சீர்காழி- கார் மோதி 7 வயது சிறுமி பலி... டிவி நடிகர் கைது

சீர்காழி- கார் மோதி 7 வயது சிறுமி பலி... டிவி நடிகர் கைது

சிதம்பரம்: சீர்காழி அருகே ஆட்டோ மீது கார் மோதியதில், ஆட்டோவில் பயணித்த 7 வயது சிறுமி மதுமிதா பலியானார்.

இது தொடர்பாக, காரை ஓட்டி வந்த டிவி நடிகர் ஷ்யாம் கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி என்.எஸ்.பி நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மனைவி வளர்மதி (வயது 55). நேற்று வளர்மதி தனது மகள் மல்லிகா (35) மற்றும் பேத்தி மதுமிதா(7) ஆகியோருடன் சீர்காழியில் இருந்து எருக்கூருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். ஆட்டோவை தென்பாதியை சேர்ந்த சண்முகம் (39) என்பவர் ஓட்டி சென்றார்.

பாதரக்குடி பைபாஸ் சாலையில் ஆட்டோ சென்றபோது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் சிறுமி மதுமிதா உள்பட 4 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் மூலம் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிறுமி மதுமிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். வளர்மதியும், மல்லிகாவும் சிதம்பரம் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆட்டோ மீது மோதிய கார் நிற்காமல் வைத்தீஸ்வரன் கோவில் நோக்கிச் சென்றது. இதனைப் பார்த்த பொதுமக்கள் சீர்காழி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து சீர்காழி சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி மற்றும் போலீசார் காரைத் துரத்தினர். ஆனால் விபத்துகுள்ளான கார் செங்கமேடு பைபாஸ் சாலையில் டீசல் இல்லாமல் பாதியிலேயே நின்றுவிட்டிருந்தது. உடனே போலீசார் காரையும், அதில் இருந்த ஒருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் காரில் இருந்தவர் சென்னை அண்ணாநகர் டி.வி.எஸ். காலனியை சேர்ந்த டி.வி. நடிகர் சீனு என்கிற ஷ்யாம் என்பதும், காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் அவரே என்பதும் தெரிய வந்தது. அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

 

ஆஸ்கர் விருது.. ”கிராவிட்டி” படத்திற்கு வாழ்த்து அனுப்பிய நாசா

நியூயார்க்: கிராவிட்டி படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அப்படத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

வார்னர் சகோதரர்களின் "கிராவிட்டி" படமானது இரண்டு விண்வெளி வீரர்களின் போராட்டங்களை விரிவாக விளக்கிய படமாகும்.இப்படம் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

ஆஸ்கர் விருது.. ”கிராவிட்டி” படத்திற்கு வாழ்த்து அனுப்பிய நாசா

நாசாவின் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து,விண்வெளி வீரர்களான மைக் ஹோப்பின்ஸ் மற்றும் மாஸ்ட்ரிச்சோ மற்றும் ஜாக்சாவின் விண்வெளி வீரரான கோச்சி வாட்க்கா ஆகியோர் "கிராவிட்டி" படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் ஆகியோரை வாழ்த்தியுள்ளனர்.

 

பாலாஜி சக்திவேலின் புதிய படம் 'ரா ரா ரா'!

பாலாஜி சக்திவேலின் புதிய படம் 'ரா ரா ரா'!

படம் இயக்க ஆரம்பித்து பத்தாண்டுகள் ஆகிவிட்டாலும் இதுவரை நான்கே படங்களை மட்டும் இயக்கியிருப்பவர் பாலாஜி சக்திவேல்.

உண்மை சம்பவங்கள், வாழ்க்கை நிகழ்வுகளை மட்டுமே காட்சிப்படுத்தும் இவர் இதுவரை சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 படங்களைத் தந்துள்ளார்.

இவற்றில் காதல் பெரும் புகழையும் வசூலையும் தந்தது. கல்லூரி நல்ல பெயரைக் காப்பாற்றியது.

வழக்கு எண் 18/9 தேசிய விருதையே பெற்றுத் தந்தது.

பாலாஜி சக்திவேல் தற்போது அடுத்த படத்தை இயக்கத் தயாராகிவிட்டார். இந்தப் படத்தையும் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் லிங்குசாமி தயாரிக்கிறார்.

'காதல்', 'வழக்கு எண் 18/9' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் மில்டன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்துக்கு 'ரா ரா ரா' என தலைப்பு வைத்துள்ளனர். மே முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

காதல், சமூக அவலம் போன்றவற்றை இந்த முறை தொடவில்லை பாலாஜி சக்திவேல். இந்த முறை த்ரில்லரைக் கையிலெடுத்திருக்கிறார்.

 

ஒரு பெண்ணுக்கு ஆண் தரும் சத்தியப் பாட்டு... இது கோச்சடையான் பாட்டு!!

கோச்சடையான் இசை வெளியீட்டு விழா மார்ச் 9-ம் தேதி என்றாலும், படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் ஒவ்வொன்றாக வெளியாக ஆரம்பித்துள்ளன.

ஏற்கெனவே இரு பாடல்களைத் தந்துள்ளோம்.

ஒரு பெண்ணுக்கு ஆண் தரும் சத்தியப் பாட்டு... இது கோச்சடையான் பாட்டு!!  

இதோ மூன்றாவது பாடல். இந்தப் பாடல், ஒரு பெண்ணுக்கு ஆண் செய்து தரும் சத்தியமாக அமைந்துள்ளது.

வைரமுத்துவின் வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடலின் வரிகள்...


காதல் கனியே உன்னைக் கைவிடமாட்டேன்

சத்தியம் சத்தியம் இது சத்தியமே

மாலை சூடிய காலைக் கதிரின் மேலே

சத்தியம் சத்தியம் இது சத்தியமே...


ஒரு குழந்தை போலே

ஒரு வைரம் போலே

தூய்மையான என் சத்தியம் புனிதமானது.

இப்பிறவியில் இன்னொரு பெண்ணைச்

சிந்தையிலும் தொடேன்

பிறிதோர் பக்கம் மனம் சாயாப்

பிரியம் காப்பேன்


செல்லக் கொலுசின் சிணுங்கல் அறிந்து

சேவை செய்வேன்

நெற்றிப் பொட்டில் முத்தம் பதித்து

நித்தம் எழுவேன்

கைப்பொருள் யாவும் கரைந்தாலும்

கணக்குக் கேளேன்

ஒவ்வொரு வாதம் முடியும் போதும்

உன்னிடம் தோற்பேன்

சத்தியம் சத்தியம் இது சத்தியமே...


மாதமலர்ச்சி மறையும் வயதில்

மார்பு கொடுப்பேன்

நோய் மடியோடு நீ வீழ்ந்தால்

தாய் மடியாவேன்...

-இதே போல ஆணுக்கு பெண் சத்தியம் செய்து தரும் பாடலும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது.

 

தேர்தல் அறிவிப்பு.... மே மாதத்துக்கு தள்ளிப் போகிறதா கோச்சடையான்?

சென்னை: ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த மாதம் வெளியாகவிருந்த ரஜினியின் கோச்சடையான் படம் மே மாதத்துக்கு தள்ளிப் போகும் என்று தெரிகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள சரித்திப் படம் கோச்சடையான் - தி லெஜன்ட்.

இந்தப் படம் புதிய தொழில்நுட்பத்தில் 3 டியில் தயாராகியுள்ளது. வரும் 9-ம் தேதி படத்தின் இசை வெளியாகிறது. அதற்கு முன்னோட்டமாக பாடல் வரிகள் வெளியாகி ரசிகர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தி வருகின்றன.

தேர்தல் அறிவிப்பு.... மே மாதத்துக்கு தள்ளிப் போகிறதா கோச்சடையான்?

கோச்சடையானின் வெளியீட்டுத் தேதி குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் படத் தயாரிப்பாளர்கள் ஈராஸ் மற்றும் இயக்குநர் சவுந்தர்யா கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில் ஏப்ரல் 11-ம் தேதி உலகம் முழுவதும் 6000 க்கும் அதிகமான அரங்குகளில் கோச்சடையான் வெளியாகும் என அறிவித்திருந்தனர்.

சர்வதேச அளவில் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் வேலையில் ஐங்கரன், ஈராஸ் நிறுவனங்கள் மும்முரம் காட்டின.

இந்த நிலையில்தான் பட வெளியீட்டுத் தேதி குறித்து இசை வெளியீட்டு விழாவில் சொல்கிறோம் என சவுந்தர்யா மீண்டும் ஒரு கேள்விக்குறியைப் போட்டார். அப்போதே படத்தின் வெளியீடு தள்ளிப் போவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிந்தன.

இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுவையில் ஏப்ரல் 24-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது.

இந்தப் பரபரப்பில் கோச்சடையானை வெளியிடலாமா.. அல்லது மே மாத மத்தியில் வெளியிடலாமா என தயாரிப்பாளர்கள் ஆலோசனையில் உள்ளனர்.

 

நடுச் சாலையில் பெண்ணுடன் நெருக்கம்.. விசாரித்த போலீசாருடன் தகராறு.. ரவிதேஜாவின் சகோதரர் கைது!

நடுச் சாலையில் பெண்ணுடன் நெருக்கம்.. விசாரித்த போலீசாருடன் தகராறு.. ரவிதேஜாவின் சகோதரர் கைது!

ஹைதராபாத்: அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு நடுச் சாலையில் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த நடிகர் ரவிதேஜாவின் சகோதரர் கைது செய்யப்பட்டார்.

பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர் பரத் நேற்று அதிகாலை குடிபோதையில் காரை ஓட்டி வந்தார். கவுரி ஹில்ஸ் சாலையில் காரை நிறுத்திவிட்டு, ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நின்று அவர் பேசிக் கொண்டிருந்தார். வெட்ட வெளியில் இருவரும் சில்மிஷங்களில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது மாதப்பூர் போலீசார் அவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து இருந்ததைக் கண்டுபிடித்தனர். 'குடிபோதையில் ஒரு பெண்ணுடன் இந்த நேரத்தில் என்ன செய்கிறீர்கள்' என்று கேட்டனர்.

உடனே போலீசாருடன் பரத் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். மோசமான வார்த்தைகளில் பேசினார். இதனால், போலீசார் அவரைக் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். உடனிருந்த பெண் அங்கிருந்து நழுவிவிட்டார்.

உள்ளூர் நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். அங்கு அவர் ஜாமீன் பெற்று சென்றார்.

ஏற்கெனவே போதை மருந்து வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர் பரத் என்பது குறிப்பிடத்தக்கது.