மகாபலேஷ்வரில் அஜீத்... இன்னும் முடியாத விஷ்ணுவர்தன் ஷூட்டிங்!

Ajith Mahabaleshwar

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங் இன்னும் முடிந்தபாடில்லை.

இதன் இறுதிப்பகுதி காட்சிகளில் சில மகாபலேஷ்வர் அருகே படமாக்கப்பட்டு வருகிறது. இதில் அஜீத் பங்கேற்று நடித்து வருகிறார்.

பெயரே வைக்காத படத்துக்கு ட்ரைலரை வெளியிட்டுள்ள இயக்குநர் விஷ்ணுவர்தன் இதுகுறித்துக் கூறுகையில், "பெயர் வைக்காமல் ஒரு படத்தை ஆடியோ வெளியீடு வரை கொண்டு வருவது த்ரில்லாகத்தான் உள்ளது (ஆக ஏற்கெனவே பேர் வச்சிட்டீங்க!). சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் உள்ள சில அருமையான இடங்களில் சில காட்சிகளைப் படமாக்கினோம். இப்போது மகாபலேஷ்வருக்கு வந்திருக்கிறோம்," என்றார்.

இந்த ஷூட்டிங் முடிந்த பிறகு ஜெய்சால்மர், லெஹ் மற்றும் லடாக் பகுதியில் ஷூட்டிங் நடத்தப் போகிறார்களாம்.

மறுபடியும் முதல்லருந்தா!

 

பவர் ஸ்டார் பாணியில் ஹீரோவாகும் விடிவி கணேஷ்

Vtv Ganesh Takes Hero Avatar   

சென்னை: பவர் ஸ்டார் சீனிவாசன் ஸ்டைலில் ஒரு படத்தை தயாரித்து ஹீரோவாகிறார் விடிவி கணேஷ்.

சிம்பு, த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் விடிவி கணேஷ். இங்க என்னா சொல்லுது என்ற வசனத்தை அவர் அடிக்கடி சொல்லுவார்.

இந்நிலையில் அவர் விடிவி புரொடெக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளார். தனது நிறுவனத்தின் மூலம் இங்க என்னா சொல்லுது என்ற தலைப்பில் படம் ஒன்றை தயாரித்து, ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படி தான் பவர்ஸ்டாரும் லத்திகா என்ற படத்தை தயாரித்து ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தை ஓட வைக்க அவர் என்னவெல்லாம் செய்தார் என்பது அனைவரும் தெரிந்ததே.

ஒரு வேளை பவருக்கு போட்டி விடிவி கணேஷோ?

 

எதிர்நீச்சல்- விமர்சனம்

Rating:
3.0/5

-எஸ் ஷங்கர்

நடிப்பு: சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த், நந்திதா

இசை: அனிருத்

தயாரிப்பு: தனுஷ்

இயக்கம்: துரை செந்தில்குமார்

ரொம்ப நாளாகக் குழந்தை பாக்கியம் இல்லாத பெற்றோர், பிள்ளை பிறந்தால் உன் பெயரையே வைக்கிறேன் என குலதெய்வத்திடம் வேண்டிக் கொள்கிறார்கள். ஆண் பிள்ளை பிறக்க குஞ்சிதபாதம் (சிவகார்த்திகேயன்) என்று தெய்வத்தின் பெயரைச் சூட்டுகிறார்கள்.

குஞ்சிதபாதம் வளர வளர அந்தப் பெயரால் நேரும் அவமானங்களும் வளர்கின்றன.

பணியாற்றும் நிறுவனத்தில் பெயரைச் சுருக்கி முதல் பாதியை மட்டும் அழைக்க அவமானத்தின் உச்சிக்கே போய்விடுகிறான் குஞ்சிதபாதம். இந்தப் பெயரே காதலுக்கு வில்லனாகவும் அமைந்துவிடுகிறது. என்ன வாழ்க்கைடா இது என்று நொந்துபோகும் குஞ்சிதபாதம், தன் பெயரை ஹரீஷ் என மாற்றிக் கொண்டு, ஜாகையையும் மாற்றிக் கொள்கிறான். இந்த முறை காதல் ஒர்க் அவுட் ஆகிறது. ஆனால் பழைய பெயர் தெரிய வரும்போது, மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறது.

சரி, வாழ்க்கையில் ஏதாவது சாதித்தால் இந்த பெயரின் அவமானம் போய்விடும் என்று கருதி, ஓட்டப்பந்தயத்தில் கவனத்தைத் திருப்புகிறார். அவருக்குப் பயிற்சியாளராக வருகிறார் நந்திதா.

ethirneechal movie review   
ஓட்டப் பந்தயத்தில் ஜெயித்து, காதலில் ஜெயித்து, பெயரில் என்ன இருக்கிறது என்பதை உணர்ந்தாரா குஞ்சிதபாதம் என்பது மீதிக் கதை.

குஞ்சிதபாதமாக வருபவர் சிவகார்த்திகேயன். முந்தைய படங்களைவிட எவ்வளவோ பரவாயில்லை சிவகார்த்திகேயன். இந்த ரூட்டையே தொடர்ந்தால், அவருக்கும் ரசிகர்களுக்கும் நல்லது. என்ன... தனுஷ் மாதிரி ஆக்ஷன் ஹீரோவாகி பீதியைக் கிளப்பாமலிருக்க வேண்டும்!

முதல் ஹீரோயின் ப்ரியா ஆனந்த். சில காட்சிகளில் சிவகார்த்திகேயனுக்கு சீனியர் மாதிரி தெரிகிறார். ஆனால் நடிப்பில் குறை வைக்கவில்லை.

சிவகார்த்திகேயனுக்கு கோச்சாக வரும் நந்திதா ஓகே. அவர் பாத்திரம் மூலம் ஏழை வீராங்கனைகள் படும் பாட்டை சரியாகவே சொல்லியிருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் நண்பராக வரும் சதீஷ் மற்றும் மனோபாலா, மதன்பாப் என அனைவருமே சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

படத்தின் பிரதான பலம் அனிருத்தின் இசை. ஒரு பாட்டில் ரஹ்மானின் சில்லுனு ஒரு காதல் படத்தின் ஆரம்ப இசை அப்படியே வருகிறது. ஆனால் அடுத்து அப்படியே சட்டென்று புதிய மெட்டுக்கு தாவுகிறது. தனுஷ் - நயன்தாரா குத்துப் பாட்டு ரசிகர்களை ஆட வைக்கிறது.

குஞ்சிதபாதம் என்ற பெயரை வைத்தே இடைவேளை வரை இழுத்தவர்கள், அதன் பிறகுதான் கதைக்கே வருகிறார் இயக்குநர். சொல்ல வந்த இரண்டு விஷயங்களை தெளிவாகச் சொன்னாலும், காட்சிகளை இன்னும் அழுத்தமாக சொல்லத் தவறியிருக்கிறார்.

Ethirneechal Movie review

ஆனால் படத்தை 2 மணிநேரத்துக்குள் முடித்துவிட்டதால் குறைகள் பெரிதாகத் தெரியவில்லை.

கோடை விடுமுறைக்கேற்ற படம்தான்.. பார்க்கலாம்!

 

மனதில் மாயம் செய்தாய் - ஹீரோயினாக ரிச்சா பனய் அறிமுகம்!

Manathil Mayam Seithai Movie Launch

மனதில் மாயம் செய்தாய் படத்தின் நாயகியாக ரிச்சா பனய் அறிமுகமாகிறார்.

இப்படத்தின் துவக்க விழா இன்று ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது. தெலுங்கில் சில படங்களில் நடித்து காதல் நாயகன் என பெயரெடுத்த பிரின்ஸ் நாயகனாக அறிமுகமாக , 'மைனா' திரைப்படம் மூலமாக அறிமுகமான சேது மற்றுமொரு நாயகனாக நடிக்கிறார். ப்படத்தில் அவர்களது இணையாக 'தமிழ் படம் ' மூலம் அறிமுகமான திஷா பாண்டே மற்றும் புதுமுகம் ரிச்சா பனய் நடிக்கின்றனர்.

வின்சி மன்கடம் மற்றும் ஜெய்சன் புலிகுட்டில் ஆகியோர் ஃபுல் ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிக்க, சுரேஷ்.பி .குமார் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் கதையை பற்றி பேசிய இயக்குனர் சுரேஷ் பி குமார் கூறுகையில், "தெளிவான நீர் அலையில் வீசப்படும் ஒரு சிறு கல் எவ்வளவு சஞ்சலத்தை ஏற்படுத்துமோ, அதே அளவுக்கு காதலிலும் ஏற்படும் சிறு சச்சரவுகள் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தும் என்ற மைய கருத்தை வைத்து இசையுடன் ஜனரஞ்சகத்தையும் கலந்து கொடுக்க இருக்கிறோம்.

என்னுடைய பலமாக ஒளிப்பதிவாளர் வெங்கட் அநுமான், கலை இயக்குனர் மோகன், இசை அமைப்பாளர் மனிகாந்த் கத்ரி என ஒரு திறமையான குழு இருப்பது என் அதிர்ஷ்டமே," என கூறினார் .

இயக்குனர் பிரபு சாலமன் தலைமையில் நடந்த இந்த விழாவில் சாட்டை இயக்குனர் அன்பழகன், நடிகர் ஸ்ரீகாந்த் , மற்றும் பல் வேறு துறையை சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

 

விஜய் டிவி விருதுகள் - ஓவியங்களாய் நட்சத்திரங்கள்!

விஜய் டிவியின் ஆண்டு விருதுகளுக்கு பரிசீலனையில் உள்ள நட்சத்திரங்களை ஓவியங்களாய் வரைந்து அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

விஜய் டிவியின் 7 வது ஆண்டு திரைப்பட விருது வழங்கும் விழா சென்னையில் நடக்கிறது. மே 11-ம் தேதி நடக்கும் இந்த விருது வழங்கும் விழாவுக்கான முன்னோட்டங்களை பிரமாண்டமாக செய்து வருகிறது.

vijay tv awards nominees

விருதுக்கு பரிசீலிக்கப்பட்டுள்ள இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகளை பண்டைய ஐரோப்பிய மன்னர்கள் பாணியில் வரைந்து, அதனையே அழைப்பிதழ்களாக்கி சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு வழங்கியுள்ளனர்.

விஜய், தனுஷ், சசிகுமார், பிரபு சாலமன், லட்சுமி மேனன், வரலட்சுமி, சந்தானம், விஜய் சேதுபதி உள்பட பலரையும் இப்படி ஓவியமாக வரைந்திருப்பவர் ஆர்டிஸ்ட் ஏபி ஸ்ரீதர்.

வரும் 11-ம் தேதி நடக்கும் விழாவில் அனைத்து திரை நட்சத்திரங்களும் திரளாகக் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

 

'இடுப்புல குடமே நிற்கலே...!' - அடித்தளம் கதாநாயகி ஆருஷி

Aarushi S Experience Adithalam Movie

வீட்டு வேலையே எனக்குத் தெரியாது. ஆனால் அடித்தளம் படத்தில் தண்ணீர் குடத்தை தூக்கும் காட்சியில் இடுப்புல குடமே நிக்கல, என்றார் படத்தின் நாயகி ஆருஷி.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆருஷி தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "முதலில் கதையே சொல்லாமல்தான் என்னை கேமிராவுக்கு முன்னால் நிற்க வைத்தார் டைரக்டர் இளங்கண்ணன். ஒரு அழுக்கு புடவையை கொடுத்தார்.

'ஐயோ, இதை போய் கட்டணுமா' என்று நினைத்துக் கொண்டே கட்டினேன். டல் மேக்கப் போட்டாங்க. நிறைய செங்கல்லை எடுத்து தலையில் அடுக்கினாங்க. ஒரு வேலையும் செய்யாமல் செல்லமா வளர்ந்தவள் நான். அதன் கஷ்டம் அப்போதுதான் புரிந்தது. அவர் சொல்லிக் கொடுத்ததை நான் சரியாக செய்த பிறகுதான் எனக்கு இந்த படத்தின் கதையையே சொன்னார்.

படப்பிடிப்பு சின்ன குடிசையில் நடந்தது. அந்த வீட்டை நானே பெருக்கி, நானே பாத்திரம் தேய்த்து வேலை செய்வேன். இதற்கு முன் வீட்டில் ஒரு வேலையும் நான் செய்தது இல்லை. அங்கே எல்லா வேலைகளையும் நானே செய்யும்போது கூட பொறுத்துக் கொண்டேன். ஆனால் தண்ணி எடுக்க குடத்தை இடுப்பில் வைத்தபோதுதான் படாத பாடு பட்டுவிட்டேன்.

-குடம் இடுப்பிலேயே நிற்க மாட்டேங்குது. குடத்தின் மேல் கான்சன்ட்ரேஷன் போச்சுன்னா டயலாக் மறந்துடுது. டயலாக்கை மனசில் வைத்துக் கொண்டால் குடம் தடுமாறுது. எப்படியோ கஷ்டப்பட்டு இந்த படத்தில் நடித்தேன். அதற்கான பலன் கைகூடி வரும்னு நம்புறேன்," என்றார் ஆருஷி.

விழாவில் கலந்து கொண்டு படத்தின் குறுந்தகட்டை பெற்றுக் கொண்ட கட்டிட தொழிலாளர்களுக்கு எஸ்.சேதுபதிராஜன் உடைகள் மற்றும் உதவித் தொகையை வழங்கினார்.

விழாவில் படத்தின் கதாநாயகன் அங்காடித்தெரு மகேஷ், இசையமைப்பாளர் தாஜ்நூர், கவிஞர் நா.முத்துக்குமார், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஆகியோர் கலந்து கொண்டார்கள். இயக்குனர் பி.எல்.ஆர்.இளங்கண்ணன் நன்றி கூறினார்.

 

குண்டாஸில் கைதாகிறார் 'புவர்' சீனிவாசன்!

Power Star Be Arrested Goondas Act

கடந்த இரண்டு மாதங்களாக எந்த மீடியாவைத் திறந்தாலும் பவர் ஸ்டார் புராணம்தான். பவர் பல்லு விளக்கினாரு, பவர் பால் குடிச்சாரு என ஏகப்பட்ட செய்திகள்.

இன்று அப்படி நிலைமை தலைகீழ். பவர் ஸ்டார் ரொம்ப ரொம்ப புவர் ஸ்டாராகி வேலூர் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

காரணம் அவரைச் சுற்றிச் சுற்றி அடிக்கும் மோசடி வழக்குகள். கிட்டத்தட்ட ஒரு டஜன் மோசடி வழக்குகள் அவர் மேல் பாய்ந்துள்ளன.

விளைவு, கிட்டத்தட்ட தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பவர் சீனிவாசனை குண்டர் சட்டத்தில் அடைக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளது போலீஸ்.

சமீபத்தில் நீதிமன்ற அனுமதியுடன் அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

ஆந்திர தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.20 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். பவர்ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் வரிசையாக போலீசில் புகார் செய்து வருகின்றனர்.

சீனிவாசன், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி வக்கீல்களையும் ஏமாற்றி மோசடி செய்துள்ளார். பெசன்ட் நகரை சேர்ந்த வக்கீல் ஜெகநாதன் தனது கட்டுமான தொழிலை அபிவிருத்தி செய்ய பவர் ஸ்டாரின் உதவியை நாடினார். அப்போது பவர் ஸ்டார் சீனிவாசனிடம் ரூ.2 கோடி கடன் கேட்டுள்ளார். அவர் அதற்கு கமிஷனாக ரூ.70 லட்சத்தை முன் கூட்டியே வாங்கி கொண்டார். ஆனால் கடன் பெற்றுத் தரவில்லை.

இதுபற்றி ஜெகநாதன் போலீசில் புகார் செய்தார். இதேபோல் சண்டிகரைச் சேர்ந்த ஜெகன்சிங் என்பவரிடம் ரூ.2 கோடி, கோவாவை சேர்ந்த பிரகாஷ் ரத்தோரிடம் ரூ.16.5 லட்சம் என்று பலரிடம் ஏமாற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

இதன் அடிப்படையில் புதிதாக மேலும் 3 வழக்குகள் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. சீனிவாசன் கமிஷனாக பெற்ற பணத்தில் அண்ணா நகர் பகுதியில் மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வாங்கி குவித்துள்ளார். மொத்தம் ரூ.150 கோடிக்கு மேல் சொத்துக்களை வாங்கி குவித்து பினாமிகள் பெயரில் வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

எங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது என்பது பற்றி போலீசார் விவரங்களை சேகரித்து வருகிறார்கள். அண்ணாநகர், சாலி கிராமம் ஆகிய இடங்களில் சில வங்கிகளில் பவர் ஸ்டார் சீனிவாசன் கணக்கு வைத்துள்ளார். போலீசார் அந்த வங்கிகளில் சீனிவாசனின் பெயரில் உள்ள வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர்.

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பவர் ஸ்டார் சீனிவாசன் விரைவில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதற்கிடையில் போலீஸ் விசாரணையின் போது பேராசைப்பட்டு இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு விட்டேன். எனது சொத்துக்களை விற்று கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன். என் சினிமா வாழ்க்கை பாதிக்கும், விட்டுவிடுங்கள், என்று கெஞ்சினாராம்.

திருமங்கலத்தில் உள்ள அவரது மருத்துவனையில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் வழங்காததால் அவர்களே மருத்துவமனையை மூடிவிட்டுச் சென்று விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.