ஷமிதாப்... 'நேற்று இல்லை நாளை இல்லை.. எப்பவும் (இளைய)ராஜா!’

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

இந்திப் படங்கள் வருஷத்துக்கு பத்து பார்த்தாலே அதிகம். ஒவ்வொரு படத்திலும் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிச்செல்லும் ஆமீர் கான், 'மும்பை வந்து என்னை லவ் பண்ணுடா. மத்தத அப்புறம் பாத்துக்கலாம்' என்று என்னை மட்டும் தனியாக ஒவ்வொரு படத்திலும் அழைக்கும் இலியானா, 'படத்துல ஒரு எழவும் இல்லாவிட்டாலும் 'என்னைப் பார்த்தாலே போதாதா?' என்று ஏங்க வைக்கும் அனுஷ்கா ஷர்மா, இப்படி சில காரணங்கள் வேண்டும் இந்திப் படம் பார்க்க எனக்கு.

அப்படி ‘சீனி கம்' படம் பார்க்க நேர்ந்தது 'தானைத் தலைவன்' இளையராஜாவுக்காகத்தான். அமிதாப்பும், தபுவும், ராஜாவும் இயக்குநர் பால்கியும் பின்னே நானும்' என்றொரு கட்டுரை எழுதி நான் மட்டும் படித்து விட்டு பெட்டிக்குள் பூட்டிவைத்து விட்டேன். அது போதுமானதாக இருந்தது எனக்கு. சில விசயங்களுக்கு ஒரே ஒரு வாசகன் போதும்.

நேற்று ‘ஷமிதாப்' பார்த்தேன். இந்த முறை எழுதி, நான் ஒருவன் படித்துவிட்டு ஒளித்து வைத்துக்கொள்வது அயோக்கியத்தனம் என்று தோன்றியது.

ராஜா, அமிதாப், பால்கியுடன், இந்த முறை தனுஷும், ப்ரியத்திற்குரிய பி.சி.ஸ்ரீராம், குட்டி தேவதை அக்‌ஷராவும் போனஸாக.

கதையைப் பற்றி நான் ஏற்கனவே ஓரளவு கேள்விப்பட்டிருந்தேன். எப்படி என்றால் நம்ம மைக் மோகன், அவருக்கு டப்பிங் பேசி வந்த சுரேந்தர் காம்பினேஷன் உடைந்துபோனபோது அவர்கள் இருவரும் எப்படி உடைந்து சிதறிப் போனார்கள் என்பதாக.

ஷமிதாப்... 'நேற்று இல்லை நாளை இல்லை.. எப்பவும் (இளைய)ராஜா!’

கொஞ்சம் அப்படித்தான். ஆனால் அப்படி இல்லை என்றும் சொல்லலாம்.

ஒரு குக்கிராமத்தில் வடை சுட்டுப் பிழைக்கும் அம்மாவுக்கு ஒத்தாசையாக இருக்கும் தனிஷ், வாய்பேச இயலாதவன். மிக இளம் வயதிலேயே நடிப்பு ஆசை கொண்டவன். மும்பைக்கு ஒவ்வொரு முறையும் லாரி ஏறமுயன்று அம்மா மேல் உள்ள பாசத்தால் தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கிறான். அம்மா ஒரு நாள் இறந்துபோக மும்பை வந்து சினிமா சான்ஸ் தேடுகிறான். ஊமைக்கு யார் வாய்ப்பு கொடுப்பார்கள்?

இந்த சமயத்தில் அவன், உதவி இயக்குநர் அக்‌ஷராவில் கண்ணில் பட்டு அவரது மற்றும் விஞ்ஞான உதவியுடன், நடிகனாகிறான். வாய்பேச இயலாத தனிஷுக்கு ஸ்பாட் டப்பிங் கொடுக்கும் பெரியவராக, சதா குடித்துக்கொண்டிருக்கும் அமிதாப் அவர்களுடன் இணைகிறார்.

தனிஷ் பெரிய நட்சத்திரமாகிவிட ஒரு கட்டத்தில் குரல் பெரிதா, நடிகன் பெரிதா என்ற ஈகோ எழுந்து அவர்கள் என்னவாகிறார்கள் என்று போகிறது கதை.

படத்துக்கு விமரிசனம் எழுதுகிறபோது, பல சமயங்களில் அதன் கதையை சொல்கிறோம் என்ற பெயரில் அந்த இயக்குநருக்கு பெரிய துரோகம் செய்கிறோமோ என்று தோன்றும். மேலே நான் 'ஷமிதாப்' கதையை எழுதியிருக்கும் விதமும் அந்த மாதிரியான ஒன்றுதான். உணர்கிற அளவில் எழுதமுடிவதில்லை. அதற்காக கதையைப் பற்றி எதுவுமே குறிப்பிடாமல் விமர்சனம் என்ற ஒன்றை எழுதிவிட முடியுமா என்றும் தோன்றவில்லை.

ஷமிதாப்... 'நேற்று இல்லை நாளை இல்லை.. எப்பவும் (இளைய)ராஜா!’

சினிமா எடுப்பது அதை வெளியிடுவது ஒரு பிரசவ வேதனைக்கு சமமானது என்று காலங்காலமாக சொல்லிவருகிறார்கள், அதுவும் பெரும்பாலும் ஆண்கள்தான். அதெல்லாம் சும்மா மிகைப்படுத்தல்தான். இங்கே காணக் கிடைக்கும் ‘ஷமிதாப்' பட வொர்க்கிங் ஸ்டில்களைப் பாருங்கள். எவ்வளவு உற்சாகமானது சினிமா எடுப்பது என்பது புலப்படும்.

பால்கி என்கிற கலைஞன் மகா ரசனையான குடிகாரனாக இருக்க வேண்டும். சினிமாவை உண்டு, அருந்தி, சுவாசித்து வாழ்கிற ஒரு மகா இயக்குநராக படம் முழுக்க மிளிர்ந்துகொண்டே இருக்கிறார். அமிதாப்பிலும் தனுஷிலும், அக்‌ஷ்ராவிலும் நான் அவரைப்பார்த்துக் கொண்டே இருந்தேன்.

சுடுகாட்டில் தனக்கு ஒரு ‘இடம்' ஒதுக்கிவைத்துக் கொண்டு சதா குடித்துக்கொண்டே இருக்கும் அமிதாப் ஒரு நடிப்பு ராட்சஸன். ராபர்ட்-டி.நீரோவின் படத்துக்கு முன்னால் நின்றுகொண்டு அவர் பேசுகிற காட்சியில், எங்கே நீரோ புகைப்படத்திலிருந்து, உயிரோடு இறங்கி வந்து கைதட்ட ஆரம்பித்துவிடுவாரோ எனும்படி இருந்தது அவரது நடிப்பு. இதில் அமிதாப்பின் நடிப்பை பார்த்தபிறகும் 2015க்கான சிறந்தநடிகர் தேசிய விருது கனவில் யாராவது இருந்தீர்களானால் உங்களுக்காக எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

ஷமிதாப்... 'நேற்று இல்லை நாளை இல்லை.. எப்பவும் (இளைய)ராஜா!’

தனுஷ் தமிழனின் பெருமையை மும்பையில் கொடியாக 100 அடி உயரத்திற்கும் மேல் நாட்டிவிட்டார் என்றே சொல்வேன்.

'அக்‌ஷரா என்கிற குட்டிப் பிசாசு கமல் பாதி, சரிகா மீதி என கலந்து செய்த கலவை நான்' என்று எல்லா இடங்களிலும் சொல்லிக்கொண்டே இருக்கிறார். குறிப்பாக தனுஷ், காதலும் காமமுமாய் அணுகும்போது, ‘டேய் குரங்குப் பயலே உனக்கு படுக்குறதுக்கு எவ்வளோ நடிகைகள் இருக்கும்போது ஏண்டா என் மூடைக் கிளப்பி ஒரு வருங்கால டைரக்டர் பொழப்புல மண்ணள்ளிப் போடப் பாக்குறே?' என்று ஒரு பக்கம் எச்சரிக்கையாகவும் இன்னொரு பக்கம் ஆசையையும் வெளிப்படுத்துகிறாரே அங்கே குட்டிக் கமல் இல்லை கமல் குட்டியாகவே வெளிப்படுகிறார்.

பி.சி.யின் ஒளிப்பதிவு பற்றி நன்றாக இருந்தது, சூப்பர், அபாரம் இப்படியெல்லாம் எழுதுவது அவருக்கு செய்யும் அவமரியாதை. படத்தின் ஒரு இடத்தில் கூட அவரை தனியாகப் பார்க்க முடியவில்லை. பால்கியின் இடது வலதுகரமாக, இதயமாக, பார்வையாக இப்படி எல்லாமுமாக இருந்து கொண்டே இருக்கிறார்.

ராஜாவின் அருமை புரியாமல் ஒரு கும்பல் அவரைப்பற்றி, 'அவரது இசை முந்திமாதிரி இல்லை' என்று நந்தி மாதிரி நின்றுகொண்டு அவதூறுகள் சொல்லித் திரிகிறார்கள். இப்படத்தின் அனைத்துப் பாடல்களிலும், குறிப்பாக பின்னணி இசையிலும் ‘எப்பவும் நான் ராஜாடா' என்று மனதில் ஆணியடிக்கிறார் இசைராஜா.

அதுவும் கடைசி பத்து நிமிடங்களில் அமிதாப்பும் ராஜாவும் ஒரு ‘நீயா நானா' போட்டியே நடத்துகிறார்கள். இணையத்தில் கிளைமாக்ஸ் காட்சியின் அந்தப் பின்னணி இசை கிடைத்தால் கேட்டுப்பாருங்கள். அது ஹாலிவுட் தரத்தில் அல்ல... இளையராஜா என்கிற தமிழனின், எவற்றோடும் ஒப்பிட முடியாத தரத்தில் இருக்கிறது!

படத்தில் குறைகளே இல்லையா என்று இந்நேரம் ஒரு கேள்வி தோன்றும். ஒரு சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றை நான் பட்டியலிடப் போவதில்லை.

ஷமிதாப்... 'நேற்று இல்லை நாளை இல்லை.. எப்பவும் (இளைய)ராஜா!’

சற்றுமுன் முகநூல் பக்கத்தில் நண்பர் மாரி செல்வராஜ் ‘ஷமிதாப்' குறித்து ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்.

'ஷமிதாப்' பார்க்கும் போது அமிதாப்பை முத்தமிடத் தோன்றினால்
அந்த முத்தம் தனுஷுக்குமானது
இருவரையும் முத்தமிடத் தோன்றினால்
அந்த முத்தம் பால்கிக்குமானது
மூவரையும் முத்தமிடத் தோன்றினால்
அந்த முத்தம் நிச்சயம் நம் ராஜாவுக்கும் ஆனது.
ஆம் ........சமிதாப்கிஜா...........
நால்வரையும் முத்தமிட்டு போகிற உங்களால் கண்டிப்பாக அக்‌ஷரா என்கிற குட்டிப்பெண்ணுக்கு ஒரு பூங்கொத்தை கொடுக்காமல் வந்துவிடமுடியாது.

ஷமிதாப்... 'நேற்று இல்லை நாளை இல்லை.. எப்பவும் (இளைய)ராஜா!’

ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் ஒரு குட்டி கவிதை போல் எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார்!

ஷமிதாப்... 'நேற்று இல்லை நாளை இல்லை.. எப்பவும் (இளைய)ராஜா!’

இறுதியாக தோன்றியது இதுதான். எனக்கு மறுஜென்ம பஞ்சாயத்துகளில் எல்லாம் நம்பிக்கை இல்லை. அப்படி என்று ஒன்று இருந்தால் அந்த ஜென்மத்திலும் தங்கள் அடிமையாகவே அவதாரம் எடுக்க சாசனம் எழுதித்தாருங்கள் ராஜா!

(தொடர்வேன்...)

 

மீண்டும் அர்ஜூன்- மனிஷா கொய்ராலா ஜோடி?- ”கேம்” படத்தில் புது “ஹாட்”!

பெங்களூரு: தமிழில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான முதல்வன் படத்தில் ஜோடி சேர்ந்த அர்ஜூன் மற்றும் மனீஷா கொய்ராலா மீண்டும் ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாக்ஸ் ஆபீசில் ஹிட்டான இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

மீண்டும் அர்ஜூன்- மனிஷா கொய்ராலா ஜோடி?- ”கேம்” படத்தில் புது “ஹாட்”!

அர்ஜுன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ஜெய்ஹிந்த்-2. இப்படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார்.

இப்படத்திற்கு பிறகு கன்னடத்தில் "கேம்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.எம்.ஆர்.ரமேஷ் என்பவர் இயக்கி வருகிறார். இவர் வனயுத்தம், சையனைடு உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

இப்படத்தில் தன்னுடன் ஜோடியாக நடிப்பதற்காக அர்ஜுன் பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலாவை படக்குழுவினருக்கு பரித்துரைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

மேலும், இப்படம் மூலமாக மனிஷா கொய்ராலாவை தன்னுடைய ஜோடியாக மீண்டும் நடிக்க வைத்து பெரிய ஹிட் கொடுக்க அர்ஜூன் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

''எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது''.... டி ஷர்ட், ஜீன், கூலரில் கலக்கும் கவுண்டர்!

டி ஷர்ட், ஜீன், கூலர், தலை நிறைய முடி.. ஏக உற்சாகத்துடன் டிப் டாப்பாக நிற்கும் கவுண்டமணியைப் பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.

இந்த கெட்டப் எதற்காக.. அவர் விரைவில் நடிக்கவிருக்கும் 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' என்ற படத்துக்காகத்தான்.

''எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது''.... டி ஷர்ட், ஜீன், கூலரில் கலக்கும் கவுண்டர்!

ஏற்கெனவே அவர் ஹீரோவாக நடித்து ரிலீஸுக்காக காத்திருக்கும் படம் ‘49ஓ' எப்போது ரிலீஸ் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் ‘வாய்மை' என்ற மற்றொரு படத்திலும் நடித்து அந்த படமும் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' என்ற புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

''எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது''.... டி ஷர்ட், ஜீன், கூலரில் கலக்கும் கவுண்டர்!

படத்தை கணபதி பால இயக்க உள்ளார். இவர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

கவுண்டமணியின் தனி முத்திரையை இந்தப் படம் முழுக்கப் பார்க்கலாம். அவரால் மட்டுமே இந்த படத்திலும் நடிக்க முடியும் எனவும் , மேலும் படம் மார்ச் மாதத்தில் துவங்கப்பட உள்ளது, என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

எனக்கு கருத்து சுதந்திரம் இல்லையா? - என்னை அறிந்தால் எதிர்ப்பாளர்களால் சிம்பு ஆவேசம்!

எனக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. அதனால்தான் என்னை அறிந்தால் பார்த்துவிட்டு அப்படி கருத்து பதிவு செய்தேன். இதை ஏன் எதிர்க்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் சிம்பு.

அஜீத் நடித்த ‘‘என்னை அறிந்தால்'' படத்தை நடிகர் சிம்பு பார்த்து விட்டு சர்ச்சைக்குரிய கருத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.

‘அதில் மெண்டல்களைத் தவிர மற்ற எல்லாருக்கும் இந்தப் படம் பிடிக்கும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

எனக்கு கருத்து சுதந்திரம் இல்லையா? - என்னை அறிந்தால் எதிர்ப்பாளர்களால் சிம்பு ஆவேசம்!

இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ட்விட்டர் பேஸ்புக்குகளில் சிம்புவை ரசிகர்கள் கண்டித்து கருத்துக்களை வெளியிட்டனர். 'எனக்கு படம் பிடிக்கவில்லை. அதற்காக நான் மெண்டலா?' என்று கேட்டும் கருத்து வெளியிட்டனர்.

இதர நடிகர்களின் ரசிகர்களும் சிம்புவை கண்டித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் இந்த பிரச்சினை மோதலையும் ஏற்படுத்தி உள்ளது. அஜீத் ரசிகர்களும் இதர நடிகர்களின் ரசிகர்களும் ஒருவரையொருவர் திட்டிக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு ஏற்கெனவே இரு முறை ட்விட்டரில் விளக்கம் அளித்தார் சிம்பு.

இப்போது மீண்டும் ஒரு விளக்கம் அளித்துள்ளார் சிம்பு. அவர் கூறுகையில், "நான் யாரையும் குறிப்பிட்டு கருத்து சொல்லவில்லை. இதற்கு முன்பு தொடர்ந்து சில நல்ல படங்கள் வந்தன. இப்போது அப்படி இல்லை. எப்போதாவதுதான் நல்ல படம் வருகிறது.

சினிமாவில் நிறைய சிக்கல்கள் இருக்கிறது. ‘யு' சான்றிதழில் படம் இருக்க வேண்டும். காமெடி படங்களாக இருக்க வேண்டும். அவற்றைதான் பார்க்கிறார்கள். பேய் படங்களையும் பார்க்கிறார்கள். இப்படி நிறைய பிரச்சினைகள் உள்ளன. தயாரிப்பாளர்கள் நிறைய பணம் போட்டு படம் எடுக்கிறார்கள். அந்த பணம் திரும்ப வருவதற்கான சூழ்நிலையும் இப்போது குறைவு.

எல்லா படங்களிலும் குறைகள் இருக்கத்தான் செய்கிறது. ‘ஐ' படத்தை பிரமாண்டமாக எடுத்து இருந்தனர். அந்த படத்தை கேவலமாக பேசினால் பணம் போட்ட தயாரிப்பாளர் நிலைமை என்ன ஆகும் என்று சிந்திக்க வேண்டும்.

‘அஞ்சான்' படம் சரியாக போகாததால் டைரக்டர் லிங்குசாமியை கிண்டல் செய்தார்கள். அப்போது நான் எதுவும் சொல்லவில்லை. அது அவர்களின் கருத்து சுதந்திரம் என்று இருந்தேன்.

அதுபோல் எனக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. ‘‘என்னை அறிந்தால்'' படம் பற்றி என் கருத்தைச் சொன்னேன். அதை ஏன் பிரச்சினையாக ஆக்குகிறார்கள் என்று புரிய வில்லை," என்றார்.

 

மும்பை சர்வதேச மோட்டார் ஷோவை துவக்கி வைத்த அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாஸன்

மும்பை: அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாஸன் ஆகியோர் மும்பை சர்வதேச மோட்டார் ஷோவை துவக்கி வைத்துள்ளனர்.

மும்பை சர்வதேச மோட்டார் ஷோ 2015 நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாஸன், ஷமிதாப் இயக்குனர் ஆர். பால்கி ஆகியோர் துவக்கி வைத்தனர். அக்ஷரா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

மும்பை சர்வதேச மோட்டார் ஷோவை துவக்கி வைத்த அமிதாப், அக்ஷரா ஹாஸன்

மும்பை பந்த்ரா-கர்லா காம்பிளக்ஸில் உள்ள எம்எம்ஆர்டிஏ கிரவுண்டில் ஷோ நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி வரும் 8ம் தேதி வரை நடைபெறும். நிகழ்ச்சியில் ஜாக்குவார், ஆடி, மெர்சிடீஸ் பென்ஸ், பிஎம்டபுள்யூ உள்ளிட்ட பல பிராண்டுகளின் வாகனங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

நிகழ்ச்சியை துவக்கி வைத்த அமிதாப், அக்ஷரா, பால்கி ஆகியோர் ஜிக்வீல்ஸ் பத்திரிக்கையை வெளியிட்டனர். அமிதாப் பச்சன் பாலிவுட்டில் மட்டும் இல்லை விளம்பர உலகிலும் ஜாம்பவான் தான்.

தனுஷ், அமிதாப், அக்ஷரா ஆகியோர் நடித்துள்ள ஷமிதாப் படம் இன்று தான் ரிலீஸாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வருண் மணியன் தயாரிக்கும் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக த்ரிஷா!

திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடர்வதில் தெளிவாக இருக்கிறார் நடிகை த்ரிஷா.

த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கம் சில தினங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.

வருண் மணியன் தயாரிக்கும் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக த்ரிஷா!

இந்த நிலையில் அஜீத்துடன் த்ரிஷா நடித்த என்னை அறிந்தால் நேற்று முன்தினம் வெளியானது. இதில் த்ரிஷாவுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.

அவர் நடிப்பில் உருவாகியுள்ள மேலும் மூன்று படங்கள் வெளிவரவிருக்கும் நிலையில், இப்போது புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

அவற்றில் ஒரு படத்தை த்ரிஷாவின் வருங்காலக் கணவரான வருண் மணியனே தயாரிக்கிறார். திரு இயக்குகிறார். இவர் இயக்கத்தில் ஏற்கெனவே சமர் படத்தில் நடித்துள்ளார் த்ரிஷா.

இந்தப் படத்தின் நாயகனாக ஜெய் நடிக்கிறார். கும்பகோணத்தைச் சேர்ந்த கிராமத்துப் பெண் வேடத்தில் வருகிறார் த்ரிஷா.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம் விரைவில் தொடங்கவிருக்கிறது.

 

மேற்குத் தொடர்ச்சி மலை ஷூட்டிங்கைப் பார்வையிட்டார் இளையராஜா

விஜய சேதுபதி நடித்து தயாரிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை படப்பிடிப்பை நேற்று முன்தினம் பார்வையிட்டார் இளையராஜா.

தேனி மாவட்டம், கோம்பையைச் சேர்ந்த லெனின் பாரதி என்பவர் ‘மேற்கு தொடர்ச்சி மலை' என்ற பெயரில் புதிய திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கி வருகிறார்.

மேற்குத் தொடர்ச்சி மலை ஷூட்டிங்கைப் பார்வையிட்டார் இளையராஜா

இந்த புதிய படத்தை நடிகர் விஜய் சேதுபதி தயாரிக்கிறார். இதில் புதுமுக நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்.

இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இளையராஜாவின் சொந்த ஊரான தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று பண்ணைப்புரம் கிராமத்தின் தெருக்களில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது.

அப்போது படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா திடீரென வருகை தந்தார். இதனை சற்றும் எதிர்பாராத படக்குழுவினர் இளையராஜாவை வரவேற்றனர்.

படப்பிடிப்பு குறித்து படக்குழுவினருடன் சுமார் அரை மணி நேரம் இளையராஜா பேசினார். பின்னர் படப்பிடிப்பு குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு இளையராஜா புறப்பட்டுச் சென்றார்.