நியூயார்க்: ஜேம்ஸ் பாண்ட் படமான குவான்ட்டம் ஆஃப் சொலேஸில் டேனியல் கிரேக் ஜோடியாக நடித்த ஓல்கா குரலென்கோ சிறு வயதில் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுள்ளார்.
ஜேம்ஸ் பாண்ட் படமான குவான்ட்டம் ஆஃப் சொலேஸில் டேனியல் கிரேக் ஜோடியாக நடித்தவர் உக்ரைனைச் சேர்ந்த நடிகை ஓல்கா குரிலென்கோ. 2 முறை விவாகரத்தான அவரின் காமெடி படமான செவன் சைக்கோபாத்ஸ் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது.
தான் நடிகையாவதற்கு முன்பு பட்ட கஷ்டங்கள் குறித்து ஓல்கா கூறுகையில்,
நானும் எனது தாய் மரினாவும் உக்ரைனில் உள்ள சிறிய ஊரான பெர்டியான்ஸ்கில் வாழ்ந்தோம். நான் என் பெற்றோருக்கு ஒரே குழந்தை. மேலும் சில குழந்தைகள் இருந்திருந்தால் எங்கள் பாடு மோசமாகியிருக்கும். அவ்வளவு வறுமை, பசிக் கொடுமையில் இருந்தோம். என் அம்மா தான் எங்கள் துணிகளை தைப்பார். சில நேரம் அவரது ஆடையைக் கிழித்து எனக்கு புதிதாக ஆடை தைத்துக் கொடுப்பார். சில நேரங்களில் சாப்பிட வழியில்லாமல் பட்டினி கிடந்தோம். எனக்கு தந்தை இல்லை. நான் பிறந்த பிறகு தனியாக வாழவே என் தாய் விரும்பினார்.
அவர் ஆசிரியையாக பணியாற்றியும் நாங்கள் மிகவும் ஏழ்மையில் இருந்தோம். எங்கள் ஊரைவிட்டு வெளியே போனதே இல்லை. அப்போது தான் என் அம்மா பணம் சேர்த்து வைத்து நாங்கள் மாஸ்கோ சென்றோம். அப்போது எனக்கு 14 வயது. அங்கே என்னைப் பார்த்த ஒருவர் மாடலிங் செய்ய அழைத்தார். அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளுமாறு என் அம்மா கூறியதால் ஓகே சொன்னேன்.
உக்ரைனில் இருந்து 26 மணிநேரம் ரயிலில் பயணம் செய்து மாஸ்கோவில் மாடலிங் செய்தேன். இவ்வாறு ஒரு ஆண்டு ஓடியது. அதன் பிறகு பாரீஸில் மாடலிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு 16 வயது. பாரீஸுக்கு சென்று மாடலிங் செய்தேன். பேஷன் போட்டோகிராபர் செட்ரிக் வான் மோல் என்பவரை மணந்தேன். அதன் பிறகு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படி தான் ஹாலிவுட்டுக்கு வந்தேன்.
ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நான் நாயகி என்றதும் என்னால் அதை நம்பவே முடியவில்லை என்றார்.