தமிழில் கலக்க 'வெப்பம்' பிந்து மாதவியின் சூளுரை!


தமிழில் ஒரு ரவுண்டு வர வேண்டும், எல்லோருடனும் நடித்து கலக்க வேண்டும் என்று படு சூடாக பேசுகிறார் பிந்துமாதவி.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த புது தேவதை இந்த பிந்து மாதவி. முதல் படமான வெப்பம் படத்தில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணாக இவர் நடித்திருந்தார். முதல் படத்திலேயே இப்படி முரட்டுத்தனமான ரோலா, எப்படி ஏத்துக்கிட்டீங்க என்று கேட்டால், எனக்கு அந்தப் படத்தில் முதல் காட்சியே ஒரு லவ் சீன்தான். அந்த கேரக்டரை நான் விரும்பி ஏற்றுத்தான் நடித்தேன்.

அந்தக் கேரக்டருக்காக நான் நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது. சேலையைக் கட்டுவது, மேனரிசம், பாடி லாங்குவேஜ் என நிறைய கற்று அதைச் செய்தேன்.

என்னுடைய தெலுங்குப் படங்களைப் பார்த்த இயக்குநர் அஞ்சனா, தனது படத்தில் நடிக்குமாறு என்னைக் கேட்டார். நான்தான் பொருத்தமாக இருப்பதாகவும் அவர் கூறினார். எனக்கு சந்தோஷமாக இருந்தது, உடனே ஒப்புக் கொண்டேன் என்கிறார் பிந்து.

தெலுங்கில் ஐந்து படங்களை முடித்து விட்டாராம் பிந்து. இப்போது தமிழ் பக்கம் அவரது ஆர்வம் திரும்பியுள்ளதாம். தமிழில் நல்ல வாய்ப்புகளும் வருவதால் தமிழிலேயே நிலை கொள்ளவும் தீர்மானித்துள்ளாராம்.

இப்போது கழுகு படத்தில் நடித்து வருகிறேன். பின்னர் நகுலுடன் இணைந்து நடிக்கிறேன். தொடர்ந்து படங்கள் வருகிறது. நல்ல கதையாக தேர்வு செய்து நடிக்கப் போகிறேன் என்கிறார் பிந்து.

ஹைதராபாத்தில் பிறந்த பிந்து மாதவி என்ஜீனியரிங் படித்தவர், அதுவும் நம்ம வேலூர் விஐடியில் படித்தவராம். நடிப்பு என்பது இவரது ஆரம்ப கால லட்சியமாக இருந்துள்ளது. இதனால் இதற்காக முயற்சித்து வந்துள்ளார். முதலில் விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். பின்னர் தெலுங்கில் வாய்ப்பு வரவே அங்கு நடிக்க கிளம்பினார். தமிழில் நடிக்க ஆர்வமாக இருந்தவருக்கு தெலுங்கில்தான் முதல் வாய்ப்பு வந்ததால் அங்கு தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது தமிழும் அவருக்கேற்ற தட்பவெப்பத்திற்கு மாறியுள்ளதால் தமிழையும் பிடித்துக் கொண்டுள்ளாராம்.

பிந்துமாதவிக்கு அஜீத் என்றால் உயிராம். அஜீத் படம் என்றால் மாய்ந்து மாய்ந்து பார்ப்பாராம். எனக்கு அஜீத் மீது தனி கிரேஸே உண்டு என்று வெட்கப் புன்னகை பூத்து கண்ணடிக்கிறார் பிந்து மாதவி. அதேபோல சூர்யாவையும் பிடிக்குமாம்.

பரவாயில்லையே பிழைக்கத் தெரிந்தவராகத்தான் இருக்கிறார் பி.மாதவி
 

சசிக்குமாருடன் மலையாளத்தில் இணையும் பியா


கோ படம் அந்த ஓட்டம் ஓடியும் அதில் நடித்த பியாவுக்கு மட்டும் இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை. தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் வராததால், அப்செட் ஆகாத பியாவுக்கு மலையாளத்தில் கதவு திறக்கவே அங்கு நடிக்கப் போயுள்ளார்.

கோவா, கோ என தொடர்ந்து கவனிக்கப்பட்ட படங்களில் நடித்து வந்தபோதும் கூட பியாவுக்கு தமிழில் வாய்ப்புகள் வருவது பெரும் அரிதாக மாறி விட்டது. கோ படம் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றும் கூட தமிழில் புதிய பட வாய்ப்புகள் பியாவுக்கு வரவில்லையாம். இதனால் அடுத்து என்ன செய்யலாம் என்று ஐஸ்கிரீம் சாப்பிட்டபடி யோசித்துக் கொண்டிருந்த பியாவுக்கு இப்போது மலையாளத்தில் ஒரு வாய்ப்பு வந்துள்ளது.

சுப்பிரமணியபுரம் பட இயக்குநர் சசிக்குமார், பி்ருத்விராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் மாஸ்டர்ஸ் படத்தில் நடிக்கும் அந்த வாய்ப்பு தன்னைத் தேடி வந்தபோது உற்சாகத்துடன்ஓ.கே சொல்லி விட்டாராம் பியா.

இந்தப் படத்தில் தனக்கு நல்ல கேரக்டர் என்று கூறியுள்ள பியா, தமிழில் நல்ல வாய்ப்புகள் வந்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் ஆறுதலாக கூறி வைத்தார்.

பியா நடிக்கலையேன்னு யாராவது கவலையில் இருக்கீங்களா...
 

என் கணவர் பல பெண்களை ஏமாற்றி கற்பழித்தவர்: தயாரிப்பாளர் மனைவி புகார்


தனது கணவன் பல பெண்களை ஏமாற்றி கற்பழித்துள்ளதாக திரைப்பட தயாரிப்பாளர் கோபாலின் மனைவி போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

திருச்சியைச் சேர்ந்தவர் கோபால். தகப்பன்சாமி, உச்சக்கட்டம் ஆகிய படங்களைத் தயாரித்தவர். அவரது மனைவி ராதிகா. அவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

இந்நிலையில் இன்று ராதிகா திருச்சி கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கமிஷனர் மாசானமுத்துவை சந்தித்து தனது கணவன் கோபால் மீது புகார் ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் தனது கணவன் பல பெண்களை ஏமாற்றி கற்பழித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு உச்சக்கட்டம் படபிடிப்பின்போதே கோபால் தினமும் குடித்துவிட்டு வந்து நடிகைகளை இம்சிக்கிறார் என்று கிடைத்த புகாரின்பேரில் இயக்குனர் சங்கம் அவரைக் கண்டித்தது என்பது குறிப்பிடத்தகக்து.
 

டி.ஆர்., சிம்பு மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்த திரைப்பட வினியோகஸ்தர்!


நடிகரும், இயக்குனருமான டி. ராஜேந்தர் மற்றும் அவரது மகன் நடிகர் சிலம்பரசன் மீது திரைப்பட வினியோகஸ்தர் எஸ். பி. ராமமூர்த்தி கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த திரைப்பட வினியோகஸ்தர் எஸ்.பி. ராமமூர்த்தி. அவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் நடிகர் டி. ராஜேந்தர் மற்றும் அவரது மகன் நடிகர் சிலம்பரசன் மீது கொலை மிரட்டல் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

1999-ம் ஆண்டு மோனிசா என் மோனலிசா சினிமாவுக்கு, ‘குறைந்த பட்ச உறுதி' அடிப்படையில், டி.ராஜேந்தர் எனக்கு ரூ. 31 லட்சம் பாக்கி வைத்துள்ளார். மீதிப்பணத்தை கேட்ட போது டி.ராஜேந்தர் தர மறுத்தார்.

இது தொடர்பாக கடந்த 2007-ம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்' படம், சிம்பு சினி ஆர்ட்ஸ் பெயரில் வெளியிட முயற்சி செய்யப்பட்டது.

கடன் பாக்கிக்காக அந்த படத்திற்கு, உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற முயற்சித்தேன். அப்போது ராஜேந்தர் பணத்தை தர ஒப்புக் கொண்டதால், அம்முயற்சியை கைவிட்டேன்.

அதன் பின் சிம்பு நடித்த படங்களான ‘விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் வானம்' ஆகியவற்றை சிம்பு சினி ஆர்ட்ஸ் பெயரில் வெளியிடாமல் மற்ற பேனரில் வெளியிட்டனர். ‘வானம்' படம் வெளியான போது ராஜேந்தரை அவரது வீட்டுக்கு சென்று பார்த்தேன்.

அப்போது அவரும் அவரது மகன் சிலம்பரசனும் என்னை மிரட்டி, விரட்டி அடித்தனர். மேலும், ‘ஆட்சியே எனக்கு சாதகமாக உள்ளது. மீடியாவும் என் கையில் உள்ளது. உன்னால் ஒன்றும் செய்ய முடியாது, உன்னை காலி செய்து விடுவேன் ஓடி விடு' என ராஜேந்தர் மிரட்டினார்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாலும், ஏற்கனவே தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாலும், கடந்த 3-ம் தேதி ராஜேந்தர் என்னை சமரசம் பேச, அவரது வீட்டுக்கு அழைத்ததன் பேரில் அவரை சந்திக்கச் சென்றேன்.

அப்போது அவரது மகன் சிலம்பரசன், என்னை கொன்று விடுவதாக மிரட்டி, விரட்டினார். மேலும், ‘கேஸ் தானே போட்ட, அங்கேயே போய் பணத்தை வாங்கிக் கொள்' என்றும் கூறினார்.

எந்த ஆட்சி வந்தாலும் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி எனது முகத்தில் அறைந்து வெளியே தள்ளினார்.

இவர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே பணத்தை மீட்டுத் தருவதுடன், எனக்கு பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
 

மாப்பிள்ளை பட வழக்கு: சக்சேனாவுக்கு ஜாமீன்!


மாப்பிள்ளை படத்தில் ரூ 3.37 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சன் பிக்சர்ஸ் ஹன்ஸ்ராஜ் சக்சேனாவுக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னையைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் நேமிச்சந்த் ஜபக். இவர் சினிமா தயாரிப்பாளராக உள்ளார். தனுஷ், ஹன்சிகா ஆகியோர் நடித்த மாப்பிள்ளை என்ற படத்தை அவர் தயாரித்தார்.

இந்த நிலையில் கோடம்பாக்கம் போலீசில் நேமிசந்த் புகார் கொடுத்தார். அதில், பட விநியோகம் தொடர்பாக தன்னிடம் இருந்து சக்சேனா 3 கோடியே 37 லட்சம் ரூபாயை மிரட்டி வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் சக்சேனாவை கோடம்பாக்கம் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் சக்சேனா மனு தாக்கல் செய்தார். அதை நீதிபதி பி.தேவதாஸ் தள்ளுபடி செய்தார்.

அதைத் தொடர்ந்து ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சக்சேனா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.ராஜசூர்யா விசாரித்தார். சக்சேனாவுக்கு ஜாமீன் அளித்து அவர் நீதிபதி உத்தரவிட்டார்.

சக்சேனா மீதான இரு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. அடுத்த இரு வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரு வழக்குகளில் புகார்தாரர் மனுவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். இப்போது ஏழாவது வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அவர் விடுதலை செய்யப்படவில்லை. ரஞ்சிதா - நித்யானந்தா வழக்கில் இப்போது அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
 

'ரா ரா' வில் குரல் கொடுத்த விவேக்!


உதயா நடிக்கும் ரா ரா படத்தில், அவரை அறிமுகப்படுத்தும் காட்சிக்கு குரல் கொடுத்து உதவியுள்ளார் நடிகர் விவேக்.

திருநெல்வேலி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் உதயா.

இவர் தற்போது தயாரித்து ஹீரோவாக நடித்து வரும் படம் ரா.ரா. இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக தயராகிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் சாண்டில்யா இயக்குகிறார்.

இப்படத்தில் அநேக பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் ஹீரோ உதயா அறிமுகமாகும் காட்சியில் காமெடி நடிகர் ஒருவர் பின்னணி குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய படக்குழுவினர் விவேக்கிடம் விஷயத்தை தெரிவித்தனர்.

இதற்கு உடனே ஒப்புக் கொண்ட விவேக், உதயா அறிமுகமாகும் காட்சிக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். இதற்காக நேற்று சென்னை கற்பகம் ஸ்டூடியோவில் டப்பிங் நடைபெற்றது.

டப்பிங் முடிவுற்ற நிலையில் விவேக் தனது குறிக்கோளான 'க்ரீன் கலாம்' திட்டத்தினை நிறைவேற்றும வகையில் கற்பகம் ஸ்டூடியோவில் சில மரக் கன்றுகளையும் நட்டார்.
 

என் அப்பா, அம்மாவுக்குப் பிறகு, நான் பார்த்த கடவுள் ரஜினி சார்! - அஜீத்


என் அப்பா அம்மாவுக்குப் பிறகு நான் பார்த்த கடவுள் ரஜினி சார்தான், என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத்.

தனது மங்காத்தா படம் வெளிவரும் இந்த தருணத்தில் தொடர்ந்து நாளிதழ்கள், வாரப் பத்திரிகைகளுக்கு பேட்டிகள் கொடுத்து வருகிறார் அஜீத்.

இந்த வாரம் ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியின் சில பகுதிகள்...

''பாலா, கௌதம் மேனன், விஷ்ணுவர்தன்னு தொடர்ந்து உங்களுக்கு இயக்குநர்களோட மோதல் இருந்துகிட்டே இருக்கே?''

''நான் எப்பவுமே டைமை நம்புறவன். டைம் சரியா இருந்தா, எல்லாமே சரியா நடக்கும். அந்த நேரத்துல சில காரணங்களால் எங்களால் சேர்ந்து வொர்க் பண்ண முடியலை. மற்றபடி எங்களுக்குள் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால்... நிச்சயம் நடிப்பேன்!''

''ஏன் ரசிகர் மன்றங்களைக் கலைத்தீர்கள்?''

''இதுதான் காரணம்னு சொல்ல முடியாது. அதை இப்போ போஸ்ட்மார்ட்டம் பண்ண விரும்பலை. நான்தான் பெரிசாப் படிக்கலை. ஆனால், என் ரசிகர்கள் நல்லாப் படிக்கணும்னு விரும்புறேன். படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும்!''

''ரஜினியும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள். உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் அவரிடம் பேசினீர்களா?''

''கடவுளை யாரும் நேரில் பார்த்தது இல்லை. ஆனால், என் அப்பா, அம்மாவுக்குப் பிறகு, நான் பார்த்த கடவுள் ரஜினி சார்தான். அவர்கிட்ட என்ன பேசினேன்னு வெளில சொல்றது நாகரிகமா இருக்காது. ரஜினி சார் எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்கிறதுதான் என் விருப்பம்!''

''ஆட்சி மாற்றம் பற்றி..?''

''என்னுடைய கடமை... ஓட்டுப் போடுவது. நான் அதை ஒழுங்காச் செய்து வருகிறேன். மக்களின் மனதுக்கு ஏற்ப ஆட்சி மாற்றங்கள் நடக்கிறது ரெகுலரான விஷயம்தானே? நான் ஒரு நடிகனா இருந்துட்டு, என்னு டைய சொந்த அரசியல் கருத்து களை வெளிப்படையாச் சொல்ல முடியாது. அப்புறம் என்னை 'இவங்க ஆள், அவங்க ஆள்’னு முத்திரைகுத்திடு வாங்க!''

-இவ்வாறு கூறியுள்ளார் அஜீத்.