விஜய்யின் தந்தைக்கு கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ள கேயார் அணி!


சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஜய்யின் தந்தையும் தற்போதைய பொறுப்புத் தலைவருமான எஸ் ஏ சந்திரசேகரின் அணிக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது கேயார் அணி.

கே.ஆர். அணி வேட்பாளர் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அணியில் தலைவராக கேயாரும்,

துணைத் தலைவர்களாக சத்யஜோதி டி.ஜி. தியாகராஜன், டி.சிவா ஆகியோரும், செயலாளர்களாக கே.முரளிதரன், ஏ.எம்.ரத்னம் ஆகியோரும், பொருளாளராக அன்பாலயா பிரபாகரனும் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு கமீலா நாசர், சித்ரா லட்சுமணன், கே.ராஜன், ஞானவேல்ராஜா, கே. பாலு, அழகன் தமிழ்மணி, ஆபாவாணன், கே.விஜயகுமார், எம்.கபார், எச்.முரளி, என்.சுபாஷ் சந்திரபோஸ், கே.முருகன், எஸ்.எஸ்.துரைராஜ், ருக்குமாங்கதன், ரவீந்திரன், ஏ.என்.சுந்தரேசன், ராஜேந்திரன், நந்தகோபால், விஜயமுரளி, மன்னன், பி.ஜி.பாலாஜி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

தங்கள் அணி வென்றால், "தயாரிப்பு செலவு குறைக்கப்படும், தொழிலாளர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணப்படும், டி.வி., கேபிள் டி.வி.யில் இருந்து ரூ. 10 லட்சம் சிறு முதலீட்டு படங்களுக்கு கிடைக்க வழி செய்யப்படும், தயாரிப்பாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அமைக்கப்படும்," என வாக்குறுதி அளித்துள்ளது கேயார் அணி.
 

ஏ ஆர் முருகதாஸின் ஏழாம் அறிவு... தியேட்டர்கள் அறிவிப்பு


ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படம் என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது சூர்யா நடித்துள்ள ஏழாம் அறிவு.

முற்றிலும் புதிதான கதை, இதுவரை பார்த்திராத நாடுகளில் படப்பிடிப்பு என கூறப்பட்டு வருவதால், தீபாவளிப் படங்களில் ஏழாம் அறிவுக்கு தனி முக்கியத்துவம் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், தீபாவளிக்கு இன்னும் 22 நாட்கள் உள்ள நிலையில், இப்போதே படம் வெளியாகும் அரங்குகளின் பட்டியலை வெளியிட்டு அதிர வைத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை நகரினழ் பிரதான சினிமா அரங்குகளான சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், தேவி, அபிராமி, பிவிஆர், சங்கம், உதயம், ஏஜிஎஸ் போன்றவற்றில் இந்தப் படம் ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகிறது. இவை தவிர, சிங்கிள் ஸ்கிரீன்ஸ் எனப்படும் தனி அரங்குகளிலும் படம் வெளியாகிறது.

சூர்யா நடித்த படம் ஒன்று நகரில் இத்தனை அரங்குகளில் வெளியாவது இதுதான் முதல் முறை. இந்தப் படத்துடன், உதயநிதி ஹீரோவாக அறிமுகமாகும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் ட்ரெயிலரும் திரையிடப்படும் என உதயநிதி அறிவித்துள்ளார்.

வேலாயுதம், மயக்கம் என்ன, ஒஸ்தி போன்ற படங்களும் தீபாவளி ரேஸில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

ஆபரேஷன் பண்ணியிருக்காவிட்டால் கோமாவில் விழுந்திருப்பேன்- சல்மான்


கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் அறுவை சிகிச்சை செய்துகொள்ளாமல் இருந்திருந்தேன் என்றால் இந்நேரம் கோமாவில் விழுந்திருப்பேன் என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

நடிகர் சல்மான் கானுக்கு நரம்பு கோளாறு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடந்தது. அவர் டிரைஜெமினல் நியூரால்ஜியா என்னும் நரம்புப் பிரச்சனையால் கடந்த 7 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் வலி அதிகரிக்கவே உடனே அறுவை சிகிச்சை செய்து கொண்டார் சல்மான். இது அனைவரும் அறிந்த செய்தி. தெரியாத விஷயம் என்னவென்றால் அவர் மட்டும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் இந்நேரம் கோமாவில் விழுந்திருப்பார் என்பது தான்.

இது குறித்து சல்மான் கூறுகையில்,

நான் 60 சதவீதம் குணமடைந்துள்ளேன். இந்த கோளாறை முழுமையாக குணப்படுத்த முடியாது. நான் மட்டும் அறுவை சிகிச்சை செய்துகொள்ளாமல் காலம் தாழ்த்தியிருந்தால் இந்நேரம் கோமாவில் விழுந்திருப்பேன் என்றார்.

சல்மானை பயணம் செய்யக்கூடாது, நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் சல்மான் ஏக் தா டைகர் படப்பிடிப்புக்காக பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

அவருக்கு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

51 வயது நடிகரின் 17 வயது மனைவி- வாய் பிளக்கும் ஹாலிவுட்!


ஹாலிவுட் நடிகர் டோக் ஹட்சின்சனுக்கு வயது 51 ஆகிறது. இவரது மனைவி கர்டனி ஸ்டோடனுக்கோ வெறும் 17தான். இந்த ஜோடியின் காதல் குறித்துதான் இப்போது ஹாலிவுட் ரசிகர்கள் படு பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். எப்படி 'செட்' ஆனது இந்த வித்தியாசக் காதல் என்பதுதான் அவர்களது பரபரப்புக்குக் காரணம்.

ஆனால் ஹட்சின்சன் இதுகுறித்து அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக, தனது மனைவியின் அழகு, கவர்ச்சி குறித்து பெருமிதமாக பேசி வருகிறார்.

கர்ட்னி ஸ்டோடனின் அழகும், கவர்ச்சியும் வெகு பிரபலமானது. 17 வயதேயானாலும் கூட 'அதி பயங்கர' கவர்ச்சியுடன் அவர் வலம் வருகிறார். அவரது கவர்ச்சியில் 'செயற்கை' ஐட்டங்கள் நிறைய இருப்பதாகவும், குறிப்பாக மார்பக அறுவைச் சிகிச்சையை அவர் செய்து கொண்டு முன்னழகை எடுப்பாக்கியுள்ளதாகவும் பேச்சு நிலவுகிறது.

ஆனால் கர்ட்னி இதை முற்றாக மறுத்துள்ளார். என்னிடம் இருக்கும் எல்லாமே 'ஒரிஜினல்'தான் என்று அடித்துக் கூறுகிறார் கர்ட்னி. தனது மனைவியின் அழகு அம்சங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறுவதைப் பார்த்து டென்ஷனாகி விட்ட ஹட்சின்சன் உடனடியாக ஒரு போட்டோ ஷூட்டுக்கு ஏற்பாடு செய்தார்.

அதில் அவரும், கர்ட்னியும் தோன்றுகிறார்கள். இந்த போட்டோ ஷூட்டின்போது வெள்ளை நிற பிகினியில் படு கவர்ச்சிகரமாக தோன்றி போஸ் கொடுத்துள்ளார் கர்ட்னி. தனது உடல் அழகியல் அம்சங்கள் அனைத்துமே உண்மையானவை, ஒரிஜினலானவை என்பதை வெளிக்காட்டும் வகையில் அந்த போஸ்கள் உள்ளன.

கடற்கரையிலும், நீச்சல் குளத்திலும் வைத்து இந்த புகைப்படகங்களை எடுத்துத் தள்ளியுள்ளனர். இந்த சூடான படங்கள்தான் இப்போது ஹாலிவுட்டின் படு சூடான விவாதமாக மாறியுள்ளது.

இந்த வித்தியாச தம்பதிகளுக்கு இடையிலான வயது வித்தியாசம் 39 ஆண்டுகளாக இருந்தாலும் கூட இவர்களின் திருமண வாழ்க்கை படு ஜோராக இருக்கிறதாம் - கண்ணடித்தபடி கூறுகிறார் கர்ட்னி. கடந்த ஜூன் மாதம் தான் லாஸ் வேகாஸில் வைத்து கர்ட்னியைக் கைப்பிடித்தார் ஹட்சின்சன்.

ஆனால் நிவேதா மாகாண திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கும், பெண்ணுக்கும் குறைந்தது 18 வயதாகியிருக்க வேண்டும். இருப்பினும் கர்ட்னியின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளனர். இதனால் திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்ட்னியின் தாயார் கிறிஸ்டா இதுகுறித்துக் கூறுகையில், இந்தத் திருமணத்தை நாங்கள் பூரணமாக ஆதரித்துள்ளோம். ஹட்சின்சன் அருமையான மனிதர். அவரை நாங்கள் நேசிக்கிறோம்.

இருவரும் ஆழமாக நேசிக்கிறார்கள். மனதார காதலிக்கிறார்கள். எனது மகள் திருமணம் செய்த போது அவர் கன்னிப் பெண்ணாகவே இருந்தார். காரணம், அவர் ஒரு சுத்தமான கிறிஸ்தவப் பெண் என்று பெருமையாக கூறியுள்ளார் கிறிஸ்டா.
 

யுவராஜ் சிங் சரியான 'கடலைப் பார்ட்டி'-ப்ரீத்தி ஜிந்தா


கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஒரு பெரிய 'கடலைப் பார்ட்டி' என்று இந்தி நடிகையும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.

நடிகை பிரீத்தி ஜிந்தாவும், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் டேட் செய்தார்கள் என்று ஐபிஎல் போட்டிகளின்போது படு பரபரப்பாக பேசப்பட்டது. இது உண்மையா, இல்லையா என்பது இன்னும் தெளிவாகாத விஷயமாகவே உள்ளது.

இந்நிலையில் யுவராஜ் சிங் பெரிய 'கடலைப் பார்ட்டி' என்று கூறியுள்ளார் பிரீத்தி. கடந்த 2009-ம் ஆண்டின் ஐபிஎல் சீசனின்போது பிரீத்தியும், யுவராஜும் பார்க்கும்போதெல்லாம் கட்டிப்பிடித்துக் கொண்டனர். அவர்களைப் பற்றி தான் பேச்சாகக் கிடந்தது. ஆனால் பிரீத்தி எங்களுக்குள் எதுவும் இல்லை, இது சும்மா உற்சாகப்படுத்தத்தான் கட்டிப்பிடி வைத்தியம் என்று கூறி மறுத்தார்.

இந்நிலையில் பிரீத்தி நடத்தும் அப் க்ளோஸ் அன்ட் பர்சனல் வித் பிரீத்தி ஜிந்தா என்னும் நிகழ்ச்சியில் யுவராஜ் சிங் கலந்து கொண்டார். அப்போது பிரீத்தி யுவராஜைப் பார்த்து, நீங்க 'பெரிய கடலைப் பார்ட்டி' தானே, அதனால் தான் உங்க பெயர் பலருடன் சேர்ந்து அடிபடுகிறது என்று காலை வாரினார் ப்ரீத்தி.

அதற்கு யுவி கூறியதாவது, நீங்கள் யார் கூடயோ சுத்த கடைசியில் என்னை பலிகடாவாக்கி விட்டீர்கள். நான் திருமணமாகாதவன் என்பதால் தான் இத்தனை பிரச்சனையும். ஏன் நீங்க மட்டும் என்னவாம்? உங்களையும், பிரெட் லீயையும் சேர்த்து பேச்சு அடிபட்டதே, இல்லைன்னு சொல்லுங்க பார்ப்போம்? என்று பதிலுக்கு பலமாக வாரினார்.

என் பணம், புகழுக்காக என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்ணை நான் மணக்க மாட்டேன். நான் கிரிக்கெட், கிரிக்கெட் என்று பயணம் செய்து கொண்டே இருப்பவன். என்னை புரிந்து கொண்டு நடக்கும் பெண் தான் வேண்டும் என்றும் கூறினார் யுவராஜ்.

மொத்தத்தில் ரெண்டு பேரும் 'வறுகடலைப் பார்ட்டி'கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது!
 

மாதம் தவறாமல் வெங்கடாசலபதியைப் பார்க்கும் ஷ்ரேயா!


நடிகை ஸ்ரேயா சரண் ஒரு அழகு மான் மட்டுமல்ல, சிறந்த 'பக்திமான்' என்பதும் உங்களுக்குத் தெரியுமா? இப்ப தெரி்ந்து கொள்ளுங்கள்.

நடிகை ஸ்ரேயா மாதம் ஒரு முறை திருப்பதிக்கு ஒரு விசிட் அடித்துவிடுவார். மாதம் தவறாமல் வெங்கடாசலபதியைப் பார்த்து ரகசிய விண்ணப்பம் போடுகிறார். கண்களை மூடிக் கொண்டு, இரு கரங்களையும் கூப்பி மனதார வேண்டுகிறார்.

அட என்ன ஸ்ரேயா, அப்படி என்ன தான் உங்கள் வேண்டுதல்? எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன் என்று கேட்டால், வேண்டுதலை வெளியே சொன்னால் அது பலிக்காது என்று நைசாக நழுவிவிடுகிறார்.

சாமி சமாச்சாரம் ஆச்சேன்னு அவரை யாரும் வற்புறுத்துவதும் இல்லை. உங்கள் வேண்டுதல் விரைவில் நிறைவேறட்டும்.
 

பங்களா கட்ட ஈ.சி.ஆரை அலசும் சமீரா ரெட்டி!


நடிகை சமீரா ரெட்டி ஒரு சொகுசு பங்களா கட்ட ஈ.சி.ஆர். ரோட்டில் இடம் தேடிக் கொண்டிருக்கிறார்.

நடிகை சமீரா ரெட்டிக்கு மும்பை ஜுஹூ பீச் அருகில் ஒரு வீடு உள்ளது. இருந்தாலும் சென்னையில் ஒரு பங்களா கட்ட அவர் தீவிரமாகியுள்ளார். அதற்குக் காரணம் உள்ளது. தமிழ் சினிமா மீது அவருக்கு திடீரென பிடிப்பு அதிகமாகி விட்டது. தமிழ் ரசிகர்கள் என் மீது பாசமழை பொழிகிறார்கள் என ஒரு ஆங்கில் பத்திரிகைக்கு அவர் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.

தற்போது வெடி படத்திற்குப் பின்னர் தீவிர தமிழ் சினிமா அபிமானியாகி விட்டார் அம்மணி. வெடி படத்திற்குப் பின்னர் அவரைத் தேடி நிறையப் படங்கள் வர ஆரம்பித்துள்ளனவாம். ஏற்கனவே வாரணம் ஆயிரம் படத்திற்குப் பி்ன்னர் அவருக்கு நிறைய தமிழ்ப் படங்கள் வந்தபோதும் அவர் தொடர்ந்து இந்தியிலேயே ஆர்வம் காட்டி வந்தார். தற்போதுதான் திடீரென அவருக்கு தமிழ் மீது அலாதிப் பற்று கிளம்பியுள்ளது. இதையடுத்து சென்னை வரும்போது தங்க, நீச்சல் குளத்துடன் கூடிய சொகுசு பங்களா கட்டத் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஈ. சி.ஆர். ரோட்டில் நல்ல இடம் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்.

தான் தொடர்ந்து தமிழிலேயே நடிக்கவிருப்பதை கோலிவுட்டினருக்கு தெரிவிக்கும் வகையிலேயே மும்பையைப் போல இங்கேயும் ஒரு பங்களாவை எழுப்பத் திட்டமிட்டுள்ளார் சமீரா என்கிறார்கள்.

நல்லா கட்டுங்க.. !
 

சீயான் வீட்டில் வளரும் 'செல்ல ரவுடி'


நடிகர் விக்ரம் தன் வீட்டில் ஒரு கிளியை வளர்த்து வருகிறார். செல்லமாக வளர்க்கும் அந்தக் கிளிக்கு முரட்டுத்தனமாக ரவுடி என்று பெயர் வைத்துள்ளாராம் சீயான்.

நடிகர் விக்ரமுக்கு கிளிகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதனால் தன் வீட்டில் பல வெளிநாட்டுக் கிளிகளை வளர்த்து வருகிறார். மனிதர்களுக்கு பெயர் வைப்பது போன்று அந்தக் கிளிகளுக்கும் பெயர் வைத்துள்ளார். அதில் ஒரு கிளியின் பெயர் என்ன தெரியுமா 'ரவுடி'. அந்த கிளி விசேஷமானது. நாம் என்ன சொன்னாலும் அதைத் திருப்பிச் சொல்லுமாம் அந்த ரவுடிக் கிளி.

என்னடா இது கிளிக்குப் போய் ரவுடியின்னு பெயர் வைத்திருக்கிறாரே என்று நினைக்கிறீர்களா. எதையும் வித்தியாசமாகச் செய்யும் சீயான் கிளிக்கு வித்தியாசமாக இருக்கட்டுமே என்று நினைத்து இந்த பெயரை வைத்திருந்திருப்பார்.

அதுவும் சரிதான், ஒரு படத்தில் நான் போலீஸ் இல்லை பொறுக்கி என்பார் விக்ரம். இப்போதோ இது கிளி அல்ல ரவுடி என்கிறார். சீயான் சொன்னா சரிதான்...!
 

ஜோடியா நடிக்கலையே தவிர....! - த்ரிஷா பற்றி விஷால்


த்ரிஷாவுடன் எப்படியாவது ஜோடி சேர வேண்டும் என பல முறை முயற்சித்தோம். சமரன் படத்தில்தான் அது நிறைவேறியது என்றார் நடிகர் விஷால்.

விஷால் நடிக்கும் புதிய படம் சமரன். திரு இயக்கும் இப்படத்தில் திரிஷாதான் விஷாலுக்கு ஜோடி.

வெடி படம் சுமாராகப் போனாலும், அந்த கவலையை மறைத்துக் கொண்டு தன் அடுத்த படம் குறித்த புரமோஷனில் தீவிரமாகிவிட்டார் விஷால்.

சமரன் படத்தில் திரிஷாவுடன் நடிப்பது குறித்து அவர் கூறுகையில், "த்ரிஷான்னா எனக்கு எப்போதும் ரொம்பப் பிடிக்கும். ஏற்கனவே அவருடன் ஜோடி சேர விரும்பினேன். தாமிரபரணி படத்திலிருந்து தொடர்ந்து 3 படங்களில் அவரிடம் கால்ஷீட் பெற முயன்றோம். அது நடக்கவில்லை. இப்போதுதான் நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

படத்தில் ஒன்றாக நடிக்கவில்லையே தவிர, நாங்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள். விருந்து நிகழ்ச்சிகளில் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம்...", என்றார்.
 

நானும் 'அசின், நயன்' ஆவேன்- அனன்யா


ஒரு நாள் நானும் அசின், நயன்தாரா இடத்துக்கு வருவேன் என்று நடிகை அனன்யா தெரிவித்துள்ளார்.

நாடோடிகள் மூலம் புகழ் பெற்றவர் அனன்யா. அடுத்தடுத்த படங்கள் அவருக்கு அப்படி ஒன்றும் பெயர் வாங்கிக் கொடு்ககவில்லை. இந்நிலையில் தான் எங்கேயும் எப்போதும் ரிலீஸானது. அதன் மூலம் அனன்யாவுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.

இது குறி்த்து அவர் கூறியதாவது,

எங்கேயும், எப்போதும் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. ஒரு நடிகையின் இமேஜ் இயக்குனர் கையில் தான் உள்ளது. உங்களுக்கு அசின், நயன்தாரா இடத்திற்கு வர ஆசையில்லையா என்று கேட்கிறார்கள். ஒரு கதாநாயகியின் இமேஜை மாற்றும் இயக்குனரின் படத்தில் நடிக்கும்போது நான் அந்த இடத்தை அடைவேன் என்றார் நம்பிக்கையுடன்.

சீக்கிரமா யாரச்சும் நல்ல இயக்குநராக வந்து அனன்யாவின் இமேஜை மாத்தி விடுங்க சார்!
 

எனக்கொரு படம் பண்ணுங்களேன்: ராகவா லாரன்சிடம் அஜீத் வேண்டுகோள்


அஜீத் குமார் காஞ்சனா படத்தைப் பார்த்து விட்டு அதை இயக்கி, நடித்த ராகவா லாரன்ஸை தன் வீட்டிற்கு அழைத்து மனதாரப் பாராட்டியுள்ளார்.

அஜீத் குமாரின் 50-வது படம் மங்காத்தா சூப்பர் ஹிட்டாகியுள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் மங்காத்தா படப்பிடிப்பில் பிசியாக இருந்த அஜீத் தற்போது தான் சற்று ரீலாக்சாக உள்ளார். அதனால் பிற நடிகர்களின் படத்தைப் பார்த்து ரசிக்கிறார்.

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த காஞ்சனா படத்தைப் பார்த்த அஜீத் உடனே போனை எடு்தது லாரன்ஸை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். தல கூப்பிட்டவுடன் அவரும் காரை எடுத்துக் கொண்டு அஜீத் வீட்டுக்கு வந்தார். அஜீத் அழைத்திருக்கிறாரே, என்ன விஷயமாக இருக்கும் என்று லாரன்ஸுக்கு ஒரே குழப்பம்.

வீட்டுக்குள் நுழைந்தவுடன் அஜீத் லாரன்ஸை தட்டிக் கொடு்தது காஞ்சனா படத்தை இப்பதான் பார்த்தேனப்பா, படம் சூப்பரா இருக்கு. எனக்கொரு படம் பண்ணிக் கொடுங்களேன் என்று கேட்க லாரன்ஸுக்கோ ஒரே குஷியாகிவிட்டது.
 

திருச்சியில் கிராமம் கிராமமாக குஷ்பு பிரச்சாரம்!


திருச்சி: அக்டோபர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் திருச்சி மேற்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் கே என் நேருவை ஆதரித்து கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்கிறார் நடிகை குஷ்பு.

இந்தத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்ஜோதி, தி.மு.க. வேட்பாளர் கே.என். நேரு ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், தி.மு.க. பிரமுகர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

தி.மு.க. வேட்பாளர் கே.என். நேருவை ஆதரித்து நடிகை குஷ்பு நாளையும், நாளை மறுநாளும் கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்கிறார்.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

குஷ்பு பிரச்சாரம் செய்யும் இடங்கள்:

5-ந்தேதி மாலை 4 மணி: பஞ்சப்பூர், ராமச்சந்திரா நகர், 5 மணி: கிராப்பட்டி, 5.30: கருமண்டபம், பிரார்டியூர், 6 மணி: பெரிய மிளகுபாறை, பஞ்சு கிடங்கு, பீமாநகர், நியூராஜா காலனி, இரவு 7 மணி: செடல் மாரியம்மன் கோவில், 7.15 மணி: மார்கிஸ் பேட்டை, கூனியூர், மேலப் புதூர், இரவு 8 மணி: ஒத்தக் கடை, 8.30 மணி: புத்தூர் நால்ரோடு, 9 மணி:- சீனிவாச நகர், இரவு 9.30 மணி: உய்யகொண்டான் திருமலை. 6-ந்தேதி மாலை 4 மணி:-

அரவானூர், பாண்டமங்கலம், மாலை 4.30 மணி: நாச்சியார் கோவில், பாக்குப்பேட்டை, 5 மணி: மின்னப்பன் தெரு, நவாப்தோட்டம், 5.30 மணி: திருத்தாந்தோணி ரோடு, சீரைக்கொல்லை, சோழராஜ புரம், 6 மணி: தில்லை நகர், வடவூர், ராஜ்மானியபுரம், இரவு 7 மணி: வாமடம், அண்ணாநகர், 7.30 மணி: ஆழ்வார் தோப்பு, 8 மணி தென்னூர் மந்தை, பட்டாபி ராமன் தெரு, இரவு 8.30 மணி குடித்தெரு, காந்திபுரம். நடிகர் வாகை சந்திரசேகர் இன்று திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேருவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

மாலை 4 மணிக்கு அரவானூரில் பிரசாரத்தை தொடங்கி இரவு 9 மணிக்கு சண்முகாநகரில் பிரசாரத்தை முடிக்கிறார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி 10-ந்தேதி திருச்சியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
 

அரவான் பாடல்களை வெளியிடும் ஏஆர் ரஹ்மான்!


இந்த ஆண்டு நல்ல சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த படங்கள் இரண்டு. ஒன்று சற்குணம் இயக்கி வெளியாகியுள்ள வாகை சூட வா. அடுத்தது வசந்த பாலன் இயக்கத்தில் வரவிருக்கும் அரவாண். இரண்டுமே பீரியட் பிலிம்ஸ் என்ற வகையைச் சேர்ந்த வரலாற்றுப் படங்கள்.

இவற்றில் வாகை சூட வா வெளியாகி, பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. நாளுக்கு நாள் ரசிகர் கூட்டமும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

அடுத்து அரவாண் முறை.

அரவாண் படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்குத் தயாராகி வருகிறது. அதன் முதல் படியாக, நாளை புதன்கிழமை மாலை இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடக்கிறது.

அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ள இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் பாடகர் கார்த்திக். ஏ ஆர் ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்டு, அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் செல்லப் பிள்ளையாக பின்னர் மாறியவர் கார்த்திக்.

இசையமைப்பாளராக அறிமுகமாக இதைவிட ஒரு சிறந்த வாய்ப்பு அவருக்கு வாய்த்திருக்காது எனலாம்.

பாடல்களை வெளியிடப் போகிறவர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். பெற்றுக் கொள்பவர் மணிரத்னம். இந்த மேடையிலேயே, தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக இயக்குநர் சிகரத்துக்கு ஒரு பாராட்டு விழாவையும் எடுக்க இயக்குநர் வசந்த பாலன் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமை ஜெயா தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!
 

செக்ஸ், வன்முறை.... 'உயிரின் எடை 21 அயிரி'க்கு 41 வெட்டு!


உயிரின் எடை 41 அயிரி (கிராம்) என்ற படத்துக்கு தணிக்கை குழு 41 இடங்களில் கட் கொடுத்துள்ளது. இந்த வெட்டுக்களோடு படத்தை வெளியிடலாம். இல்லையேல் படத்தை வெளியிடக் கூடாது என்று தணிக்கைக் குழு கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது.

எ ட்ரீம் வேர்ல்டு தயாரித்துள்ள 'உயிரின் எடை 21 அயிரி' படத்தை, ஏகன் இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். வினிதா ஹீரோயின்.

ஊரே நடுங்கும் தாதா படுத்த படுக்கையாகி கிடக்கும்போது உயிரின் மதிப்பை, அன்பை எப்படி உணர்கிறான் என்பதை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளாராம் ஏகன். ஆனால் பச்சையான உடலுறவுக் காட்சிகள் மற்றும் கோரமான வன்முறை காட்சிகள் உள்ளதால் படத்துக்கு இத்தனை கட் கொடுத்துள்ளார்களாம்.

ஆனால் இதனை கடுமையாக எதிர்க்கிறார் ஏகன். அவர் கூறுகையில், "தணிக்கைக் குழு இரட்டை நிலையை எடுக்கிறது. இதைவிட மோசமான இந்திப் படங்களை அப்படியே அனுமதிக்கிறார்கள். உதாரணம் 'எ கேர்ள் இன் யெல்லோ பூட்ஸ்'. ஆனால் எங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுகிறார்கள்.

பெண்களின் தலைமுடியை பிடித்து இழுக்கும் காட்சிக்கு கூட கட் கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் சின்ன தயாரிப்பாளர்கள். எதிர்த்து எதுவும் கேட்க முடியில்லை. படத்தில் சென்சார் வெட்டிய இடங்களை திரையில் கருப்பாக காட்டி அதை ரசிகர்களுக்கு தெரிவிக்க இருக்கிறோம். வரும் 17-ம் தேதி படத்தை வெளியிடப் போகிறோம்," என்றார்.
 

வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் உன்னதமானவர் ரஜினி! - ஷாரூக் கண்ணீர்


யார் நமக்கு என்ன செய்தார்கள் என்பதையெல்லாம் மனதில் வைக்காமல் பெருந்தன்மையோடு நடந்து கொள்வதில் ரஜினிக்கு நிகரில்லை.

திரையுலகில் தன்னை வசைபாடியவர்கள், கடுமையாக விமர்சித்தவர்கள் அத்தனை பேருக்கும், ஆபத்தான நேரத்தில் கைகொடுத்தவர் இதே ரஜினிதான். அந்தப் பட்டியல் பெரியது.

ரஜினி ரோபோ என்ற பெயரில் படம் நடிக்க ஆரம்பித்தபோது, ஷாரூக்கான் அந்த 'ரோபோ' என்ற உச்சரிப்பில் வரும் ஏழு தலைப்புகளை மும்பையில் தன் பெயரில் பதிவு செய்தார். ஷங்கர் இயக்கும் இந்தப் படம் எப்படி ரோபோ எனும் தலைப்பில் வெளிவரப்போகிறது பார்க்கலாம் என்ற நினைப்பில்.

ஆனால் படம் இந்தியில் அதே பெயரில் வெளியானது வேறு விஷயம்.

இன்று அதே ஷாரூக்கானுக்காக தனது உடல் நிலையைக் கூடப் பொருட்படுத்தாமல், வீட்டில் எழுந்த எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு (சௌந்தர்யா தவிர வேறு யாரும் ரஜினியின் இந்தப் பயணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லையாம்!), மும்பைக்குப் பயணம் செய்து நடித்துக் கொடுத்து வந்திருக்கிறார் என்றால், அதை என்னவென்று சொல்வீர்கள்!

ரஜினியின் இந்த குணம், ஷாரூக்கானை ரொம்பவே ஆடிப் போக வைத்துவிட்டது.

இதுகுறித்து தனது ட்விட்டரில், "மிகுந்த குழப்பத்தில், புரிதலின்மையில், மன அழுத்தத்தில் நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம். அப்போது ரஜினி சார் செட்டுக்குள் வந்தார். கடவுள் எதற்காக சினிமா படைத்தார் என்பதைப் புரிந்து கொண்டேன். ரஜினி எங்களை ஆசீர்வதித்தார். நாங்கள் முழுமை பெற்றோம். அவரது பெருந்தன்மை என் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது. அவருக்கும் குடும்பத்துக்கும் என் அன்பும் பிரார்த்தனைகளும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த நாள், ரஜினி நடித்துக் கொடுத்த காட்சியை தனது எடிட் ஸ்டுடியோவில் போட்டுப் பார்த்து பிரமித்துப் போனாராம் ஷாரூக்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ""சௌந்தர்யாவுடன் அமர்ந்து எடிட் செய்த ரஜினி சாரின் காட்சிகளைப் பார்த்தேன். ரஜினியின் வானத்திலிருந்து வந்த தெய்வப் பிறவி போல தெரிகிறார். காட்சியைப் பார்த்த மொத்த அலுவலகமும் சந்தோஷத்தில் விம்மியது... வாவ்! (Sitting with soundarya & seeing the edit of rajini sir's shoot.he is like a celestial being...the whole office is beaming with happiness.WOW) என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி உங்களுக்காக இவ்வளவு தூரம் வந்து நடித்துக் கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்தீர்களா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "உண்மையாக சொல்ல வேண்டும் என்றால்... எதிர்ப்பார்க்கவில்லை. காரணம், இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. ரஜினி சார் என்னை அழவைத்துவிட்டார் என்றால் மிகையல்ல. உண்மையான ஜென்டில்மேன், மனிதாபிமானி. என் வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் உன்னதமானவர் ரஜினி," என்றார்.
 

என்னைக் கண்டுக்கவே இல்லையே! - பூனம் வருத்தம்


வெடி படத்தில் நான் ஒருத்தி நடிச்சிருக்கேன் என்பதையே மறைத்துவிட்டார்களே என மகா வருத்தத்தில் உள்ளார் நடிகை பூனம் கவுர்.

பிரபு தேவா இயக்கத்தில், விஷால் - சமீரா ரெட்டி நடித்து வெளியாகியுள்ள படம் வெடி. சௌர்யம் என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக் இது.

இந்த தெலுங்குப் பதிப்பில், கதாநாயகிக்கு இணையாக முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருந்தார் பூனம் கவுர் (நெஞ்சிருக்கும் வரை, தம்பிக்கோட்டை படங்களில் நடித்தவர்).

தமிழில் இந்தப் படம் தயாரானபோது, அதே வேடத்தில் நடிக்க அழைத்தார் பிரபுதேவா. பூனமும் நடித்தார். ஆனால் இவர் நடித்தார் என்பதையே படம் பார்த்த போதுதான் தெரிந்து கொள்ள முடிந்தது. இத்தனைக்கும் ஹீரோயினுக்கு சமமான ரோல் வேறு!

வெடி பட விளம்பரங்கள், பேட்டிகளில் கூட இவருக்கு முக்கியத்துவம் தரவில்லையாம்.

இதனால் வெறுத்துப் போன பூனம், படத்தின் ஹீரோ அல்லது இயக்குநரைப் பார்த்து கடுமையாக சண்டை போட வேண்டும் என்று சென்னைக்கு வந்துள்ளார் இரு தினங்களுக்கு முன்.

வந்து பார்த்தால், பிரபு தேவா, விஷால் யாருமே ஊரில் இல்லையாம். போன் செய்தாலும் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாக வருகிறதாம்.

விடுங்க அம்மணி... படமே தியேட்டர்களில் இல்லைன்னு ரிப்போர்ட் வர ஆரம்பிச்சிடுச்சி... இனி சண்டை போட்டு என்ன ஆகப் போவுது!
 

எந்திரன் ஓராண்டு நிறைவு... கொண்டாடும் ரசிகர்கள்!


இந்திய சினிமாவில் சிகரம் தொட்ட படம் என்றால் இன்றைய தேதிக்கு ரஜினியின் எந்திரன்தான்.

மொழிகளைத் தாண்டி, மாநில எல்லைகள் கடந்து ஏபிசி என 'ஆல் க்ளாஸிலும்' வசூலில் பின்னியெடுத்த படம் இது. முதல் 10 வாரங்களுக்குள் அதிகாரப்பூர்வமாக ரூ 375 கோடியை வசூலாகக் குவித்தது எந்திரன். வெளிநாடுகளில் ரூ 75 கோடிக்கும் மேல் வசூலித்த ஒரே இந்தியப் படமும் எந்திரன்தான்.

33 நாடுகள், மொத்தம் 3000 திரையரங்குகள், இந்தியாவில் மட்டுமே 2000 அரங்குகளுக்கு மேல், ஆந்திரத்தில் மட்டும் 700 திரைகள்.... என இந்தியத் திரையுலகே அதிரும் வகையில் வெளியான படம் எந்திரன்.

வெளியாகி முதல் ஷோ முடிந்ததுமே படத்தின் பிரமாண்ட வெற்றி பறைசாற்றப்பட்டது இந்தப் படத்துக்கு மட்டுமே.

எந்திரன் படம் இந்தியாவில் வெள்ளிவிழா கண்டது. வெளிநாடுகளில் பலவற்றில் 50 நாட்களும், இரு நாடுகளில் 100 நாட்களும் ஓடியது. இத்தனை அரங்குகளில் வெளியாகிய பிறகும் இவ்வளவு நாட்கள் ஓடுவது எத்தனை பெரிய அதிசயம் என்பது சினிமாக்காரர்களுக்குத்தான் தெரியும்!

இந்தப் படம் வெளியாகி கடந்த அக்டோபர் 1-ம் தேதியுடன் ஒரு வருடம் பூர்த்தியானது. இதையொட்டி, ரஜினியின் ரசிகர்கள் இந்தப் படத்தை பல்வேறு அரங்குகளில் சிறப்புக் காட்சியாக திரையிடவைத்து பார்த்து மகிழ்ந்தனர்.

சென்னை தவிர்த்து, திருச்சி போன்ற நகரங்களிலும் எந்திரனை மறுபடியும் திரையிடக் கோரி, முதல் நாள் முதல் காட்சியின் போது காட்டிய அதே உற்சாகத்துடன் பார்த்தனர்.

ரசிகர் மன்றத்தினர், எந்திரன் முதல் ஆண்டு நிறைவு தினத்தை இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். சினிமா ஒன்றுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை!
 

நடிகை ரீமா கல்லிங்கலுக்கு தடை வருமா?


நடிகை ரீமா கல்லிங்கலுக்கு மலையாளத் திரையுலகில் நடிக்கத் தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில்தான் தயாரிப்பாளரை சந்திக்க மறுத்ததற்காக நடிகை நித்யா மேனனுக்கு நடிக்கத் தடை விதித்தது தயாரிப்பாளர் சங்கம். இதனால் எழுந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்னொரு நடிகைக்கு சிக்கல் எழுந்துள்ளது.

மலையாளத்திலும், தமிழிலும் நடித்து வருபவர் ரீமா கல்லிங்கல். தமிழில் யுவன் யுவதி படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மலையாளத்தில் நீலத்தாமரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சிபி மலயில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடிக்க ரீமா வரவில்லை என்று தெரிகிறது. மாறாக வேறு ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு அவர் போய் விட்டாராம்.

இதையடுத்து இயக்குநர் சிபி மலயில், மலையாள நடிகர்சங்கம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து ரீமாவுக்கு நடிக்கத் தடை விதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீப காலமாகவே தென்னிந்திய நடிகைகள் பலரும் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். கன்னடத்தில் நடிகை நிகிதாவுக்கு தடை விதித்து பரபரப்பை ஏற்படுத்தி பின்னர் அதை வாபஸ் பெற்றனர். மலையாளத்தில் நடிகைகள் நித்யா மேனன், ரீமாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழிலும் கூட சோனாவால் பிரச்சினை எழுந்து அடங்கியது என்பது நினைவிருக்கலாம்.