நான் தேடும் செவ்வந்தி பூ இது… இளையராஜா முன் பாடி அசத்திய தனுஷ்

மும்பை: மும்பையில் இளையராஜாவின் சாதனைக்காக நடைபெற்ற விழாவில் அவரது பாடல்களில் சிலவற்றினை நடிகர் தனுஷ் பாடினாராம். இதைக்கேட்ட இளையராஜா தன்னைவிட சிறப்பாக பாடுவதாக கூறி பாராட்டியுள்ளார்.

பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஷமிதாப்' படத்தின் இசை வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்ததற்காக, இளையராஜாவுக்கு பாராட்டு விழாவாகவும் இந்நிகழ்ச்சி அமைக்கப்பட்டது.

நான் தேடும் செவ்வந்தி பூ இது… இளையராஜா முன் பாடி அசத்திய தனுஷ்

இவ்விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இசை வெளியீட்டு விழா மேடையில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மூவருமே இளையராஜாவின் இசைக்கும் தங்களுக்குமான நெருக்கத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்.

விழாவில் பேசிய தனுஷ், "நான் ஒரு தேர்ந்த நடிகன் அல்ல. திரையுலகில் நடிக்க வந்ததே ஒரு விபத்துதான். இளையராஜா இசை இல்லாமல் நான் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது.

இசையோடு வாழ்கிறேன்

திரையுலகிற்கு வந்து 15 வருடங்கள் ஆகிறது. ஒவ்வொரு நாளும் உங்களுடைய இசையோடுதான் வாழ்கிறேன். ஒவ்வொரு காட்சியுமே உங்களுடைய இசை தான்.

மறக்க முடியாது

ரஜினி சார் இந்த விழாவிற்கு வந்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இம்மாதிரியான விழாவை இனிமேல் என்னுடைய திரையுலக வாழ்வில் எதிர்பார்க்க முடியாது" என்றார்.

நான் பாடும் செவ்வந்தி பூ இது

விழா மேடையில் தனுஷை பாட சொல்லி இயக்குனர் கேட்டார், முதலில் அவர் தயங்கினாலும், 'தென்பாண்டி சீமையிலே, நான் தேடும் செவ்வந்தி பூ இது' ஆகிய பாடல்களைப் பாடி அசத்தினார்.

நல்லா பாடுறியே

நான் பாடிய பாட்டுக்களை என்னை விட நன்றாக பாடுகிறாய் என இளையராஜா கூறினார்.

பதட்டமா இருக்கேன்

உடனே சந்தோசப்பட்ட தனுஷ், சார் நானே பதட்டத்துல இருக்கேன், நீங்க வேற ஏன் சார்' என தமிழில் பேசினார். விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு தமிழ் புரியாவிட்டாலும் இருவரின் உரையாடலை கேட்டு ரசித்து சிரித்தனர்.

 

இளையராஜா விழாவில் சரிகாவின் கையை பிடித்த கமல், கண்கள் விரிய பார்த்த ஸ்ருதி

மும்பை: மும்பையில் இசைஞானி இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் உலக நாயகன் கமல் ஹாஸன் தனது முன்னாள் மனைவி சரிகாவை சந்தித்து நலம் விசாரித்தார்.

இசைஞானி இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளதை பாராட்டி மும்பையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. பாலிவுட் இயக்குனர் ஆர். பால்கி ஏற்பாடு செய்த இந்த விழாவை நடிகர் அமிதாப் பச்சன் முன் நின்று நடத்தி வைத்தார்.

இளையராஜா விழாவில் சரிகாவின் கையை பிடித்து நலம் விசாரித்த கமல்

விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன், அவரது மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் சரிகா தனது மகள் ஸ்ருதி ஹாஸன் அருகே அமர்ந்திருந்தார். அவரை பார்த்ததும் கமல் ஹாஸன் புன்னகை புரிந்தபடி அவர் அமர்ந்திருந்த இடம் நோக்கி சென்றார். காதலித்து திருமணம் செய்து விவாகரத்தான தனது முன்னாள் மனைவியான சரிகாவின் அருகில் சென்ற கமல் அவரின் கையைப் பிடித்து பாசமுடன் நலம் விசாரித்தார்.

பிரிந்து சென்றபோதிலும் கமல் வந்து பேசியதும் சரிகாவின் முகத்திலோ மலர்ச்சியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது. தனது அம்மாவும், அப்பாவும் பாசமாக பேசுவதை சரிகாவின் அருகில் அமர்திருந்த ஸ்ருதி கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தார்.

என்ன ஒரு அதிசயம் விழாவுக்கு கமலும் சரி, சரிகாவும் சரி கருப்பு நிற உடையில் வந்திருந்தனர்.

 

ஒரு பொண்ண பார்த்தேன் மாமா: குத்து குத்தாட்டம் போட்ட விஜய் ஆண்டனி

சென்னை: விஜய் ஆண்டனி தான் நடித்து வரும் இந்தியா-பாகிஸ்தான் படத்திற்காக முதல்முறையாக குத்தாட்டம் போட்டுள்ளார்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நான் படம் மூலம் ஹீரோ ஆனார். அந்த படத்தில் அவர் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படத்திற்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பால் மகிழ்ச்சி அடைந்த அவர் சலீம் படத்தில் ஹீரோவாக நடித்தார்.

இந்தியா பாகிஸ்தானுக்காக குத்தாட்டம் போட்ட விஜய் ஆண்டனி

அவர் நடித்த நான் மற்றும் சலீம் படங்கள் நல்லபடியாக ஓடின. நான், சலீம் ஆகிய படங்களை தயாரித்தவர் அவரின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி தற்போது காதலை மையமாகக் கொண்ட ஜாலியான படமான இந்தியா பாகிஸ்தானில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் அவரது மனைவி தான் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் முதன்முறையாக விஜய் ஆண்டனி குத்துப்பாட்டுக்கு ஆடியுள்ளார். அவர் குத்தாட்டம் போட்ட வீடியோ நேற்று வெளியாகியுள்ளது.

ஒரு பொண்ண பார்த்தேன் மாமா என்னை கொண்ணுப்புட்டா மாமா என்று துவங்கும் அந்த பாடலுக்கு தான் அவர் குத்தாட்டம் போட்டுள்ளார்.

விஜய் ஆண்டனி திருடன், சைத்தான், பிச்சைக்காரன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மருதநாயகம் நிச்சயம் உருவாகும்- கமல் அறிவிப்பு

மருதநாயகம் படம் நிச்சயம் உருவாகும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இன்று தனது உலகநாயகன் ட்யூப் இணையதளம் வாயிலாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சமீப காலமாக நிறைய பேர் எனது மருதநாயகம் குறித்துப் பேசி வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் படத்தை நான் இன்னும் முடிக்கவில்லை.

மருதநாயகம் நிச்சயம் உருவாகும்- கமல் அறிவிப்பு

ஆனால் அந்தப் படம் குறித்து இன்னும் பலர் பேசி வருவது சந்தோஷமாக உள்ளது.

இந்தப் படத்தை நிச்சயம் முடித்து வெளியிடுவேன். சமீபத்தில் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பர் மருதநாயகத்தை தான் தயாரித்து வெளியிடத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

அவர் பெயரை இப்போது சொல்வதாக இல்லை. விரைவில் அதுகுறித்து பேசுவேன். நிச்சயம் மருதநாயகம் வெளியாகும்," என்றார்.

 

அசின் குண்டெல்லாம் ஆகலையாம்… அது வதந்தியாம்

‘ஆல் இஸ் வெல்' படப்பிடிப்பு தளத்தில் அபிஷேக் பச்சனுடன் நம்ம அசின் டூயட் பாடிக்கொண்டிருக்கிறார். திடீரென்று அசின் குண்டானதால் படமே ட்ராப் ஆனதாக தகவல் பரவியது.

ஆனால் அது சும்மா வதந்திதான் நான் இப்பவும் பார்பி டால் போல ஒல்லியாகத்தான் இருக்கிறேன் என்று கூப்பிட்டு கூப்பிட்டு சொல்லி வருகிறார் அசின்.

அசின் குண்டெல்லாம் ஆகலையாம்… அது வதந்தியாம்

கஜினியில் திருப்புமுனை

ஜீவாவினால் உள்ளம் கேட்குமே படத்தில் அறிமுகமான அசினுக்கு தமிழில் முகவரி கொடுத்த படம் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி'. அவருக்கு திருப்புமுனையை கொடுத்த படம் கஜினி.

பாலிவுட் பக்கம்

அதன்பின் பாலிவுட் போனவர் அமீர்கான், சல்மான் கான் என கான்களுடன் நடித்த காரணத்தால் தமிழ் பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை அசின்.

அசின் குண்டெல்லாம் ஆகலையாம்… அது வதந்தியாம்

காப்பாற்றிய காவலன்

பாலிவுட் உலகிலும் சரியான வாய்ப்பு இல்லாமல் போகவே காவலன் படம் மூலம் தமிழில் விஜய் உடன் ஜோடி சேர்ந்தார். அந்த படம் வந்தும் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. அசின் என்ற நடிகையை விளம்பரங்கள் மூலம் மட்டுமே தமிழக ரசிகர்கள் இப்போது அறிந்து கொண்டிருக்கின்றனர்.

குண்டான அசின்

இப்போது பாலிவுட்டில் அபிஷேக் பச்சனுடன் ‘ஆல் இஸ் வெல்' என்ற ஒரே ஒரு படத்தில் நடித்து வரும் அசின் அதிகமாக குண்டாகிவிட்டதாக வதந்தி பரவியது.

அவரது உடல் எடையை காரணம் காட்டி படமே டிராப் செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

அமைச்சர் ஸ்மிருதி இரானி

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி நடித்து வந்தார். தற்போது, அவர் இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டதால், அவருக்கு பதிலாக சுப்ரியா பதக் நடிக்கவுள்ளார். எனவே, அசினும், ஸ்மிரிதி இரானியும் இணைந்து நடித்த காட்சிகள் மீண்டும் படமாக்கப்படவுள்ளன.

டூயட் பாட்டு

தற்போது மும்பையில் தொடர்ந்து 2 வாரங்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பில் அபிஷேக் பச்சனும், அசினும் இணைந்து ஆடும் பாடல் ஒன்றை படமாக்கவுள்ளனராம்.

ஆல் இஸ் வெல்

ஆல் இஸ் வெல் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடந்துகொண்டிருக்கும் போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக வந்த செய்திகள் தங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

எப்படியோ ஆல் இஸ் வெல் படப்பிடிப்பு நலமாக முடிந்தால் சரிதான்.

 

சினிமாக்காரன் சாலை... - 'நல்லா பாத்துக்கங்க, நானும் இப்போ ரவுடிதான்!'

-முத்துராமலிங்கன்

நம்ம ‘ஒன் இண்டியா'வுல ஒரு சினிமா தொடர் எழுதுறீங்களா சார்? என்று சங்கர் சார் கேட்டதும், எடுத்தவுடன் 'ராங் நம்பரோ?' என்று சற்று ஜெர்க் அண்ட் கன்ஃபியூசனானேன் என்றுதான் சொல்லவேண்டும்!

‘தொடர்' எழுதுற அளவுக்கு நாம ஒர்த்தா? என்ற கேள்வி இயல்பாகவே மனதில் எழுந்தது.

இன்றைய தேதிகளில் எங்கெங்கு காணினும் முகநூலில், ட்விட்டரில், வாட்ஸ் அப்பில் என்று சகலரும் குண்டக்க மண்டக்க என்னத்தையோ எழுத்தித் தள்ளியபடியேதான் இருக்கிறார்கள். எழுத்து என்பது எல்லோருக்கும் இருக்கும் கழுத்து மாதிரி ஆகிவிட்டது.

சினிமாக்காரன் சாலை... - முத்துராமலிங்கன் எழுதும் புதிய சினிமா தொடர்!

அதுவும் சினிமா குறித்து எழுதும்போது ஒரு கள்ளக்காதலியைச் சந்திக்கப்போகும் குறுகுறுப்புடனேயே அவர்களால் எழுதமுடிகிறது.

த்ரிஷாவின் திருமணம் தொடங்கி, வசுந்தராவின் பிட்டு செல்ஃபி ஷாட்கள் வழியாக பின் தொடர்ந்து, பெருமாள் முருகனின் 'மாதொரு பாகன்' சர்ச்சை வரை அவர்கள் எதையும் விட்டு வைப்பதில்லை.

சினிமாக்காரன் சாலை... - முத்துராமலிங்கன் எழுதும் புதிய சினிமா தொடர்!

லட்சுமி மேனன் ‘நான் திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை 6 அடி உயரம் இருக்கவேண்டும்' என்று பேட்டி கொடுத்தால், ‘ஏ புள்ள.. எப்ப அளவு எடுக்கப்போற? மாமன் ரெடியா இருக்கேன்' என்று கியூவில் நின்று லட்சக்கணக்கானோர் வாட்ஸ் அப்புகிறார்கள்.

‘ஐ', 'ஆம்பள' படங்கள் ரிலீஸான தேதிகளில் படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சமாக இருந்தால், அவற்றிற்கு விமர்சனம் எழுதினவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சமாக இருக்கிறது.

இத்தனை லட்சம் பேர் ‘படம் பாத்து' விமர்சனம் எழுதியிருக்காங்க. அப்புறம் ஏன்யா கலெக்‌ஷன் மட்டும் பல்லிளிக்குது?' என்று தலையைப் பிய்த்துக்கொண்டே சொட்டையான தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை எழுபத்து ஏழு புள்ளி ஏழு சதவிகிதம்.

கல்லூரி படிக்கும் காலத்தில் நண்பர்கள், உறவினர் வீட்டுத் திருமணங்களில் பார்ட் டைம் போட்டோகிராஃபராக அவ்வப்போது நான் போவதுண்டு. அந்த சமயங்களில் மணமகனுக்கு அடுத்த முக்கிய நபராக போட்டோகிராஃபரைப் பார்ப்பார்கள். நம்மை நோக்கிய காதல் பார்வைகள் சிலவற்றைக் கூட அங்கே தரிசிக்க முடியும். மதுரை போன்ற ஒரு நகரில் 25 போட்டோகிராஃபர்கள் இருந்தாலே அதிகம்.

சினிமாக்காரன் சாலை... - முத்துராமலிங்கன் எழுதும் புதிய சினிமா தொடர்!

இன்று ஒரு திருமண மண்டபத்தில் அதிகாரபூர்வமான போட்டோகிராஃபர் என்பவர் எங்கே இருக்கிறார் என்பதைக்கூட கண்டுபிடிக்கமுடியாது. ஏனெனில் மண்டபத்துக்குள் செல்போன் வைத்திருப்பவர்கள் அத்தனை பேரும் போட்டோகிராஃபர்களே. மணமகன், மணமகள் துவங்கி, மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கும் ஐயர்வாள் வரை அனைவரும் செல்ஃபி எடுத்துக்கொண்டே ‘மாங்கல்யம் தந்துனானே'வை நடத்திக் கொண்டிருப்பார்கள்.

இன்றைக்கு எழுத்தாளர்கள் என்பவர்கள் நிலையும் ஏறத்தாழ இதுதான். பெயருக்கு முன்னால் ‘எழுத்தாளர்' என்று போட்டுக்கொண்டு, முகநூலில் நீங்கள் எதை எழுதினாலும் எழுத்தாளர்தான்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் சாரு நிவேதிதா, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் சவடமுத்து, எழுத்தாளர் கொடுங்கையூர் ராமசாமி, எழுத்தாளர் அரகண்டநல்லூர் ராஜா என்று துவங்கி எனது முகநூல் பக்கத்தில் 4999 எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.

‘அதான் மார்க்கு 5000 பேர்வரை அனுமதித்திருக்கிறாரே, ஒரு ஆள் குறையுதே? என்று நீங்கள் கேட்கத் துடிக்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது.

‘அந்த ஒரு ஆள் நான் தான். இத்தனை காலமும் எழுத்தாளர் பட்டியலில் என்னை இணைத்துக் கொள்ளும் அந்த சபலம் ஏனோ எப்போதும் வந்ததில்லை.

ஆனால்... இன்று இப்படி இணையத்தில் எழுதுகிற எல்லோருமே 'எழுத்தாளர்கள்' என்று ஆகிவிட்ட பிறகு நான் மட்டும் ஒண்டி ஆளாய் மிச்சம் இருப்பானேன்?

இதோ இந்த தருணம் முதல் நானும் எழுத்தாளர்தான் என்று இந்த உலகுக்கு உரக்க அறிவிக்கிறேன். (தருணம், உரக்க? யோவ் நீ ரைட்டர் ஆயிட்ட. த்ரிஷா உனக்குத்தான்யா!)

'என்ன எழுதலாம்? என்ன வேணா எழுதலாம். திலகாஷ்ட மகிஷபந்தனம்.

இந்த இடத்தில் சிச்சுவேஷன் பாடலாக ராஜாவின் ‘என்னப் பாடச் சொல்லாத நான் கண்டபடி பாடிப்புடுவேன்' பாடல்தான் எனக்கு ஒலிக்கிறது. சும்மாவே நமக்கு வெங்கலக் குரல்?

நாளைமுதல், தமிழ்சினிமா தொடங்கி கொரிய சினிமா வரை அமேசான் காட்டு பல அரிய மூலிகை தகவல்களுடன், வாரம் ரெண்டுவாட்டி 'கண்டபடி பாடிப் புடுவேன்' என்று எச்சரித்து விடை பெறுபவர்... ‘எழுத்தாளர்' முத்துராமலிங்கன்!

குறிப்பு: கட்டுரையாளர் முத்துராமலிங்கன் தமிழ் சினிமா அறிந்த பத்திரிகையாளர், எழுத்தாளர். சொந்த ஊர் விருது நகர். முன்னணிப் பத்திரிகைகளில் செய்தியாளராக, ஆசிரியராக பணியாற்றியவர். சினேகாவின் காதலர்கள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்போது தனது அடுத்த படமான ரூபச்சித்திர மாமரக்கிளியேவை இயக்கிக் கொண்டிருக்கிறார். 'மூவி ஃபண்டிங் எனும் மூடுமந்திரம்' என்ற குறுந்தொடர் மூலம் ஒன்இந்தியா வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர் இவர். விமர்சனத்தைக் கூட மிகுந்த நகைச்சுவையாக, சம்பந்தப்பட்டவரே ரசித்துப் படிக்கும் அளவுக்கு எழுதுவது இவர் சிறப்பு.

தொடர்புக்கு: muthuramalingam30@gmail.com

 

ஏழைக் குழந்தைகளுக்கு சத்தமில்லாமல் விக்ரம் செய்த பேருதவி.. டி வி நிகழ்ச்சியில் வெளியான உண்மை!

பத்து அரிசி மூட்டையை தானமாகக் கொடுத்தாலே பத்து கோடி ரூபாய்க்கு விளம்பரம் தேடுவோர் மத்தியில், பல ஏழைக் குழந்தைகளின் இருதய அறுவைச் சிகிச்சைக்காக கோடிக் கணக்கில் உதவி செய்தும் மூச்சுக் காட்டாமலிருக்கிறார் ஒருவர்... அவர்தான் நடிகர் விக்ரம்.

பத்துக்கும் மேற்பட்ட ஏழைக் குழந்தைகளின் இருதய அறுவைச் சிகிச்சைக்கு அவர் சத்தமில்லாமல் பணம் கொடுத்து உதவியுள்ளார்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏழைப் பெற்றோர்கள் தங்கள் மகளின் இதய அறுவைச் சிகிச்சைக்கும், படிப்புக்கும் விக்ரம்தான் முழுமையாக செலவு செய்தார் என்பதைத் தெரிவித்தனர்.

ஏழைக் குழந்தைகளுக்கு சத்தமில்லாமல் விக்ரம் செய்த பேருதவி.. டி வி நிகழ்ச்சியில் வெளியான உண்மை!

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்துநர் விக்ரமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விசாரித்தார். அப்போதுதான் இந்த உண்மையை வெளியிட்டார் விக்ரம்.

தான் இதுபோல பல குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கு மட்டும் உதவுவதாகவும், ஆனால் இதை எதற்கு வெளியில் சொல்ல வேண்டும் என்றும் கேட்டார் விக்ரம்.

மேலும் ஐ படத்துக்காக தான் பெற்ற சம்பளத்தில் ஒரு பகுதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காகச் செலவிட்டாராம் விக்ரம்.

இப்போது விஜய் மில்டன் இயக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள' படத்தில் நடித்து வருகிறார். மேலும் இரு புதிய படங்களிலும் விக்ரம் நடிக்கவிருக்கிறார்.

 

சென்னை திரும்பும் இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்த சாதனைக்காக மும்பையில் கவுரவிக்கப்பட்ட இளையராஜாவுக்கு இன்று சென்னை விமான நிலையத்தில் மீடியா சார்பில் வரவேற்பு தருகிறது.

இன்று பிற்பகல் 12.30 மணிக்கு மும்பையிலிருந்து விமான நிலையத்துக்கு வரும் இளையராஜா, செய்தியாளர்களுடன் சில நிமிடங்கள் பேசவிருக்கிறார்.

சென்னை திரும்பும் இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு

இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "தான் பிறந்த மண்ணையும், தமிழ் சினிமாவையும் தலை நிமிர வைத்த இசைஞானி இளையராஜா, இன்று (ஜனவரி 21, புதன்கிழமை) பிற்பகல் 12.35 மணிக்கு மும்பையிலிருந்து சென்னைக்கு வருகிறார், அவருக்கு சென்னை விமான நிலையத்தில் ஒட்டு மொத்த மீடியா சார்பில் ஒரு இதயப் பூர்வமான வரவேற்பு தரப்பட உள்ளது.

தனது ஆயிரம் பட சாதனை, அதற்காக பாலிவுட் நடத்திய பாராட்டு விழா ஆகியவை குறித்து மீடியாவுடன் பேசுகிறார் நம் ராகதேவன்.

பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், இணையதள செய்தியாளர்கள், பண்பலை தொகுப்பாளர்கள், சுதந்திர பத்திரிகையாளர்கள், செய்தித் தொடர்பாளர்கள்.... அனைவரும் சென்னை விமான நிலையத்துக்கு வந்து, நம் இசைஞானிக்கு சிறப்பான வரவேற்பினைத் தர, அன்புடன் அழைக்கிறோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.