பில்லா -2 இசை: ரஜினி வந்ததும் வச்சிக்கலாம்!


அஜீத் நடிக்கும் பில்லா -2 படத்தின் இசை வெளியீடு எப்போது என்பதில் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை படக்குழுவினர்.

காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதே நேரம் இந்த நிலைக்கு அவர் எந்த வரையிலும் காரணமல்ல.

படத்தயாரிப்பு தரப்பில், மார்ச் மாத இறுதியில் படத்தின் இசை வெளியீடு நடைபெறும் என முடிவு செய்திருந்தனர். ஆனால், ஏப்ரலில்தான் பாடல் வெளியீடு நடக்கும் என்று தெரிகிறது.

காரணம் முன்பு 'பில்லா' படத்தினைத் துவக்கி வைத்து, பாடல் வெளியிட்டு வாழ்த்திய ரஜினிகாந்த் இப்படத்தின் இசை வெளியீட்டிலும் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார்களாம். ஆனால், ரஜினி தன் 'கோச்சடையான்' படத்திற்காக லண்டன் சென்றுவிட்டார்.

படப்பிடிப்பு முடித்து, சென்னைக்கு ஏப்ரல் மத்தியில் தேதி வருகிறார்.

எனவே, இசை வெளியீட்டை அவர் வந்த பிறகு, ஏப்ரல் மாதத்திலேயே வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.

பிழைக்கத் தெரிஞ்சவங்க!

 

2013ல் சிம்புவுக்கு கல்யாணம்: அம்சமான பெண் தேடுகிறார்களாம்!


நடிகர் சிலம்பரசனுக்கு கல்யாண ஆசை வந்து விட்டதாம். வரும் 2013ம் ஆண்டு திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில்,

திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டேன். அடுத்த ஆண்டு திருமணம். கடந்த 4 ஆண்டுகளாக திருமணத்தை தள்ளிப்போட்டேன். இனியும் தள்ளிப்போட முடியாது என்று கூறியுள்ளார்.

ஒரு வழியாக மகன் திருமணத்திற்கு சம்மதித்துள்ளதால் அவரது தாய் மகிழ்ச்சியாக உள்ளார். சிம்பு மனதில் யாராவது இருக்கிறாரா என்று கேட்டதற்கு அவர் அப்படியெல்லாம் யாரும் இல்லை, நீங்களே நல்ல அழகான பெண்ணா பாருங்கள் அம்மா என்று கூறிவிட்டாராம். பிறக்கும் குழந்தை அழகாக இருக்க வேண்டுமாம். அதனால் தான் அழகான பெண்ணாக பார்க்கச் சொல்லியிருக்கிறார் சிம்பு.

சிம்பு கடந்த காலத்தில் பலருடனும் கிசுகிசுக்கப்பட்டார். கடைசியாக அவரது நெருக்கமான வட்டத்தில் நயன்தாரா இருந்தார். அதையடுத்து ஆளுக்கொரு திசையாகப் பிரிந்து சென்றனர். நயன்தாரா, பிரபுதேவா பக்கம் சாய்ந்தார். இருந்தாலும் சிம்பு சோலோவாகவே இருந்து வந்தார். நயனதாராவும் கூட, சமீபத்தில் பிரபுதேவாவை விட்டுப் பிரிந்து விட்டார்.

இந்த நிலையில்தான் சிம்பு தனது அம்மாவிடம் பெண் பார்க்கும் பொறுப்பை கொடுத்துள்ளார்.


 

பெப்சியை உடைக்க தயாரிப்பாளர்கள் சதி - அமீர் குற்றச்சாட்டு


சென்னை: சினிமா தொழிலாளர்களின் மிக வலுவான அமைப்பான பெப்சியை உடைக்க தயாரிப்பாளர்கள் சதி செய்வதாக இயக்குநர் அமீர் குற்றம் சாட்டியுள்ளார்.

சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சிக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் மோதல் நீடித்து வருகிறது. நடிகர் கார்த்தியின் படத்துக்கு இடையூறு செய்ததாகக் கூறி பெப்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் தயாரிப்பாளர்கள்.

நேற்று சென்னையில் சிறப்பு கூட்டத்தை கூட்டி பெப்சிக்கு போட்டியாக புதிய தொழிலாளர் அழைப்பை தொடங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு பெப்சி சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கு பெப்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதெல்லாம் தங்களை பயமுறுத்த தயாரிப்பாளர் செய்யும் வேலை என்று கூறியுள்ளனர் பெப்சி நிர்வாகிகள்.

இயக்குநர் அமீர் பெப்சி தலைவர் எம். ராமதுரை, பொதுச் செயலாளர் ஜி. சிவா, பொருளாளர் அங்கமுத்து சண்முகம் ஆகியோர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அவர்கள் கூறுகையில், "1996-ல் திரையுலகில் நடந்த ஸ்டிரைக் 7 பேர் உயிர் போக காரணமாக அமைந்தது. பெப்சியை உடைத்து உயிர்ப்பலி ஏற்படும் நிலையை உருவாக்கக் கூடாது. தயாரிப்பாளர்களுடன் 4 வருடமாக சம்பள உயர்வு கேட்டு போராடி வருகிறோம். ஆனால் சம்பளத்தை உயர்த்த மறுக்கின்றனர்.

தயாரிப்பாளர் சங்கம் பெப்சியையும் அமீரையும் குற்றச்சாட்டி அறிவித்த படப்பிடிப்பு ரத்து என்பது நடைபெறவே இல்லை. நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் 34 படப்பிடிப்புகள் சிறப்பாக நடந்தன. தயாரிப்பாளர் சங்கம் படம் எடுக்காதவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

40 ஆண்டுக்கும் மேலாக பாரம்பரியம் பெற்று மூன்று முதல்வர்களால் வார்த்தெடுக்கப்பட்ட பெப்சியை உடைத்து புதிய சங்கத்தை உருவாக்குவோம் என சவால் விடுவதை கண்டிக்கிறோம். 15 சங்கங்கள் ஊதிய உயர்வு பேசி முடிக்கப்பட்ட நிலையில் தொழிலாளர் நல ஆணையத்தையும் அதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசையும் உதறி விடுவது போன்று நடப்பது சரி அல்ல.

உண்மையான தயாரிப்பாளர்களுக்கு பெப்சி தொடர்ந்து ஆதரவு அளிக்கும். பெப்சியை உடைக்க யார் முயன்றாலும் உயிரை கொடுத்து காப்போம். முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் சந்தித்து பேசுவோம்," என்றனர்.


 

விக்ரமின் 'தெய்வத்திருமகள்' படத்துக்கு ஒசாகா திரைப்பட விழாவில் விருது!


ஜப்பானில் நடந்த ஒசாகா திரைப்பட விழாவில், விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் படத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

விக்ரம் நடித்து, விஜய் அழகப்பன் இயக்கத்தில் வெளிவந்த படம், 'தெய்வத்திருமகள். 5 வயது மனநிலையில் உள்ள ஒரு இளைஞனையும், அவனுடைய பெண் குழந்தையையும் பற்றிய படம் இது.

விக்ரமுடன் அனுஷ்கா, அமலாபால், சந்தானம், பேபி சாரா ஆகியோரும் நடித்து இருந்தார்கள். யுடிவி நிறுவனத்துடன் இணைந்து மோகன் நடராஜன் தயாரித்திருந்தார். இந்த படம் ஏற்கெனவே சில திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளது.

சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஒசாகா திரைப்பட விழா விருது விழாவிலும் இந்தப் படம் பங்கேற்றது. ஆசியாவின் மிக முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றாக ஓசாகா விழா பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்பட விழாவில், 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. இதில் விக்ரமின் 'தெய்வத்திருமகள்' படம், 'God's own Child' என்ற பெயரில் ஆங்கில சப்-டைட்டிலுடன் திரையிடப்பட்டது.

இந்தப் படத்துக்கு கிராண்ட் பிரிக்ஸ் சிறந்த படம் மற்றும் சிறந்த பொழுதுபோக்கு படம் ஆகிய 2 விருதுகள் அளிக்கப்பட்டன.

விழாவில் நடிகர் விக்ரம், டைரக்டர் விஜய் அழகப்பன் ஆகிய இருவரும் கலந்துகொண்டு, விருதுகளை பெற்றுக்கொண்டார்கள்.

 

அழகுக்காக ஆண்டுக்கு ரூ 72 லட்சம் செலவழிக்கும் 43 வயது நடிகை!


பிரபல ஆலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் தன் அழகைப் பாதுகாக்க மட்டும் ஆண்டுக்கு ரூ 72 லட்சம் செலவழிக்கிறாராம்.

43 வயதாகும் ஜெனிபர் அனிஸ்டன் இபபோதும் கூட ரசிகர்களின் விருப்ப நாயகியாக உலா வருகிறார். இதுமட்டுமின்றி உணர்ச்சியை தூண்டும் கவர்ச்சிகரமான பெண் (Hottest woman of all time) என்ற பட்டத்தையும் அவர் சமீபத்தில் பெற்றார்.

அவரது அழகு மற்றும் கவர்ச்சியின் ரகசியம் என்ன என்பதற்கு ஷைன் இணையதளம் விடையளித்துள்ளது.

இவர் அழகு மருத்துவத்துக்கு மட்டும் ஆண்டுதோறும் சுமார் ரூ.72 லட்சம் (90 ஆயிரம் பவுண்ட்) செலவு செய்கிறாராம். கிட்டத்தட்ட தினமும் அதற்காக ரூ.20 ஆயிரம் ஒதுக்குகிறார். யோகா பயிற்சிக்கு ரூ.48 ஆயிரமும், கூந்தல் அலங்காரத்துக்கு ரூ.46 ஆயிரமும் செலவு செய்கிறாராம்.

ஹாஹாஹா...

இந்த செய்தியை இணையதளத்தில் படித்ததும் சிரித்து மகிழ்ந்தாராம் ஜெனிபர்.

'அழகைப் பராமரிப்பது சாதாரண விஷயமல்ல. அது ஒரு கலை. அதை ரசித்து செய்கிறேன். அதனால் என்னால் இப்படி இருக்க முடிகிறது. ஆனால் இந்த மாதம் இதில் குறிப்பிட்டுள்ள அளவுக்கு செலவழிக்கவில்லை', என்று பதிலளித்துள்ளார் ஜெனிபர்.

 

கோபிசந்த் நடிக்கும் புதிய தமிழ்ப் படம் - ஹீரோயின் நயன்தாரா!


கோபிசந்த் நாயகனாக நடிக்கும் புதிய தமிழ்ப் படத்தில் அவருக்கு ஜோடியாகிறார் நயன்தாரா.

ஜெயம் படத்தில் அதிரடி வில்லனாக வந்தவர் கோபிசந்த். பின்னர் தெலுங்கில் ஹீரோவாக பிஸியாகிவிட்டார்.

இப்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் அவர் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படம் தமிழில் நேரடிப் படமாகும். தெலுங்கிலும் வெளியாகிறது.

தனுஷ் நடித்த உத்தமபுத்திரன், தரணி இயக்கிய ஒஸ்தி, விரைவில் வெளியாகவுள்ள விஷாலின் சமரன் போன்ற படங்களைத் தயாரித்த ஜெய்பாலாஜி ரியல் மீடியா நிறுவனம் இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கிறது.

தேவதையைக் கண்டேன், மலைக்கோட்டை, திருவிளையாடல் என வெற்றிப் படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

எகிப்து, சீனா, துருக்கி போன்ற நாடுகளின் வித்தியாசமான லொகேஷன்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்க உள்ளது.

 

இன்று 'திருமதி' ஆகிறார் ரீமா சென்!


தென்னிந்தியாவின் கவர்ச்சி மிகு நாயகிகளில் ஒருவரான ரீமா சென் இன்று இல்லற பந்தத்தில் நுழைகிறார். இன்று மாலை நடைபெறும் திருமண விழாவில் ரீமா சென், தனது காதலரான ஷிவ் கரன் சிங்கை கரம் பிடிக்கிறார்.

மின்னலே படம் தமிழ் ரசிகர்களின் மனதில் மின்னலாகப் பாய்ந்தவர் ரீமா சென். அதன் பின்னர் திமிரு, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களில் தனது அபாரமான நடிப்பு மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களைக் கவர்ந்தார்.

நீண்ட காலமாக தனது உறவினரும் பப் உரிமையாளருமான ஷிவ் கரன் சிங்கை காதலித்து வந்தார். இதுகுறித்து கிசுகிசுக்கள் வந்தபோதெல்லாம் அதை தொடர்ந்து மறுத்து வந்தார். சமீபத்தில்தான் தனது காதலையும், திருமணத்தையும் அவர் உறுதி செய்தார்.

சமீபத்தில் இவர்களின் திருமணத்தை இரு வீட்டாரும் நிச்சயம் செய்தனர். இதையடுத்து இன்று மாலை 3 மணிக்கு டெல்லி அருகே உள்ள ஷிவ் கரன் சிங்குக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் வைத்து திருமணம் நடைபெறுகிறது.

இதில் இரு வீட்டுக்கும் நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள், திரையுலகினர் கலந்து கொள்கின்றனர். தமிழகத்திலிருந்து நடிகை சோனியா அகர்வால் உள்ளிட்ட ரீமாவுக்கு நெருக்கமான சிலர் பங்கேற்கின்றனர்.

 

காதல் ஜோடிகளுக்காக 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' ஸ்பெஷல் ஷோ!


ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற புதிய படம், 50 காதல் ஜோடிகளுக்கு சிறப்புக் காட்சியாக போட்டுக் காட்டப்பட்டது.

படத்துக்கு ஒரு வித்தியாசமான விளம்பரமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

சேரனின் உதவி இயக்குநராக பணியாற்றிய ஷண்முகராஜ் எழுதி இயக்கியுள்ள படம் இது. மொத்தம் 71 புதுமுகங்கள் நடிக்கின்றனர். இவர்களுக்கு 372 நாட்கள் நடிப்புப் பயிற்சி கொடுத்த இயக்குநர், முழுக் காட்சிகளையும் முதலில் ஒரு ஹேண்டி கேமில் பதிவு செய்து படமாக்கி, அதை வைத்துக் கொண்டு, தனியாக சினிமாவுக்கென்று ஒரு ஷூட்டிங் நடத்தினார்.

இதனால் காட்சிகள் நினைத்த மாதிரியே வெகு நேர்த்தியாக வந்ததாம்.

'உங்க காதல் ஜெயிக்க, 5 டி (T)யை பாலோ பண்ணுங்க... கண்டிப்பா சக்ஸஸ்தான்' என்று இந்தப் படத்துக்காக விளம்பரம் செய்யப்பட்டதால், அந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள காதலர்கள் எக்கச்சக்க ஆர்வம் காட்டினார்களாம்.

எனவே, ஒரு வித்தியாச முயற்சியாக, படத்தையே காதலர்களுக்கு சிறப்புக் காட்சியாக போட்டுக் காட்ட முடிவு செய்தார் இயக்குநர்.

அதன் படி தமிழகம் முழுவதிலுமிருந்து தன்னைத் தொடர்பு கொண்டவர்களில் 50 காதல் ஜோடிகளை தேர்ந்தெடுத்து, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் சிறப்புக் காட்சியாக ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழியை திரையிட்டுக் காட்டினர்.

படம் பார்த்த ஜோடிகள் அனைவரும் திருப்தியும் பாராட்டும் தெரிவித்ததோடு, காதல் ஜெயிக்க என்ன பண்ணனும் என்ற ரகசியம் தெரிஞ்சிடுச்சி என்றனர் உற்சாகத்துடன்!

மெய்யாலுமாவா?!


 

குவியும் வாய்ப்புகள்.. சம்பளத்தை ஏற்ற ஹன்சிகா யோசனை


அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவிவதால் சம்பளத்தை உயர்த்தலாமா என்று நடிகை ஹன்சிகா மோத்வானி யோசனை செய்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து ஊத்திக் கொண்ட படங்களிலேயே நடித்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் நடித்தி ராசியோ, என்னவோ அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிகின்றனவாம்.

சூர்யாவுடன் சிங்கம் 2, சிம்புவுடன் வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் அவர் ஏக குஷியாக உள்ளார். அது தான் நம்மைத் தேடி இத்தனை வாய்ப்புகள் வருகிறதே, சம்பளத்தை உயர்த்தினால் என்ன என்று யோசனை செய்து கொண்டிருக்கிறார்.

அவர் நடிக்க வந்ததில் இருந்தே பெரிய ஹீரோக்கள் படங்களாகத் தான் கிடைக்கிறது. விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சூர்யா என்று முன்னணி நாயகர்களுடன் நடிக்கிறார். முதல் ஒரு சில படங்களில் சொதப்பினாலும் தற்போது அவர் தேறி வருகிறார் என்று தான் கூற வேண்டும்.

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பதை புரிந்து வைத்துள்ளார் ஹன்சிகா.


 

சைப்-கரீனாவின் 'ஏஜென்ட் வினோத்' படத்திற்கு பாக்.கில் தடை


சைப் அலி கான் தயாரித்து நடிக்கும் ஏஜெண்ட் வினோத் படத்திற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சைப் அலி கான் தயாரி்த்து நடிக்கும் படம் ஏஜெண்ட் வினோத். இதில் அவருக்கு ஜோடியாக அவரது காதலி கரீனா கபூர் நடித்துள்ளார். ஸ்ரீராம் ராகவன் தயாரித்துள்ள இந்த படத்தை சைபுடன் சேர்ந்து தினேஷ் விஜன் தயாரித்துள்ளார்.

சைப் பெரிதும் எதிர்பார்க்கும் இந்த த்ரில்லர் படம் வரும் 23ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதில் அவர் உளவாளியாக நடித்துள்ளார். இந்த படத்தில் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ பற்றி பேசப்பட்டுள்ளதாம். அதனால் இந்த படத்திற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் வரும் பியார் கி பங்கி என்ற பாடலின் இசை காப்பியடிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய இசைக்குழுவான பாரோபாக்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களுக்கும், இசையமைப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் அந்த பாடலின் இசை காப்பியடித்ததில்லை என்று இணை தயாரிப்பாளர் தினேஷ் தெரிவித்தார். இந்நிலையில் பாகிஸ்தானில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

கல்யாண செலவுக்காக திருமண மண்டபத்தை விற்றாரா சினேகா?


நடிகை சினேகா தனது திருமண செலவுக்காக பண்ருட்டியில் உள்ள தனது திருமண மண்டபத்தை விற்றுவிட்டார் என்று பரபரப்பாக கூறப்படுகின்றது.

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்ததன் மூலம் காதலர்களாக மாறியவர்கள் நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும். இந்தப் படத்துக்காக சில தினங்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்க நேர்ந்தபோது காதல் மலர்ந்ததாம். முதலில் காதல் குறித்து மௌனமாக இருந்து வந்த அவர்கள் பிறகு ஒப்புக் கொண்டனர். இருவீட்டாரும் பச்சைக் கொடி காட்டவே அவர் விரைவில் தம்பதிகளாகின்றனர்.

அவர்களின் திருமணம் வரும் மே மாதம் 11ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. திருமணத் தேதி நெருங்குவதால் சினேகா தான் ஒப்புக் கொண்ட படங்களை வேக, வேகமாக முடித்துக் கொடுத்து வருகிறார்.

முன்னதாக கோச்சடையான் படத்தில் ரஜினியின் தங்கையாக நடிக்க சினேகா தேர்வானார். ஆனால் படப்பிடிப்பு மே மாதத்தில் நடக்கும் என்று கூறியதால் அவர் படத்தில் இருந்து விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் தனது திருமணச் செலவுக்காக சொந்த ஊரான பண்ருட்டியில் உள்ள தனது திருமண மண்டபத்தை விற்றுவிட்டார் என்று கூறப்படுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மண்டபம் விற்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் சினேகா தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.


 

ராதிகா கடனைத் தீர்க்க எந்த சொத்தையும் விற்கவில்லை-விஷால்


நடிகை ராதிகாவின் கடனை அடைக்க தனது வீட்டை விற்கவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால், சமீரா ரெட்டி நடத்த வெடி படத்தை அவரது அண்ணன் விஷால் கிருஷ்ணா தயாரித்தார். இதனை விநியோகம் செய்யும் பொறுப்பை நடிகை ராதிகாவின் ராடான் டி.வி. நிறுவனம் ஏற்றது. இதற்காக அந்நிறுவனத்துக்கு ரூ.12 கோடி தருவதாக விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் போட்டு கொடுத்ததாகவும் அதில் ரூ. 9 கோடியை தர மறுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் விஷால் மீது நடிகை ராதிகா புகார் செய்தார். அந்த புகார் மனுவில், "விஷாலின் வெடி படத்தை விநியோகம் செய்யும் பணிகளை ராடான் நிறுவனம் செய்து கொடுத்தது. இதற்காக விஷால் ரூ.12 கோடி தருவதாக ஒப்புக் கொண்டார். அந்த ஒப்புதலை கடிதமாகவும் எழுதிக் கொடுத்தார். படத்துக்கான சாட்டிலைட் உரிமை மூலம் ரூ.3 கோடி கிடைக்கிறது. அந்த தொகை போக மீதி ரூ. 9 கோடிக்கு விஷால் கையெழுத்திட்டு செக் கொடுத்தார்.

அந்த செக்கை வங்கியில் செலுத்திய போது பணமின்றி திரும்பி வந்துவிட்டது. இதன் பிறகு பல முறை விஷாலை தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி கேட்டும் அவர் தரவில்லை. எனவே விஷாலிடம் இருந்து ரூ.9 கோடி பணத்தை வாங்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைடுத்து விஷால் அண்ணா நகரில் தனது பெயரில் உள்ள வீட்டை விற்று கடனை அடைத்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

எனது பெயரில் உள்ள வீட்டை விற்று கடனை அடைத்ததாக வந்த செய்தி வெறும் வதந்தியே. சென்னையிலும், ஹைதராபாத்திலும் எனது பெயரில் சொத்துக்களே இல்லாதபோது அதை எப்படி விற்க முடியும். சொத்துக்கள் வாங்குவதும், விற்பதும் சகஜம். ஆனால் அதை கடன் பிரச்சனையோடு தொடர்புபடுத்தி பேசுவது வருத்தமாக உள்ளது.

ராதிகாவுக்கு பணம் கொடுக்க வேண்டியது எனது அண்ணனுக்கும், அவருக்கும் உள்ள பிரச்சனை. அதில் தேவையில்லாமல் என்னை இழுத்துவிட்டனர். மேலும் அந்தப் பிரச்சனை முடிந்து விட்டது என்றார்.

 

படப்பிடிப்பில் அஜ்மல் காயம்!


வெற்றிச் செல்வன் படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் அஜ்மல் காயம் அடைந்தார்.

நடிகர் அஜ்மல் கதாநாயகனாகவும், ராதிகா ஆப்தே கதாநாயகியாகவும் நடிக்கும் படம் வெற்றிச்செல்வன். இப்படத்தை ருத்ரன் இயக்கி வருகிறார். நடிகர் விஜய்க்காக உருவாக்கப்பட்ட கதை இது. ஆனால் அவரால் நடிக்க முடியாததால், அஜ்மல் நடிக்கிறார்.

வெற்றி செல்வன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஊட்டியில் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை ஊட்டி சேரிங் கிராஸ் பகுதியில் கதாநாயகன் அஜ்மல், கதாநாயகி ராதிகா ஆப்தே ஆகியோர் ஒரு ஆட்டோவில் வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது திடீரென ஆட்டோ ரோட்டின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. தடுப்பு சுவர் தடுக்காவிட்டால் ஆட்டோ பள்ளத்தில் உருண்டு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். ஆட்டோ கவிழ்ந்ததில் கதாநாயகன் அஜ்மல், காதாநாயகி ராதிகா ஆப்தே, இயக்கநர் ருத்ரன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை படப்பிடிப்பு குழுவினர் மீட்டனர்.

இதுகுறித்து ருத்ரன் கூறுகையில், "அந்த தடுப்பு சுவர் இல்லாவிட்டால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். இந்த சம்பவத்தில் இருந்து மீள வெகு நேரமாகிவிட்டது.
விபத்து ஏற்பட்ட நேரத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. நல்லவேளை பெரிய விபரீதம் ஏதும் இல்லாமல் தப்பித்தோம்," என்றார்.