'ஹலோ பிரபு சாலமன் பேசறேன்... உறவினருக்கு உடம்பு சரியில்ல.. பணம் தந்து உதவுறீங்களா?'

Prabhu Solomon Lodges Complaint On Money Cheating

மேலே நீங்கள் படித்தது ஏதோ தலைப்பு சுவாரஸ்யத்துக்காக எழுதப்பட்டதல்ல. சமீப காலமாக பல பிரபலங்களுக்கு போன் செய்து, பிரபு சாலமன் குரலில் யாரோ சிலர் பேசுவது இப்படித்தானாம்.

இது பல நேரங்களில் ஒர்க் அவுட் ஆகி, லட்சக்கணக்கில் பணமும் கொடுத்துள்ளனர் பெயர் சொல்ல விரும்பாத சில பிரபலங்கள்.

இயக்குனர் பிரபு சாலமன் பெயரை சொல்லி பிரபல சினிமா இயக்குனர்களிடமும் நடிகர்கள், நடிகைகளிடமும் 'நான் பிரபு சாலமன் பேசுகிறேன் என் உறவினரின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. நான் இரண்டு லட்சம் கொடுத்துள்ளேன். இப்போ எனக்கு கொஞ்சம் டைட். மீதி மருத்துவ செலவுக்காக உங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவுங்கள்," என்பார்களாம்.

பிரபு சாலமன் இன்று முன்னணி இயக்குநர். அவருக்கு என்ன கஷ்டமோ.. கொடுத்து வைப்போம். பின்னால் உதவும் என்ற நினைப்பில் பலரும் லட்சக்கணக்கில் கொடுத்துள்ளனர். அதுவும் குறிப்பிட்ட வங்கிக் கணக்கைக் கொடுத்து அதில் போடுங்கள் என்று மோசடிப் பேர்வழி சொன்னதும், இன்னும் நம்பிக்கையுடன் கொடுத்துள்ளனர்.

விஷயம் பிரபு சாலமன் காதுக்கு வர, அவர் அலறியடித்துக் கொண்டு மறுப்பு வெளியிட்டுள்ளார்.

"என்பெயரை சொல்லி ஏமாற்றுகின்றனர். அதை யாரும் நம்ப வேண்டாம். அப்படி யாரவது கேட்டால் பணம் கொடுக்காமல், முதலில் என்னைத் தொடர்பு கொள்ளவும். அந்த மோசடிப் பேர்வழி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உதவும்," என்று அறிக்கை விடுத்துள்ளார் பிரபு சாலமன்.

"இதேபோலத்தான் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் மற்றும் வேதம்புதிது கண்ணன், நடிகர் சாந்தனு ஆகியோரின் பெயரைப் பயன்படுத்தி இதேபோல மோசடி செய்துள்ளனர் அதே நபர்தான் என் பெயரிலும் மோசடி செய்திருப்பாரோ என்ற சந்தேகம் உள்ளது. இதுகுறித்து மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளேன்," என்றும் அவர் கூறியுள்ளார்.

 

நலத்திட்ட விழா ரத்தானதற்கு காரணம் யார்? மௌனம் கலைத்தார் விஜய்

Why Did My Function Get Cancelled Explains Vijay

சென்னை: தனது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை அரசியல் கட்சி விழா என்று யாரோ தவறான தகவல் கொடுத்ததால் கல்லூரி நிர்வாகத்தினர் தான் விழாவுக்கு தடை போட்டதாக விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி ரூ. 1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கடந்த 8ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் விழா திடீர் என்று ரத்து செய்யப்பட்டது. விழா ரத்தானதற்கு அரசியல் கட்சிகள் காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து விஜய் மௌனம் கலைத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,

எனக்கு சமூகத்தின் மீது அக்கறை இருக்கிறது. எனது ரசிகர்களுக்கு அதே உணர்வு உள்ளது. ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது, பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது, ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்து, ரத்ததானம் செய்வது என்று பல நல்ல காரியங்களை நான் செய்து கொண்டிருக்கிறேன். என் ரசிகர்களும் என்னைப் போன்று பிறருக்கு உதவி செய்து வருகிறார்கள்.

என் பிறந்தநாளில் நான் மட்டுமின்றி ஏழைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அதனால் தான் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த 3,900 ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நினைத்தேன். இந்த விழாவை நடத்த மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் இடம் கேட்டோம். அவர்களும் அளித்தார்கள். ஆனால் நான் நல்ல காரியங்கள் செய்வது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் நான் கூறாதவற்றை, அறிவிக்காத செய்திகளை எல்லாம் வைத்து வதந்தியை பரப்பினார்கள். பிறந்தநாளைக் கூட நிம்மதியாக கொண்டாட முடியவில்லை.

என் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி என்று கூறித் தான் எங்கள் மாநிலப் பொறுப்பாளர் ஆனந்த் கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றார். ஆனால் அந்த நிகழ்ச்சி என் அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளம் போடும் நிகழ்ச்சி என்று சிலர் வதந்தியை கிளப்பிவிட்டார்கள். அதை கல்லூரி நிர்வாகம் நம்பி அனுமதி மறுத்துவிட்டது. எங்களுக்கு வேண்டாதவர்கள் தான் இப்படி தவறான தகவல் கொடுத்துள்ளார்கள் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் கல்லூரி நிர்வாகம் நம்பவில்லை. காவல் துறையினரும் அரசியல் விழா என்று நினைத்து தான் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்கள் போன்று.

இந்த விழாவுக்காக நிர்வாகிகள் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்தார்கள். அது எல்லாம் அவர்களின் சொந்த பணம். விழாவில் வழங்க ஆட்டோ, கம்ப்யூட்டர், தையல் எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு வண்டி எல்லாம் பல லட்சம் ரூபாய் செலவு செய்து வாங்கிவிட்டனர். ரசிகர்களை நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது. அவர்கள் செலவு செய்த பணத்தை நான் அவர்களுக்கு கொடுத்துவிடுவேன். ஆனால் ஏமாற்றம் மற்றும் மனவேதனைக்கு என்னால் எப்படி மருந்து போட முடியும்? இதற்கு யார் பதில் சொல்வார்கள்?

நடிப்பது தான் என் தொழில். ஓய்வின்றி நடித்துக் கொண்டிருக்கிறேன். கடவுளும், ரசிகர்களும் என்னுடன் இருக்கிறார்கள். கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அதற்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். இந்நேரத்தில் அரசியலை பற்றி யோசிக்கக் கூட எனக்கு நேரம் இல்லை.

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று பேரறிஞர் அண்ணா தெரிவித்தார். என் விழா மட்டும் நடந்திருந்தால் 3.900 ஏழைகள் சிரித்திருப்பார்கள். ஏழைகளின் சிரிப்பை அழித்தவர்களுக்கு நன்றி. நான் வேறு என்ன கூற முடியுங்ணா என்றார்.

 

'புரட்சித் தமிழனு'க்கு வந்த புது ஞானோதயம்!!

Satyaraj S New Policy On Non Tamil Artists

புரட்சித் தமிழன் என்று தன்னைத் தானே அழைத்து மகிழும் சத்யராஜ், முன்பெல்லாம் பிறமொழி நடிகர்கள் மீது காட்டிய துவேஷம் இருக்கிறதே... அதை எழுத கையும் கூசும்.

மேடையில் ஒரு பிற மொழி நடிகரைப் பற்றிப் பேசிவிட்டு, இருக்கையில் வந்தமர்ந்ததும் மிகக் கேவலமாகத் திட்டுவது அவர் பாணி. நாம் தமிழர் மாதிரி ஏதாவது அரசியல் மேடை கிடைத்துவிட்டாலோ, 'தமிழர் அல்லாத நடிகர்கள் எதுக்கு சென்னையில் இருக்கணும்...... அவர்களை ஓட ஓட விரட்டணும்... வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்னு இனி யாரும் சொல்லக் கூடாது. இனி விரட்டிப் பழகுங்க' என்பார் (அவரோட இந்தப் பாலிசி ஹீரோயின்களுக்குப் பொருந்தாது. அப்புறம் நமீதா கவர்ச்சிக் குதிரைகளுக்கு எங்கே போவார்?).

அட அவ்வளவு ஏன், முன்பு அவர் பிஸியாக இருந்த காலத்தில், 'தமிழ்தான் எனக்கு எல்லாம். வேற மொழி தெரியாது. அதனால வேற எந்த மொழியிலும் நான் நடிக்க மாட்டேன். எனக்கு அதற்கு அவசியமில்லை,' என்றெல்லாம் அடித்துவிட்டுக் கொண்டிருந்தார்.

எதற்கு இவ்வளவு பெரிய முன்னுரை என்கிறீர்களா...

சமீபத்தில் நடந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் பிரஸ் மீட்டில் அவர் பேசியதைப் படியுங்கள்..

"இப்போது வேறு மொழிப் படங்களில் நடிக்கிறேன். கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடிக்கும்போதுதான் மொழி தெரியாத படங்களில் நடிப்பது எவ்வளவு சிரமம் என்பது புரிகிறது.

தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கும்போது, இன்னொருவர் உதவியுடன்தான் வசனம் பேசி நடிக்க முடிகிறது. அதனால் தமிழ் தெரியாத நடிகர்களை கிண்டல் செய்வதை நிறுத்திக்கொண்டேன். யாரும் எந்த மொழியிலும் நடிக்கலாம்," என்றார் சத்யராஜ்.

அடேங்கப்பா... தனக்குன்னு வந்தாதான் தமிழ் உணர்வுக்கே தனி அர்த்தம் கிடைக்குது போல!