பேஸ்புக் நண்பர்கள் சொன்ன தலைப்பை அடுத்த படத்துக்கு வைத்த பிரசாந்த்!

பேஸ்புக் நண்பர்கள் பரிந்துரைத்த தலைப்பை தன் அடுத்த புதிய படத்துக்கு வைத்துள்ளார் நடிகர் பிரசாந்த். தலைப்பு: சாகசம்!

மம்பட்டியான், பொன்னர் சங்கர் படங்களுக்குப் பிறகு ஒரு சின்ன இடைவெளி விட்டு பிரசாந்த் புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அதில் முதல் படத்துக்கு சாகசம் என தலைப்பிட்டுள்ளார். இந்தத் தலைப்பை அவருக்கு பரிந்துரைத்தவர்கள் பேஸ்புக்கில் உள்ள நண்பர்கள்தான்.

பேஸ்புக் நண்பர்கள் சொன்ன தலைப்பை அடுத்த படத்துக்கு வைத்த பிரசாந்த்!

இதனை அவரே புத்தாண்டு அன்று அறிவித்துள்ளார். படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப் போவதாகக் கூறியுள்ளார் பிரசாந்த்.

இங்கே நீங்கள் பார்ப்பது இந்தப் படத்துக்கான பிரசாந்தின் புதிய தோற்றம்.

இந்தப் படத்தோடு, பிரசாந்த் நடிக்கப் போகும் இன்னொரு படம் ஜீன்ஸ் 2 என்பது குறிப்பிடத்தக்கது.

 

முன்னாள் காதலியின் வீட்டுக்கு அடிக்கடி விசிட் அடிக்கும் இளம் நடிகர்

சென்னை: பாண்டி இயக்குனரின் படத்திற்காக அமைக்கப்பட்டுள்ள நயனத்தின் வீட்டுக்கு அவ்வப்போது சென்று அதை அழகுபடுத்துகிறாராம் விரல் வித்தை நடிகர்.

விரல் வித்தை நடிகர் பாண்டி இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்திற்கு நாயகியை தேடி ஊரெல்லாம் அலைந்தார்கள். இறுதியில் விரல் வித்தை நடிகரின் முன்னாள் காதலியான நயனத்தை ஒப்பந்தம் செய்தனர்.

இப்படி நயனமும், விரல் வித்தையும் ஒன்றாக நடிப்பதே பலரின் கவனத்தையும் படத்தின் பக்கம் திருப்பியுள்ளது. படத்தில் நாயகியின் வீடு பார்ப்பதற்கு சும்மா நச்சுன்னு அழகாக இருக்க வேண்டுமாம். அதற்காக சென்னையின் புறநகர் பகுதியில் சூப்பராக ஒரு செட் போடுகிறார்கள். இது வெறும் செட் தான். ஆனால் விரல் வித்தை நடிகரோ ஏதோ நிஜத்தில் வீடு கட்டுவது போன்று அந்த செட்டுக்கு அடிக்கடி சென்று அதை அழகுபடுத்தி வருகிறாராம்.

நடிகரின் இந்த விசிட் பலரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

 

ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்ததாக வந்தது முழுக்க முழுக்க வதந்தி!- விஷால்

சென்னை: ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்ததாகவும், அக்கட்சியின் தமிழக தலைவராக நியமிக்கப்பட இருப்பதாகவும் தன்னைப் பற்றி வந்த செய்திகள் முழுக்க வதந்தி என்று தெரிவித்துள்ளார் விஷால்.

தமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவராக நடிகர் விஷால் நியமிக்கப்பட உள்ளதாக சில தினங்களாக பரபரப்பு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக போராட்டம் துவங்கியபோது நடிகர், நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்தனர். விஜய் டெல்லிக்குப் போய் ஆதரவு தெரிவித்தார். நடிகர் விஷாலும் ஆதரவு தெரிவித்து அறிக்கைவிட்டார். நடிகர் சங்க விவகாரத்திலும் கேள்விகள் கேட்டு சர்ச்சைக்கு உள்ளானார்.

ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்ததாக வந்தது முழுக்க முழுக்க வதந்தி!- விஷால்

ஊழலுக்கு எதிராக போராடும் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள சூழ்நிலையில் அக்கட்சிக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு ஏற்பட்டு உள்ளது. பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் அக்கட்சியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி நடக்கிறது. நடிகர் விஷாலையும் இக்கட்சிக்கு இழுக்க முயற்சி நடப்பதாக பேசப்படுகிறது. விஷால் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தால் அவருக்கு தமிழக ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று செய்திகள் வெளியாகின.

ஆனால் விஷால் இதுபற்றி ட்வீட்டரிலோ, வேறு மீடியா மூலம் கூட எந்தக் கருத்தும் கூறவில்லை.

அவரிடம் இதுபற்றி கேட்டபோது, "இதில் உண்மை இல்லை. நான் வெளிப்படையானவன். எதுவாக இருந்தாலும் நிச்சயம் சொல்வேன். இது திட்டமிட்ட வதந்தி மாதிரிதான் உள்ளது," என்றார்.

 

பாலுமகேந்திராவுக்கு எம்ஜிஆர் விருது; பாரதிராஜாவுக்கு சிவாஜி விருது!

சென்னை: இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு எம்ஜிஆர் விருதும், பாரதிராஜாவுக்கு சிவாஜி விருதும் வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் வழங்கப்படும் வி4 விருதுகள் விழா இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி சென்னையில் நடந்தது.

மூத்த கலைஞர்களுக்கு விருது

மூத்த தயாரிப்பாளரும் முன்னாள் அமைச்சருமான இராம வீரப்பன், இயக்குநர் எஸ் பி முத்துராமன், பாடகர் ஏஎல் ராகவன், நடிகை எம் என் ராஜம், நடிகர் விஎஸ் ராகவன், நடிகை மனோரமா, மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் மற்றும் மூத்த சினிமா பத்திரிகையாளர் தேவி மணி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

எம்ஜிஆர் - சிவாஜி விருது

மக்கள் திலகம் எம்ஜிஆர் விருது - பாலு மகேந்திரா

நடிகர் திலகம் சிவாஜி விருது - பாரதிராஜா

பாலுமகேந்திராவுக்கு எம்ஜிஆர் விருது; பாரதிராஜாவுக்கு சிவாஜி விருது!

சிறந்த படங்களுக்கான விருதுகள்:

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

சூது கவ்வும்

சிறந்த இயக்குநர்கள்

எழில் (தேசிங்கு ராஜா)

ராம் (தங்க மீன்கள்)

ஜிஎன்ஆர் குமரவேலன் (ஹரிதாஸ்)

சிறந்த நடிகர்கள்

விஜய் சேதுபதி (சூது கவ்வும்)

விக்ரம் பிரபு (இவன் வேற மாதிரி)

சிவகார்த்திகேயன் (எதிர் நீச்சல்)

ஷாம் (6)

சிறந்த நடிகைகள்

சிறந்த நடிகை - லட்சுமி மேனன் (பாண்டிய நாடு)

சிறந்த நடிகை - ப்ரியா ஆனந்த் (எதிர் நீச்சல்)

சிறந்த நடிகை - பிந்து மாதவி (தேசிங்கு ராஜா)

சிறந்த துணை நடிகை - தன்ஷிகா (பரதேசி)

பவர் ஸ்டாருக்கு விருது

சிறந்த காமெடி நடிகர் - பவர் ஸ்டார் சீனிவாசன் (சும்மா நச்சுன்னு இருக்கு)

சிறந்த காமெடி நடிகர் - சூரி (கேடி பில்லா கில்லாடி ரங்கா)

சிறந்த வில்லன் நடிகர் - சிம்மா (நேரம்)

சிறந்த துணை நடிகர் - அஷ்வின் (நய்யாண்டி)

சிறந்த புதுமுக நடிகர் - சஞ்சய் பாரதி (ஜன்னல் ஓரம்)

பரபரப்பான அறிமுக நடிகர்கள்

இந்தப் பிரிவில் கவுதம் கார்த்திக் (கடல்), ஐஸ்வர்யா அர்ஜூன் (பட்டத்து யானை), திலீபன் (வத்திக்குச்சி) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பரபரப்பான அறிமுக இயக்குநர்கள்

இந்தப் பிரிவில் எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில் குமார், ராஜா ராணி படம் இயக்கிய அட்லீ, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் தந்த பொன்ராம் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

அனிருத்

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது எதிர் நீச்சல் படத்துக்காக அனிருத்துக்கு வழங்கப்பட்டது.

சிறந்த பாடகி

சிறந்த பாடகிக்கான விருது கடல் படத்தில் நெஞ்சுக்குள்ள பாடலைப் பாடிய சக்திஸ்ரீ கோபாலனுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது பரதேசி படத்துக்காக செழியனுக்கும், சிறந்த எடிட்டருக்கான விருது ஸ்ரீகர் பிரசாத்துக்கும், சிறந்த பி ஆர் ஓவுக்கான விருது சுரேஷ் சந்திராவுக்கும் வழங்கப்பட்டது.

 

ஜில்லா பேனர், கட் அவுட் வைக்க தடை: கவலையில் விஜய் ரசிகர்கள்

சென்னை: சென்னை நகரின் சில பகுதிகளில் விஜய்யின் ஜில்லா பட பேனர்களை வைக்க காவல் துறையினர் தடை விதித்தார்களாம். இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தலைவா படத்தை ரிலீஸ் செய்ய தடை ஏற்பட்டு பிறகு அலைந்து திரிந்து படத்தை ஒரு வழியாக வெளியிட்டனர். தலைவா படத்தை வெளியிட தான் படாதபாடு பட்டதால் பொங்கலுக்கு ரிலீஸாகும் ஜில்லா எந்த பிரச்சனையும் இன்றி ரிலீஸாக வேண்டும் என்பதில் விஜய் முனைப்பாக உள்ளார்.

ஜில்லா பேனர், கட் அவுட் வைக்க தடை: கவலையில் விஜய் ரசிகர்கள்  

இதனால் படத்தில் பஞ்ச் வசனங்களே வேண்டாம் என்று கூறிவிட்டார் விஜய். படமும் பொங்கலுக்கு ரிலீஸாக தயாராகிவிட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் ரசிகர் மன்றத்தினர் சென்னை நகரில் உள்ள சில பகுதிகளில் ஜில்லா படத்தின் பிரமாண்ட கட் அவுட்டுகள் மற்றும் பேனர்களை வைக்க முயன்றுள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த காவல் துறையினர் கட் அவுட், பேனர் எல்லாம் வைக்கக் கூடாது என்று தடை விதித்துவிட்டார்களாம். இதையடுத்து கொண்டு வந்த கட் அவுட் மற்றும் பேனர்களை எடுத்துச் சென்றுவிட்டார்களாம் ரசிகர்கள். ஒரு வேளை இந்த தடைக்கு பின்னால் மேலிடம் இருக்குமோ என்று விஜய் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளார்களாம்.

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க, நெருங்க தயாரிப்பாளருக்கு தான் கலக்கமாக உள்ளதாம்.

 

இப்படிக்கூட ஒரு ஹீரோயின் இருப்பாரா?- ப்ரியா ஆனந்தைக் கேட்ட இயக்குநர்

ஒரு நடிகை என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரச்சினை பண்ணனும்... ஏதாவது கேட்டு தகராறு செய்யணும்... ஆனா ப்ரியா ஆனந்துக்கு இது எதுவுமே தெரியவில்லை.. இந்தக் காலத்தில் இப்படி ஒரு ஹீரோயின் இருப்பாரா? என்றார் புது இயக்குநர் ஆனந்த் சங்கர்.

இவன் வேற மாதிரி படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபு நடிக்கும் படம் அரிமா நம்பி. பிரியா ஆனந்த் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ட்ரம்ஸ் சிவமணி இசை அமைக்கிறார்.

இப்படிக்கூட ஒரு ஹீரோயின் இருப்பாரா?- ப்ரியா ஆனந்தைக் கேட்ட இயக்குநர்

படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். கிட்டத்தட்ட படப்பிடிப்பு நிறைவடையும் கட்டத்தில் உள்ளது.

அரிமா நம்பி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஆனந்த் சங்கர் கூறுககையில், "உதவி இயக்குனராக பணியாற்றியபோது பல கதாநாயகிகள் படப்பிடிப்புக்கு வந்தால் என்னென்ன அலம்பல் பண்ணுவார்கள் என்று நானே பார்த்திருக்கிறேன்.

ஆனால் இந்தப் படத்தின் நாயகியான ப்ரியா ஆனந்த் ரொம்ப வித்தியாசமானவர். படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் எந்த பந்தாவும் காட்ட மாட்டார். ஹீரோயின்கள் வழக்கமாகக் கேட்கும் பல விஷயங்களை அவர் கேட்டதே இல்லை. இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் கூட இருப்பார்களா?

இப்படியெல்லாம் இருந்தா, உங்களை ஹீரோயின்னு நாங்களே நம்ப மாட்டோம்.. கேரவன் சரியில்ல, ரூம் நல்லால்ல, சரியா கவனிக்கல.. இப்படி எதையாவது சொல்லி சண்டை போடுங்க.. என்று நாங்களே ஜாலியாக கலாய்க்கும் அளவுக்கு அவர் எளிமையாக நடந்து கொண்டார். மறக்கமுடியாதவர்," என்றார்.

 

வீடு, மறுபடியும் படங்களின் நெகடிவ்கள் அழிந்துவிட்டன! - பாலு மகேந்திரா

சென்னை: எனது மறுபடியும், வீடு போன்ற படங்களின் நெகடிவ்கள் அழிந்துவிட்டன. இன்னும் பல படங்களுக்கும் இதே நிலைதான். எனவே படங்களின் நெகடிவ்களைப் பாதுகாக்க ஆவணக் காப்பகம் தொடங்க வேண்டும் என்று இயக்குநர் பாலு மகேந்திரா கேட்டுக் கொண்டார்.

வி 4 விருது வழங்கும் விழாவில் அவர் பேசுகையில், "இந்த விழாவில் பிலிம்நியூஸ் ஆனந்தன் கவுரவிக்கப்பட்டார். சினிமா சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களையும் பாதுகாத்து வைத்திருப்பவர் அவர். இன்றும் அதைத் தொடர்கிறார்.

வீடு, மறுபடியும் படங்களின் நெகடிவ்கள் அழிந்துவிட்டன! - பாலு மகேந்திரா

ஆனால் கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரிக்கப்பட்ட பல படங்களின் நெகடிவ்கள் இன்றைக்கு அழிந்துவிட்டன.

நான் உருவாக்கிய மறுபக்கம், வீடு உள்ளிட்ட பல படங்களின் நெகடிவ் அழிந்துவிட்டன. என்னுடைய படங்கள் மட்டுமல்ல பாதுகாக்கப்படாத பல படங்கள் அழிந்துவிட்டது. டிஜிட்டல் முறை வந்துவிட்டதால் இனி வரும் காலங்களில் நெகடிவில் படம் தயாரிக்க வேண்டிய தேவை இருக்காது.

ஏற்கனவே தயாராகி நெகடிவ் வடிவில் இருக்கும் படங்களை பாதுகாப்பதில் தயாரிப்பாளர்கள் அக்கறை காட்டுவதில்லை.

இந்தநிலை நீடித்தால் ஏராளமான படங்கள் அழிந்துபோய்விடும். எனவே நெகடிவ்களை பாதுகாக்க ஆவண காப்பகம் ஒன்றை தொடங்க வேண்டும்," என்றார்.

 

லிங்குசாமி - சூர்யா படத் தலைப்பு... பரபரக்கும் வதந்திகள்!

லிங்குசாமி - சூர்யா படத் தலைப்பு... பரபரக்கும் வதந்திகள்!

சென்னை: லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு என்ற பெயரில் பல்வேறு யூகங்கள் வெளியாகி பரபரப்பு கிளப்பி வருகின்றன.

சிங்கம் 2 வெற்றிக்குப் பிறகு சூர்யா, லிங்குசாமி தயாரித்து இயக்கும் புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து சமந்தா முதன்முறையாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது.

சமீபத்தில் அங்கு பிரமாண்ட செட் ஒன்று அமைத்து பாடல் காட்சியை படம்பிடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் படத்திற்கு ராஜூ பாய் அல்லது மன்னார் என்று பெயரிடப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் படத்தின் முதல் தோற்றம் மற்றும் டீஸர் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை வேகமாக முடித்துக் கொடுக்கும் சூர்யா, அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

 

காஞ்சனா இந்தி ரீமேக்கில் சரத்குமார்!

காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சரத்குமார். இதன் மூலம் அவரது பல ஆண்டு பாலிவுட் ஆசை நிறைவேறுகிறது.

தமிழ் மற்றும தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற காஞ்சனா (முனி 2) படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

இதில் லாரன்ஸ் நடித்த வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். காஞ்சனாவில் உண்மையான ஹீரோ என்றால் அது அதிரடி வேடத்தில் வரும் சரத்குமாரின் திருநங்கை கேரக்டர்தான். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த வேடத்தில் சரத்குமார் நடித்த விதம்.

காஞ்சனா இந்தி ரீமேக்கில் சரத்குமார்!

பாலிவுட்டில் சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டரில் நடிக்க யாருமே முன்வரவில்லையாம். எனவே இந்த கேரக்டரில் தமிழில் நடித்த சரத்குமாரையே நடிக்க வைக்க லாரன்ஸ் பேசி வருகிறார். இந்தி ரீமேக்கை பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான துஷார் கபூர் மற்றும சபினா கான் ஆகிய இருவரும் கூட்டாக தயாரிக்கின்றனர்.

ராகவா லாரன்ஸ் தற்போது "கங்கா முனி 3" என்ற படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கைத் தொடங்குகிறார்.

 

ஆமாங்க... பிப் 12-ல் எனக்கு திருமணம்!- உறுதிப்படுத்திய மீரா ஜாஸ்மின்

திருவனந்தபுரம்: வரும் பிப்ரவரி 12-ம் தேதி திருமணம் என்று வெளியான தகவல்கள் உண்மைதான் என உறுதிப்படுத்தினார் நடிகை மீரா ஜாஸ்மின்.

தமிழின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மீரா ஜாஸ்மின். மலையாளத்திலும் தொடர்ந்து முதல் நிலையில் இருந்தார்.

ஆமாங்க... பிப் 12-ல் எனக்கு திருமணம்!- உறுதிப்படுத்திய மீரா ஜாஸ்மின்

சர்ச்சைகளுக்கு, கிசுகிசுகளுக்குப் பஞ்சமில்லாத நாயகி.

இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷுடன் கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் சேர்ந்து வாழ்வதாக கூறப்பட்டது. இதை அவர் மறுக்கவும் இல்லை.

புதிய படங்களிலும் அவர் அதிகமாக நடிக்காமலிருந்தார்.

இந்த நிலையில் அவருக்கும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த டைடஸ் - சுகுதகுமாரி மகன் அனில் ஜான் டைடஸுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அனில் ஜான் துபாயில் கம்ப்யூட்டர் எஞ்ஜினீயராக உள்ளார்.

திருமண தகவல்கள் வெளியானாலும், அது குறித்து மீரா ஜாஸ்மின் எதுவும் சொன்னதில்லை. மவுனம் காத்தார்.

இப்போது முதல்முறையாக அனில் ஜானுடனான திருமண தகவல் உண்மைதான் என்றும் வரும் பிப்ரவரி 12-ம்தேதி திருவனந்தபுரத்தில் உள்ள பாளையம் எல்எம்எஸ் சர்ச்சில் திருமணம் நடைபெறுவதையும் உறுதி செய்துள்ளார்.

 

அஜீத்தின் தம்பியான சிறுத்தை சிவாவின் தம்பி

சென்னை: வீரம் படத்தில் அஜீத் தம்பியாக நடிக்கும் பாலா இயக்குனர் சிவாவின் தம்பி ஆவார்.

சிறுத்தை சிவா இயக்கியுள்ள வீரம் படத்தில் அஜீத் குமாருக்கு தம்பியாக விதார்த், சுஹைல், முனிஷ் மற்றும் பாலா ஆகியோர் நடித்துள்ளனர். தம்பி கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை தேடுகையில் அஜீத் பாலாவின் புகைப்படத்தை பார்த்துவிட்டு இவரையே எடுக்கலாம் என்று சிவாவிடம் தெரிவித்துள்ளார்.

அஜீத்தின் தம்பியான சிறுத்தை சிவாவின் தம்பி

அதற்கு சம்மதம் தெரிவித்த சிவா இந்த பாலா என் சகோதரர் தான் என்று அஜீத்திடம் தெரிவித்துள்ளார். பாலா மலையாள படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா அன்பு என்ற படம் மூலம் 2003ம் ஆண்டு கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் படங்களில் பெரிதாக ஜொலிக்க முடியாத அவர் மலையாளத்தில் பிசியான நடிகராகிவிட்டார்.

 

பணத்துக்காக ஓட்டல்களில் ஆடும் கேவலமான நடிகை நான் அல்ல!- நித்யா மேனன்

சென்னை: பணத்துக்காக ஓட்டல்களில் ஆடும் கேவலமான நடிகை நான் அல்ல என்று காரசாரமாகக் கூறியுள்ளார் நடிகை நித்யாமேனன்.

புத்தாண்டு என்றாலே, முந்தைய நாள் இரவும், அடுத்த நாள் இரவும் பிரபல ஓட்டல்கள், க்ளப்களில் நடிகைகள் நடனமாடுவது தொடர்கிறது.

பணத்துக்காக ஓட்டல்களில் ஆடும் கேவலமான நடிகை நான் அல்ல!- நித்யா மேனன்

இந்தப் புத்தாண்டிலும் சென்னையில் ஏராளமான ஓட்டல்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று விடிய விடிய நடனம் ஆடினர் ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்ட நடிகைகள். மும்பை, ஹைதராபாத், டெல்லி போன்ற நகரங்களின் நட்சத்திர ஓட்டல்களிலும் இந்த நடன நிகழ்ச்சிகள் நடந்தன.

நடிகை சார்மி ஹைதராபாத்தில் ஆட பெரும் தொகை சம்பளமாக பெற்றார். இன்று இரவும் சில ஓட்டல்களில் நடன நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.

இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் நித்யா மேனன்.

தமிழ், தெலுங்கில் இப்போது முன்னணியில் உள்ள நடிகைகளுள் ஒருவரான இவரை சில ஹோட்டல்கள் அணுகி, பெரும் தொகைக்கு ஆடக் கூப்பிட்டார்களாம். ஆனால் எவ்வளவு கொடுத்தாலும் ஆட மாட்டேன் என மறுத்துவிட்டாராம் நித்யா மேனன்.

பணத்துக்காக நடனம் ஆடுவது ஒரு பிழைப்பா? நடிப்பது வேறு, இப்படி பணத்துக்காக ஹோட்டல்களில் ஆடுவது வேறு. நான் அத்தகைய கேவலமான நடிகை அல்ல, என்று ஆவேசமாக கூறிவிட்டாராம் நித்யா மேனன்.

 

ச்சே.. இந்த நாட்ல பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாம போச்சு!- ஸ்ருதிஹாஸன்

மும்பை: இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் ஸ்ருதிஹாஸன்.

நடிகை ஸ்ருதிஹாசன் மீது இரு மாதங்களுக்கு முன் மர்ம நபர் தாக்குதல் நடத்தியது பாலிவுட்டையே அதிர வைத்தது.

கதவை தட்டி வீட்டுக்குள் புகுந்து கழுத்தைப் பிடித்து இறுக்கி, பின் தப்பிவிட்டார்.

ச்சே.. இந்த நாட்ல பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாம போச்சு!- ஸ்ருதிஹாஸன்

போலீசார் விசாரணை நடத்தி அவனை அடையாளம் கண்டு கைது செய்தனர். இதையடுத்து ஸ்ருதி ஹாசன் அங்கு பாதுகாப்பு இல்லை என்று கருதி மும்பையில் வசிக்கும் தனது தாய் சரிகாவுடன் தங்கியுள்ளார்.

பாதுகாப்புக்கு தனியார் பாதுகாவலர்களையும் நியமித்து உள்ளார். அவருடன் யாரும் நேரடியாக யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என சரிகா தடை விதித்துள்ளாராம்.

இதுகுறித்து ஸ்ருதிஹாஸன் கூறுகையில், "எனக்கு நடந்த மாதிரி இந்த நாட்டில் நிறைய நடந்து கொண்டுதான் உள்ளது. தனியாக வாழும் பெண்கள் இது போன்ற கஷ்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. அன்று நடந்த சம்பவத்துக்கு பிறகு நான் பயந்துவிட்டேன். இப்போதுதான் அதில் இருந்து மீண்டு வருகிறேன். நிறைய பேர் தனியாக இருக்காதே என்று வற்புறுத்துகிறார்கள். ஆனால் எனக்கு தனியாக இருக்கவே விருப்பம். விரைவில் வேறு வீட்டில் குடியேறுவேன்.

இனிமேல் எச்சரிக்கையாக இருப்பேன்," என்றார்.

 

பாட்ஷா 2 எடுக்க எனக்கு ஆசை.. ஆனால் ரஜினிக்கு சந்தேகம்! - சுரேஷ் கிருணா

சென்னை: பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தான் முயற்சிப்பதாகவும், ஆனால் அந்தப் படத்தை எடுப்பதில் ரஜினிக்கு தயக்கம் இருப்பதாகவும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

1995-ல் வெளியாகி 400 நாட்களுக்கும் மேல் ஓடி வசூலில் சரித்திரம் படைத்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா. இதில் ரஜினி ஜோடியாக நக்மா நடித்தார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். திரைக்கதையை ஆர்எம் வீரப்பன் உருவாக்கினார்.

பாட்ஷா 2 எடுக்க எனக்கு ஆசை.. ஆனால் ரஜினிக்கு சந்தேகம்! - சுரேஷ் கிருணா

தேவா இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பின.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிப்பது குறித்து அவ்வப்போது பேசப்படுவது வழக்கம்.

உண்மையிலேயே இப்படியொரு முயற்சி நடக்கிறதா.. அதற்கு பதிலளிக்கும் விதத்தில் சுரேஷ் கிருஷ்ணா சமீபத்தில் அளித்த பேட்டியில், "ரஜினிக்கும் எனக்கும் பாட்ஷா முக்கியமான படம். எனவே இதன் 2-ம் பாகத்தை எடுக்க விரும்பினேன். இது குறித்து ரஜினியிடம் பல தடவை பேசினேன்.

பாட்ஷா படம் போல் இந்த இரண்டாம் பாகம் ஹிட்டாகுமா என்ற சந்தேகம் அவருக்குள் இருக்கிறது. அதற்காக முயற்சியை நான் கைவிட்டு விடவில்லை. பாட்ஷா 2-ம் பாகத்தை எடுப்பது குறித்து ரஜினியிடம் தொடர்ந்து பேசி வருகிறேன்," என்றார்.

சுரேஷ் கிருஷ்ணாவைப் பொறுத்தவரை பாபாவுக்குப் பிறகு முழுக்க இறங்குமுகம்தான். அவர் இயக்கிய எந்தப் படமும் ஓடவில்லை. ஆறுமுகம், இளைஞன் போன்ற படங்கள்தான் அவர் சமீபத்தில் இயக்கியவை. இதிலிருந்தே அவரது இப்போதைய ஃபார்ம் என்னவென்பது ரசிகர்களுக்குப் புரியும்.. ரஜினிக்குப் புரியாதா!

 

'ஆக்கோ' அனிருத்... நடிப்புக்கு ஒத்திகை பார்க்கிறாரோ?

முன்பெல்லாம் பணம் போட்டு படம் தயாரித்து ஹீரோவாக நடிப்பது சிலரது பொழுதுபோக்காக இருந்தது.

இப்போது நிலைமை வேறு மாதிரியாகியிருக்கிறது. நான்கைந்து படங்களில் இயக்குநராகவோ, இசையமைப்பாளராகவோ பணிபுரிந்து, நிறைய மேடைகளில் ஆடிப்பாடி அடுத்து ஹீரோவாகி விடுகிறார்கள்.

'ஆக்கோ' அனிருத்... நடிப்புக்கு ஒத்திகை பார்க்கிறாரோ?

அனிருத்தும் கிட்டத்தட்ட அந்த ஸ்டேஜை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

அதன் முதல் கட்டமாக, ஆக்கோ என்ற படத்தின் அறிமுக வீடியோவில் தோன்றியுள்ளா அனிருத்.

நான்கு படங்களுக்குத்தான் இதுவரை இசையமைத்துள்ளார் என்றாலும் நடிக்கச் சொல்லி ஏக வாய்ப்புகள் வருகின்றனவாம் அனிருத்துக்கு.

ஆக்கோ படத்துக்கு இசையமைத்துள்ள அனிருத்துக்கு அந்தப் படத்தின் கதை ரொம்பவே பிடித்துவிட்டதாம். அதனால் அட்டகாசமாக பாடல்கள் தந்திருக்கிறாராம் அனிருத்.

அதனால்தான், படத்தில் நடிக்கவில்லை என்றாலும், படத்துக்கான புரமோஷனல் வீடியோவை அனிருத்தையே பிரதானப்படுத்தி எடுத்துள்ளார்கள்.

சரி, அது என்ன படத்துக்கு ஆக்கோ என்று தலைப்பு?

ஆர்வக் கோளாரு என்பதன் குறுகிய வடிவம்தான் இந்த ஆக்கோ என்கிறார் இயக்குநர் ஷ்யாம் மார். மூன்று ஆர்வக்கோளாறு இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை.