டெல்லி: தன் மீதான வழக்குகளில் தீர்ப்பு வெளியானபின்னரே திருமணம் செய்து கொள்வது பற்றி யோசிக்க முடியும் என்று பாலிவுட் நடிகர் சல்மான்கான் கூறியுள்ளார்.
திரைப்படமோ, டிவியோ சல்மான்கான் வருகிறார் என்றாலே அங்கே பரபரப்பு பற்றிக்கொள்கிறது. இப்போது சல்மான்கானின் தபாங் 2 திரைப்படம் வசூலில் பரபரப்பை கிளப்பி வருகிறது. இந்த வெற்றிக்கொண்டாட்டம் ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார் சல்மான்கான்.
கசந்த காதல்கள்
46 வயதாகி விட்டது. கடந்த 20 வருடங்களில் எத்தனையோ காதல்களை கடந்திருக்கிறார் சல்மான்கான். ஐஸ்வர்யாராய், கத்ரீனா கைப் என பல நடிகைகளுடன் காதலில் சிக்கி அது பின்னர் முறிந்து போய்விட்டது. காதல் சர்ச்சைகளைப் போலவே மான்வேட்டை, வாகனவிபத்து வழக்குகளும் அவரை விடாமல் துரத்தி வருகிறது. அதனால்தான் அவர் திருமணம் பற்றி நினைக்காமல் இருக்கிறாராம்.
நம்பிக்கை இருக்கிறது.
டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்க வந்த சல்மான்கானிடம் அவருடைய திருமணம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், கோர்ட்டுகளில் என் மீது வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளில் தீர்ப்பு வெளிவந்த பிறகே திருமணம் பற்றி யோசிப்பேன் என்றார். இரு வழக்குகளில் இருந்தும் விடுதலையாவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
சிறை செல்ல வேண்டுமே?
ஒருவேளை தீர்ப்பு எனக்கு எதிராக வந்தால், நான் சிறை செல்ல வேண்டியது இருக்கும். சிறை சென்றால் வெளிவந்த பிறகே திருமணம் செய்வேன். தீர்ப்பு வெளிவரும் முன்பே நான் திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில், தீர்ப்பு எனக்கு பாதகமாக அமைந்தால் எனது மனைவி குழந்தையுடன் வந்து என்னை சிறையில் சந்திக்க வேண்டியது இருக்கும் இல்லையா? அது நன்றாக இருக்காது. எனவேதான் தீர்ப்புக்காக காத்திருக்கிறேன் என்றார்.
13 ஆண்டுகால வழக்கு
1999-ம் ஆண்டு ஜோத்பூரில் நடந்த படப்பிடிப்பு நிகழ்ச்சியின்போது மான் வேட்டையாடியதாக சல்மான்கான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணை ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதேபோல மும்பையில் 2002-ம் ஆண்டு அவர் ஓட்டிச் சென்ற வாகனம் மோதி ஒருவர் இறந்தார். இது குறித்த வழக்கு விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 13 வருடங்களாக வழக்கு விசாரணைக்காக நீதிமன்ற படியேறி வருகிறார் சல்மான்கான்.
தீர்ப்பிற்காக நீங்க காத்திருக்கலாம்.. ஆனால் வயதும், இளமையும் காத்திருக்குமா என்பதை சல்மான்கான் புரிந்து கொள்வாரா? என்று ஆதங்கப்படுகின்றனர் அவருடைய ரசிகர்கள்.