காலில் விழுந்து கேட்கிறேன்.. திருட்டு வீடியோ பார்க்காதீங்க! - ரசிகர்களிடம் சூர்யா வேண்டுகோள்

சென்னை: ரசிகர்களின் கால்களில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன். யாரும் திருட்டு டிவிடி பார்க்காதீர்கள் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்தார்.

சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து, சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பில், லிங்குசாமி இயக்கியுள்ள படம், ‘அஞ்சான்.' இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.

விழா மேடையில், சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது (ஒரு நாள் முன்னதாக). அவருக்கு தயாரிப்பாளர்கள் சுபாஷ் சந்திரபோஸ், யு.டி.வி.தனஞ்செயன் ஆகிய இருவரும் ஆளுயர மாலை அணிவித்தார்கள்.

காலில் விழுந்து கேட்கிறேன்.. திருட்டு வீடியோ பார்க்காதீங்க! - ரசிகர்களிடம் சூர்யா வேண்டுகோள்

வேண்டுகோள்

விழாவில், சூர்யா பேசும்போது ரசிகர்களிடம் உருக்கமாக ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதில், "என் பிறந்தநாளையொட்டி ஆயிரம் பேருக்கு மேல் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்புகள் தானம் செய்ததற்காக ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிறந்த நாளுக்காக சுவரொட்டிகள் அடித்து பணத்தை விரயம் செய்யாதீர்கள். அந்த பணத்தில், சக மனிதர்களுக்கு உதவுங்கள். இல்லாதவர்களுக்கு உதவிகள் செய்து சந்தோஷப்படுத்துங்கள்.

காலைத் தொட்டு...

திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்காதீர்கள். உங்கள் கால்களை தொட்டு கேட்கிறேன். ‘சிங்கம்-2' படத்துக்கு மட்டும் 45 லட்சத்துக்கு மேல் திருட்டு வி.சி.டி. அடித்து இருக்கிறார்கள்,'' என்றார்.

பின்னர் சூர்யா மேடையில் நின்றபடி, குனிந்து ரசிகர்களை நோக்கி வணங்கினார்.

கேள்வி பதில்

பின்னர் அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரம்யா சில கேள்விகளை கேட்டார். அதற்கு சூர்யா பதில் அளித்தார்.

படத்துக்கு படம் உங்கள் உடற்கட்டு மற்றும் தோற்றத்தை மாற்றி அமைத்துக் கொள்கிறீர்களே, எப்படி?

பதில்: கதாபாத்திரங்களை வடிவமைப்பது இயக்குநர்கள்தான். பாலா, கவுதம் மேனன் போன்ற இயக்குநர்கள் எனக்கான கதாபாத்திரத்தை தங்கள் மனத்திரையில் ஓட்டிப் பார்த்து இருப்பார்கள். அவர்கள் சொல்கிறபடி, தோற்றத்தை மாற்றிக் கொள்கிறேன்.

அஞ்சான்

‘அஞ்சான்' படத்தில் உங்களுக்கு சவாலாக இருந்தது என்ன?

பதில்: இயக்குநர் பாலா அண்ணன் சொல்வார். 'நடிக்கும்போது திரையில் சூர்யா தெரியக்கூடாதுடா. கதாபாத்திரம்தான் தெரிய வேண்டும்' என்பார். ‘அஞ்சான்' படத்தில் கிருஷ்ணா, ராஜுபாய் என 2 கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இவற்றில் சூர்யா தெரியாமல், அந்த பாத்திரமாக மாறுவது சவாலாக இருந்தது.

சமந்தா பற்றி

உங்கள் ஜோடியாக நடித்த சமந்தா பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்: படத்தில், ‘‘ஏக் தோ தீன்'' என்ற பாடலை நான் சொந்த குரலில் பாடியிருக்கிறேன். அந்த பாடல் காட்சியை படமாக்கியபோது, சமந்தாவுக்கு நான் இந்தி சொல்லிக் கொடுத்தேன். சமந்தா எனக்கு தெலுங்கு சொல்லிக் கொடுத்தார். சமந்தா மிக சாதுர்யமானவர். மிக தெளிவானவர். ஒவ்வொரு நாளும் அவர் எப்போது படப்பிடிப்புக்கு வருவார்? என்று யூனிட்டே காத்திருக்கும்.

வழக்கமா படப்பிடிப்பு தளத்தில் தாடியோடு திரிபவர்கள் கூட சமந்தா வருகிறார் என்றால் அன்று பளபளவென ஷேவ் செய்துவிட்டு வருவார்கள்!

அனுஷ்கா

காதல் பாடல்களை கேட்கும்போது உங்களுக்கு எந்த கதாநாயகி நினைவுக்கு வருவார்? - இது இயக்குநர் லிங்குசாமி கேட்ட கேள்வி. அதற்கு பதிலளித்த சூர்யா, 'அனுஷ்கா' என்றார்.

 

இன்று சூர்யா பிறந்த நாள்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

பிறந்த நாளையொட்டி, அவரது ரசிகர்கள் ரத்த தானம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர்.

1997-ம் ஆண்டு நேருக்கு நேர் என்ற படத்தில் இயக்குநர் வசந்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் சரவணன் என்கிற சூர்யா. நடிகர் சிவகுமாரின் மூத்த மகன்.

இன்று சூர்யா பிறந்த நாள்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

17 ஆண்டுகள்

அவர் நடிக்க வந்து 17 ஆண்டுகள் ஆகின்றன. முப்பத்து ஒன்பது வயதான சூர்யா இதுவரை நடித்துள்ள படங்கள் 35 (அஞ்சானுடன்).

போராட்டம்

நேருக்கு நேர் படத்துக்குப் பிறகு, சூர்யா நடித்து வெளியான சில படங்கள் அவ்வளவாகப் போகவில்லை. காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது போன்ற படங்கள் வெளியான காலகட்டம் சூர்யாவுக்கு போராட்ட காலமாக இருந்தது.

ஏறுமுகம்

ப்ரெண்ட்ஸ் படம் சூர்யா தன்னை திரையுலகில் தக்க வைத்துக் கொள்ள உதவியது என்றால், அடுத்து வந்த நந்தா அவரை தனித்துவம் மிக்க நாயகனாக நிலைநிறுத்தியது. அதன் பிறகு சூர்யாவின் நடிப்பு வாழ்க்கையில் ஏறுமுகம்தான்.

35வது படம்

இன்று சூர்யா தனது 35வது படமாக அஞ்சான் நடித்து முடித்துள்ளார். அடுத்து அவர் நடிக்கும் படம் மாஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. காதல், ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்து ஏரியாவிலும் புகுந்து விளையாடும் நவரச நடிகராக சூர்யா இன்று பிரமாண்ட உருவம் எடுத்து நிற்கிறார்.

ரசிகர்கள்

அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு நாள் முன்னதாக நேற்றே ஆரம்பமாகிவிட்டது. பல ஆயிரம் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் அவர் பிறந்த நாளைச் சொல்லி, ரத்த தானமும் உடல் உறுப்பு தானமும் செய்தனர். இன்றும் நலத்திட்ட உதவிகள் தொடர்கின்றன.

கொண்டாட்டம்

இன்னொரு பக்கம், நேற்று சத்யம் அரங்கில் நடந்த அஞ்சான் பட இசை வெளியீட்டு விழாவிலேயே சூர்யாவின் பிறந்த நாளையும் கொண்டாடினர் படக் குழுவினரும், திரையுலகினரும். சூர்யாவுக்கு ஆளுயர பிறந்த நாள் மாலையை அணிவிக்கப்பட்டு, பிறந்த நாள் கேக்கும் மேடையிலேயே வெட்டப்பட்டது.

வாழ்த்துகள்

இன்று தன் மனைவி ஜோதிகா, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடுகிறார் சூர்யா.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சூர்யா!

 

செப்டம்பரிலிருந்து அக்டோபருக்குப் போனது கமலின் உத்தம வில்லன்?

கமல் ஹாஸன் நடிக்கும் உத்தம வில்லன் படத்தின் வெளியீட்டுத் தேதி செப்டம்பர் மாதத்திலிருந்து அக்டோபருக்கு தள்ளிப் போயுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

கமல் ஹாஸன் திரைக்கதை எழுதி, லிங்குசாமியுடன் இணைந்து தயாரித்து நடித்துள்ள படம் உத்தம வில்லன்.

ஜெயராம், ஆன்ட்ரியா, பூஜா குமார், பார்வதி நாயர் நடித்துள்ள படம் இது.

செப்டம்பரிலிருந்து அக்டோபருக்குப் போனது கமலின் உத்தம வில்லன்?  

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. விஸ்வரூபம் 2 படத்துக்கு முன்பே உத்தம வில்லன் வெளியாகும் என அறிவித்திருந்தார் கமல்ஹாஸன்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும் படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 10 என அறிவித்திருந்தனர்.

ஆனால் தற்போது அதில் ஒரு மாற்றம். செப்டம்பர் 10-க்கு பதில், காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி படத்தை வெளியிட்டால் ஆரம்ப வசூல் சிறப்பாக இருக்கும் என விநியோகஸ்தர்கள் தரப்பு கருதுவதால், படத்தை மூன்று வாரங்கள் தஷள்ளி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனை உத்தம வில்லன் படத்தின் கேரள விநியோகஸ்தர் தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளனர். செப்டம்பர் மாதம் படத்தின் இசை வெளியீட்டை வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள்.

உத்தம வில்லன் படத்தை கமலின் நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். அவர் இயக்கும் முதல் தமிழ்ப் படம் இது.

 

ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து எம்ஆர் ராதா கொள்ளுப் பேரன் தயாரிக்கும் அனிமேஷன் படம்!

சென்னை: ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து எம்ஆர் ராதாவின் கொள்ளுப் பேரன் பிரபாகரன் ஹரிஹரன் ஒரு அனிமேஷன் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் பட்ஜெட் 45 மில்லியன் டாலர்களாகும்.

இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து எம்ஆர் ராதா கொள்ளுப் பேரன் தயாரிக்கும் அனிமேஷன் படம்!

நம் திரைப்படத்துறையை சேர்ந்த அனைவருக்கும் ஹாலிவுட் தரத்திற்கு படம் எடுக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. சமீபகாலமாக நமது திரைப்படங்கள் ஹாலிவுட்டிலேயே எடுப்பதும் நடந்துவருகிறது.

மறைந்த பிரபல நடிகர் எம்ஆர் ராதாவின் கொள்ளுப்பேரனும், மறைந்த நடிகர் எம்ஆர்ஆர் வாசுவின் பேரனுமான பிரபாகரன் ஹரிஹரன் தன்னுடைய சொந்த நிறுவனமான ஹரிகேன் ஸ்டுடியோஸ் சார்பில் ஒரு ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிக்கவுள்ளார்.

"Bremen Town Musicians" என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் இந்த அனிமேஷன் படத்தின் பட்ஜெட் 45 மில்லியன் டாலர்களாகும்.

ஹரிகேன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் "woolfell" என்கிற இன்னொரு அனிமேஷன் படத்தையும் தயாரிக்கவுள்ளனர். இப்படத்தில் பிரபல இந்திய நட்சத்திரங்களுடன் ஹாலிவுட் நட்சத்திரங்களும் நடிக்க உள்ளனர்.

இந்த இரு படங்களும் உலகஅரங்கில் இந்திய தொழிழ்நுட்ப கலைஞர்களின் திறமையை பறைசாற்றும்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்து பிரபாகரன் ஹரிஹரன் கூறுகையில், "நான் பரம்பரையாக சினிமா தொழிலிருந்து வந்ததாலோ என்னவோ எனக்கு சர்வதேச அளவில் படம் தயாரித்து புகழ்பெறவேண்டும் என்ற ஆசை அதிகம். அந்த ஆசையின் உந்துதல்தான் என்னை இவ்வளவு தூரம் பயணிக்க வைத்தது," என்றார்.

சமீபத்தில் இது சம்பந்தமாக ஹாலிவுட் நிறுவனத்துடன் சந்திப்பு நடத்திய ஹரிகேன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி திவ்யா வேணுகோபால், "நான் பிரமிப்பாக பார்த்து வியந்த ஹாலிவுட் நிறுவனங்களுடன் தொழில் நிமித்தமாக சந்திப்பு நடத்தியதே இளைஞர்களான எங்களுக்கு மிகவும் பெருமையான விஷயம்.
எங்களுக்கு அவர்கள் தந்த ஊக்கமும், உற்சாகமும் உலகத்தரத்தில் ஒரு படம் தயாரிக்கவேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுத்தது.

இந்த படம் அடிப்படையில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருப்பதால் உலகஅளவில் புகழ்பெற்ற இந்திய இசயமைப்பாளரிடமோ, அல்லது அதற்கு நிகரான இன்னொரு இசையமைப்பளரிடமோ பேசவுள்ளோம்," என்றார்.

 

ராமானுஜன் விமர்சனம்

Rating:
3.0/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: அபிநய் வட்டி, பாமா, நிழல்கள் ரவி

இசை: ரமேஷ் விநாயகம்

ஒளிப்பதிவு: சன்னி ஜோசப்

தயாரிப்பு: இயக்கம்: ஞானராஜசேகரன்

உலகுக்கு தமிழகம் தந்த மிகப்பெரிய கணித மேதை என்று சொல்லப்படும் சீனிவாச ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை தனக்குக் கைவந்த விதத்தில் படமாகத் தந்திருக்கிறார் ஞான ராஜசேகரன்.

ஆனால் ஒரு முழுமையான திரைப் படம் அல்லது ஆவணப்படமாக பார்வையாளனை இந்தப் படம் திருப்திப்படுத்துகிறதா...? பார்க்கலாம்!

ராமானுஜன் விமர்சனம்

குடந்தையில் ஏழை பிராமணக் குடும்பத்தில் பிறந்த ராமானுஜனுக்கு கணிதத்தின் மீது அபார ஈடுபாடு, ஞானம். ஆனால் மற்ற பாடங்களில் நாட்டமின்மையால், கல்லூரிப் படிப்பை பாதியில் தொலைக்கிறான். திருமணத்துக்குப் பிறகு சென்னைக்குப் போய் ஒரு வேலையில் சேர்கிற ராமானுஜன், தன் கணித ஆராய்ச்சியைத் தொடர்கிறான். முதலில் ராமானுஜனைக் கண்டிக்கும் உயரதிகாரி, பின்னர் அவனது கணித மேதைமையைப் புரிந்து கொண்டு உதவி செய்கிறார். அவர் உதவியுடன் தன் கணித கண்டுபிடிப்புகளை பிரிட்டனுக்கு அனுக்கிறான். அவற்றைப் பார்த்து வியக்கும் ஹார்வர்ட் பல்கலைக் கழக கணிதப் பேராசிரியர் ஹார்டி, ராமானுஜனை லண்டனுக்கு வரவழைக்கிறார்.

ஆனால் ராமானுஜனின் உணவுப் பழக்கம், கடவுள் நம்பிக்கை, சொந்தங்கள் தரும் மன உளைச்சல் போன்றவை அவனை உற்சாகமிழக்கச் செய்து, உடலையும் பாதிக்கிறது. சரிப்படுத்த முடியாத அளவுக்கு காசநோய் தாக்கம் காரணமாக ஊருக்கு திருப்பியனுப்பப்படும் ராமானுஜன் மரணப்படுக்கையில் வீழ்கிறார். மிக இளம் வயதில் உலகை விட்டுப் பிரியும் அவரது, இறுதி நிகழ்வுக்கு சொந்த சாதிக்காரர்களே வர மறுக்க, வேற்று சாதியார் சிலர் அவரை அடக்கம் செய்கிறார்கள்.

ராமானுஜன் விமர்சனம்

ஒரு மாபெரும் கணித மேதையின் வாழ்க்கை, அற்ப ஆயுளில், அதைவிட அற்பமாக வகையில் முற்றுப் பெறுகிறது.

-இதுதான் ராமானுஜனின் கதை. ஆனால் இந்தக் கதையை, ஒரு திரைப்படத்துக்குரிய நளினத்தோடோ அல்லது ஆவணப்படத்துக்குரிய நம்பகத் தன்மையோடோ தரத் தவறியிருப்பதுதான் ஞான ராஜசேகரனின் ஆகப்பெரிய குறை!

பாரதி, பெரியார் படங்களில் இருந்த அதே குறைபாடுதான் இந்தப் படத்திலும். ஒவ்வொரு முறையும் இந்த சாதனையாளர்களின் கதை என்ற கோடுகளை எடுத்துக் கொள்ளும் ஞான ராஜசேகரன், அவற்றை மேம்போக்காக, செவிவழிச் செய்தியாக கேட்ட விஷயங்களை வைத்து ஓவியமாக்க முனைகிறார். அதன் விளைவு, மனதில் பதியாத அரைகுறைப் படங்களாக அவை மாறிவிடுகின்றன.

வாழ்க்கை வரலாற்றுப் படங்களுக்கு மிக முக்கியமானது சரளமான திரைக்கதை, செறிவான காட்சிகள்.. மற்றும் அவற்றின் அசைக்க முடியாத நம்பகத் தன்மை. இந்த அம்சங்களை மோகமுள் தவிர, ஞான ராஜசேகரனின் வேறு எந்தப் படங்களிலும் பார்க்க முடியாது. இந்த ராமானுஜனும் அதற்கு விலக்கல்ல!

மேலும், தமிழில் வாழ்க்கை வரலாற்றுப் படமென்றால் இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது என்ற தோற்றத்தை இந்த மாதிரி படங்கள் ஏற்படுத்தியுள்ளதை, மாற்ற வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. ஞாஎன ராஜசேகரனே கூட இதற்கான முயற்சியை மேற்கொண்டால் நலம்!

ராமானுஜன் விமர்சனம்

ராமானுஜன் மிகப் பெரிய கணித மேதை என்பதெல்லாம் சரிதான். ஆனால் அவரது கணித மேதைமை எப்படி நடைமுறை வாழ்க்கைக்கு உதவுகிறது என்பதை ஏடிஎம் ரகசிய குறியீட்டெண் சமாச்சாரத்தோடு நிறுத்திக் கொண்டது ஏன்? இன்னும் சில பயன்பாடுகளைக் காட்சிகளாகக் கோர்த்திருந்தால் அவரது சாதனையை வலுவாக பார்வையாளனின் மனதுக்குள் பதிந்திருக்க முடியும்!

அதே நேரம், சனாதன கட்டுப்பாடுகள் மிக்க சமுதாயத்தில் பிறந்ததே ராமானுஜனின் வீழ்ச்சிக்குக் காரணமாகிப் போனதைக் காட்டும் காட்சிகளும், ராமானுஜனுக்கு ஆதரவாக பேராசிரியர் ஹார்டி பேசும் காட்சியும் நல்ல பதிவு.

படம் நடக்கும் காலகட்டத்தில் சார் என்ற வார்த்தைப் பிரயோகமே தமிழகத்தில் இல்லை என்ற குறைந்தபட்ச விஷயத்தைக் கூட இயக்குநர் எப்படி கவனிக்காமல் விட்டுவிட்டார்?

ராமானுஜனின் கண்டுபிடிப்புகள், அவை கிளப்பும் ஆச்சர்யங்களை காட்சிப்படுத்தாமல், வெறும் வசனங்களால் கடத்தப் பார்ப்பது இயக்குநரின் இயலாமை அல்லது போதிய தகவல்கள் இல்லாமை என்பதையும் கவனிக்க வேண்டும்!

ராமானுஜனாக நடித்திருக்கும் அபினய் முடிந்த வரை அந்தப் பாத்திரத்துக்கு நியாயம் செய்ய முயன்றிருக்கிறார். குறிப்பாக தன் இயலாமை மற்றும் உடல் வலியை அவர் பிரதிபலிக்கும் காட்சிகள்.

அவருக்கு ஜோடியாக வரும் பாமா, அன்றைய மருமகள்களைப் பிரதிபலிக்கிறார். பிராமண குடும்ப அம்மா - மாமியார் மனநிலையை சுகாசினி மூலம் சரியாகவே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

நிழல்கள் ரவி, ராதாரவி, மனோபாலா, தலைவாசல் விஜய், சரத்பாபு, ஒய்.ஜி.மகேந்திரன், அப்பாஸ், டெல்லி கணேஷ், மோகன்ராம், டி.பி.கஜேந்திரன் என ஏகப்பட்ட பாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்துவிட்டுப் போகின்றன.

இந்த மாதிரி வரலாற்றுப் படங்களுக்கு மிக முக்கிய தேவை, காட்சிகளுக்கு நம்பகத் தன்மையைக் கூட்டும் இசை. அது இந்தப் படத்தில் இல்லை. வாணி ஜெயராம் பாடும் அந்த நாராயணா பஜன் அருமை!

சன்னி ஜோசப்பின் ஒளிப்பதிவு, படத்தின் கதை நிகழும் காலகட்டத்தை நம்ப வைக்கிறது.

படத்தில் இத்தனை குறைகள் இருந்தாலும், அவற்றுக்கு பட்ஜெட் ஒரு காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. குறைந்த செலவில், முடிந்தவரை சமரசமின்றி ஒரு சுத்தமான படத்தைத் தர வேண்டும் என்ற இயக்குநரின் முயற்சியை விமர்சனம் என்ற பெயரில் கொச்சைப்படுத்தவும் மனசில்லை. அந்த முயற்சிக்காகவாவது இந்தப் படத்தை ஒரு முறை பார்க்கலாம்!

 

ரம்பா குடும்பத்தினர் மீது அண்ணி கொடுத்த வரதட்சணை புகார்.. வழக்குப் பதிவு செய்ய கோர்ட் உத்தரவு

ஹைதராபாத்: தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ரம்பா மீது ஹைதராபாத் போலீசில் வரதட்சணைக் கொடுமை வழக்கு பதிவாகி உள்ளது. கோர்ட் உத்தரவின் பேரில் போலீஸார் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

ரம்பாவின் சகோதரர் ஸ்ரீனிவாஸ் ராவ் கடந்த 1999 ஆம் ஆண்டு பல்லவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் மனக் கசப்பு காரணமாக பிரிந்து விட்டனர்.

ரம்பா குடும்பத்தினர் மீது அண்ணி கொடுத்த வரதட்சணை புகார்.. வழக்குப் பதிவு செய்ய கோர்ட் உத்தரவு

இந்நிலையில் தற்போது அந்தப் பெண் தனது கணவரும் அவரது உறவினர்களும் பெற்றோரிடம் இருந்து அதிக வரதட்சணை வாங்கி வரும்படி வற்புறுத்தி அவரைக் கொடுமைப்படுத்தியதாகவும், இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே எனது புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சில தினங்களுக்கு முன்னர் ஹைதராபாத் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டுள்ளோர் மீது வழக்குப் பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன் படி, ஸ்ரீனிவாஸ் ராவ், அவரது சகோதரி நடிகை ரம்பா, குடும்பத்தினர் மீது வரதட்சணைத் தடைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பல்லவியின் குற்றச்சாட்டுக்குரிய ஆதாரங்களை ஆராய்ந்து வருவதாகவும், மேற்கொண்டு விசாரணை நடந்து வருவதாகவும் ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

முதுகுவலியால் அவதிப்படும் வைரமுத்துவுக்கு கோவை மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை

முதுகுவலியால் அவதிப்படும் வைரமுத்துவுக்கு கோவை மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை

கோவை: கோவைக்கு வந்த இடத்தில் முதுகுவலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவுக்கு இன்று அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் தனது மணிவிழாவை கோவையில் விழா நடத்திக் கொண்டாடினார் வைரமுத்து. இதற்கான பணிகளில் தீவிரமாகவும் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர் சென்னை திரும்பினார். இந்த நிலையில் திருப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

மேலும் 2 நாட்களுக்கு முன்பு கோவையில் நடந்த லயன்ஸ் கிளப் நிகழ்ச்சிக்காக மீண்டும் கோவை வந்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென முதுகுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனைகள் நடத்தினர். சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து இன்று அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரமுத்துவை அவரது இரு மகன்களும், மருமகள்களும் கூடவே இருந்து கவனித்துக் கொள்கின்றனர்.

ஆபரேஷனுக்கு முன்பு வீடியோவில் உரை

முன்னதாக இன்று ஜெயகாந்தன் விழாவில் சென்னையில் வைரமுத்து பேசுவதாக இருந்தது. ஆனால் உடல் நல பாதிப்பு காரணமாக அதில் பங்கேற்க இயலாமல் போய் விட்டது. இருப்பினும் உறுதியளித்தபடி தனது பேச்சு இடம் பெற வேண்டும் என்ற உறுதியால், அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக தனது பேச்சை வீடியோவில் பதிவு செய்து கொடுத்தார் வைரமுத்து.

இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் வைரமுத்துவின் வீடியோ பேச்சு ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அஜீத்திடம் வாலை ஆட்டிய சுதான்ஷுவுடன் மோதும் கௌதம் கார்த்திக்

சென்னை: அஜீத்தின் பில்லா 2 படத்தில் வில்லனாக நடித்த சுதான்ஷு கௌதம் கார்த்திக்கின் இந்திரஜித் படத்தில் வில்லனாக வருகிறார்.

அஜீத்தின் நடிப்பில் வெளியான பில்லா 2 படத்தில் வில்லனாக வந்தவர் பாலிவுட் நடிகர் சுதான்ஷு பாண்டே. அதன் பிறகு தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த அவர் தற்போது கௌதம் கார்த்திக் நடித்து வரும் இந்திரஜித் படம் மூலம் மீண்டும் கோலிவுட் வந்துள்ளார்.

அஜீத்திடம் வாலை ஆட்டிய சுதான்ஷுவுடன் மோதும் கௌதம் கார்த்திக்

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் மகன் கலாபிரபு இயக்கும் இந்த படத்தில் கௌதமுக்கு ஜோடியாக சோனாரிகா பொடோரியா நடித்து வருகிறார். படத்தின் 50 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இந்த படத்தில் கௌதம் ஆக்ஷன் ஹீரோவாக வருகிறாராம். அவர் இந்த படத்தை தவிர்த்து சிப்பாய், வை ராஜா வை ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான கடல் மற்றும் என்னமோ ஏதோ ஆகிய படங்கள் தோல்வி அடைந்துள்ள நிலையில் அவர் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்.

 

இன்றைய தலைவர்களுக்கு காமராஜர் பற்றி பாடம் நடத்த வேண்டும்! - பாரதிராஜா

திருப்பத்தூர் (வேலூர்): இன்றைய அரசியல் தலைவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் பற்றி பாடம் நடத்த வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா கேட்டுக் கொண்டார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் செயல்பட்டு வரும் காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சார்பில், காமராஜரின் 112 - வது பிறந்த நாள் விழா ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

இன்றைய தலைவர்களுக்கு காமராஜர் பற்றி பாடம் நடத்த வேண்டும்! - பாரதிராஜா

பிற்பகல் 2.30 மணிக்கு மாணவர் அரங்கம் நிகழ்ச்சியும், 3 மணிக்கு ‘படிக்காத மேதையிடம் நாம் படிக்க வேண்டிய பாடம்... நிர்வாகத்திறனா? அல்லது நெறி பிறழா அரசியலா?' என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடந்தன.

மாலையில் 4000 மாணவ- மாணவிகளுக்கு இயக்குநர் பாரதிராஜா மூலம் சீருடை வழங்கும் விழா நடந்தது.

நிகழ்ச்சியின் நிறைவில் பாரதிராஜா பேசுகையில், "பெற்ற தாய், தந்தை பற்றி பேசுவதற்கு குறிப்பு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுபோலத்தான் என் தலைவன் காமராஜரை பற்றி பேசுவதற்கும் குறிப்பு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவர் வாழ்ந்த காலத்தில் அவரை என்னால் பாராட்ட முடியவில்லை. அவரை முழுமையாக பாராட்ட இங்கு ஒரு மேடை கிடைத்திருப்பது மிகவும் சந்தோஷம்.

காமராஜருக்கு பிறகு எத்தனையோ அரசியல் கட்சிகள், தலைவர்கள் வந்தார்கள். ஆனால் காமராஜரைப் போல யாரும் இதுவரை வரவில்லை.

மேடை நாகரீகத்தை காமராஜரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். அவரது பேச்சில் தனி மனித விமர்சனம் இருக்காது. ஆனால் இன்றைய அரசியலில் அப்படி இல்லை. சாதி, மதம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்காக பள்ளிகளில் சீருடை பழக்கத்தை கொண்டு வந்தவர் காமராஜர். மதிய உணவை கொண்டு மாணவர்களின் வயிற்றைக் குளிர வைத்தவர் பெருந்தலைவர்.

தான் படிக்கவில்லை, இந்த சமுதாயமாவது படித்து முன்னேற வேண்டும் என நினைத்து பல ஆயிரம் பள்ளிகளைத் திறந்தவர். மண்ணுலகில் வாழ்ந்த ஒரு மாமனிதர். சமுதாய நோக்கம் கொண்ட ஒரே தலைவர்.

உடம்புதான் கறுப்பு, மனசு வெள்ளை. கோபம் வந்தால் கொட்டி தீர்த்து விடுவார். மனதில் வைத்துக் கொள்ளமாட்டார். பொய்மை இல்லாதவர். தூய்மையான தலைவர். இங்கு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் அவரது ஆன்மா எங்கோ இருந்து கேட்டுக் கொண்டுதான் இருக்கும். கேட்ட பிறகு அந்த ஆன்மா என்னை (பாரதிராஜா) ஆசீர்வதிக்கும்.

இன்றைய அரசியல்வாதிகளுக்கு காமராஜர், கக்கன் பற்றி பாடம் நடத்த வேண்டும்.

தமிழ் சமுதாய மக்கள் படித்து மேலே வந்ததற்கு காரணம் காமராஜர்தான். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை வேலையில் புரட்டி எடுப்பதில் வல்லவர். நேர்மையான தமிழன், தொண்டன். எல்லாவற்றையும் காட்டிலும் நேர்மையான மனிதன்," என்றார்.