-ஷங்கர்
நடிப்பு: விஷால், ஹன்சிகா, சந்தானம், பிரபு, ரம்யா கிருஷ்ணன், கிரண்
ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்
பிஆர்ஓ: ஜான்சன்
இசை: ஆதி
தயாரிப்பு: விஷால்
இயக்கம்: சுந்தர் சி
விமர்சனங்கள், அறிவுஜீவிகள், குறைகளை மட்டுமே பிரதானமாகப் பார்ப்பவர்கள் என யாரைப் பற்றியும் இயக்குநர் சுந்தர் சி கவலைப்பட்டதில்லை.
அவரைப் பொறுத்தவரை, பணம் கொடுத்துவிட்டு உள்ளே வரும் ரசிகர்கள் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். 'நோ லாஜிக்.. ஒன்லி லாஃப்' என்பதுதான் அவர் பாணி. அதைத்தான் தன் அத்தனை படங்களுக்கும் அப்ளை செய்து வருகிறார்.
இந்த ஆம்பளயும் அப்படித்தான்.
படங்களில் பார்த்த, சொந்த பகையால் பிரிந்த குடும்பம் ஹீரோவால் ஒன்று சேரும் கதை.
பிரபுவுக்கு விஷால் உள்பட மூன்று மகன்கள். ஆனால் அப்பா விஜயகுமாரின் மரணம் பிரபு மீது கொலைப் பழியாக விழுகிறது. இதனால் தனது இரு மகன்களையும், மூன்று சகோதரிகளையும் பிரிகிறார். ஒரு கட்டத்தில் பிரிந்த மகன்களுடன் சேர்கிறார். தனது பிளாஷ்பேக்கைச் சொல்கிறார். இப்போது பிரபுவின் மூன்று தங்கைகளுக்கும் மூன்று மகள்கள். அவர்களை தனது மூன்று மகன்களுக்கும் கட்டி வைக்க ஐடியா தருகிறார். அதன்படி குடும்பம் ஒன்றாகச் சேர்வதுதான் ஆம்பள கதை.
அடிதடி, நகைச்சுவை, திகட்டத் திகட்ட க்ளாமர்.. இதுதான் ஆம்பள படம். கதை பழசு, காட்சிகள் கூட பழசுதான் என்றாலும், பார்ப்பவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அங்கே தப்பிக்கிறது படம்.
விஷால் மீண்டும் இந்தப் படத்தில் தன் பழைய மசாலா ரூட்டுக்குத் திரும்பியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் பார்ப்பவர்களுக்கே மூச்சு முட்டுகிறது, அவர் அடிப்பது! விட்டால் இனி தரையில் சண்டையே போட மாட்டார் போலத் தெரிகிறது.. அப்படிப் பறக்கிறார் மனிதர்.
சந்தானம் இந்தப் படத்திலும் கலக்குகிறார். அவர் இருக்கும் வரை படத்திலும் சரி, பார்வையாளர்கள் மத்தியிலும் சரி, கலகலப்புக்கு பஞ்சமே இல்லை. குறிப்பாக அவர் படிப்படியாக பதவி இறக்கம் செய்யப்படும் விதம், நல்ல கற்பனை ப்ளஸ் காட்சியமைப்பு!
ஹன்சிகா... ஆண்டவன் கொடுத்த உடல் அழகை வச்சிக்கிட்டு வஞ்சனை எதற்கு என்று படம் முழுக்க வாரியிறைத்திருக்கிறார். முன்னணி நடிகையாகவே தொடர அது போதாதா?
பிரபு, ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா, சதீஷ் என சுந்தர் படங்களுக்கே உரிய நட்சத்திரக் கூட்டம் இந்தப் படத்திலும் தொடர்கிறது. படத்தை ஜாலியாக நகர்த்த இவர்கள் பங்களிப்பு ரொம்பவே துணை நிற்கிறது.
வழக்கமாக வசனங்களில் காமெடியை மட்டுமே தூக்கலாக வைக்கும் சுந்தர் சி, இந்தப் படத்தில் கொஞ்சம் காமநெடியைக் கலந்துவிட்டார். ஏகத்துக்கும் இரட்டை அர்த்த வசனங்கள். குறிப்பாக ஹன்சிகாவின் உடல் அமைப்பை சந்தானம் கிண்டலடிக்கும் காட்சி.
அதேபோல, சண்டைக் காட்சிகளைப் பார்க்கும்போது பேரரசு அல்லது ஹரி படத்துக்கு வந்துவிட்டோமா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆல்பம் மூலம் வெளியில் தெரிந்த ஆதி இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர். சில பாடல்கள் கேட்க நன்றாகவே உள்ளன. பின்னணி இசையும் ஓகேதான்.
கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிதும் உதவியிருக்கிறது.
முதல் பாராவில் சொன்னதையே மீண்டும் படிக்க. ஒரு முறை பார்க்கத் தகுந்த படம்தான்!