ரஜினி ரசிகர்கள் மகா ஆர்வத்தோடு எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் கோச்சடையான் படத்தின் முதல் ட்ரைலர் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என்று செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால் படத்தின் இயக்குநர் சௌந்தர்யா தரப்பில் இன்னும் எந்தத் தகவலும் வெளிவரவில்லை.
எந்திரனுக்குப் பிறகு மூன்றாண்டுகளாக ரஜினி படம் எதுவும் வெளியாகவில்லை. கோச்சடையான் படம் புதுமையான தொழில்நுட்பத்தில் வெளியாகவிருப்பதால், ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
ரஜினியுடன் பெரிய நட்சத்திரப் பட்டாளம், இந்தியாவில் இதுவரை எந்தப் படத்திலும் உபயோகிக்கப்படாத 3டி மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பம், ஹாலிவுட் மற்றும் சீன தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு, ரஹ்மானின் இசை... என அனைத்து வகையிலும் உலகத் தரமான ஒரு படமாக கோச்சடையான் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தின் ட்ரைலர் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசி நேர்ததில், மேலும் சிறப்பாக ட்ரைலரை மெருகேற்றுமாறு ரஜினி கூறியதால் ரத்து செய்யப்பட்டதாக தயாரிப்பாளர் முரளி மனோகர் தெரிவித்திருந்தார். இந்த ஜூன் மாதத்துக்குள் எப்படியும் ட்ரைலர் வெளியாகிவிடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இப்போது, வரும் ஞாயிற்றுக்கிழமை கோச்சடையானின் முதல் ட்ரைலர் வெளியாகக் கூடும் என தகவல் கசிந்துள்ளது.
இந்த ட்ரைலரை சர்வதேச அளவிலான ஏதாவது ஒரு நிகழ்வில் வெளியிட வேண்டும் என்றுதான் தயாரிப்பாளரும் சூப்பர் ஸ்டாரும் விரும்பினார்கள். எனவே ஞாயிற்றுக்கிழமை சாதாரணமாக வெளியாகுமா அல்லது ஏதாவது ஒரு சர்வதேச நிகழ்வில் வெளியிடுவார்களா...
ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்... நகம் கடித்தபடி!