சென்னை: ஈழத்து உறவுகளின் உரிமைகளையும், உடைமைகளையும் மீட்டுத்தர பசியையே ஆயுதமாக்கிப் போராடும் எங்கள் எதிர்கால நம்பிக்கை வெளிச்சமாய் உதயமாகி இருக்கும் தமிழக மாணவச் செல்வங்களுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம் என்று நடிகர் சத்தியராஜ், இயக்குநர் மணிவண்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இன்று அவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது:
குருதிச் சேற்றில் தங்கள் உறவுகளையும், வாழ்வையும், உரிமைகளையும் புதையக் கொடுத்து விட்டு, முள்வேலிக் கம்பிகளுக்குள் பசித்த வயிரோடு பரிதவித்து நிற்கும் நமது, ஈழத்து உறவுகளின் உரிமைகளையும், உடைமைகளையும் மீட்டுத்தர பசியையே ஆயுதமாக்கிப் போராடும் எங்கள் எதிர்கால நம்பிக்கை வெளிச்சமாய் உதயமாகி இருக்கும் தமிழக மாணவச் செல்வங்களுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
சுயநலமும், அரசியலும் கலக்காத சமூகத்துக்கான சமூக மனிதர்களின் தூய்மையான போராட்டமாக மாணவர்களின் போராட்டம் அமைந்திருக்கிறது. ஒன்றிணைந்த மாணவர் சக்தி பெரும் வெற்றிகளை குவித்திருக்கிறது என்பதே இதுவரை உலக வரலாறு.
அதற்கு தமிழகமும் ஒரு சான்றாக விளங்குகிறது. இந்த மாணவர்களின் பட்டினிப் போராட்டமும், ஈழத்தில் நடந்தது போர் குற்றமல்ல இனப்படு கொலை என்ற உண்மையான உன்னதமாக குரலை ஓங்கி ஒலிக்கிறது. இந்தக் குரல் உலகத்தின் செவிப் பறைகளைக் கிழிக்கும்.
கொடுங்கோலன் ராஜபக்சேவை கூண்டில் நிறுத்தும் எம் ஈழ உறவுகளுக்கு நீதி பெற்றுத் தரும் என்பது தின்னம். உள்நோக்கமற்ற அறம் நிறைந்த எமது மாணவர்களின் இந்த தூய்மையான போராட்டத்துக்கு எமது செவ்வணக்கம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.