சீமான் கதையைக் காப்பியடித்த லிங்குசாமி- இயக்குநர் சங்கத்தில் பஞ்சாயத்து!

சீமான் கதையைக் காப்பியடித்த லிங்குசாமி- இயக்குநர் சங்கத்தில் பஞ்சாயத்து!

சென்னை: தன் கதையைக் காப்பியடித்துவிட்டார் இயக்குநர் லிங்குசாமி என இயக்குநரும் நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான் இயக்குநர் சங்கத்தில் புகார் தந்துள்ளார்.

சீமான் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவிருந்த பகலவன் கதையில் இப்போது ஜெயம் ரவி நடிக்கிறார்.

நேர்மையான டாக்டர் ஒருவர் சமூக அநியாயங்களைத் தட்டிக் கேட்க முடிவு செய்கிறார். வெறும் டாக்டராக இருந்தால் அது முடியாது என்பதால், ஐபிஎஸ் அதிகாரியாகி, நினைத்ததை முடிக்கிறார்.

நடிகர் சூர்யாவை வைத்து தான் இயக்கும் படத்துக்கு இந்தக் கதையைத்தான் அப்படியே காப்பியடித்திருக்கிறாராம் லிங்குசாமி.

லிங்குசாமி - சூர்யா படத்தின் கதை இதுதான் என்பது தெரிந்ததும், இயக்குநர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் இயக்குநர் சீமான். சங்க நிர்வாகிகள் இருதரப்பிலும் விசாரித்துள்ளனர்.

அதில் சீமான் கதையைத்தான் லிங்குசாமி சூர்யாவுக்குப் பயன்படுத்தப் போகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இயக்குநர் சீமான் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தனது தம்பி படத்திலேயே இந்தக் கதைக்கான முடிச்சை வைத்திருப்பார். "இந்த சமூகத்துக்கு சாதாரண மனுசனா இருந்து எதையும் செய்ய முடியாது. அதிகாரத்துக்கு வா. வந்து செய். நல்லா படிச்சு கலெக்டராகு, போலீசாய்க்கோ... நீ நினைச்சதை அப்பதான் செய்ய முடியும்' என மாதவன் பேசுவதுபோல ஒரு காட்சியே வைத்திருப்பார் சீமான். அதற்கு அடுத்த ஆண்டு அவர் உருவாக்கிய நான்கு கதைகளில் ஒன்றுதான் இந்த பகலவன் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே கதையைக் காப்பியடித்த லிங்குசாமி, இப்போது சூர்யாவுக்காக வேறு கதையை யோசிக்க வேண்டி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

 

விமானிகள் அறையில் உட்கார்ந்தது குற்றம்- நித்யா மேனனிடம் விசாரணை

விமானிகள் அறையில் உட்கார்ந்தது குற்றம்- நித்யா மேனனிடம் விசாரணை

சென்னை: விமானிகளின் கட்டுப்பாட்டு அறையான காக்பிட்டுக்குள் நடிகை நித்யா மேனன் உட்கார்ந்திருந்தது குற்றம். எனவே அவரிடம் விசாரணை நடத்தி, குற்றத்துக்கு தண்டனை வழங்க பரிந்துரைக்கப் போவதாக விமானப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

பிரபல மலையாள நடிகை நித்யா மேனன், தமிழில் 180-ல் அறிமுகமானார்.

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, 'மாலினி 22, பாளையங்கோட்டை' போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பெங்களூரிலிருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் பறந்த அவர், விமானம் எப்படிப் பறக்கிறது என்று பார்க்க ஆசையாக உள்ளது," என்று விமானிகளிடம் கூறியுள்ளார்.

நடிகை ஆயிற்றே... உடனே தாராளமா வாங்க என்று அழைத்து விமானிகள் அமரும் இருக்கையில் அமர வைத்துள்ளனர்.

விமான போக்குவரத்து விதிகளின்படி விமானிகள் அறைக்குள் அந்தியர் எவரும் நுழையக் கூடாது. அது சட்டப்பட்டி குற்றமாகும். இது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு புகார் பறந்தது. இதையடுத்து அதிகாரிகள் புகாரில் சம்பந்தப்பட்ட இரு விமானிகளை தற்காலிக வேலை நீக்கம் செய்தனர்.

அடுத்து நித்யா மேனனையும் விசாரிக்கின்றனர். நித்யாமேனன் விமானிகள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தது குற்றம் என்பதால், அவருக்கு தண்டனை வழங்க பரிந்துரைக்கப் போவதாக விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

நடிகர் வடிவேலு வீட்டு வாட்ச்மேன் திடீர் மரணம்... போலீஸ் விசாரணை

சென்னை: நடிகர் வடிவேலு வீட்டு வாட்ச்மேனாக வேலை பார்த்துவந்த நபர் இன்று காலையில் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வீட்டில் காவலாளியாக நேபாளத்தைச் சேர்ந்த வினோத் கௌதம் என்பவர் வேலை செய்து வந்தவர். இவர் இன்று காலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென கீழே மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

இது குறித்து, விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். வினோத் கௌதமின் உடலை பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மரியான்- சினிமா விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
2.0/5

நடிப்பு: தனுஷ், பார்வதி, அப்புக்குட்டி, ஜெகன், சலீம் கான்
இசை: ஏ ஆர் ரஹ்மான்
ஒளிப்பதிவு: மார்க் கோனிக்ஸ்
தயாரிப்பு: ஆஸ்கர் ரவிச்சந்திரன்
இயக்கம்: பரத் பாலா


கடல் சார்ந்த கதைகளுக்கும் நவீன தமிழ் சினிமாவுக்கும் அவ்வளவாக ஒத்துப் போகவில்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கொஞ்ச நாட்களுக்கு கடல் புறத்துக்கு டூயட் பாட்டு எடுக்க மட்டுமே போவார்கள் தமிழ் சினிமாக்காரர்கள் என்ற வகையில் ஆறுதல் கொள்ளலாம்.

நீரோடியில் இடைவேளை வரை ஒரு காதல்.. சூடானில் ஒரு ஆள் கடத்தல்.. இந்த இரண்டையும் எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுத்திருக்கிறார் பரத்பாலா. அதிகபட்சம் முக்கால் மணி நேரத்துக்குள் முடிய வேண்டிய கதையை, இரண்டரை மணி நேரத்துக்கு இழுத்தால்... மே மாத வெயிலில் வேலூரிலிருந்து கோயம்பேட்டுக்கு நடந்தே வந்த எஃபெக்ட்!

மரியான்- சினிமா விமர்சனம்

சின்ன வயசிலிருந்தே தனுஷை விழுந்து விழுந்து காதலிக்கிறார் பார்வதி. ஆனால் தனுஷ் அந்தக் காதலை ஏற்காமலே இருக்கிறார். தன்னைக் காதலித்து கஷ்டப்படக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில் ஏற்காமல் இருக்கிறாராம். அப்புறம் ஒருவழியாக இடைவேளை நெருங்கும்போது காதலிக்கிறார்கள். ஆனால் இந்தக் காதலுக்கு குறுக்கே வருகிறது, பார்வதியை வளர்த்த 'தொம்சு' வாங்கிய கடன். பணத்தைக் கொடு, இல்லையென்றால் பெண்ணைக் கொடு என்று வந்து நிற்கிறான் கடன்காரன். காதலியாயிற்றே... ஆப்பிரிக்க எண்ணெய்க் கிணற்றில் வேலை செய்ய ஒப்புக் கொண்டு பணம் வாங்கி கடனை அடைக்கிறார் தனுஷ். சூடான் போகிறார். இரண்டு ஆண்டுகள் வேலை. ஊருக்குத் திரும்ப ஒரு வாரமிருக்கும்போது, அந்த ஊர் தீவிரவாதிகளிடம் சிக்குகிறார். எப்படி மீண்டு வந்து காதலியைக் கைப்பிடிக்கிறார் என்பது அரை மணி நேர க்ளைமாக்ஸ்!

ஒவ்வொரு காட்சியையும் நீட்டி முழக்கினால்தான் உயர்ந்த படம் என ஒப்புக் கொள்வார்கள் என்பது பரத் பாலா நம்பிக்கை.

ஒரு சாம்பிள்... தொழிலுக்கு கடலுக்குச் செல்லும் நண்பன் பிணமாகக் கரை திரும்புகிறான் (யார் சுட்டாங்கன்னு சொல்லத் தைரியமில்லேன்னா சும்மா இருக்கலாமே..!). சாதாரணமானவர்கள் சட்டென்று கதறி அழுவார்கள். நம்ம ஹீரோ தேசிய விருது வாங்கினவராச்சே... அப்படியெல்லாம் அழுதிட முடியுமா... வாந்தியெடுப்பது போல ஒரு பாவனை.. அப்புறம் உதட்டைக் கடிக்கிறார்.... எதையோ பார்த்து பயப்படுவது போல ஒரு முறுக்கல்... அப்படியே தலையைப் பிடித்துக் கொள்கிறார்... பிணத்தை எதிரில் வச்சிக்கிட்டு எப்படி அழுதா எடுப்பா இருக்கும்னு ஒத்திகையா பார்ப்பாங்க.. அழுதுத் தொலைக்க வேண்டியதுதானே!

மரியான்- சினிமா விமர்சனம்

அடுத்த காட்சி... நண்பனைப் புதைத்த குழி அருகே அழுது கொண்டிருக்கிறார் தனுஷ். அப்போது தன்னைப் பெண் கேட்டு கடன்காரன் வந்திருப்பதை பரபரப்பாக வந்து சொல்கிறாள். அவள் கஷ்டம் அவளுக்கு. ஆனால் அடுத்த நிமிடம் தனுஷ் காதலியை போட்டு புரட்டி எடுக்கிறார்.. அடி உதைதான்.. இதுக்கு வில்லனே பெட்டராச்சே...

சூடானில் கடத்தல் காட்சிகள் எல்லாம் ஓகேதான். ஆனால் தனுஷின் நண்பனைப் போட்டுத் தள்ளும் தீவிரவாதிகள், தனுஷால் பணம் வராது என்று தெரிந்தும் விட்டு வைத்திருப்பதாகக் காட்டுவது... 2.30 மணி நேரத்துக்கு 'கன்டென்ட்' வேண்டும் என்பதற்காகவா!

அனைத்துக் காட்சிகளையும் சுலபத்தில் ஊகிக்க முடிகிறது. தனுஷும் நண்பரும் தப்புவார்கள். எப்படியும் நண்பர் இறந்துவிடுவார்.. தனுஷ் கடைசியில் அந்த பெண்ணா ஆணா என்று ஊகிக்க முடியாத வில்லனை கொன்றுவிடுவார்... அத்தனைக் காட்சிகளையும்!

மரியான்- சினிமா விமர்சனம்

அந்தப் புலிகள் கனவா... பிரமையா... மனப் பிராந்தியா... இதையும் கொஞ்சம் தெளிவுபடுத்தியிருக்கலாம். அடுத்த நிமிடமே கனவில் பார்வதி வந்து தனுஷுக்கு பாலைவனத்தில் வழிகாட்டுவதைப் போல காட்டியிருப்பதால் 'புலிகள்' பிரமை என்று நாமே ஊகித்துக் கொள்ள வேண்டியதுதான்!

புத்திஜீவிகள் என தங்களைக் காட்டிக் கொள்ளும் சிலர் படமெடுத்தால், காட்சிகள் - வசனங்களில் ஏக அபத்தங்களும் ஆபாசங்களும் கொட்டிக் கிடக்கும். மரியானும் அதற்கு விலக்கில்லை. ஐந்து வயசுக் குழந்தை கூட ஆத்தா என்ற புனித வார்த்தையை அசிங்கமாய் திட்ட பிரயோகப்படுத்தும் தமிழகத்தின் நச்சு சூழலில் கடல், மரியான் மாதிரி படங்கள் தொடர்ந்து வந்தா... வெளங்குன மாதிரிதான்!

அதற்காக படத்தில் எந்தக் காட்சியும் நன்றாக இல்லையா என்றால்... இருக்கின்றன. அந்த இந்திக்காரனை ஜெகன் ஓட்டுவது, கடத்தப்பட்ட பிறகு பட்டினிக் கொடுமையில் தலைவாழை விருந்து சாப்பிடும் பாவ்லா, ஆப்ரிக்க பாலைவனங்களை ஒளிப்பதிவாளர் மார்க் கோனிக்ஸ் காட்சிப்படுத்தியிருக்கும் நேர்த்தி...

மரியான்- சினிமா விமர்சனம்

படத்தின் ஹீரோக்களில் ஒருவரான ஏஆர் ரஹ்மானின் இசையைச் சொல்லியாக வேண்டும். இன்னும் கொஞ்சம் நேரம், கடல் ராசா, நெஞ்சே எழு பாடல்கள்தான் படத்தின் வெறுமையான காட்சிகளை கொஞ்சம் மறக்கடிக்க வைக்கின்றன. குறிப்பாக அந்த நெஞ்சே எழு.. பாடலை பயன்படுத்தியிருக்கும் காட்சி (வந்தே மாதரம் பாதிப்பு இயக்குநருக்கு போகவில்லை!).

'நான் நடிக்கிறேன் நான் நடிக்கிறேன் பாருங்க' என்று காட்டுவதற்கான பிரமாண்ட 'கேன்வாஸ்' மாதிரித்தான் தெரிகின்றன தனுஷ் வரும் காட்சிகள். 'நான் மட்டும் இளைச்சவளா... இதோ பாரு என் பர்மான்ஸை' என்று அஞ்சு ரூபாய்க்கு கேட்டால் ஆயிரம் ரூபாய்க்கு நடிப்பை அள்ளி வீசுகிறார் பார்வதி. ஒரு படத்துக்கு டிக்கெட் எடுத்தா இரண்டு படங்களை இடைவேளையில்லாமல் பார்க்க வைத்த பாதிப்பைத் தரும் இயக்குநர்... (கொஞ்ச நாள்ல இவர்கிட்ட 'என் படத்தை ரசிக்கத் தெரியல யாருக்கும்'னு ஒரு அறிக்கை வரும் பாருங்களேன்!)

இந்த மிகைப்படுத்தல்களைத் தாங்கிக் கொள்ளத் தயாராக இருந்தால்.. மரியானைப் பாருங்க!

Read in English: Mariyaan - Movie Review
 

கோடம்பாக்கத்தில் இருந்து கோட்டைக்கு போக ஆசைப்படும் கார்த்தி

சென்னை: கார்த்திக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது என்று கோடம்பாக்கத்தில் பேச்சாகக் கிடக்கிறது.

இளைய தளபதி விஜய்யை அடுத்ததாக கார்த்திக்கு அரசியல் ஆசை வந்துள்ளது என்று கூறப்படுகிறது. அரசியல் ஆசையால் தான் அவர் அரசியல் கதை படங்களாக பார்த்து பார்த்து நடிக்கிறாராம். ஓவர் பில்டப்புக்கு பிறகு வெளியாகி புஸ்ஸாகப் போன கார்த்தியின் சகுனி ஒரு அரசியல் படம் என்று உங்களுக்கே தெரியும்.

கோடம்பாக்கத்தில் இருந்து கோட்டைக்கு போக ஆசைப்படும் கார்த்தி

இந்நிலையில் அட்டக்கத்தி இயக்குனர் ரஞ்சித் வடசென்னையில் வாழும் கபடி வீரர் ஒருவரின் கதையை எடுத்துக் கொண்டு கார்த்தியிடம் சென்றுள்ளார். கதையைக் கேட்ட கார்த்தியும் ஓ.கே. சொல்லியிருக்கிறார். கார்த்தியிடம் கதை சொல்லி ஓகே வாங்குவதே பெரிய பாடு. இதில் கதையை ஓகே செய்த பிறகு ரஞ்சித்தை அழைத்து அரசியல் கதை பண்ணலாமே அப்படி ஒரு கதையுடன் வாருங்கள் என்று கூறியுள்ளார் கார்த்தி.

ரஞ்சித்தும் ஒரு அரசியல் கதையை தயார் செய்து கார்த்தியின் சம்மதத்தையும் வாங்கிவிட்டாராம். கோடம்பாக்கத்தில் இருந்து கோட்டைக்கு போகும் ஆசையில் ஏற்கனவே நிறைய பேர் உள்ளனர். இதில் இவர் வேறா என்று கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள் முணுமுணுக்கின்றனர்.

 

முனி 3யிலிருந்து இசையமைப்பாளர் அனிருத் திடீர் விலகல்!

முனி 3யிலிருந்து இசையமைப்பாளர் அனிருத் திடீர் விலகல்!

சென்னை: ராகவா லாரன்ஸ் இயக்கும் முனி 3 திரைப்படத்தின் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து அனிருத் திடீரென விலகிக் கொண்டுள்ளார்.

முனி, முனி 2(காஞ்சன) ஆகிய படங்களைத் தொடர்ந்து லாரன்ஸ் இயக்கி நடிக்கும் திரைப்படம் முனி 3(கங்கா). தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷ் தயாரிக்கிறார்.

அனிருத் இசைமைப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இப்போது திடீரென ‘முனி 3' படத்திற்கு தான் இசையமைக்கப் போவதில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அனிருத்.

தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை. நேரம் ஒத்துவரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அனிருத் தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கும் ‘வணக்கம் சென்னை' படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும், கே.வி.ஆனந்த், ஏ.ஆர்.முருகதாஸ், எல்.ரெட் குமார் ஆகியோர் இயக்கும் படங்களுக்கும் இசைமைக்கிறார்.

முன்னதாக முனி 3 திரைப்படத்திற்கு விஜய்ஆண்டனிதான் முதலில் இசையமைப்பதாக இருந்தது. அவருக்குப் பதிலாகதான் அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

முனி முதல் பாகத்துக்கு பரத்வாஜும், இரண்டாம் பாகத்துக்கு தமனும் இசையமைத்திருந்தனர்.