தலைவா ரிலீஸ்?- திரையரங்க உரிமையாளர்கள் மீண்டும் அவசரக் கூட்டம்!

தலைவா ரிலீஸ்?- திரையரங்க உரிமையாளர்கள் மீண்டும் அவசரக் கூட்டம்!

சென்னை: தலைவா படத்தின் திருட்டு தமிழகம் முழுவதும் வெளியாகிவிட்ட நிலையில் படத்தை எப்படி வெளியிடுவது என்று திரையரங்க உரிமையாளர்கள் அவசரக் கூட்டம் நடத்தி விவாதித்தனர்.

இன்று காலை 11 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தியேட்டர் உரிமையாளர்கள் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசியவர்கள், திருட்டு டிவிடி வந்துவிட்டதால் எம்.ஜி (மினிமம் கியாரண்டி) முறைக்கு பதில் சதவீத அடிப்படையில் படத்தை திரையிடலாம் என்றனர். சுதந்திர தினத்தையொட்டி வருகிற 15 அல்லது 16-ந் தேதி படத்தை திரையிடலாமா என ஆலோசித்தனர். இன்று மாலை இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இதற்கிடையில் ‘தலைவா' படத்தின் திருட்டு டிவிடி க்கள் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தாராளமாகக் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. இன்டர்நெட்டிலும் இப்படம் வெளியாகியுள்ளது. இதைத் தடுக்க போலீசிடம் தொடர்ந்து புகார்கள் கொடுத்து வருகின்றனர் படக் குழுவினர்.

 

லண்டன் பட விழா... பாலாவின் பரதேசி 8 பிரிவுகளில் பரிந்துரை

சென்னை: லண்டனில் நடக்கும் சர்வதேச பட விழாவில் பாலா இயக்கிய பரதேசி படம் எட்டு பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

‘சேது' துவங்கி ‘பரதேசி' வரை ஆறு படங்களை இயக்கியுள்ள பாலா, ‘நான் கடவுள்' படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும், மற்ற படங்களுக்காக நான்கு தேசிய விருதுகளையும், ஆறு சர்வதேச தமிழ்த் திரைப்பட விருதுகளையும், பல மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

பி.எச். டேனியல் எழுதிய ‘ரெட் டீ' என்ற ஆங்கில நாவலை மொழிபெயர்த்து தமிழில் வெளிவந்த ‘எரியும் பனிக்காடு' என்ற நாவலை அடிப்படையாக கொண்டு ‘பரதேசி' படத்தை பாலா உருவாக்கினார்.

லண்டன் பட விழா... பாலாவின் பரதேசி 8 பிரிவுகளில் பரிந்துரை

கடந்த மார்ச் மாதம் உலகெங்கிலும் வெளியான பரதேசியின் சிறப்பைப் பார்த்து பிரமித்த இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் வடஇந்தியா முழுவதுமாக ‘பரதேசி'யை வெளியிட்டார்.

இந்நிலையில் ‘பரதேசி' படம் வருகிற அக்டோபர் மாதம் லண்டனில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் அதிகபட்சமாக எட்டு விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடும் இதே வேளையில் இதுவரையிலான தமிழ் சினிமாவின் வரலாற்றில் எட்டு சர்வதேச விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட ஒரே படம் ‘பரதேசி' என்பது குறிப்பிடத்தக்கது.

வாகாபாண்ட் (Vagabond) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது பரதேசி என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டன் பட விழா... பாலாவின் பரதேசி 8 பிரிவுகளில் பரிந்துரை

சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த வெளிநாட்டு இயக்குனர் ஆகிய நான்கு விருதுகளுக்காக இயக்குனர் பாலாவும், சிறந்த நடிகருக்காக அத்ர்வா, ஒளிப்பதிவாளருக்காக செழியன், இசையமைப்பாளருக்காக ஜீ.வி.பிரகாஷ் குமார், உடை வடிவமைப்புக்காக பூர்ணிமா ராமசாமி என மொத்தம் எட்டு விருதுகளுக்காக பரதேசி படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்பட விழாவில் அமெரிக்கா, ரஷ்யா, லெபனான், தென்கொரியா, சிலி, ஐரோப்பிய நாடுகளின் உலகப்படங்கள் போட்டியில் கலந்து கொண்டாலும் அதிகபட்சமான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே படம் ‘பரதேசி'தான். முதன்முறையாக சர்வதேச தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இணையாக தமிழ் திரைப்படக் கலைஞர்கள் உலக அளவில் போட்டியில் கலந்து கொள்ளும் இத்திரைப்பட விருதுகள் அக்டோபர் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளன.

 

ஏற்கனவே பிளாப், இதில் இன்னொன்னா...: கணவன், மனைவி இடையே மோதல்

சென்னை: மிஸ்ஸஸ் தாய்மொழி படத்தால் இயக்குனர்-ஹீரோ கணவருக்கும், நடிகை மனைவிக்கும் இடையே பிரச்சனையாம்.

பெரிய திரையில் கலக்கிவிட்டு சின்னத்திரையில் கலக்கும் புஸு புஸு கன்ன நடிகை அண்மையில் மிஸ்ஸஸ் தாய்மொழி படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அவருடைய கணவர் கிங்குமாரன் நடித்தார்.

படம் ஓடாததால் மனைவிக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இதில் படம் ரிலீஸாகி 2 நாட்கள் கூட ஓடாத நிலையில் சில தியேட்டர்களுக்கு பணம் கொடுத்து படப்பெட்டியை அங்கேயே 100 நாட்கள் வைத்துள்ளனர். இதில் வேறு பல லட்சம் ரூபாய் செலவாகிவிட்டாதம்.

பத்தாக்குறைக்கு 100வது நாள் விழா செலவு வேறு. படம் ஊத்திக் கொண்டாலும் வெற்றிகரமாக ஓடியது போல் பில்ட்அப் கொடுத்ததும் இல்லாமல் கிங்குமாரன் தற்போது அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டாரம். படத்தை துவங்க வேண்டும் ரூ.1 கோடி வேண்டும் என்று மனைவியை கேட்கிறாராம். ஒரு கோடியா ஒரு பைசா கூட கொடுக்க மாட்டேன் என்று நடிகை கறாராக தெரிவித்துவிட்டாராம்.

இதனால் தற்போது கணவன், மனைவி இடையே சரிவர பேச்சுவார்த்தை இல்லையாம்.

 

தலைவா வெளியாகாததால் ஆடிப்போயிருக்கிறோம்! முதல்வர் 'அம்மா' தலையிட வேண்டும்..: நடிகர் விஜய்

சென்னை: தலைவா திரைப்படம் ஓரிரு நாட்களில் வெளியாகிவிடும்.. அதுவரை ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அம்மா' தலைவா பட விவகாரத்தில் தலையிட்டு வெளியிட உதவ வேண்டும் என்றும் நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று இரவு அவர் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் கூறியுள்ளதாவது:

எல்லோருக்கும் வணக்கம்.

தலைவா வெளியாகாததால் ஆடிப்போயிருக்கிறோம்! முதல்வர் 'அம்மா' தலையிட வேண்டும்..: நடிகர் விஜய்

சில தவிர்க்க முடியாத காரணங்களால் தலைவா படம் ரிலீஸ் ஆகலை. கரெக்டா ரிலீஸுக்கு 2 நாளுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு மிரட்டல்களை விடுத்தனர்.

அதனால யோசிச்சு வெளியிடத்தான் இந்த தாமதம். இதனால ஹோல் யூனிட்டுமே ஆடிப்போய்த்தான் இருக்கிறோம்...

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டிருக்கிறோம்.. ஓரிரு நாட்களில் அவங்க எங்களை மீட் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்...

தமிழக முதல்வர் எவ்ளோ நல்ல விஷயங்கள் செய்துகிட்டு இருக்காங்க.. தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறாங்க..

நடிகர் விஜய்யின் வீடியோ அறிக்கை:

தமிழக மக்களுக்கு இவ்ளோ நல்லது செய்யுறவங்க தலைவா பட விவகாரத்திலும் தலையிட்டு ரிலீஸுக்கு உதவ வேண்டும்.

சென்னை, கோயம்புத்தூர், சேலம் ஆகிய இடங்களில் தலைவா படத்தின் டிவிடிக்கள் பிடித்திருக்கிறீர்கள். உங்களுக்கும் போலீசாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

இன்னிக்கு ரிலீஸ் .நாளைக்கு ரீலீஸ்னு காத்திகிட்டு இருக்கிறோம்... நிச்சயமாக ஓரிரு நாட்களில் தலைவா படம் வெளியாகிவிடும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் விஜய்.

 

சிம்புவுடன் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியானது எப்படி? - போலீசில் புகார் தருகிறார் ஹன்சிகா!

சென்னை; காதலன் சிலம்பரசனுடன் தான் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளிவந்தது பற்றி போலீசில் புகார் செய்யப் போவதாக நடிகை ஹன்சிகா கூறினார்.

சிம்புவும், ஹன்சிகாவும் தொடர்ந்து இரு படங்களில் ஜோடியாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பின்போதே இருவருக்கும் காதல்வந்துவிட்டது. இந்த செய்தி வெளியில் வந்ததும், முதலில் மறுத்து, பின்னர் ஒப்புக் கொண்டார்கள்.

திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தனர். சமீபத்தில் ஹன்சிகா தனது 22-வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த பிறந்த நாளை சிம்பு அனுப்பிய கேக்கை வெட்டி கொண்டாடினார் ஹன்சிகா.

சிம்புவுடன் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியானது எப்படி? - போலீசில் புகார் தருகிறார் ஹன்சிகா!    

முகத்தோடு முகம்

இந்நிலையில் சிலம்பரசனும், ஹன்சிகாவும் ஒரு பார்ட்டியில் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அந்தப் படங்களில் சிலம்பரசனும் ஹன்சிகாவும் இறுக்கமாக கட்டிப்பிடித்து முகத்தோடு முகம் உரசிக் கொண்டிருந்தார்கள்.

போலீசில் புகார்

இந்தப் படங்கள் குறித்து இப்போது புகார் கூற ஆரம்பித்துள்ளார் ஹன்சிகா. அவர் கூறுகையில், "இந்தப் படத்தை யார் வெளியிட்டார்கள் அது தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட படங்கள். எப்படி வெளிவந்தது என்று தெரியவில்லை. இதுபற்றி நான் போலீசில் புகார் செய்ய முடிவு செய்துள்ளேன்,'' என்றார்.

சிம்புவா?

இப்படித்தான் முன்பு நயன்தாராவைக் காதலித்த போதும், சிம்பு- நயன் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துக் கொண்டும், நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் மீடியாவில் வெளியாகின. இவற்றை சிம்புவே வெளியிட்டதாக பேச்சு நிலவியது நினைவிருக்கலாம்.

 

திருமணத்துக்குப் பிறகு சினேகா - பிரசன்னா ஜோடியாக நடிக்கும் படம்

திருமணத்துக்குப் பிறகு நடிகை சினேகாவும் அவர் கணவர் பிரசன்னாவும் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தை அருண் வைத்தியநாதன் இயக்குகிறார். சினேகாவையும் பிரசன்னாவையும் சேர்த்து வைத்ததே இந்த அருண் வைத்தியநாதன் இயக்கிய அச்சமுண்டு அச்சமுண்டு படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்துக்குப் பிறகு சினேகா - பிரசன்னா ஜோடியாக நடிக்கும் படம்

திருமணத்துக்குப் பிறகு இருவரையும் ஜோடியாக நடிக்க பலர் அழைத்த போதும் மறுத்து வந்தவர்கள், அருண் வைத்தியநாதனுக்கு மட்டும் ஓகே சொல்லிவிட்டார்களாம்.

இதுகுறித்து சினேகாவிடம் கேட்டபோது, "இந்தப் படத்துக்கு பேச்சு வார்த்தை நடந்து வருவது உண்மைதான். ஆனால் எதுவும் முடிவாகவில்லை," என்றார்.

படத்தின் கதைப்படி, இருவரும் கணவன் - மனைவியாக நடிக்க வேண்டுமாம்!

 

அங்குசம் இசை வெளியீட்டு விழா- வந்தவர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்ட புத்தம் பரிசு!

சென்னை: அங்குசம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த அனைவருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த புத்தகத்தைப் பரிசாக வழங்கினர் படக்குழுவினர்.

மனுஸ்ரீ பிலிம்ஸ் சார்பாக பானுமதி யுவராஜ் மற்றும் மனுக்கண்ணன் தயாரித்து, மனுக்கண்ணன் இயக்கியிருக்கும் அங்குசம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

அங்குசம் இசை வெளியீட்டு விழா- வந்தவர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்ட புத்தம் பரிசு!

இருபகுதிகளாக நடைபெற்ற இந்த விழாவின் ஒரு பகுதியாக மூத்த வழக்குரைஞர்கள், சமூக நல ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிப் பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக்க் கலந்து கொண்டார் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் துணைத் தலைவர் வழக்கறிஞர் பி.எஸ்.அமல்ராஜ்.

அவர் பேசுகையில், "சுவீடன் நாட்டில் 1766 லிலேயே தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. நம் நாட்டில் 2002ல் அதற்கான அடித்தளம் போடப்பட்டு 2003 இல் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.

நகர்ப்புறத்தில் 30 சதவீதம் பேருக்கும் கிராமப் புறங்களில் 20 சதவீதம் பேருக்கும் தான் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப் பற்றித் தெரிந்திருக்கிறது. தகவல் அறியும் சட்டத்தால் பல ஊழல்கள் வெளியே வருகின்றன என்று அஞ்சும் அரசாங்கம் இந்தச் சட்டத்தைப் பலவீனமாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

நடைமுறையில் இருக்கும் எந்த ஒரு சட்டத்திலும் திருத்தம் கொண்டுவந்தால் அதனைத் தட்டிக்கேட்கும் அதிகாரம் நீதி மன்றங்களுக்கு இருக்கிறது... அதனால் தங்களது முயற்சிகள் பலனளிக்காது என்று உணர்ந்த அரசியல் வாதிகள் என்றுமில்லாத செயலாக தேசிய நீதிக் கமிஷன் (NJC) என்று ஒன்றினை ஆரம்பிக்கிறார்கள். தங்களுக்கு வேண்டியவர்களை அதில் உறுப்பினர்களாக நியமித்து தங்களுக்குச் சாதகமானதாக சட்டத்தை வளைத்துக் கொள்ளப் பார்க்கின்றார்கள்.

இதுபோன்ற சட்டங்கள் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கமே நிறைய செலவிடுகிறது.. எனினும் சினிமாவின் தாக்கம் இன்று அதிகமாக இருக்கின்றது... சினிமாவின் மூலம் தகவல் அறியும் சட்ட்த்தினைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினால் அது அனைவரையும் சென்றடையும்..." என்றார்.

அங்குசம் இசை வெளியீட்டு விழா- வந்தவர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்ட புத்தம் பரிசு!

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஆன்ந்த கணேஷ் பேசும் போது, "தகவல் அறியும் சட்டத்திற்குட்பட்டக் கட்சியாக ஆம் அத்மி கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் இருக்கின்றன. இந்தச் சட்டத்திற்குத் தங்களை உட்படுத்திக் கொண்ட கட்சிகளை மட்டும் எதிர்காலத்தில் மக்கள் ஆதரிக்க வேண்டும்," என்றார்.

இவர்களுடன் கவிஞர் சல்மா, வழக்கறிஞர்கள் நன்மாறன், ஜேசு, கிருஷ்ணகுமார், ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி அய்யம்பெருமாள் மற்றும் தகவல் அறியும் உரிமை அமைப்பின் ரத்னபாண்டியன் ஆகியோரும் பேசினர்.

 

'தலைவா' நாளையும் வர மாட்டார் போலையே

சென்னை: விஜய்யின் தலைவா படம் நாளையும் ரிலீஸ் ஆகாது போன்று.

விஜய்யின் தலைவா படம் ரம்ஜான் அன்று அதாவது கடந்த 9ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் இன்ன காரணம் என்று தெரியாமல் ரிலீஸ் திடீர் என்று நிறுத்தப்பட்டது. இதையடுத்து படத்தை ரிலீஸ் செய்ய விஜய்யும், அவரது அப்பா சந்திரசேகரும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு சென்றனர். ஆனால் அவரை சந்திக்க முடியாமல் திரும்பினர்.

'தலைவா' நாளையும் வர மாட்டார் போலையே

இந்நிலையில் படத்தின் திருட்டு சிடிக்கள் வெளியாகியுள்ளன. படம் தமிழகத்தை தவிர பிற மாநிலங்கள், நாடுகளில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தலைவா சுதந்திர தினம் அன்று ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் படம் நாளை ரிலீஸ் ஆகாது போன்று. இதற்கிடையே ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து சென்னை திரும்பிவிட்டார்.

தனது படம் ரிலீஸாக ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் விஜய் உள்ளார்.

 

ஷூட்டிங்கில் கிரேன் சரிந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கே.ஆர். விஜயா, மோனிகா

ஷூட்டிங்கில் கிரேன் சரிந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கே.ஆர். விஜயா, மோனிகா

சென்னை: சுவடுகள் படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விபத்து ஏற்பட்டதில் கே.ஆர். விஜயா, மோனிகா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஜெய்பாலா கதை, திரைக்கதை எழுதி, இயக்கி ஹீரோவாக நடிக்கும் படம் சுவடுகள். இந்த படத்தில் மோனிகா நாயகியாகவும், கே.ஆர். விஜயா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

படத்தின் ஷூட்டிங் குற்றாலத்தில் நடந்தது. அப்போது கே.ஆர். விஜயா, மோனிகா வரும் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர். 40 அடி உயர கிரேனில் கேமராவை வைத்து படமாக்கினர். குற்றாலம் பகுதியில் மழை பெய்து மண் ஈரமாக இருந்ததால் கிரேன் பிடிப்பு இன்றி திடீர் என்று சரிந்தது. கிரேன் கே.ஆர். விஜயா, மோனிகா தலையில் விழுவது போன்று வந்தது.

இதைப் பார்த்த படக்குழுவினர் அலற அங்கு ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த 200 பேர் ஓடிச் சென்று கிரேனை பிடித்தனர். இதனால் நடிகைகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

 

ட்ரிபிள் வி ரெகார்ட்ஸ் - வசந்தகுமாரின் மகன் தொடங்கியுள்ள புதிய ஆடியோ நிறுவனம்!

சென்னை: ட்ரிபிள் வி ரெகார்ட்ஸ் என்ற பெயரில் புதிய ஆடியோ நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் வ வினோத்குமார்.

இவர் வசந்த் அன்ட் கோ நிறுவனத்தின் அதிபர் வசந்த குமாரின் இளைய மகன், நடிகர் வசந்த் விஜய்யின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரிபிள் வி ரெகார்ட்ஸ் நிறுவனம் சார்பில் முதலில் விழியும் செவியும் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளது. இரண்டு பகுதிகளாக உள்ள இந்த ஆல்பத்தில் முறையே 9 மற்றும் 13 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பிரேம்ஜி அமரன், யூசுப் இருவரும் முதல் ஆல்பத்துக்கு இசை அமைத்துள்ளனர்.

ட்ரிபிள் வி ரெகார்ட்ஸ் - வசந்தகுமாரின் மகன் தொடங்கியுள்ள புதிய ஆடியோ நிறுவனம்!

இரண்டாவது ஆல்பத்துக்கு பிரேம்ஜி, யூசுப்புடன் மலேசியாவைச் சேர்ந்த சத்யாவும் இணைந்து இசை அமைத்துள்ளார்.

அடுத்து தெரியாம உன்ன காதலிச்சிட்டேன் மற்றும் என்னமோ நடக்குது ஆகிய இரு படங்களின் இசைத் தட்டுகளை இந்த நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படங்களின் ஹீரோ வசந்த் விஜய், தயாரிப்பாளர் வினோத் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படங்களைத் தவிர, மேலும் இரு புதிய படங்களின் இசைத் தட்டுக்களையும் வெளியிடவிருக்கிறது ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ் நிறுவனம்.

சினிமா இசை தவிர, தனியிசை ஆல்பங்களையும் தொடர்ந்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது ட்ரிபிள் வி ரெக்கார்ட்!

 

அதிர்ஷ்ட தேவதை - இதுதான் இனி ஹன்சிகா பட்டப் பெயர்!

இந்த ஆண்டு தொடர்ந்து இரு படங்களில் நடித்ததால் ஹன்சிகாவை அதிர்ஷ்ட தேவதை எனப் பட்டப்பெயர் கொடுத்துள்ளனர் திரையுலகினர்.

அதிர்ஷ்ட தேவதை - இதுதான் இனி ஹன்சிகா பட்டப் பெயர்!   

இதுகுறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது, "இதை வெறும் அதிர்ஷ்டம் என கூற முடியாது. என்னை பொறுத்த வரை அதிர்ஷ்டம் என்பது வரும்போது அதை இரண்டு கைகளாலும் பற்றிக்கொள்ள தயார் நிலையில் இருப்பதுதான்.

ஒரு நடிகையாக மழை, வெயில் என பாராமல் உழைப்பதும், இரவு பகல் என தூக்கமின்றி உழைப்பதும், நல்ல கதை, நல்ல தயாரிப்பு நிறுவனம், நல்ல இயக்குனர் தேர்ந்து எடுப்பதும், என் பலம் மற்றும் பலவீனத்தை உணர்ந்து நடிப்பது என என் கடமையை ஆற்றுகிறேன்.

இதற்கும் மேலாக என் தாயின் அறிவுரையும், ஊக்கமும் என் வெற்றியை உறுதி செய்கிறது. இதை எல்லாவற்றையும்விட நான் தத்து எடுக்கும் குழந்தைகளின் மூலம் எனக்கு கிடைக்கும் ஆசியும் எனக்கு இந்த பட்டதை அளித்து இருக்கலாம்," என்றார் கன்னக்குழிப் புன்னகையுடன்.