

1999 ம் ஆண்டு தனது 25 வது வயதில் லண்டனைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணை மணம் முடித்த விஜய்க்கு சஞ்சய், திவ்யா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

இன்று தன்னுடைய 41 வது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டு இருக்கும் நடிகர் விஜய் பற்றிய சில சுவையான தகவல்களை இங்கு பார்க்கலாம்.

1.விஜயின் அப்பா சந்திரசேகர் விஜயகாந்தை வைத்து இயக்கிய வெற்றி, நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்க பூமி போன்ற படங்களில் சின்ன வயது விஜயகாந்தாக நடித்திருப்பார்.

2.ஹீரோவாக அறிமுகமான முதல் படம் நாளைய தீர்ப்பு. முதல் படநாயகி கீர்த்தனா, ஆண்டு 1992.ஆரம்ப காலத்தில் ஹீரோவாக நடித்த சில படங்கள் ஓடவில்லை. பின்பு நடிகர் விஜயகாந்துடன் இணைந்து நடித்த செந்தூரப் பாண்டி படம்தான் விஜயை ஒரு நடிகராக மக்களிடம் கொண்டு சேர்த்தது.

3.விஜய் சிறுவயதில் மிகவும் கலகலப்பாக இருப்பாராம். தங்கை வித்யா சிறுவயதில் இறந்துவிட அதனைத் தாங்க முடியாமல் அன்றிலிருந்து இப்படி அமைதியாக இருக்கத் தொடங்கி விட்டாராம்.

4. விஜயின் நடனம் இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கப் படுகிறது. இதற்குக் காரணம் ஒரு நடன இயக்குனர் தானாம். சிறு வயதில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும்பொழுது ஒழுங்காக ஆடாததால் அவர் திட்டிவிட, அந்தத் திட்டை ஒரு வைராக்கியமாக எடுத்துக் கொண்டு பல நாட்கள் வெறித்தனமாக வீட்டில் ஆடி நடனம் கற்றுக் கொண்டாராம்.

5.சாப்பிடும்போது ஒரு முறை தட்டில் சாப்பாடை எடுத்துக் கொண்டால் அதை மட்டும் சாப்பிட்டு விட்டு எழுந்து போய்விடுவாராம்,மீண்டும் எடுத்துப் போட்டு சாப்பிட மாட்டாராம்.

6. விஜயுடன் அதிகமாக ஜோடி சேர்ந்து நடித்த நடிகை சங்கவிதான். இருவரும் இணைந்து நடித்த ரசிகன் படம் 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடியது, விஜயின் முதல் வெள்ளிவிழா படமும் அதுதான்.

7. த்ரிஷா, சிம்ரன், ஜோதிகா சங்கவிக்கு அப்புறம் விஜயுடன் அதிகமாக இணைந்து நடித்த நடிகைகள் இம்மூவரும் தான்.

8. உடைகளில் பிடித்தது எளிமையான உடைகள் மட்டுமே, விரும்பி அணிவது வெள்ளை சட்டை.

9. கலரில் மிகவும் பிடித்தது கருப்பு, வீட்டில் இருக்கும் எல்லா கார்களுமே கருப்புதான்.

10. ரசிகனுக்குப் பிறகு விஜய் நடித்த படங்களில் அதிகம் ஓடியது கில்லி, அதிகம் வசூலித்து சாதனை செய்த படம் துப்பாக்கி.

11.செண்டிமெண்ட் ஹீரோவாக மாறியது காதலுக்கு மரியாதை படத்திற்குப் பின்பு தான்.

12.இதுவரை மொத்தம் 14 ரீமேக் படங்களில் நடித்திருக்கிறார் விஜய். காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், பிரியமானவளே, பிரண்ட்ஸ், பத்ரி,யூத், வசீகரா, கில்லி,ஆதி, போக்கிரி,வில்லு, காவலன், வேலாயுதம் மற்றும் நண்பன்.

13.இதுவரை இரண்டு படங்களில் போலீசாக நடித்திருக்கிறார். போக்கிரி, ஜில்லா.

14. இரண்டு படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் அழகிய தமிழ்மகன், கத்தி.

15.சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் ஆசையில் அப்பாவிடம் முதலில் பேசிக் காட்டியது அண்ணாமலை படத்தின் வசனங்களைத் தான்.

16.இதுவரை நான்கு படங்களில் சக நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். நேருக்கு நேர், பிரண்ட்ஸ் படத்தில் சூர்யா, நண்பன் படத்தில் ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த், ஜில்லா படத்தில் நடிகர் மோகன்லால்.

17.பிறமொழிப் படங்களில் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

18.பிரபுதேவாவின் வேண்டுகோளுக்காக இந்தி நடிகர் அக்சய் குமாருடன் இணைந்து ரவுடி ரத்தோர் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியிருக்கிறார்.

19.இதுவரை தமிழில் 22 இயக்குனர்களை அறிமுகபடுத்திய பெருமை விஜயை சாரும்.

20.விஜய் படங்களுக்கு அவரின் காஸ்ட்யூம் டிசைனர் மனைவி சங்கீதா தான், இதற்காக சம்பளம் எதுவும் வாங்குவது இல்லையாம் சங்கீதா.

21.முதன்முதலில் ரசிகன் படத்தில் தேவாவின் இசையில் "பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி" பாடலைப் பாடினார். இதுவரை சினிமாவில் 30 க்கும் அதிகமான பாடல்களைப் பாடி இருக்கிறார் அத்தனையும் ஹிட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

22.முதன்முதலில் விஜயைப் பாடவைத்த இசையமைப்பாளர் தேவா, தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் விஜய் 56 படத்தில் ஜி.வி.பிரகாஷின் இசையில் ஒரு பாடலைப் பாடி இருக்கிறார்.

23.இந்தியில் இன்று கொடிகட்டிப் பறக்கும் பிரியங்கா சோப்ராவின் முதல் ஹீரோ விஜய் தான் படம் தமிழன்.

24.5 முன்னணி பாலிவுட் ஹீரோயின்களுடன் இதுவரை டூயட் பாடி இருக்கிறார் விஜய் பிரியங்கா சோப்ரா, இலியானா, அமீஷா படேல், ஹாசல் ஹரோவ்னி மற்றும் பிபாசா பாசு ஆகியோர்தான் அந்த ஐவர்.

25.பாடல்களில் பிடித்தது இளையராஜாவின் பாடல்கள், காமெடி நடிகர்களில் பிடித்தவர் நடிகர் கவுண்டமணி.

26.இதுவரை மொத்தம் 60 படங்களில் நடித்திருக்கிறார்.(அட்லீ படத்தையும் சேர்த்து).

27.தனது படங்கள் இல்லாமல் பிற நடிகர்களின் படத்திற்காக பின்னணி பாடியிருக்கிறார். அந்த இரு படங்கள் சூர்யாவின் பெரியண்ணா மற்றும் விக்னேஷின் வேலை.

28.விஜயுடன் அதிக படங்களில் சேர்ந்து நடித்த காமெடி நடிகர் சார்லி.

29.இப்போது எந்த பேட்டிகளும் அதிகம் கொடுக்காத விஜய், குங்குமத்தில் ஒரு 12 வருடங்களுக்கு முன்பு தனது முழுவாழ்க்கையையும் தொடராக எழுதி இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர் அது, சற்று சரிந்திருந்த குங்குமத்தை மேலே கொண்டுவர விஜயின் பேட்டி பெரிதும் உதவியது.

30. தனது ரசிகர் மன்றத்தை மக்கள் நற்பணி மன்றமாக 2009 ம் ஆண்டில் இருந்து மாற்றி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தனது ரசிகர்கள் மூலமாக செய்து வருகிறார்.

31. வருடாவருடம் சுமார் 5 லட்சம் மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்களை வழங்கி வருகிறார். சில மாணவர்களை தத்தெடுத்து அவர்களின் கல்விசெலவை தனது சொந்தப் பணத்தில் செய்து வருகிறார் விஜய்.

32. இதுவரை இரண்டு படங்களில் வக்கீலாக நடித்திருக்கிறார், சுக்ரன் மற்றும் தமிழன்.

33. ஷாஜகான், லவ் டுடே மற்றும் பூவே உனக்காக இந்த மூன்று படங்களிலும் நாயகியுடன் கடைசியில் சேர முடியாதவராக நடித்திருப்பார்.

34. பிரியமுடன் இந்த ஒரே படத்தில் மட்டும் கடைசியில் இறந்து போகிறவராக நடித்திருப்பார் விஜய்.

35. பிரியமுடன் மற்றும் அழகிய தமிழ்மகன் இந்த இரண்டு படங்களிலும் ஆண்டி ஹீரோவாக நடித்திருக்கிறார்.

36. இந்தி நடிகர் அமிதாப்பை மிகவும் பிடிக்கும், அவரின் படங்கள் வெளிவந்தவுடனேயே பார்த்து விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

37. அம்மா ஷோபாவுடன் இணைந்து ஜாஸ் ஆலுக்காஸ் விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.

38. இதுவரை நடித்த படங்களுக்காக மொத்தம் 25 விருதுகளை வாங்கி இருக்கிறார்.

39. எங்கு இருந்தாலும் பிறந்தநாள் அன்று அம்மா அப்பாவை சந்தித்து அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

40. ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடையின் விளம்பரத் தூதுவராக இருந்தாலும் கூட தங்கத்தில் நகைகள் அணியும் வழக்கம் கிடையாது விஜயிடம்.

41. நடித்த முதல் படமான வெற்றியில் விஜயின் சம்பளம் 500, தற்பொழுது 15 கோடிகளுக்கும் அதிகமாக வான்குவதகக் கேள்வி.

 

விஜய்யின் பிறந்த நாள் ஸ்பெஷல்: புதிய க்ளீன் இந்தியா வீடியோ கேம்

நடிகர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி அவர்களது ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் 'க்ளீன் இந்தியா' எனப்படும் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வுை ஏற்படுத்தும் வகையிலும் ஒரு வீடியோ கேம் உருவாக்கப்பட்டுள்ளது.

வழக்கமான கேம்களில் அடிப்பது, குத்துவது, மோதுவது, துரத்துவது, சுடுவதுபோல இதில் குப்பையை அகற்றுவதுதான் செயல்படாக இருக்கும். விஜய்தான் இப்படி சுத்தம் செய்யும் ஹீரோ. இந்த விளையாட்டை வடிவமைத்துள்ளவர்கள் ஸ்கை டவ் சொல்யூஷன் நிறுவனம்.

‘Clean India Game’ :  Vijay's Birthday Treat

இவர்கள் வடிவமைத்து அண்மையில் வெளியான 'கபார் இஸ் பேக்' கேமை ஸ்ருதிஹாசன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன் 'கத்தி' கேமை உருவாக்கியதும் இவர்கள்தான். பாலிவுட் படங்களின் கேமில் பங்கெடுத்த பலரும் இதில் பணியாற்றியுள்ளனர்.

ஸ்கை டவ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ சிவா இதுபற்றி பேசும்போது, "இது விஜய் ரசிகர்களுக்கும் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமில் ஐந்து நிலைகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் ஈ.ஸி, மீடியம், ஹார்டு என்று அதாவது சுலபம், இடைப்பட்டது, கடினம் என்று மூன்று வகை வேகத்தில் விளையாட்டுகள் இருக்கும். விருப்பப் பட்டதைத் தேர்வு செய்து விளையாடலாம்.

மேலும் இந்த தூய்மை பணி சென்னையில் தொடங்கி கொச்சி, மும்பை, டில்லி, கொல்கத்தா என்று ஐந்து மெட்ரோ நகரங்களில் நடக்கிற மாதிரி இருக்கும். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதத்திலும் குப்பைகளை அகற்ற வேண்டும். உதாரணத்துக்கு கொச்சியில் ஆற்றில் உள்ள குப்பைகளை கொக்கி போட்டு அகற்ற வேண்டும். மும்பையில் சாலையிலுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். கொல்கத்தாவில் மேலிருந்து வந்து விழும் குப்பைகளை அகற்ற வேண்டும். இப்படி வெவ்வேறாக வடிவமைக்கப்பட்டுள்ளது," என்றார்.

இந்த கேமிற்கு நல்ல நோக்கம் உள்ளது என்பதால் விஜய் அனுமதி கொடுத்துள்ளார். கேமை பார்த்த விஜய் ரசித்ததுடன் பாராட்டி தன் மகிழ்ச்சியையும் தெரிவித்து இருக்கிறார். பாலிவுட்டில் பெரிய கதாநாயகர்களின் ஒவ்வொரு படத்திற்கும் கேம்கள் வருகின்றன. ஷாருக்கான், அமீர்கான், ஹிருத்திக் ரோஷன் போன்ற நடிகர்கள் கேம் வடிவமைக்க ஆர்வம் காட்டுபவர்கள். அவர்களின். 'டான்', 'க்ரீஷ்' 'ஹாப்பி நியூ இயர்' 'பி.கே' போன்ற கேம்கள் பெரிய வெற்றி பெற்றவை.

தமிழில் 'கோச்சடையான்,' 'கத்தி', 'அஞ்சான்' போன்று சிலவே வந்துள்ளன. பொதுவாக கேம் ஒரு கெட்ட பழக்கம் என்றும் விலகிவிட முடியாதபடி ஈர்க்கும் சக்தி என்று விமர்சிப்பவர்கள் கூட இதை வரவேற்பார்கள். ஏனென்றால் குப்பைகளை அகற்றுவதும், தூய்மையாக இரு என்பதும் தவறல்ல. தூய்மையாக இரு என்றுதான் இது வலியுறுத்தி அடிமைப்படுத்தும்.

நல்ல பழக்கத்துக்கு அடிமையாகலாம் தவறில்லைதானே? அதை யாரும் குறை சொல்லமாட்டார்கள் அல்லவா? என்கிறார்கள் வடிவமைத்தவர்கள்.

இந்த கேமை ஆன்ட்ராய்டில் பெற.

 

விஜயகாந்த் மாதிரி அரசியல்வாதி சரத்குமாரும் பதவி விலகட்டும்! - விஷால்

திருச்சி: அரசியலில் உள்ளவர்கள் நடிகர் சங்க பதவியில் இருக்கக்கூடாது என்ற மரபை மதித்து விஜயகாந்த் செய்ததைப் போல, சரத்குமாரும், ராதாரவியும்தான் பதவி விலக வேண்டும் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

திருச்சி மாவட்ட நடிகர் விஷால் நற்பணி மன்றம் சார்பில் 10 ஏழை ஜோடிகளுக்கு 51 சீர்வரிசை பொருட்கள் கொடுத்து திருமணம் நடத்தி வைக்கும் விழா திருச்சியில் இன்று நடந்தது.

Sarathkumar should resign from Nadigar Sangam like Vijayakanth - Vishal

இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டு, திருமணத்தை நடத்தி வைத்து, இலவச சீர்வரிசையையும் வழங்கி, பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''எனது ரசிகர்களை, எனது நண்பர்களாகவே நான் கருதுகிறேன். இலவச திருமணங்கள் நடத்தி வைப்பது எளிதல்ல. எனவே, உதவிகள் செய்து திருமணத்தை நடத்தி வைப்பதோடு நின்று விடக்கூடாது. அந்த ஜோடிகள் தொடர்ந்து எப்படி வாழ்கிறார்கள் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். எனவே, புதுமாப்பிள்ளைகள் எனது 10 தங்கைகளையும் கண் கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் எனது மன்றம் செயல்படுகிறது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக கல்வி, திருமணம் போன்றவற்றுக்கான உதவிகள் செய்து வருகிறோம். இதை ஏன் இப்போது விளம்பரப்படுத்துகிறீர்கள் என சிலர் கேட்கலாம். இதை பார்த்து மற்றவர்களும் பிறருக்கு உதவ வேண்டும் என்றுதான் வெளிப்படுத்தி வருகிறோம்.

மதுரையில் உள்ள நாடக நடிகர்களுக்கு, நாங்கள் பதவிக்கு வருவதற்கு முன்பே கட்டடம் கட்டித் தருவோம் என நாசர், கார்த்தி, கருணாஸ், நான் ஆகியோர் கூறினோம். அதன்படியே பூஜையும் நடத்தப்பட்டு விட்டது.

அதேபோல், நடிகர் சங்கத்துக்கும் இப்போதுள்ளவர்கள் கட்டடம் கட்ட மாட்டார்கள். நாங்கள் பதவிக்கு வந்ததும் நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டுவோம். கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெறுவோம். இந்த போட்டியில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்.

சினிமாத்தான் எனக்கு சோறு போட்ட தெய்வம். எனவே, திருட்டு வி.சி.டி. உள்ளிட்ட சினிமாத்துறை பிரச்னைகள் எதுவானாலும், தவறை தட்டிக் கேட்பதில் முதல் ஆளாக இருப்பேன்.

அரசியலில் இருப்பவர்கள் நடிகர் சங்க பதவியில் இருக்கக்கூடாது என்ற மரபை மதித்து விஜயகாந்த் பதவி விலகினார். அதைப் போன்று சரத்குமாரும், ராதாரவியும் அவர்களாக தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும்,'' என்றார்.

 

அமெரிக்கப் பெண் பாலியல் பலாத்காரம்: பீப்லி லைவ் படத்தின் இணை இயக்குநர் மஹ்மூத் கைது

டெல்லி: அமெரிக்கப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கைது செய்யப்பட்டு இருக்கிறார், பீப்லி லைவ் இந்திப் படத்தின் இணை இயக்குநர் மஹ்மூத் பாரூக்கி. 2010 ம் ஆண்டில் இந்தி நடிகர் அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த இந்திப் படம் பீப்லி லைவ்.

விவசாயிகளின் தற்கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், இணை இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியவர் மஹ்மூத்.இவர் தான் தற்போது அமெரிக்கப் பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் இருந்து 35 வயதான பெண் ஒருவர் தனது உயர்கல்வி சம்பந்தமான ஆராய்ச்சி விஷயமாக இந்தியா வந்திருக்கிறார்.

Peepli Live’ co-director, Mahmood Farooqui Arrested By The Delhi Police

டெல்லியில் ஆராய்ச்சியின் போது இயக்குநர் மஹ்மூத் உதவி செய்ய, பின்பு குடும்ப நண்பர்களாக இருவரும் பழகி வந்துள்ளனர். இது மஹ்மூத்தின் மனைவியும், திரைப்படத் தயாரிப்பாளருமான அனுஷ்கா ரிஸ்விக்கும் தெரியும்.

இந்நிலையில் டெல்லி காவல் நிலையத்தில் மஹ்மூத் கடந்த மார்ச் மாதம் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, புகார் கொடுத்திருக்கிறார் அந்த அமெரிக்கப் பெண். இந்திய தண்டனைச் சட்டம் 164 ன் கீழ் வழக்கைப் பதிவு செய்தது டெல்லி காவல் துறை. புகாரின் பேரில் கடந்த வெள்ளிகிழமையன்று இந்திய தண்டனைச் சட்டம் 376ன் கீழ் மஹ்மூத் மீது எப்ஐஆர் பதிவு செய்த டெல்லி போலீசார் நேற்று அவரைக் கைது செய்திருக்கின்றனர்.

வழக்கை விசாரித்த டெல்லி நீதிபதிகள் மஹ்மூத்தை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கில் உச்சகட்ட காமெடி என்னவெனில் " என் கணவர் மிகவும் நல்லவர், அவரை மாதிரி நல்லவர் ஒருவரை இந்த உலகத்தில் பார்க்க முடியாது உண்மைக்கு புறம்பாக அவரைக் கைது செய்துள்ளனர் கடைசியில் நீதி வெல்லும்" போன்ற வசனங்களை பத்திரிக்கையாளர்களிடம் தொடர்ந்து ஒப்பித்துக் கொண்டிருக்கும் மஹ்மூத்தின் மனைவி அனுஷ்கா ரிஸ்வி தான்.

 

அட கொடுமையே... சென்சாருக்கு அனுப்பிய படப் பிரதியிலிருந்து வெளியான திருட்டு விசிடி!

திருட்டு விசிடி எங்கிருந்து வருகிறது... ?

அ. பிராஸஸிங் லேபிலிருந்து

ஆ. தியேட்டரிலிருந்து..

இ. வெளிநாட்டுப் பிரதியிலிருந்து

-இவற்றில் எது சரியான விடை என்று கேட்டால், குத்துமதிப்பாக, மூன்றுமே சரியான விடைதான் என்று கூறிவிடுவார்கள் தமிழ் சினிமாவில்.

இந்த இந்த விடைகளில் புதிதாக ஒன்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அது, 'சென்சாருக்கு அனுப்பப்படும் பிரதியிலிருந்து!'

கேரளாவில் சமீபத்தில் ரிலீசாகியுள்ள ப்ரேமம் என்ற மலையாளப் படத்தின் திருட்டு விசிடி இப்படித்தான் வெளியாகியிருக்கிறது. இதுதான் இன்றைய பரபரப்புச் செய்தி.

Pirated copies of 'Premam' leaked from Censor Board?

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நவீன் பாலி நடித்துள்ள ப்ரேமம், மலையாளப் பட உலகில் இந்த ஆண்டின் மிகப் பெரிய ப்ளாக்பஸ்டர். இதுவரை ரூ 30 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு.

இந்த நிலையில் படத்தின் திருட்டு விசிடி வெளியாகிவிட்டது. ஒரிஜினல் சிடி மாதிரியே தரமாக தயாரித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். சிடியைப் போட்டுப் பார்த்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி... அதில் 'சென்சார் காப்பி' என்ற வாட்டர் மார்க் பளிச்சென்று தெரிகிறது.

அதாவது சென்சாருக்கு அனுப்பிய ஒரிஜினல் பிரதியிலிருந்து அப்படியே பதிவிறக்கு சிடியை தயாரித்துள்ளனர். இந்த திருட்டு வேலையைச் செய்தது யார்? சென்சார் குழு உறுப்பினர்களுக்கு இதில் ஏதும் பங்கிருக்குமா என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.

இதுகுறித்து சைபர் பிரிவிலும் சென்சாரிலும் புகார் தெரிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் அன்வர் ரஷீத்!