குளச்சல்: பரத்பாலா இயக்கும் மரியான் படத்தின் ஷூட்டிங்கின்போது, மீனவராக தனுஷ் நடித்தபோது படகு கடலில் கவிழ்ந்ததில் அவரும், நடிகர் அப்புக்குட்டியும் தண்ணீரில் கவிழ்ந்து விட்டனர். இருப்பினும் இருவரையும் மீனவர்கள் சேர்ந்து மீட்டு விட்டனர். அதனால் இருவரும் தப்பி விட்டனர்.
இப்போதுதான் கடல் என்ற படத்தை எடுத்து ஒய்ந்தார் மணிரத்தினம். படமும் தியேட்டர்களை விட்டு வெகு வேகமாக வெளியேறி விட்டது. இந்த நிலையில் மீனவர் வேடத்தில் தனுஷ் நடித்து வரும் படம்தான் மரியான்.
பரத்பாலா இயக்குகிறார். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்திற்காக, கடலுக்குள் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டார் இயக்குனர் பரத்பாலா.
அதன்படி ஒரு படகில் தனுஷ், அப்புக்குட்டி இருவரையும் அமர்த்தி கடலுக்குள் சென்று படமாக்கினார். அப்போது அவர்கள் அமர்ந்திருந்த படகு தீடிரென வீசிய பலத்த காற்றால் தலைகீழாக கவிழ்ந்தது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், பாதுகாப்புக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து இருவரையும் காப்பாற்றினார். இரு நடிகர்களுக்கும் காயம் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.