சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பராக இருந்து வரும் அல்லிராஜா சுபாஸ்கரன், தயாரித்துள்ள கத்தி படத்தில் நடிக்க வேண்டாம் என்று பலமுறை கோரியும் கேட்காமல் நடித்த காரணத்திற்காக நடிகர் விஜய்க்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்த லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இலங்கையில் இயங்கி வரும் லைக்கா மொபைல் நிறுவனத்தின் அதிபர்தான் இந்த அல்லிராஜா. இவர் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. இவர்தான் கத்தி படத்தைத் தயாரித்துள்ளார்.
இப்படம் குறித்த அறிவிப்பு வந்தபோதே உலகத் தமிழர்கள் மத்தியில் இதில் விஜய் நடிக்கக் கூடாது என்று எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் விஜய்யும் சரி, பட இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸும் சரி இதைப் பொருட்படுத்தவில்லை. படமும் கிட்டத்தட்ட முடிந்து விட்டது.
இந்தநிலையில் அல்லிராஜாவின் குடும்ப விழா லண்டனில் நடைபெறவுள்ளது. இதில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், நாயகி சமந்தா உட்பட கத்தி படத்தின் முக்கிய கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் லண்டன் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் லண்டனுக்கு வரும்போது பெரும் போராட்டம் நடத்த இலங்கைத் தமிழர்கள் முடிவு செய்துள்ளனராம். விஜய் லண்டன் வந்தால் அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டவும் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில், விஜய் செவ்வாய்க்கிழமை லண்டன் செல்கிறார். அங்கு 15 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளார். வழக்கமாக லண்டன் சென்றால், அங்குள்ள தனது மாமனார் வீட்டில்தான் தங்குவார். ஆனால் தற்போது இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு நிலவுவதால், இம்முறை அங்கு தங்காமல் அதிக பாதுகாப்பு கொண்ட ஹோட்டலில் தங்க இருப்பதாக கூறப்படுகிறது.