பில்லா -2 வெளிநாட்டு உரிமை: 1 மில்லியன் டாலருக்கு விலைபோனது!!


அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தின் வெளிநாட்டு உரிமை, இதுவரை அவரது படங்கள் விற்காத அளவு 1 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.

அஜீத்தின் பில்லா 2 படப்பிடிப்பு நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளதால், படத்தை வாங்க உள்ளூரில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.

பில்லா 2-ன் வெளிநாட்டு உரிமையை ஜிகே மீடியா என்ற நிறுவனம் ஒன்று ரூ.5 கோடியே 30 லட்சத்துக்கு விலைக்கு வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது 1 மில்லியன் டாலர்.

இதுவரை அஜீத் படம் எதுவும் இவ்வளவு தொகைக்கு வெளிநாட்டில் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மங்காத்தா படம்
ரூ.3 கோடியே 7 லட்சத்துக்குதான் விலை போனது. ரஜினி படம்தான் அதிகபட்சமாக ரூ 15 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்து கமல், விஜய், சூர்யா படங்கள் ஏற்கனவே ரூ.5 கோடிக்கு விற்கப்பட்டன. இந்த ரூ 5 கோடி லிஸ்டில் இப்போது அஜீத் படமும் சேர்ந்துவிட்டது!
 

என் படத்தோட தலைப்பு 'பூக்கடை'ன்னு நானா சொன்னேன்? - மணிரத்னம்


தன்னுடைய அடுத்த படத்துக்கு இன்னும் பெயரே வைக்கவில்லை. அதற்குள் படத்தலைப்பை வைத்து சர்ச்சை கிளப்புகிறார்களே, என்று வருத்தப்பட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

கார்த்திக் மகன் கெளதமை வைத்து அடுத்த படத்துக்கான பணிகளை தொடங்கியுள்ளார் மணிரத்னம். இந்தப் படத்துக்கு தலைப்பு 'பூக்கடை' என கடந்த சில வாரங்களாக மீடியாவில் செய்திகள் வருகின்றன.

ஆனால் மணிரத்னம் தரப்பில் மவுனமாக இருந்தனர். பொதுவாகவே மணிரத்னம் தன் படத்தின் தலைப்பை சொல்வதில்லை. வதந்தி மாதிரி ஆரம்பித்து, மீடியாவே உறுதி செய்தி செய்தியாக போட்ட பிறகு, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் விளம்பரம் கொடுப்பார் நாளிதழ்களில். அப்போதுதான் அதிகாரப்பூர்வமாக அந்தத் தலைப்பு உறுதியாகும்.

இதை ஒரு விளம்பர டெக்னிக்காக மணிரத்னம் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. இருவர், ஆயுத எழுத்து, ராவணன் உள்பட பல படங்களுக்கு தலைப்பு விஷயம் இப்படித்தான் நிகழ்ந்தது.

எனவே இந்த முறை பூக்கடை என்று மீடியாவில் செய்தி வெளியானதும், வழக்கம்போல பின்னர் இந்த தலைப்பை உறுதிப்படுத்துவார் மணிரத்னம் என்று எதிர்ப்பார்த்தனர்.

இந்த நிலையில்தான், பூக்கடை என்ற தலைப்பு தங்களுடையது என இயக்குநர் சரணின் உதவியாளராக இருந்த சதீஷ் என்பவர் புகார் கூறினார்.

இதுபற்றி மணிரத்னத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், என் படத்தோட தலைப்பு 'பூக்கடை'ன்னு நான் சொல்லவே இல்லையே. நான் வைக்காத தலைப்புக்கு எதற்காக பிரச்சினை?' என்று சிம்பிளாக கேட்க, பிரச்சினை அத்துடன் முடிந்துவிட்டது.

ஹை... இதுகூட நல்ல டெக்னிக்கா இருக்கே!
 

மலையாள 'ஆதாமின்டே மகனு'க்கு ஆஸ்கர் போட்டியில் இடமில்லை!!


லாஸ் ஏஞ்சல்ஸ்: மலையாளப் படமான ஆதாமின்டே மகன் அபு ஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

சர்வதேச சினிமாவில் மிக உயரிய விருதாகப் போற்றப்படும் ஆஸ்கர் விருதுகள் வரும் ஜனவரி 26-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கோடக் தியேட்டரில் இந்த விழா நடக்கிறது. உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான படங்கள் இந்தப் போட்டிக்கு வந்துள்ளன. இந்தியாவின் சார்பில் எந்திரன் உள்பட 9 படங்கள் பரிந்துரைக்கப்பட்டு, கடைசியில் ஆதாமின்டே மகன் அபு என்ற மலையாளப்படம் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டது.

சலீம் அகமது இயக்கிய இந்தப் படம் ஏற்கெனவே இந்தியாவில் தேசிய விருது உள்பட பல விருதுகளைப் பெற்றது. எனவே சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற போட்டியின் இறுதிச் சுற்றில் நுழைந்துவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் இப்போது இந்தப் படம் தேர்வாகவில்லை. பெல்ஜியம், கனடா, டென்மார்க், இத்தாலி, ஈரான், இஸ்ரேல், மொராக்கோ, போலந்து மற்றும் தைவானைச் சேர்ந்த படங்கள் இப்போது இறுதிச் சுற்றில் உள்ளன.

இந்தியாவிலிருந்து வந்த படங்களில் இதுவரை ஆஸ்கர் இறுதிச் சுற்றை எட்டிப் பிடித்தவரை மூன்றே பங்கள்தான். மதர் இந்தியா, சலாம் பாம்பே மற்றும் லகான் ஆகியவைதான் இறுதிச் சுற்றுவரை போயின.
 

தேவ கவுடா கட்சியில் சேர்ந்தார் பரபரப்பு நடிகை பூஜா காந்தி!


பெங்களூர்: நிர்வாண கோலத்தில் நடித்து கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நடிகை பூஜா காந்தி (தமிழில் கொக்கி படத்தில் நடித்தவர்), தேவே கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் நேற்று முறைப்படி இணைந்தார்.

அவருக்கு தேவே கவுடா மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி உறுப்பினர் அட்டை வழங்கினார்.

முங்காரு மலே என்ற படம் மூலம் கன்னடத்தில் முன்னணி நடிகையானவர் பூஜா காந்தி. சஞ்சனா என்ற பெயரில் தமிழில் கொக்கியில் அறிமுகமாகி, பின்னர் அர்ஜுன் ஜோடியாக திருவண்ணாமலையில் நடித்தார்.

கன்னடப் படம் தண்டுபால்யாவில் நிர்வாணமாகத் தோன்றி சமீபத்தில் சர்ச்சை கிளப்பினார். கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததும் தான் அப்படி நடிக்கவில்லை என்று மறுத்தார். ஆனாலும் எதிர்ப்பு ஓயவில்லை.

இந்த நிலையில் திடீரென அரசியலில் குதித்துள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் தான் சேர்ந்தது குறித்து பூஜா கூறுகையில், "முன்னாள் முதல்வர் குமாரசாமியை எனக்கு மிகவும் பிடிக்கும். கர்நாடகத்தில் நான் படப்பிடிப்புக்குப் போகும் இடங்களிலெல்லாம் குமாரசாமியின் நல்ல திட்டங்களைச் சொல்லி மக்கள் வாழ்த்தினர். அதனால்தான் இந்தக் கட்சியில் இணைந்தேன்," என்றார்.

பூஜா காந்திக்கு முன் நடிகை ரம்யா காங்கிரஸில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. பழைய நடிகை ஜெயந்தி (பாலச்சந்தரின் பேவரிட் நடிகை), தாரா மற்றும் ஸ்ருதி ஆகியோர் ஏற்கெனவே அரசியலில் உள்ளனர்.
 

காட்டுப்புலிக்கு மீண்டும் சென்சார்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஸ்டண்ட் மாஸ்டர் டினுவர்மா இயக்கும் படம், 'காட்டுப்புலி'. இந்தியில் 'வீக் என்ட்' பெயரில் வருகிறது. அர்ஜூன் ஹீரோ. பியாங்கா தேசாய் ஹீரோயின். இப்படத்துக்கு முதலில் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இது, இந்திப் படம் என்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால், இது நேரடி தமிழ்ப் படம்தான் என்று சொன்ன படக்குழுவினர், அதற்கான ஆதாரங்களை அளித்தனர். மறுபரிசீலனை செய்த சென்சார் குழுவினர், படத்தைப் பார்த்துவிட்டு, 'ஏ' சான்றிதழ் வழங்கினர்.


 

இதுவும் உண்மையில்லையாம் சொல்கிறார் அஞ்சலி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'எங்கேயும் எப்போதும்' படத்தில் ஜோடியாக நடித்த பின், ஜெய்யுடன் காதல் என்று வெளியான தகவல்களால், இனி அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று அஞ்சலி சொல்லியிருந்தார். இதற்கிடையே, மீண்டும் அவர்கள் ஒரு தெலுங்குப் படத்தில் ஜோடி சேர இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அஞ்சலி கூறியதாவது:

இது உண்மை இல்லை. ஒரு விஷயத்தில் நான் தெளிவாக முடிவெடுத்து விட்ட பின், இதுபோன்ற தகவல்கள் வருவது வேதனையாக இருக்கிறது. காதலும், திருமணமும் என் தனிப்பட்ட விஷயம். அதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இதில் எது நடந்தாலும், அதை வெளிப்படையாகச் சொல்வேன்.


 

மைக் செட் பாண்டிக்கு உருவான ஜீப்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ராசு மதுரவன் இயக்கத்தில் சபரீஷ், சுனேனா நடிக்கும் படம், 'மைக் செட் பாண்டி'. இப்படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல்லில் நடந்தது. மனோரமா நடிப்பில் ரிலீசான 'பாட்டி சொல்லைத் தட்டாதே' படத்துக்காக விசேஷமாக வடிவமைக்கப்பட்ட கார், ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்படுத்தியது. அதுபோல், 'மைக் செட் பாண்டி'க்கு பல லட்ச ரூபாய் செலவில், பிரத்யேகமாக ஒரு ஜீப் வடிவமைக்கப்பட்டு, அதில் மைக் கட்டப்பட்டது. இந்த ஜீப் முக்கிய வேடத்தில் நடிக்கிறது. 'படம் ரிலீசாகும் தியேட்டர்களில், இந்த ஜீப் ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்படும்' என்றார், ராசு மதுரவன்.


 

கமலுடன் நடிக்கும் இஷா ஷர்வானியை மணக்கிறார் ஜாகீர்கான்!


பிரபல இந்தி - தமிழ் நடிகை இஷா ஷர்வானியை திருமணம் செய்கிறார் பிரபல கிரிக்கெட் வீரர் ஜாகீர்கான்.

ஜாகீர்கானும் நடிகை இஷா ஷர்வானியும் 2005-ம் ஆண்டு சந்தித்துக் கொண்டனர். ஆரம்பத்தில் நட்பு, பின்னர் காதல் என்ற வழக்கமான முறைப்படி இருவரும் நெருக்கமானார்கள். அவ்வப்போது பிணக்கு வந்து பிரிந்ததும் உண்டு.

இப்போது பெற்றோர் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி தொடர் முடிந்ததும் மார்ச் மாதம் கடைசியில் திருமணம் நடைபெறும் என்று ஜாகீர்கான் தரப்பில் கூறப்படுகிறது. மார்ச் மாதத்தில் திருமணத்தை முடிப்பதில் இரு வீட்டாரும் ஆர்வமாக உள்ளனர்.

ஒருவேளை மார்ச் மாதம் தவறினால் அக்டோபர் மாதத்தில் நிச்சயம் திருமணம் நடைபெறும் என்கிறார்கள். திருமண வரவேற்பை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஜாகீர்கான் இதுவரை 82 டெஸ்ட் மற்றும் 191 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார். டெஸ்டில் 285 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 273 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார்.

தமிழில் பிஸியான நடிகை

நடனத்தில் புகழ்பெற்ற இஷா, கிஸ்னா என்ற இந்திப் படம் மூலம் நடிக்க வந்தார். இப்போது தமிழில் பிஸியாகிவிட்டார். கமலுடன் விஸ்வரூபம், சூர்யாவுடன் மாற்றான் படங்களில் நடித்துவருகிறார். விக்ரமுடனும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். குஜராத்தில் பிறந்த இவர் இப்போது குடும்பத்துடன் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் செட்டிலாகிவிட்டார்.
 

ஆசை ஆசை... விலைமாதுவா நடிக்க ஆசை! - ஸ்ரேயா


அது என்னமோ தெரியவில்லை... எந்த நடிகையைக் கேட்டாலும் ஒரு படத்திலாவது விலை மாதுவா நடிக்கணும்னு ரொம்ப ஆசயாயிருக்கு என்பதை ஒரு ஸ்லோலன் மாதிரி தவறாமல் சொல்லிவிடுகிறார்கள்.

இந்த நடிகைகள் லிஸ்டில் புதிதாக சேர்ந்திருப்பவர் ஸ்ரேயா. பெரிதாக வாய்ப்புகள் இல்லாத சூழலில், கடைத் திறப்பு, விளம்பரங்கள் என பிஸியாக இருக்கும் இவர், இப்போது ஆங்கிலப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

சமீபத்தில் சென்னை வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், "நடிகைகள் எல்லோருக்கும் விலைமாது வேடத்தில் நடிக்க ஆர்வம் உண்டு (அதான் ஏன்?!). எனக்கும் அப்படி நடிக்க ஆசை இருக்கிறது.

வேதம் படத்தில் அனுஷ்கா அந்த வேடத்தில் கலக்கியிருந்தார். என்னுடைய ஆசையும் நிறைவேறிவிட்டது. இப்போது வங்காள மொழி படமொன்றில் நான் விலை மாதுவாக நடிக்கிறேன்.

மிக சிறந்த இடத்தை பிடித்த நடிகைகள் எல்லோருமே இந்த கேரக்டரில் நடித்து உள்ளனர். இந்தியை விட தென் இந்திய மொழி பட வாய்ப்புகளே எனக்கு அதிகம் வருகின்றன. இந்தி திரையுலகம் ஆணாதிக்கம் மிகுந்ததாக உள்ளது. நடிகைகளுக்கு அங்கு முக்கியத்துவம் இல்லை. கவர்ச்சிக்கும் டூயட் பாட்டுக்கும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் என்னை தொடர்புபடுத்தி பேசுகின்றனர். அவர் யார் என்றே எனக்கு தெரியாது. ஒரு பேஷன் ஷோவில் மட்டும் அவரைப் பார்த்தோடு சரி. சல்மான்கானுடன் நான் நெருக்கமாக இருப்பதாகவும் கிசுகிசுக்கின்றனர். அவர் நல்ல மனிதர். எனக்கு மரியாதை அளிப்பவர். எல்லா பெண்களையுமே அவருடன் இணைத்து பேசுவது சகஜம். அதை சம்பந்தப்பட்ட நடிகைகள் விளம்பரமாக எடுத்துக் கொள்வதுண்டு. ஆனால் நான் அது போல் மலிவான விளம்பரம் தேட மாட்டேன்.

ரஜினிகாந்த், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, ரவிதேஜா என்று எனனை விட வயதானவர்களுடன் ஜோடியாக நான் நடிக்கிறேன் என்கின்றனர். ஷம்மி கபூர், அமிதாப்பச்சன் காலத்தில் இருந்து இன்று வரை வயதான ஹீரோக்கள் இளம் நடிகைகளுடன்தான் ஜோடியாக நடிக்கின்றனர்.சினிமாவில் இதெல்லாம் சகஜம், தவறில்லை," என்றார்.
 

மாணவர்களின் மதுபான கடை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விஸ்காம் மாணவர்களின் மாண்டேஜ் மீடியா தயாரிக்கும் படம், 'மதுபான கடை'. புதுமுகங்கள் கார்த்திவேல், தியானா உட்பட பலர் நடிக்கின்றனர். கமலக்கண்ணன் இயக்குகிறார். அவர் கூறியதாவது: நாட்டில் பெரும்பாலானோர் மது அருந்துகின்றனர். சிலர் தெரிந்தும், சிலர் தெரியாமலும் குடிக்கின்றனர். இது ஒருபுறம். ஆனால், மறுபுறம் தீவிர மது ஒழிப்பு பிரசாரமும் நடக்கிறது. இந்த முரண்பாடுகளையும், குடிமகன்களின் அன்றாட பிரச்னைகளையும் நகைச்சுவையுடன் சொல்லும் படம் இது.

ஒவ்வொரு மதுபான கடையிலும் சுவாரஸ்யமான விஷயங்களும், வேதனைச் சம்பவங்களும் கொட்டப்படுகிறது. காதல் உருவான மகிழ்ச்சியும், தோல்வியின் விரக்தியும் இங்குதான் அதிகமாக பரிமாறப்படுகிறது. அவற்றை யதார்த்தமாகச் சொல்லும் படம். இதற்காக பிரமாண்ட மதுபான கடை அரங்கு அமைத்து, 32 நாட்கள் ஷூட்டிங் நடத்தினோம். மது குடிக்கும் காட்சியில், நடிகர்கள் நிஜமாகவே குடித்து நடித்தனர். கேட்க நாதியற்ற ஒரே சமூகம், குடிமகன்களின் சமூகம்தான். அவர்களுக்கான படம் இது.


 

'வெளியில் ஆயிரம் பேசிக்கிருவாய்ங்க... அதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமாண்ணே!' - வடிவேலு


சினிமாவில் நான் தொடர்ந்து நடிப்பேன். அடுத்து ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். அதற்காகத்தான் இத்தனை நாள் இடைவெளி, என்று கூறினார் வடிவேலு.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வடிவேலு பிரச்சாரம் செய்தபோது, விதிமுறை மீறல் நடந்ததாக தேர்தல் ஆணையம் வடிவேலு மீது வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் நேற்று நத்தம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் வடிவேலு.

விசாரணை முடிந்து, வெளியில் வந்த நடிகர் வடிவேலு நிருபர்களிடம் பேசுகையில், "நானாகத்தான் சினிமாவுக்கு ஒரு இடைவெளி கொடுத்துள்ளேன். தொடர்ந்து நான் சினிமாவில் நடிப்பேன். புதிய படத்தில் ஒன்றில் நான் கதாநாயகனாக நடிக்க உள்ளேன். அதற்காக நல்ல கதை கிடைத்து உள்ளது. தொடர்ந்து நான் மக்களை சிரிக்க வைக்க வருவேன். அரசியல் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை," என்றார்.

அதிமுகவில் சேரப்போகிறீர்களாமே என்று ஒருவர் கேட்டபோது, 'வெளியில் ஆயிரம் பேசிக்கிருவாங்க... அதுக்கெல்லாம் நாம பதில் சொல்லிட்டிருக்க முடியுமாண்ணே', என்று கேட்டுவிட்டு கிளம்பினார் வடிவேலு.

வடிவேலுவை பார்க்க ஏராளமான மக்கள் நீதிமன்றம் முன்பு திரண்டுவிட்டனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நடிகை குஷ்பு மீதும் நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சில தினங்களுக்கு முன்புதான் குஷ்பு இந்த நீதிமன்றத்துக்கு வந்து போனார்.
 

ஊர்வசியுடன் நடிக்க பயம் தருண்கோபி.

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஊர்வசியுடன் நடிக்க பயந்தேன்' என்று தருண்கோபி கூறினார். மேலும் அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் மாமியார், மருமகன் உறவு என்பது அற்புதமானது. அதைச் சொல்லும் படம்தான் 'பேச்சி யக்கா மருமகன்'. இதில் எனது மாமியாராக ஊர்வசி நடிக்கிறார். 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள ஹீரோயினுடன் இணைந்து நடிக்கும்போது பயமாக இருந்ததது. எனக்குப் பெரிய அளவில் நடிப்பு வராது.

ஆனால், மருமகன் கேரக்டரை உள்வாங்கிக் கொண்டு, அவருடன் நின்றிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். பிறகு அவரே எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார். ஷூட்டிங் முடிந்தபோது, அவரை என் நிஜ மாமியாராகவே உணர்ந்தேன். படத்தைப் பார்த்த கவிஞர் வைரமுத்து, 'தருண்கோபி நடிக்கவில்லை. கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். அவருக்கு விருது கிடைக்கும். அதற்குமுன், என் கண்ணீர்த் துளிகளையே விருதாகத் தருகிறேன்' என்றார். இதையே பெரிய விருதாக நினைக்கிறேன்.


 

கோச்சடையானில் ஆதி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வசந்தபாலன் இயக்கத்தில் ஆதி நடித்துள்ள படம், 'அரவான்'. அடுத்த மாதம் ரிலீஸ். தெலுங்கில் 'ஏகவீரா' பெயரில் 'டப்' ஆகிறது. இதையடுத்து ஆதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படம், 'கோச்சடையான்'. இதுகுறித்து அவர் கூறியதாவது: 'அரவான்' படத்தின் டிரெயிலரைப் பார்த்த சவுந்தர்யா, அவர் இயக்கும் 'கோச்சடையான்' படத்தில் நடிக்க கேட்டார். பிறகு இப்படத்தின் ஸ்கிரிப்ட் எழுதி, டைரக்ஷன் மேற்பார்வை பொறுப்பேற்றுள்ள கே.எஸ்.ரவிகுமாரும் பேசினார்.

ரஜினி, கத்ரீனா கைப், சினேகா போன்றோர் படத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசை. விரைவில் ஷூட்டிங் தொடங்குகிறது. எனது கேரக்டர் பற்றி இப்போது சொல்ல முடியாது. தற்போது கிருஷ்ணவம்சியின் உதவியாளர் குமார் தமிழ், தெலுங்கில் இயக்கும் 'குண்டெல்லோ கோதாரி' படத்தில் நடிக்கிறேன். டாப்ஸி, லட்சுமி மன்ச்சு ஹீரோயின்கள். இதன் ஷூட்டிங் ராஜமுந்திரியில் நடக்கிறது.


 

ஜீவா ஜோடியானார் த்ரிஷா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்த வருடம் அதிக படங்களில் நடிக்க இலக்கு வைத்திருப்பதாக சொன்னார், த்ரிஷா. இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு இந்தியில் நடிக்கச் சென்றதால், தமிழில் சிறிது இடைவெளி ஏற்பட்டது. இந்த ஆண்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகிறேன். தமிழில் 3 படங்கள், தெலுங்கில் 3 படங்களில் நடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருக்கிறேன்.
கமர்ஷியல் படங்கள் மட்டுமின்றி, நல்ல கதையம்சமுள்ள படங்களையும் தேர்வு செய்து நடிப்பேன். 'வாமனன்' இயக்குனர் அகமது சொன்ன கதை என்னைப் பெரிதும் கவர்ந்தது. என் நடிப்புத்திறமையை வெளிப்படுத்த அதிக வாய்ப்புள்ள கதை. ஜீவா ஹீரோ. முதல்முறையாக அவருடன் ஜோடி சேர்கிறேன்.


 

கொள்ளைக்காரன் - திரைப்பட விமர்சனம்


நடிப்பு: விதார்த், சஞ்சிதா ஷெட்டி, ரவிசங்கர், செந்தி, பேபி வர்ஷா
இசை: ஜோகன்
பிஆர்ஓ: மவுனம் ரவி
தயாரிப்பு: பிரசாத் சினி ஆர்ட்ஸ்

இயக்கம்: தமிழ்ச் செல்வன்

மண் மணத்தோடு இந்தப் பொங்கலுக்கு வந்திருக்கும் படம் கொள்ளைக்காரன். கதை பரிச்சயமானதுதான் என்றாலும், மனதைத் தொடும் விதத்தில் அமைக்கப்பட்ட திரைக்கதையும், விரசமில்லாத நகைச்சுவையும், ஏதோ நமது பக்கத்து வீட்டில் நடப்பதைப் போன்ற இயல்பான சம்பவங்களின் தொகுப்பும் இந்தப் படத்தை தாராளமாகப் பார்க்கலாம் என சொல்ல வைக்கிறது.

ஊரில் சின்னச்சின்ன திருட்டுத்தனங்களும், அவ்வப்போது போக்கிரித்தனமும் செய்து ஊர் வம்பை விலைக்கு வாங்கி வரும் இளைஞர் விதார்த். மனவளர்ச்சி குன்றி தங்கைக்காக, தன் கல்யாணத்தைக்கூட எண்ணாமல் முதிர் கன்னியாக நிற்கும் அக்காவுக்கு அடங்காத தம்பியாக சுற்றித் திரிகிறார். பக்கத்து ஊரில் டுடோரியல் படிக்கும் சஞ்சிதாவுக்கும் விதார்த்துக்கும் காதல்.
விதார்த் ஒரு திருடன் என்ற உண்மை தெரிய வர, காதல் உடைகிறது. காதலிக்காக
திருந்தி நல்லவனாக மாறுகிறார் விதார்த்.

இதற்கிடையே அந்த ஊர் பெரும்புள்ளிக்கும் விதார்த்துக்கும் சின்னதாக உரசல். சரியான நேரம் பார்த்து அந்த உரசலுக்கு பழி வாங்குகிறான் பெரும்புள்ளி. கோயில் நகையைத் திருடிவிட்டு அதை விதார்த் மீது சுமத்துகிறான். இதில் இருவருக்கும் நடக்கும் கைகலப்பில், விதார்த்தின்
மனவளர்ச்சி குன்றிய தங்கை பலியாகிறாள். கோபம் கொண்டு பொங்கி எழும் விதார்த் பெரும்புள்ளியை பழிவாங்குகிறார்.

கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் போகிறது கதையி்ன் முதல்பாதி. வசனங்களில் நகைச்சுவை துள்ளி விளையாடுகிறது. ஊர் பெரும்புள்ளி ரவிசங்கரிடம் நக்கலும் எகத்தாளமுமாக விதார்த் பேசும் காட்சிகளும், அதற்கு ரியாக்ட் பண்ண முடியாமல் ரவிசங்கர் பல்லைக் கடித்துக் கொண்டு திணறுவதும் புதுசு.

சப்பாத்திக் கள்ளியில் சாறெடுத்து அதை பேனா மையாக்கி எழுதுவது போன்ற கிராமத்து இயல்புகள், பழக்க வழங்கங்கள், பேச்சு வழக்குகளை ('ஊளை மூக்கி') போகிற போக்கில் அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் தமிழ்ச் செல்வன்.

விதார்த்துக்கு விளையாட தோதான களம். தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். குருவி (என்ற குமார்!) என்ற ஒரு இளைஞனை பக்கத்திலிருந்து பார்த்தது போன்ற உணர்வைத் தருகிறது அவரது நடிப்பு. ஆடு திருடி விற்ற காசில் ஜோராக புதுத்துணி போட்டு, கறுப்புக் கண்ணாடியுடன்
தெனாவட்டாக ஊரில் இறங்கி, தன்னை யாரும் கவனிக்கவில்லையே என்ற கவலையுடன்,
அங்கும் இங்கும் நடைபோடுவது ரொம்ப எதார்த்தம். கூல்டிரிங்க்ஸ் வாங்கித் தரேன்... நான் எப்படியிருக்கேன்னு சொல்லேன் என்று கையில் சிக்கியவரைப் படுத்தி எடுக்கும் காட்சி கலகல!

விதார்த்தின் அக்காவாக வரும் செந்திகுமாரி வெகு இயல்பாக நடித்திருக்கிறார். எப்போதும் கோபமும் ஆத்திரமுமாக தம்பியிடம் நடந்து கொள்ளும் அவர், கல்யாணம் நிச்சயமான பிறகு, தம்பிக்கு சாதம் பிசைந்து தரும் காட்சியில் நெகிழ வைக்கிறார்.

நாயகியாக அறிமுகமாகியுள்ள சஞ்சிதா மனதைக் கவர்கிறார். உணர்ச்சிகளை வெகு
இயல்பாக வெளிப்படுத்துவது இவரது ப்ளஸ், நல்ல படங்களில் கவனம் செலுத்தினால் துடிப்பான கிராமத்துப் பெண் பாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகையாக திகழ்வார்!

செந்திக்கு மாப்பிள்ளையாக வருபவர் நடிப்பு ரொ்ம்ப பாந்தம். வில்லனாக வரும் ரவி சங்கர் மீது மகா வெறுப்பு வருகிறது பார்ப்பவர்களுக்கு!.

க்ளைமாக்ஸ் வழக்கமானதுதான். ஆனால் பின்னணியில் நரசிம்ம அவதார காலட்சேபம் ஒலிக்க, வித்தியாசமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

ஜோகனின் இசை பரவாயில்லை. இரண்டு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. குறிப்பாக சாமிக் குத்தம் என்ற சோகப்பாடல்.

காட்சி மற்றும் வசனங்களில் காட்டிய அக்கறையை கதையிலும் காட்டியிருக்கலாம் இயக்குனர். அதேபோல திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டியிருந்தால் இந்தப் படம் நிஜமான பொங்கல் விருந்தாக அமைந்திருக்கும்!

-எஸ். ஷங்கர்