ஓ மை காட்: நடிகை ஆலியா பட்டுக்கு பாஜக-ன்னா பாரதிய ஜனதா கட்சின்னு தெரியாதாம்!

மும்பை: இந்தி நடிகை ஆலியா பட்டுக்கு பாஜக என்றால் பாரதிய ஜனதா கட்சி என்று தெரியாதாம்.

பாலிவுட்டில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருபவர் நடிகை ஆலியா பட். தமிழ்நாட்டு ரசிகர்களும் ஆலியா கோலிவுட் பக்கம் வர மாட்டாரா என்று ஏங்குகிறார்கள். இந்நிலையில் அவரை தமிழ் படத்தில் நடிக்க வைக்க முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஓ மை காட்: நடிகை ஆலியா பட்டுக்கு பாஜக-ன்னா பாரதிய ஜனதா கட்சின்னு தெரியாதாம்!

ஆலியா பட்டும், நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கையும் நடிகையுமான பரினீத்தி சோப்ராவும் பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹாரின் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது கரண் ஆலியா மற்றும் பரினீத்தியிடம் பி.ஜே.பி. என்றால் என்ன என்று கேட்டார். உடனே பரினீத்தி பாரதிய ஜனதா கட்சி என்றார். ஆனால் ஆலியாவோ பதில் தெரியாமல் கரணை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தார்.

அரசியல் கட்சிகளுக்காக நடிகர், நடிகைகள் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இளம் நடிகை ஒருவர் தேசிய கட்சியின் பெயரே தெரியாமல் உள்ளாரே என்று நிகழ்ச்சியை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அட விடுங்கப்பா, இதை போய் பெருசா பேசிக்கிட்டு.

 

25வது நாளைத் தாண்டிய ஆயிரத்தில் ஒருவன்!

சென்னை: எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடித்த 25வது நாளைத் தாண்டிய ஆயிரத்தில் ஒருவன்!  

இப்படத்தின் 25-வது நாள் வெற்றி விழா எழும்பூர் ஆல்பட் தியேட்டரில் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

திரையில் எம்.ஜி.ஆரும், தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் தோன்றும்போது சூடம் காண்பித்து ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். படம் பார்க்க வந்த அனைவருக்கும் ரசிகர்கள் கேசரி வழங்கினார்கள். எம்.ஜி.ஆரின் கட்-அவுட்டுக்கு மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்து, தேங்காய் உடைத்தனர். கற்பூர ஆரத்தி காட்டினர்.

சென்னை கிண்டி ராஜ்பவன் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் டி.ஈஸ்வரன் வந்திருந்த அனைவருக்கும் லட்டு வழங்கினார். திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம், தியேட்டர் மேனேஜர் மாரியப்பன் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் மன்றத்தினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதுவரை தியேட்டர்கள் மூலம் மட்டும் ஆயிரத்தில் ஒருவன் படம் ரூ.40 லட்சம் வசூல் ஈட்டியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு மேலும் சில அரங்குகளில் இந்தப் படத்தை வெளியிடப் போகிறாராம் சொக்கலிங்கம். குறிப்பாக சரியாகப் போகாத பகுதியான மதுரையில் அடுத்த மாதம் மீண்டும் வெளியாகிறது ஆயிரத்தில் ஒருவன்.

 

வடிவேலுவை மிரட்டுவது ஒட்டுமொத்த தமிழர்களையும் உரசிப்பார்க்கும் செயல்!- இயக்குநர் கவுதமன்

சென்னை: தமிழ் மண்ணின் பெரும் கலைஞனான வடிவேலுவை மிரட்டுவது, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் உரசிப் பார்க்கும் செயல். இதை சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இயக்குநர் வ கவுதமன் எச்சரித்துள்ளார்.

தெனாலிராமன் படம் குறித்து நடிகர் வடிவேலுவை தெலுங்கு அமைப்பு என்ற பெயரில் சிலர் மிரட்ட ஆரம்பித்துள்ளனர்.

அவர் வீட்டை முற்றுகையிடவும் முயன்றுள்ளனர். போலீசார் உரிய பாதுகாப்பு தராத நிலையில், வடிவேலு தமிழ் அமைப்புகளிடம் முறையிட்டார்.

வடிவேலுவை மிரட்டுவது ஒட்டுமொத்த தமிழர்களையும் உரசிப்பார்க்கும் செயல்!- இயக்குநர் கவுதமன்

வடிவேலுவுக்கு ஆதரவாக நின்றிருக்கும் முதல் கட்சி சீமானின் நாம் தமிழர் கட்சிதான். இந்த மண்ணின் கலைஞன் வடிவேலுவை மிரட்ட எவர் முனைந்தாலும் நாம் தமிழர் கட்சி வேடிக்கைப் பார்க்காது என உறுதியாகத் தெரிவித்தார்.

அடுத்து இயக்குநர் வ கவுதமன் வடிவேலுவை ஆதரித்து அறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கை:

என் எஸ் கிருஷ்ணன், டணால் கே ஏ தங்கவேலு மற்றும் கவுண்டமணி வரிசையில் நகைச்சுவையின் உச்சமான கலைஞன் வடிவேலு. அப்படிப்பட்ட ஒருவரை இந்தத் தமிழ் மண்ணில், அதுவும் அவர் வீட்டுக்கே சென்று ஒரு கூட்டம் மிரட்டிச் சென்றிருப்பது வேதனைக்குரியது. மானமுள்ள ஒவ்வொரு தமிழனையும் சீண்டிப் பார்க்கும் செயல் இது. மிக மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஒரு திரைப்படம் என்பது கதை ஆசிரியரால் தொடங்கி தயாரிப்பாளரால் திட்டமிடப்பட்டு இயக்குனரால் செயல்படுத்துவது ஆகும். அப்படியிருக்க நேரடியாக அதில் நடித்த நடிகனை முற்றுகையிடுவது என்பதும், அவமானப்படுத்துவதும்,அச்சுறுத்துவதும் நேர்மையானதல்ல.

தமிழ் இனம் இந்த மண்ணில் சாதி, மதம், இனம் மொழி கடந்து அனைத்துக் கலைஞர்களையும் சாதனையாளர்களையும் சான்றோர்களையும் போற்றிப் பாதுகாத்த இனமும் கூட.

தமிழ்த் திரையுலகில் கிட்டத்தட்ட எழுபது சதவீதத்தினர் - குறிப்பாக நடிக, நடிகைகள் - பிற மாநிலத்தவர் அல்லது பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் இதுவரை நாம் பிரித்துப் பார்த்திராமல், ஒரே குடும்பமாக கூடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தெனாலிராமன் விவகாரத்தில் சகோதரர் வடிவேலுவிடம் அத்துமீறியவர்களின் செயல்பாடுகளை நினைக்கும்போது, எங்கே இதற்கெல்லாம் வேட்டு வைத்துவிடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

வடிவேலு இனம், மொழி பார்க்காமல் அனைவரையும் சிரிக்க வைத்த கலைஞன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் திரைக்கு வருவதை தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

சம்மந்தப்பட்டவர்கள் ஏதாவது சந்தேகம் என்றால் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை அணுகி உரிய முறையில் நடந்துகொள்வதுதான் அவர்களுக்கும் நல்லது, மற்றவர்களுக்கும் நல்லது. அதனை விட்டுத்து இது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவதை வடிவேலுவிடம் மட்டுமல்ல தமிழ் மண்ணில் ஒரு தமிழனிடமோ அல்லது ஒட்டு மொத்த தமிழினத்தையோ உரசிப்பார்க்கும் நிகழ்வாக கருதி அதற்கேற்ற பின்விளைவுகளை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும் என்பதை கோடிக்கணக்கான மானமுள்ள தமிழர்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

-இவ்வாறு அந்த அறிக்கையில் இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.

 

'லிங்குசாமி படத்துக்கு எழுதுவது என் இனத்துக்கு செய்யும் துரோகம்!' - இவரல்லவா தன்மான தமிழ் கவிஞன்!!

சென்னை: தமிழ் இனத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் இனம் படத்தை எடுத்த லிங்குசாமி படத்தில் பாட்டெழுத முடியாது என முகத்திலடித்தது போல கூறி அதிர வைத்துள்ளார் ஒரு தன்மானக் கவிஞர். அவர்தான் அறிவுமதி!

தமிழருக்கு எதிரான எந்த மேடையாக இருந்தாலும் அதில் தன் எதிர்ப்புக் குரலை கம்பீரமாகப் பதிவு செய்பவர் கவிஞர் அறிவுமதி.

'லிங்குசாமி படத்துக்கு எழுதுவது என் இனத்துக்கு செய்யும் துரோகம்!' - இவரல்லவா தன்மான தமிழ் கவிஞன்!!

தமிழுக்கு இழுக்கு என நினைக்கும் எந்த செயலையும் அறவே ஒதுக்கக் கூடியவர். தனக்கு வரும் எத்தனையோ வாய்ப்புகளை, 'இந்தத் தம்பிக்கு கொடுப்பா' என்று கூறிச் செல்பவர்.

வெகு அரிதாகத்தான் பாடல் எழுதவே அவர் ஒப்புக் கொள்கிறார். லிங்குசாமியின் நண்பர்களில் ஒருவராகத்தான் இருந்தார் இனம் என்ற படத்தை அவர் வெளியிடும் வரையில்.

இனம் படத்தில் தமிழருக்கு எதிராக சந்தோஷ் சிவன் செய்த ஈனத்தனமான அரசியலைப் புரிந்து, அந்த கூட்டத்தை அறவே தவிர்க்க ஆரம்பித்துள்ளார் அறிவுமதி.

'லிங்குசாமி படத்துக்கு எழுதுவது என் இனத்துக்கு செய்யும் துரோகம்!' - இவரல்லவா தன்மான தமிழ் கவிஞன்!!

லிங்குசாமி இப்போது எடுத்து வரும் படம் அஞ்சான். இதில் சூர்யா ஹீரோ. பெரிய பட்ஜெட் படம். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு, இனம் படத்தை எடுத்த அதே சந்தோஷ் சிவன்தான்.

இந்தப் படத்துக்கு ஒரு பாடல் எழுதித் தருமாறு கேட்டு அறிவுமதிக்கு மெட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பியுள்ளார் லிங்குசாமி.

அதைக் கேட்கவும் விரும்பாத அறிவுமதி, மெட்டை திருப்பியனுப்பியதோடு, "லிங்குசாமி, இனம் படத்தை எடுத்த உங்களைப் போன்றவர்கள் படங்களில் பாட்டெழுதுவது என் இனத்துக்கு செய்யும் துரோகம். இனம் படத்தை எடுத்த சந்தோஷ் சிவன்தானே இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவாளர். அதில் நான் எப்படி பாடல் எழுத முடியும்..!" என்று திருப்பிக் கேட்டுள்ளார்.

தமிழ் தமிழ் என வாய் கிழியப் பேசும், வர்த்தக ரீதியில் பெரிய கவிஞர்களாகப் பார்க்கப்படும் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கிதான் இனம் படத்துக்கு பாட்டெழுதினார். வைரமுத்து அந்தப் படத்தை தலைமேல் வைத்துக் கொண்டாடினார் என்பது நினைவிருக்கலாம்.

அறிவுமதி... பெயரைப் போலவே தன்மானத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கவிஞரே.. உங்கள் பெருமையை இந்த தமிழினம் அறியட்டும்!

 

என் காதலை இப்படி தான் காட்டிக் கொடுப்பாரா?: நடிகர் மீது கடுப்பில் மில்க் நடிகை

சென்னை: தான் பிரபல இயக்குனரை காதலிப்பதை மேடையில் போட்டு உடைத்த நடிகர் மீது மில்க் நடிகை கடுப்பில் உள்ளாராம்.

மில்க் நடிகைக்கும், லீடர் பெயர் கொண்ட இயக்குனருக்கும் காதல் என்று ஒரு காலத்தில் பேச்சாக கிடந்தது. அதன் பிறகு மில்க் ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் பிரபல நடிகர் ஒருவர் இயக்கும் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். அதற்கான படப்பிடிப்பின்போது நடிகையும், அந்த நடிகர் கம் இயக்குனரும் நண்பர்களாகிவிட்டார்களாம்.

மில்க் புதிய நண்பரிடம் தான் அந்த இளம் இயக்குனரை காதலிப்பதை தெரிவித்துள்ளார். அதன் பிறகு லீடர் பெயர் இயக்குனரின் பட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அந்த விழாவில் கலந்து கொண்ட அந்த நடிகர் கம் இயக்குநர் சுவாரஸ்யமாக பேசுகையில் மில்க் நடிகையின் காதல் பற்றி அனைவருக்கும் தெரிவித்துவிட்டார். இதையடுத்து நடிகை திருமணம் குறித்து அறிக்கை விட வேண்டியதாகிவிட்டது.

இந்நிலையில் தான் ரகசியமாக வைத்திருந்த காதல் விஷயத்தை இப்படி போட்டு உடைத்த அந்த நடிகர் மீது மில்க் கடுப்பில் உள்ளாராம்.

 

படம் ரிலீசாகி மூணு நாள் ஆகிடுச்சா... சக்சஸ் சக்சஸ்... இமாலய சக்சஸ்!

முன்பெல்லாம் ஒரு படம் வெளியாகி குறைந்தது ஒரு மாதம் ஹவுஸ் புல்லாக ஓடினால்... சக்சஸ் மீட் வைப்பார்கள். ஆனால் பத்திரிகையாளர்களுக்கல்ல.. படத்தின் நடிகர் - நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சினிமா புள்ளிகளுக்காக. ஏதாவது நட்சத்திர ஹோட்டலில் ரகசியமாக நடக்கும் இந்த பார்ட்டி.

100 நாட்கள் ஓடி முடிந்த பிறகுதான் அந்தப் படத்தின் வெற்றியை ஒரு விழாவாக எடுத்து அறிவிப்பார்கள். அதில் செய்தியாளர்களும் பங்கேற்பது வழக்கமாக இருந்தது. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் காலம் வரை வெற்றி அறிவிப்பு விழா இப்படித்தான் நடந்திருக்கிறது.

படம் ரிலீசாகி மூணு நாள் ஆகிடுச்சா... சக்சஸ் சக்சஸ்... இமாலய சக்சஸ்!

ஆனால் இன்றைய நிலை... அந்தோ பரிதாபம்.

முன்னணியில் உள்ள நடிகர்கள் என்று சொல்லப்படும் சிலரது படங்கள் வெளியான மூன்றாவது நாளே வெற்றிச் சந்திப்பு என்று கூறி செய்தியாளர் சந்திப்பு நடக்கிறது. படம் பிரமாண்ட வெற்றி... அதிரடி ஓபனிங்... படத்தின் செலவை எடுத்துவிட்டோம் என தண்டோரா போடுகிறார்கள்.

இன்னும் சிலரோ வெள்ளிக் கிழமை வெளியான படத்துக்கு சனிக்கிழமையே.. அதாவது ஒன்றரை நாளில் சக்சஸ் மீட் வைப்பதும் நடக்கிறது.

'படம் வெளியான சந்தோஷத்தைக் கொண்டாட எப்படியும் அடுத்த நாள் பார்ட்டி வைக்கப் போகிறோம்.. அதையே பிரஸ் மீட்டாக வைத்தால் படத்துக்கும் பப்ளிசிட்டி கிடைச்ச மாதிரி இருக்கும்ல' - இப்படி நினைத்து வைக்கப்படுவதுதான் பெரும்பாலான படங்களின் சக்சஸ் மீட்.

சமீபத்திய ஆண்டுகளில் சக்சஸ் மீட் வைக்கப்பட்ட பெரும்பாலான படங்கள் பெரும் தோல்வியைச் சந்தித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

கந்தசாமி என்றொரு படம். இந்தப் படத்தின் வசூல் தமிழ் சினிமாவின் புதிய வரலாறு என்றெல்லாம் கூறி கலைப்புலி தாணு ஒரு சக்சஸ் மீட் வைத்தார். ஆனால் அந்தப் படத்துக்கு நேர்ந்த கதி சினிமா உலகமும் ரசிகர்களும் தெளிவாக அறிந்ததுதான்.

குக்கூ என்றொரு படம் கடந்த வாரம் வெளியானது நினைவிருக்கலாம். இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடந்தது. அப்போது தயாரிப்பாளரிடம், 'சக்சஸ் சக்சஸ் என்கிறீர்களே.. எதை வைத்து இதைச் சொல்கிறீர்கள்.. எவ்வளவு வசூல் என்ற விபரங்களைக் கொடுங்க' என்று கிடுக்கிப்பிடி போட்டனர் நிருபர்கள்.

உடனே அவருக்கு வந்ததே கோபம்... 'அதெல்லாம் சொல்ல முடியாது. ஒரு கார்ப்பொரேட் என்ற முறையில் நான் வேணும்னா சொல்லலாம்.. வேற யார்கிட்டேயாவது இதை உங்களால் கேட்க முடியுமா...?' என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்.

இப்படி பல கந்தசாமிகளுக்கு குக்கூக்களுக்கு சக்சஸ் மீட் நடந்திருக்கிறது.

சமீபத்தில் மான் கராத்தே என்ற படத்துக்கு ஒரு சக்சஸ் மீட் நடந்தது. படம் வெள்ளிக்கிழமைதான் வெளியானது. இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள்தான் வந்திருக்கின்றன. ஆனால் திங்களன்று படத்துக்கு பிரஸ் மீட் வைத்து, மெகா ஹிட்.. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை விட செம வசூல், என்று அறிவித்துவிட்டார்கள்.

இந்த வெற்றி எதன் அடிப்படையில்.. வசூல் ரீதியாக என்றால் வசூலை வெளிப்படையாக அறிவிப்பதில் என்ன தயக்கம்... ஏதோ புலனாய்வு செய்து கண்டுபிடிக்கும் அளவுக்கு அதில் மர்மம் வைப்பது வருமான வரிக்கு பயந்து என்றால், சினிமா என்பதே மோசடித் தொழில் என்றாகிவிடாதா?

 

'சைவம்' விழாவில் அசைவம் சாப்பிடுபவர்களை அசிங்கப்படுத்திய பார்த்திபன்!!

சென்னை: பணம் வாங்காம ஓட்டுப் போட்டா அது சைவம்.... வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டால் அசைவம்... என்றார் பார்த்திபன்.

பொய் சொல்ல போறேன், கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வதிருமகள், தலைவா ஆகிய படங்களை டைரக்ட்டு செய்த விஜய் இயக்கி இருக்கும் புதிய படம் ‘சைவம்.' இந்த படத்தில் நடிகர் நாசர், சிறுமி சாரா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

'சைவம்' விழாவில் அசைவம் சாப்பிடுபவர்களை அசிங்கப்படுத்திய பார்த்திபன்!!

ஏ.எல்.அழகப்பன் படத்தை தயாரித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

பாடல்களை இயக்குநர் கவுதம் வாசுதேவ்மேனன் வெளியிட, நடிகைகள் அனுஷ்கா, அமலா பால் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டார்கள்.

பார்த்திபன்

விழாவில், இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கலந்து கொண்டு பேசுகையில், "நான் இந்த விழாவுக்கு, வேட்டி கட்டி வந்ததை பார்த்து, என்னிடம் சிலர் என்ன? வேட்டி கட்டி இருக்கீங்க? என்று கேட்டார்கள். கட்டாவிட்டால் அவிழ்ந்து விடும் என்று சொன்னேன்.

சைவ - அசைவ ஜோக்

‘ஜோக்'கில் கூட சைவ ‘ஜோக்', அசைவ ‘ஜோக்' என்று இரண்டு உண்டு. அதேபோல முத்தத்திலும் சைவ முத்தம், அசைவ முத்தம் என இரண்டு வகை முத்தம் இருப்பதாக கவிஞர் வைரமுத்து கூறி இருக்கிறார்.

சிங்கத்தின் கதை

சிங்கம், சைவமா? அசைவமா? என்று கேட்டால் எல்லோரும், அசைவம் என்று தான் சொல்வார்கள். நான் யு.டியூப்பில் ஒரு படம் பார்த்தேன். ஒரு சிங்கம் குரங்கை கடித்து வாயினால் கவ்வி இழுத்துக்கொண்டு வந்தது. அப்போது குரங்கின் வயிற்றில் இருந்து ஒரு குட்டி கீழே விழுந்தது. அந்த குட்டி தட்டுத்தடுமாறி எழுந்து நிற்க முயன்றது. உடனே சிங்கம் குரங்கை விட்டுவிட்டு அதன் குட்டியை கவ்வியபடி தன் குட்டிகள் இருக்கும் இடத்துக்கு கொண்டு வந்தது. அந்த குரங்குக் குட்டியை சிங்கம் தடவிக் கொடுத்தது.

உணர்வுதான் முக்கியம்

குரங்குக் குட்டியை இன்னொரு சிங்கம் கடிக்க வந்தபோது அந்த சிங்கத்தை இந்த சிங்கம் விரட்டி அடித்தது. இப்போது சொல்லுங்கள், சிங்கம், சைவமா, அசைவமா?. உணவால் சைவமா, அசைவமா? என்பது முக்கியம் அல்ல. உணர்வால் சைவமா, அசைவமா? என்பது தான் முக்கியம்.

ஓட்டு

பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டால் அதற்கு பெயர், அசைவம். வாங்காமல் ஓட்டுப்போட்டால் சைவம். இயக்குநர்களில் விஜய் மாதிரி சைவமான ஆளைப் பார்தத்தில்லை. அவர் உணர்வுகளின் அடிப்படையில் படம் எடுக்கிறவர். ‘‘திருவள்ளுவருக்கு கூட அறத்துபால், பொருட்பால், காமத்துபால் ஆகிய 3 பால்களைத் தான் தெரியும். திருவள்ளுவரை விட, விஜய் பெரிய ஆள். அவருக்கு அமலா பாலையே தெரியுமே... விஜய், திருமணத்துக்கு பின் முத்தத்தில் சைவமாக இருந்தால், ‘அமலா'க்கப்பிரிவினர் வந்து கைது செய்து விடுவார்கள்!'' என்றார்.

சரீ... ஓட்டுக்கு பணம் வாங்கும் சட்டவிரோதமும், அசைவம் சாப்பிடுவதும் ஒன்றாகிவிடுமா.. என்னங்க பார்த்திபன்?!

 

பிரபுதேவா கொடுத்த மது விருந்து: விடிய விடிய ஆட்டம் போட்ட விஜய், சித்தார்த்

சென்னை: நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா கொடுத்த மது விருந்தில் விஜய், சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

நயன்தாராவை பிரிந்த பிறகு மும்பை சென்ற பிரபுதேவா அப்படியே அங்கேயே தங்கிவிட்டார். ரீமேக் படங்களை எடுப்பதில் வல்லவராக உள்ளதால் அவரை பாலிவுட் கொண்டாடுகிறது.

பிரபுதேவா கொடுத்த மது விருந்து: விடிய விடிய ஆட்டம் போட்ட விஜய், சித்தார்த்

இந்நிலையில் பிரபுதேவா திடீர் என்று சென்னை வந்து தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து மது விருந்து அளித்துள்ளார். அந்த விருந்தில் இளைய தளபதி விஜய், சித்தார்த், இயக்குனர் ஷங்கர், நாசர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மது விருந்து விடிய விடிய நடந்துள்ளதாம்.

நாசர், ஷங்கர் ஆகியோரை ஓரமாக உட்கார வைத்துவிட்டு யூத் ஹீரோக்களுடன் விஜய் பார்ட்டியை என்ஜாய் செய்துள்ளார். ஒரு காலத்தில் நள்ளிரவு பார்ட்டிகளுக்கு செல்லாமல் இருந்தவர் விஜய்.

அண்மை காலமாக விஜய் நள்ளிரவு பார்ட்டிகளில் விடிய விடிய தூள் கிளப்பி வருகிறார் என்று செய்திகள் வெளியாகின.