ஒத்திவைப்பிலும் புதிய ரெகார்ட் - துப்பாக்கி மீது செப் 17 வரை தடை நீட்டிப்பு!!

Chennai Court Extends Ban On Thuppakki   

துப்பாக்கி படத்தின் தலைப்பு சண்டை இப்போதைக்கு ஓயவே ஓயாது போலிருக்கிறது. இந்த வழக்கை 7 வது முறையாக ஒத்தி வைத்தார் நீதிபதி திருமகள்.

படத்தின் தலைப்பு மீதான இடைக்காலத்தடை வரும் செப்டம்பர் 17-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கள்ளத்துப்பாக்கி படத்தின் தயாரிப்பாளர் சி ரவிதேவன் இந்த வழக்கை தாக்கல் செய்தார். விஜய் நடிக்கும் துப்பாக்கி படத் தலைப்பு மற்றும் டிசைன்கள், தன்னுடைய கள்ளத் துப்பாக்கி தலைப்பு - டிசைனை காப்பியடித்து உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டி இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

தாணு தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்துக்கு இரு மாதங்களுக்கு முன்பு விதிக்கப்பட்ட தடையை இதுவரை 7 முறை நீட்டித்துள்ளார் நீதிபதி. துப்பாக்கி படத் தயாரிப்பாளர் தரப்பில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்பது இந்த முறை ஒத்தி வைப்புக்கான காரணம்.

தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் இந்தப் படத்துக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வருவது தயாரிப்பாளர் மற்றும் விஜய் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

 

'அயன்' பண்ண விரும்பும் சல்மான் கான்!

Salman Khan Steps Into The Shoes Surya

சூர்யா நடித்த அயன் படத்தின் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம் சல்மான் கான்.

இந்திப் படங்களைப் பார்த்து காப்பி அடித்த காலம் போய் இப்போது தமிழ்ப் படங்களை ரீமேக் செய்யும் மோகத்திற்கு பாலிவுட் மாறியுள்ளது. அடுத்தடுத்து தமிழ்ப் படங்களை இந்தியில் ரீமேக் பண்ண ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான அயன் படத்தின் ரீமேக்கில் சல்மான்கான் நடிக்கவிருக்கிறாராம். இந்தப் படத்தை பிரபுதேவா இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சல்மான் கானை வைத்து வான்டட் படத்தை இயக்கியவர் பிரபுதேவா என்பது நினைவிருக்கலாம். இப்படம் விஜய் நடித்த போக்கிரி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

அயன் ரீமேக்கை இயக்குமாறு பிரபுதேவாவை சல்மான் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அவரும் சம்மதித்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. டிப்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கும் என்று தெரிகிறது.

விரைவில்,த தமிழில் வெளியான உனக்கும் எனக்கும் படத்தின் ரீமேக்கை இந்தியில் இயக்கப் போகிறார் பிரபுதேவா. அதில் ஸ்ருதிஹாசன்தான் திரிஷா ரோலில் நடிக்கப் போகிறார். புதுமுகம் கிரீஷ் குமார் நாயகனாக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தை முடித்து விட்டு அயன் இந்திக்கு வருவார் பிரபுதேவா என்கிறார்கள்.

 

பாடகராக மாறி கலக்கிய பவர் ஸ்டார்!

Powerstar Turns Singer

ஒரு காலத்தில் நக்கல் நையாண்டிப் பொருளாகப் பார்க்கப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன், இன்று நிஜமாகவே 'பவர்' கூடி வருகிறார்.

ஷங்கர் படம், பாலா படம், சந்தானத்துடன் ஒரு படம் என ஏகப்பட்ட வாய்ப்புகள், கூடவே சொந்தமாக ஏழெட்டு பட தயாரிப்புகள் என உடம்பெல்லாம் மச்சம் கொண்ட அதிர்ஷ்ட பார்ட்டியாகிவிட்டார்.

இப்போது பாடகராகவும் அவதாரமெடுத்துள்ளார் சீனிவாசன்.

அவரது சொந்தப் படமான இந்திரசேனாவுக்காக அவரே சொந்தக் குரலில் பாடியுள்ளாராம். இந்தப் பாடலை விரைவில் யு ட்யூபில் ரிலீஸ் செய்யும் திட்டத்திலிருக்கிறார் சீனிவாசன்.

இன்றைய சூழலில் பல முக்கிய படங்கள் யு ட்யூபை விளம்பர சாதனமாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. எனவே தானும் அந்த யுத்தியைக் கையாளுவதாக சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

யு ட்யூப், பேஸ்புக், ட்விட்டர் என சமூகவலைத் தளங்களில் சீனிவாசனுக்கென பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஷாருக்கான் போல வரணும்.. ஜீவா

Jiiva Turns Brand Ambassador

டிஷ் டிவியின் தென்னிந்திய விளம்பரத்தூதுவராக நடிகர் ஜீவா நியமிக்கப்பட்டுள்ளார். விஜய், சூர்யா, மாதவன் வரிசையில் இனி ஜீவாவையும் விளம்பரங்களில் காணலாம்.

கற்றது தமிழ், ஈ, கோ, என சினிமாவில் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்த ஜீவா தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார். அவரை தற்போது விளம்பர வாய்ப்புகள் தேடி வந்துள்ளன. டிஷ் டிவியின் தென்னிந்திய விளம்பர தூதுவராக ஜீவா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அறிமுக விழாவில் பேசிய டிஷ் டிவியின் தலைமை செயல் அதிகாரி சி.ஆர் வெங்கடேஷ், ஜீவா சிறந்த ட்ரெண்ட் செட்டர் என்றார் அவரை விளம்பர தூதுவராக நியமித்துள்ளதற்கு பெருமை அடைகிறோம் என்றும் கூறினார்.

வட இந்தியாவின் விளம்பர தூதுவராக ஏற்கனவே நியமிக்கப்பட்டிருப்பவர் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான். அவரைப்போல புகழ் பெறவேண்டும் என்பது தனது லட்சியம் என்று விழாவில் பங்கேற்ற ஜீவா கூறினார்.

டிஷ் டிவி ஆசியாவிலேயே மிகச்சிறந்த மார்க்கெட்டினை தக்க வைத்துக்கொண்டுள்ளது. அந்த நிறுவனத்தின் தென்னிந்திய விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு பெருமை அடைகிறேன். வடக்கே நடிப்பில் கலக்கும் அவர் அளவுக்கு தமிழ்நாட்டில் நானும் புகழ் பெற வேண்டும் என்ற ஆசை காரணமாகவே தென்னிந்திய விளம்பர தூதர் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன் என்றும் ஜீவா கூறினார்.

 

தயாரிப்பாளர் ஏவிஎம் முருகன் மரணம்!

சென்னை: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏவி எம் முருகன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 77.

மாரடைப்பு காரணமாக அவர் இன்று பிற்பகல் 1 மணிக்கு இறந்தார்.

ஏவி மெய்யப்பச் செட்டியாரின் மகன்களுள் மூத்தவர் எம் பழனியப்பன். அவருக்கு அடுத்தவர் எம் முருகன். தந்தை உயிருடன் இருந்த போதே இவர் தனியாகப் பிரிந்து, தயாரிப்பு மற்றும் இதர சினிமா பணிகளில் ஈடுபட்டார். எம் குமரன், எம் சரவணன் மற்றும் எம் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தனியாக தொழில் செய்து வந்தனர்.

பின்னர் முருகன் மட்டும் தனியாகப் பிரிந்து படங்கள் தயாரித்தார். ஏவிஎம்மின் பழைய கறுப்பு வெள்ளைப் பட லேபுக்கு இவர் பொறுப்பில் இருந்தது.

தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் ஏவிஎம் முருகன். புத்தகங்கள் எழுதுவதிலும் பெரும் ஆர்வம் உடையவர் முருகன். துணை தேடும் நெஞ்சம். தர்ம பாதை போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

ஏவிஎம் முருகனுக்கு ரஞ்சனி என்ற மனைவியும், கார்த்திக் என்ற மகனும், அங்கயற்கண்ணி, லதா என்ற மகள்களும் உள்ளனர்.

அவரது இறுதிச் சடங்கு நாளை நடக்கும் என்று தெரிகிறது.

முருகனின் மறைவுக்கு திரையுலகினர் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

 

குரோர்பதி நிகழ்ச்சி மூலம் ரூ.1 கோடி வென்ற ரயில்வே ஊழியர்

Kbc 6 Crorepati Winner Manoj Kumar Raina 1 Cr Kbc

கோன் பனேகா குரோர்பதி சீசன் 6 நிகழ்ச்சியில் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலைக் கூறி ஒரு கோடி ரூபாய் பரிசினை வென்றுள்ளார் ரயில்வே ஊழியர். வென்ற பணத்தைக் கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்வேன் என்று கூறியுள்ளார் அந்த கோடீஸ்வரர்.

சோனி டிவியில் நடிகர் அமிதாப் பச்சன் நடத்தி வரும், குரோர்பதி நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பு உள்ளது. வெள்ளிக்கிழமையன்று ஆறாவது சீசன் போட்டி கோலாகலமாக தொடங்கியது. ஞாயிறன்று இந்தப் போட்டியில் கலந்து கொண்ட, ரயில்வே ஊழியர், மனோஜ் குமார் ரெய்னா, இறுதி வரை சரியான பதில்களை கூறி, ஒரு கோடி ரூபாய் பரிசை தட்டிச் சென்றுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ரெய்னா, வடக்கு ரயில்வேயில் ஊழியராக பணியாற்றி வருகிறார். வெற்றி பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அவர், போட்டியில் ஜெயிப்பேன் என, நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அமிதாப்பின் தீவிர ரசிகனான நான், அவர் சந்தோஷமாக இருந்தால், சந்தோஷமாக இருப்பேன். அவருக்கு கஷ்டங்கள் வந்தபோது, நானும், பல முறை அழுதிருக்கிறேன் என்றார். அவரை பார்ப்பதற்காகவே, போட்டியில் கலந்து கொள்ள, 2000ம் ஆண்டு முதல், முயற்சித்து வந்தேன். போட்டிக்காக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளை பற்றிய, பல்வேறு செய்திகளை, தீவிரமாகப் படித்து வந்தேன். இப்பொழுது வெற்றி பெற்றிருக்கிறேன். போட்டியில் வென்றது, மகிழ்ச்சிகரமாக உள்ளது என்றார்.

காஷ்மீரில், எனக்கு இருந்த வீட்டை, பயங்கரவாதிகள் இடித்து விட்டனர். இதனால், ஜம்மு நகருக்கு குடிபெயர்ந்தேன். பரிசுப் பணத்தை கொண்டு, எனக்கென, ஒரு வீட்டை கட்டுவேன். முடியாத ஏழைகளுக்கு உதவி செய்வேன் என்று கூறியுள்ளார் இந்த புதிய கோடீஸ்வரர்.

 

என் மகன் விஜய் அழகான நடிகன் இல்லை! - எஸ் ஏ சந்திரசேகரன்

My Son Vijay Is Not Handsome Says

சென்னை: என் மகன் விஜய் அழகான நடிகன் இல்லை.. ரொம்ப அழகாக இருந்தாலும் தப்பு, என்றார் எஸ் ஏ சந்திரசேகரன்.

சென்னையில் நடந்த மதில் மேல் பூனை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், "சினிமாவில் இப்போது யதார்த்தமாக இருக்கும் கதாநாயகர்களே ஜெயிக்கிறார்கள். முன்பெல்லாம் கதாநாயகன் என்றால் அழகாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.

இப்போது அப்படி இல்லை. பக்கத்து வீட்டுப் பையனை பார்த்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருக்க வேண்டும். என் மகன் விஜய் கூட அழகான நடிகர் அல்ல. யதார்த்தமாக இருப்பார்.

கதாநாயகன் என்றால், அவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்று இப்போதைய ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

ரொம்ப அழகாக இருந்தாலும் தப்பு. இப்போது வரும் கதாநாயகர்களுக்கு இதுதான் பலம். விஜய் வசந்தும் யதார்த்தமாக இருக்கிறார். அவரும் விஜய் போல வர என்னுடைய வாழ்த்துக்கள்," என்றார்.

எஸ்.ஏ.சி. பேசுவதற்கு முன்பாக விஜய் வசந்த்தின் நண்பரும், நடன இயக்குநருமான விஜய் ஆதித்ராஜ் பேசுகையில் விஜய் வசந்த் அடுத்த விஜய்யாக வருவார் என்றார்.

அதற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பதில்தான் மேலே நீங்கள் படித்தது!

 

பிரபல தெலுங்கு நடிகர் ராஜோந்திர பிரசாத் மருத்துவமனையில் அனுமதி

Rajendra Prasad Recovering From Str

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தெலுங்கில் லேடீஸ் டைலர், எர்ர மந்தாரம் உள்பட 200 படங்களில் நடித்தவர் ராஜேந்திர பிரசாத். இவர் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான குயிக்கன் முருகன் படத்தில் நடித்தவர். இதில் அவருக்கு ரம்பா ஜோடியாக நடித்தார்.

தெலுங்கு படங்களில் இப்போது காமெடி வேடங்களிலும் நடித்து வருகிறார்.

ராஜேந்திர பிரசாத்துக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அங்குள்ள கேர் மருத்துவமனையில் சேர்த்தனர். அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவருக்கு லேசான அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் ஏராளமான தெலுங்கு நடிகர்கள் மருத்துவமனைக்குச் சென்று உடல் நலம் விசாரித்தனர்.

உடல் நலம் தேறுகிறது

56 வயதான ராஜேந்திர பிரசாத்துக்கு இப்போது உடல் நலம் தேறி வருகிறது. அவரது மனைவி மற்றும் மகள்கள் உடனிருந்து பார்த்துக் கொள்கின்றனர்.

 

நான் ஐஸ்வர்யா ராய் போன்று அழகில்லை: பிரியங்கா சோப்ரா

I M Not Perfect Like Aishwarya Rai

மும்பை: நான் ஒன்றும் ஐஸ்வர்யா ராய் போன்று பெர்பெக்ட் இல்லை, அழகும் இல்லை என்று நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பேசுகையில்,

நான் பரேலியில் வாழ்ந்தேன். அங்கிருந்து போஸ்டன் சென்று அங்குள்ள பள்ளியில் சேர்ந்தேன். அங்கு நான் இனவாதப் பிரச்சனைகளை சந்தித்தேன். சில சிறுமிகள் என்னை பிரவுனி என்று அழைத்தார்கள். அமெரிக்க பள்ளியில் படித்ததில் நிறைய பாடம் கற்றுக் கொண்டேன். நம்பிக்கையுடன் செயல்பட கற்றுக் கொண்டேன். நான் ஒன்றும் ஐஸ்வர்யா ராய் போன்று பெர்பெக்ட் கிடையாது. அவரைப் போன்று அழகும் இல்லை. எனக்கு நடிக்கத் தெரியாமல், அழகிப் போட்டியில் வெற்றி பெறத் தெரியாமல் இருந்தது.

ஆனால் ஒவ்வொரு சூழலும் எனக்கு ஒவ்வொன்றை கற்றுக்கொடுத்தது. ரிஸ்க் இல்லாமல் வாழ்க்கை இல்லை. பாதி இந்தியாவுக்கு ஆட்டிஸம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் நான் பர்பி படத்தில் ஆட்டிஸம் பாதித்தவளாக நடித்துள்ளேன். என்னுடைய ஆல்பம் வரும் 13ம் தேதியும், பர்பி 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதில் மக்களுக்கு எது பிடிக்கும் என்று தெரியவில்லை என்றார்.

 

சிம்பு, சூர்யா, ஆர்யா: ஜமாய்க்கும் ஹன்சிகா

Half Dozen Tamil Movies Hansika Kitty   

சென்னை: நடிகை ஹன்சிகா மோத்வானி காட்டில் வாய்ப்பு மழை 'சோ'வென்று பெய்கிறது.

சின்ன குஷ்பு என்ற செல்லமாக அழைக்கப்படும் நடிகை ஹன்சிகா கைநிறைய படங்கள் வைத்துள்ளார். சில நடிகைகள் சைஸ் ஜீரோ அளவில் உடம்பை வைத்திருக்கின்றனர். மேலும் சிலர் டயட், யோகா செய்து ஸ்லிம்மாக இருக்கின்றனர். இந்த இரண்டிலுமே சேராதவர் ஹன்சிகா. கொழுக், மொழுக்கென்று அமுல் பேபி மாதிரி இருக்கிறார்.

ஆனாலும் நம் தமிழக ரசிகர்களுக்கு அவரைத் தான் மிகவும் பிடித்திருக்கிறது. நம்ம ஊர் மன்மதராசாக்களுக்கு குண்டாக இருக்கும் ஹன்சிகாவைப் பார்த்தால் குஷியாக உள்ளது. ரசிகர்களின் விருப்பத்தை நன்கு புரிந்து கொண்ட இயக்குனர்களும் தங்கள் படங்களில் ஹன்சிகாவை எடுக்க ஆர்வமாக உள்ளனர். அதன் விளைவு அவர் கையில் 6 தமிழ் படங்கள்.

சிம்புவுடன் வாலு, வேட்டை மன்னன், ஆர்யாவுடன் சேட்டை, சூர்யாவுடன் சிங்கம் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கில் ரிலீஸான இஸ்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் பாலிவுட் நடிகை ஜெயப்பிரதாவின் அக்கா மகனோடு நடிக்கிறார். இனி ஹன்சிகாவை அடிக்கடி திரையில் பார்க்கலாம்.

 

'தமிழ் படம்' ரீமேக்: அல்லாரி நரேஷைப் பாராட்டிய ரஜினி!

Rajinikanth Raves Allari Naresh Acting Sudigadu   

சுடிகாடு படத்தில் சிறப்பாக நடித்திருப்பதாக தெலுங்கு நடிகர் அல்லாரி நரேஷை பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சுடிகாடு படம் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலைக் குவித்து வருகிறது. தமிழில் வெளியாகி பரபரப்பான விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகளைப் பெற்ற தமிழ்ப் படத்தின் தெலுங்கு பதிப்பு இந்தப் படம்.

இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக கடந்த செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் திரையிடப்பட்டது. சென்னையில் உள்ள தனது வீட்டிலிருந்தபடி இந்தக் காட்சியை டிஜிட்டல் திரையிடல் மூலம் பார்த்தாராம் ரஜினி.

இந்தப் படத்தில் ரோபோ படத்தில் ஆயிரம் துப்பாக்கிகளுடன் ரஜினி வருவது போன்ற காட்சியும் கூட உண்டு.

அவருடன் படக்குழுவினரும் இருந்தனர். படம் முடிந்ததும், சிறப்பாக இருப்பதாகக் கூறி ஒவ்வொரு டெக்னீஷியன், நடிகர் நடிகைகளைப் பாராட்டியுள்ளார் ரஜினி.

குறிப்பாக படத்தின் ஹீரோ அல்லாரி நரேஷுக்கு தனது ஸ்பெஷல் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

 

வாலு படத்திற்கும் வருது தலைப்பு சிக்கல்?'

Simbu S Vaalu Undergoes Title Issue   

தமிழ்திரைப்பட தலைப்புகளுக்கு சிக்கல் வருவது அதிகமாகிவருகிறது. துப்பாக்கி, சுந்தரபாண்டியனைத் தொடர்ந்து சிம்பு நடித்து வரும் வாலு படத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரணவ் புரடெக்சன்ஸ் ஏற்கனவே வாலு என்ற படத்தை பதிவு செய்து அகில் ஹீரோவாகவும், சரண்யா ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு படப்பிடிப்பு தண்டராம்பட்டு, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை தம்பி ராமையாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தெய்வசிகாமணி என்பவர் இயக்கி வருகிறார். இந்த நிறுவனத்தினர்தான் சிம்புவின் வாலுவுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த பஞ்சாயத்தினால் சிம்புவின் ‘வாலு' வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக இது போன்ற தலைப்புப் பிரச்சனைகளும், பஞ்சாயத்துகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் தயாரிப்பாளர் சங்கம் ஒழுங்காக வேலை செய்யவில்லையோ என்று கேள்வி எழுந்துள்ளது.

 

சிம்புவுடன் இணைகிறார் 'கொலவெறி' அனிருத்!

Anirudh Join With Simbu Manmathan 2

சென்னை: உறவினரான தனுஷுடன் சேர்ந்து கொலவெறிப் பாடலுடன் கூடிய 3 படத்தைக் கொடுத்த இசையமைப்பாளர் அனிருத் அடுத்து தனுஷின் 'நெருங்கிய' நண்பரான சிம்புவுடன் கை கோர்க்கிறார். 3 படம் மூலம் அறிமுகமான அனிருத் சிம்புவின் மன்மதன் 2 படத்தில் இசையமைக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.

தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவின் உறவுக்காரர்தான் அனிருத். அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினியின் மைத்துனர் ரவி ராகவேந்தரின் மகன். ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க உருவான 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே பெரும் பேச்சாகப் பேசப்பட்டார் அனிருத். காரணம், அவர் போட்ட கொலவெறிப் பாடல்தான்.

அதேபோல சமீபத்தில் மேலும் பரபரப்பாக பேசப்பட்டார் அனிருத். காரணம், அவரை விட பல வயது மூத்தவரான நடிகை ஆண்ட்ரியாவுக்கு அவர் கொடுத்த கொலவெறி முத்தத்தால்.

இந்த நிலையில் அனிருத்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முதல் படத்தில் தனுஷுடன் இணைந்த அனிருத், தனது அடுத்த படத்தில் சிம்புவுடன் கை கோர்க்கிறார். சிம்பு தனக்குப் பெரும் பெயர் கொடுத்த மன்மதன் படத்தின் 2ம் பாகத்தை இயக்கப் போகிறார். இதற்கு முதலில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பார் என்று பேசப்பட்டது. ஆனால் தற்போது அனிருத்தின் பெயர் அடிபடுகிறது.

இருப்பினும் சிம்பு தரப்பிலிருந்தோ அல்லது அனிருத் தரப்பிலிருந்தோ இதை உறுதிப்படுத்தி செய்தி ஏதும் இல்லை. இருந்தாலும் அனிருத் பெயரை சிம்பு டிக் அடித்திருப்பதாக கூறுகிறார்கள்.

தனுஷுக்கு கெஸ்ட் ரோல் ஏதாச்சும் உண்டா சிம்பு...?

 

அடுத்த வாரம் 'கத்திரி'க்குப் போகிறது தாண்டவம்!

Thandavam Be Censored Next Week   

சென்னை: விக்ரம் நடித்து பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள தாண்டவம் படம் அடுத்த வாரம் சென்சார் ஆய்வுக்குப் போகிறது. படத்திற்கு என்ன சான்றிதழ் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புடன் படக் குழுவினர் உள்ளனர்.

தெய்வத் திருமகன் படம் மூலம் விக்ரமுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்த இயக்குநர் ஏ.எல். விஜய்தான் தாண்டவம் படத்தை இயக்கியுள்ளார். அனுஷ்கா, எமி ஜாக்சன் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் கண் பார்வையற்றவராகவும் ஒரு கெட்டப்பில் வருகிறார் விக்ரம். இதுதான் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏகத்திற்கும் ஏற்றி விட்டுள்ளது.

இவர்கள் தவிர லட்சுமி ராய், சந்தானம், நாசர் உள்ளிட்டோரும் முக்கியப் பாத்திரங்களில் வருகிறார்கள். தற்போது அடுத்த வாரம் படம் சென்சார் சான்றிதழுக்காக செல்கிறதாம். இப்படத்தில் சண்டைக் காட்சிகள் நிறைய இருந்தாலும் கண்டிப்பாக யு சர்டிபிகேட் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் படக் குழுவினர் உள்ளனர். இருந்தாலும் யு ஏ கிடைத்தால் என்ன செய்வது என்ற கவலையும் அவர்களிடம் உள்ளதாம்.

இப்படத்தின் பாடல்களை மிகப் பிரமாண்டமாக எடுத்துள்ளனராம். இசையை ஜ.வி.பிரகாஷ்குமார் கவனித்துள்ளார். அருமையான லொகேஷன்களில் பாடல்களைப் படமாக்கியிருப்பதால் விக்ரம் ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரை ரசிகர்களும் கூட பெரும் ஆவலுடன் ரசிக்கக் காத்துள்ளனர்.

சீயான் தாண்டவத்தைப் பார்க்க யாருக்குத்தான் ஆசை இருக்காது...??

 

முருகதாஸ் தம்பிக்காக மின்னல் வேகத்தில் நடித்துக் கொடுத்த அஞ்சலி

Anjali Completes Vathikuchi Shoot   

சென்னை: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி திலீபன் ஹீரோவாக நடித்து அறிமுகமாகும் வத்திக்குச்சி படத்தில் ஒரு முக்கிய ரோலில் அஞ்சலி நடித்துள்ளார். அதற்கான போர்ஷனையும் படு வேகமாக நடித்துக் கொடுத்து விட்டாராம்.

அஞ்சலி இப்போது ரொம்ப பிசி. பெரிய டைரக்டரே அணுகினால் மட்டுமே அவருடைய கால்ஷீட் கி்டைக்கும். அந்த அளவுக்கு பிசியாக இருக்கிறார். பெரிய இயக்குநர்கள், பெரிய பட நிறுவனங்கள் என்றால் உடனே நடிக்க வந்து விடுகிறார். மற்றவர்களைத் தவிர்க்கிறாராம்.

இந்த நிலையில் தனக்கு பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த எங்கேயும் எப்போதும் படத்தைத் தயாரித்தவரான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கேட்டுக் கொண்டதற்காக அவருடைய தம்பி திலீபன் ஹீரோவாக அறிமுகமாகும் வத்திக்குச்சி படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துக் கொடுத்துள்ளாராம்.

படு வேகமாக இந்த காட்சிகளைப் படமாக்கியுள்ளனர். இதற்காக முழுக் கால்ஷீட்டையும் ஒதுக்கி நடித்து முடித்துக் கொடுத்து விட்டாராம் அஞ்சலி. இப்படத்தில் மீனா என்ற கேரக்டரில் வருகிறாராம் அஞ்சலி. கேரக்டர் குறித்த பிற தகவல்களை வெளியிட மறுத்து விட்டது அஞ்சலியின் அழகான வாய்.

அடுத்து விஷாலுடன் இணையும் எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்கப் போகிறார் அஞ்சலி. இப்படத்தை இயக்கப் போவது அஞ்சலியைப் புதிய கோணத்தில் காட்டிய இயக்குநர் சுந்தர்.சி என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாகன் - திரைப்பட விமர்சனம்

Paagan Movie Review   

Movie Rating:
3.0/5

நடிகர்கள்: ஸ்ரீகாந்த், ஜனனி, கோவை சரளா, பரோட்டா சூரி, பாண்டி
இசை: ஜேம்ஸ் வசந்தன்
ஒளிப்பதிவு: லட்சுமணன்
பிஆர்ஓ: ஜான்
தயாரிப்பு: விபி புரொடக்ஷன்ஸ்
எழுத்து - இயக்கம்: அஸ்லம்

பொதுவாக ஒரு திரைப்படத்தில் ஹீரோ தன் கதையைச் சொல்வார். அல்லது அவ்வப்போது இயக்குநர் குரல் எட்டிப்பார்க்கும். ஆனால் பாகனில் ஒரு சைக்கிள் தன் வரலாறு கூறுகிறது...!

கேட்கவே சுவாரஸ்யமாக இருக்குல்ல... படம் முழுக்க அந்த சுவாரஸ்யத்தைக் காப்பாற்றியிருக்கிறார் புது இயக்குநர் அஸ்லம்!

மொபெட்கள், பைக்குகள் என்று காலங்கள் மாறினாலும், சைக்கிள் பயணங்கள் தனி சுகமானவை.

சுப்பிரமணிக்கு (ஸ்ரீகாந்த்) சைக்கிள் என்றால் அப்படி ஒரு பிரியம். நினைவு தெரிந்த நாளிலிருந்து தன் குடும்பத்தில் ஒரு அங்கமாக அவன் பார்க்கும் அந்த சைக்கிளை தந்தை விற்றுவிட, துடித்துப் போகிறான். நட்ட நடு ராத்திரியில் அந்த சைக்கிளை வாங்கியவரின் வீட்டுக்குப் போய் அதை ஒருமுறை தொட்டுப் பார்த்துவிட்டு திரும்புகிறான். அதைப் பார்த்துவிட்டு, மீண்டும் சைக்கிளை சுப்பிரமணியிடமே விட்டுவிட்டுச் செல்கிறார் வாங்கியவர்.

அன்றுமுதல், அந்த சைக்கிள்தான் சுப்பிரமணியின் முதல் நண்பன், உறவு... எல்லாமே. வாழ்க்கையில் எப்படியாவது சீக்கிரம் பணக்காரனாகிவிட வேண்டும் சுப்பிரமணியின் பேராசை. அதற்காக நண்பர்களுடன் சேர்ந்து அவன் தொடங்காத பிஸினஸ் இல்லை. போடாத ஐடியா இல்லை. அவன் நேரம், தக்காளி பிஸினஸ் ஆரம்பித்தால் லோடு லாரி கவிழ்ந்து போகிறது... கோழிப் பண்ணை வைத்தால், கோழிகளுக்கு சீக்கு வந்து பண்ணைக்கு சீல் வைக்கும் நிலை.

கடைசியில் ஒரு மாஸ்டர் பிளான். பொள்ளாச்சி பக்கத்திலேயே பெரிய பணக்கார வீட்டுப் பெண்ணை உஷார் செய்து, பணக்கார மாப்பிள்ளையாகி செட்டிலாவது!

அந்த பணக்கார வீட்டுப் பெண் மகாலட்சுமி (ஜனனி). அவன் திட்டப்படியே எல்லாம் ஒர்க் அவுட் ஆகிறது. ஆனால் காதல் விவகாரம் வீட்டுக்குத் தெரிந்து, அவள் சுப்பிரமணி வீட்டுக்கு கட்டிய தாவணியோடு வந்து நிற்க, 'அய்யய்யே... நீ மட்டும் எதுக்கு வந்தே... உன் சொத்து எங்கே.. அதுக்காகத்தானே உன்னை காதலித்தேன்,' என சுப்பிரமணி தன் சுயரூபத்தைக் காட்டுகிறான். காதல் டமாலாகிறது.

பெண்ணைத் தேடி வரும் பணக்கார தந்தையும் அவர் அடியாட்களும் சுப்பிரமணியைத் துரத்த, அவன் தன் சைக்கிளிலேயே திருப்பூருக்கு தப்பிச் செல்கிறான். மகாலட்சுமி டைரி யதேச்சையாகக் கையில் சிக்கும்போதுதான், அவள் சின்ன வயதிலிருந்தே சுப்பிரமணியை காதலிப்பது தெரிய வருகிறது.

தவறை உணர்ந்து, உழைத்து முன்னேற பல வேலைகளைச் செய்கிறான் சுப்பிரமணி. அதிலெல்லாம் கூடவே பயணிக்கிறது அவன் சைக்கிளும். தன் முயற்சிகளில் அவன் ஜெயித்தானா... அவனும் மகாலட்சுமியும் சேர அந்த சைக்கிள் எப்படி உதவியது.. போன்றவற்றை தியேட்டரில் பார்த்துக் கொள்ளுங்கள்.

வாகன வசதிகள் எவ்வளவோ வந்துவிட்ட இந்தக் காலத்தில், சைக்கிளைப் பற்றி இத்தனை சிலாகிப்பதில் லாஜிக் இல்லையே என சிலர் நினைக்கக் கூடும். ஆனால் சைக்கிள்கள் கோலோச்சிய எண்பதுகளைப் பார்த்தவர்களுக்கு இந்த பிணைப்பின் அர்த்தம் புரியும்.

படத்தின் ப்ளஸ்கள்.. கொஞ்சம் நீளம் என்றாலும் சீராகப் பயணிக்கும் திரைக்கதை, ஸ்ரீகாந்தின் இயல்பான நடிப்பு, படம் முழுக்க வரும் பரோட்டா சூரி, பாண்டியின் திணிக்கப்படாத நகைச்சுவை. கோவை சரளாவின் தேர்ந்த நடிப்பையும் விட்டுவிட முடியாது.

ஸ்ரீகாந்த்துக்குப் பொருத்தமான வேடம். உணர்ந்து நடித்திருக்கிறார். நண்பர்களை தன் பேச்சில் வீழ்த்தும் லாவகம், ஜனனியிடம் உண்மைக் காதலைச் சொல்லி உருகுவது, திருப்பூரில் கிடைத்த வேலைகளைச் செய்யும் பக்குவம்... இப்படி கிடைத்த இடங்களிலெல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார்.

காதலியாக வரும் ஜனனி ஓகே.

வெங்கடேஷுக்கு பெரிய பில்ட் அப் கொடுத்து பொசுக்கென்று விட்டுவிடுகிறார்கள்.

படம் முழுக்க தக்காளி பாளையம், பொள்ளாச்சி, திருப்பூர் என்று நேட்டிவிட்டியோடு பயணிப்பது பார்க்க இதமாக உள்ளது. கேமராமேன் லட்சுமணன் பாராட்டுக்குரியவர். வழக்கம்போல சிச்சுவேஷனுக்கு ஏற்றமாதிரி இளையராஜா, டைட்டானிக் பாடல்களையெல்லாம் ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன்!

முதல்படம் என்ற தடுமாற்றம் ஏதுமில்லாமல், ஒரு அனுபவத்தை இயல்பான நடையில் சொன்ன விதத்தில் ஜெயித்திருக்கிறார் புதியவர் அஸ்லம்!

-எஸ் ஷங்கர்

 

சொகுசு கார்... வரி கட்டாமல் தப்பிக்க தில்லுமுல்லு செய்தாரா 'கோடீஸ்வர' சயீப்?

Saif Ali Khan Questioned Car Import

மும்பை: குறுக்கு வழியைப் பயன்படுத்தி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு வரி கட்டாமல் ஏய்த்துள்ளார் மகா பணக்கார நடிகரான சயீப் அலிகான்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஒருவர் வெளிநாட்டில் 2 ஆண்டுகள் தங்கி இருந்த பிறகு, குடியிருப்பு மாற்ற விதிகள் சலுகையின் கீழ், இந்தியாவில் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக, தனிப்பட்ட சொத்துக்களை சுங்கக் கட்டணம் செலுத்தாமல் இறக்குமதி செய்து கொள்ளலாம்.

இந்த சலுகையைப் பயன்படுத்தி, கேரளாவைச் சேர்ந்த கொலங்கரா மனூனி முகமது என்பவர் கடந்த 2004-ம் ஆண்டில் துபாயில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்தார்.

இன்றைக்கு அந்த சொகுசு கார் பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் பெயரில் உலா வருகிறது.

உண்மையில் இப்படியொரு காரை இறக்குமதி செய்யும் அளவுக்கு வசதி படைத்தவர் அல்ல இந்த முகமது.

எனவே கார் வாங்குவதற்கான பணத்தை, முகமதுவிடம் துபாயில் வைத்து கொடுத்த நடிகர் சயீப் அலிகான், காரை இந்தியாவில் பெற்றுக் கொண்டிருப்பது அம்பலமாகியுள்ளது. அமலாக்கப்பிரிவு இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.

குடியிருப்பு மாற்ற விதிகள் சலுகையைப் பயன்படுத்தி, சொகுசு காரை சுங்க வரி கட்டாமல் இன்னொரு நபர் மூலம் சயீப் அலிகான் வாங்கி இருப்பது மட்டும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு தண்டனை நிச்சயம் என்கிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக சயீப் அலிகானின் வாக்குமூலம் பதிவு செய்யப்படாமல் இருந்தது.

ஆனால் நேற்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன் ஆஜரானார் சயீப் அலிகான். 3 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு வேண்டிய பல விவரங்கள் கிடைத்துள்ளனவாம்.

 

சைந்தவியை திட்டுவேன்: ஜி.வி.பிரகாஷ் குமார்

Sun Music Star Countdown G V Prakash Kumar

காதலியாக இருந்தாலும் சைந்தவி பாடும் போது தவறு செய்தால் கண்டிப்பாக திட்டுவேன் என்று அவரது காதலரும், இசை அமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

சன் மியூசிக் புத்தம் புது பொலிவுடன் புதிய நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. ஞாயிறு இரவு 7 மணி முதல் 8 மணிவரை ஸ்டார் கவுண்டவுன் நிகழ்ச்சியில் முதல் சிறப்பு விருந்தினராக ஜி.வி பிரகாஷ்குமார் பங்கேற்றார்.

கிரீடம் தொடங்கி தாண்டவம் வரை 25 படங்களுக்கு இசை அமைத்த அனுபவங்கள். சைந்தவியுடனான காதல், பிடித்த இசை அமைப்பாளர் என தன்னுடைய ஆசைகளை பகிர்ந்து கொண்டார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

சைந்தவியை காதலித்தாலும் வேலை என்று வந்தால் தான் இசைஅமைப்பாளராகத்தான் நடந்து கொள்வேன் என்றார் பிரகாஷ். பாடும்போது தவறு செய்தால் கண்டிப்பாக திட்டுவேன் என்றும் அவர் கூறினார். தான் இசை அமைப்பாளராக இருந்தாலும் தனக்கு பிடித்தது ‘வாகை சூடாவா' படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரானின் இசை பிடிக்கும் என்று கூறினார். பின்னர் தனது 25 படமான தாண்டவம் பற்றி பேச்சு எழுந்தது. அந்த படத்தில் இருந்து அழகான ஒரு பாடலை உருகும் குரலில் ஜி.வி. பிரகாஷ் பாடினார்.

விறுவிறுப்பான, சுவையான கேள்விகளுக்கு புன்னகை மாறாமல் பதிலளித்த ஜி.வி.பிரகாஷ்குமார். தனக்குப் பிடித்த உணவு பிரியாணி என்று கூறினார். இதுவரை அனைத்து வகையான பிரியாணியையும் ருசித்திருப்பதாக சொன்னார் பிரகாஷ்

பிடித்த நடிகர் கார்த்தி, விக்ரம், தனுஷ், என்று கூறிய அவர் பிடித்த இயக்குநர் வசந்தபாலன், ஏ.எல்.விஜய், வெற்றிமாறன் என்றும் கூறினார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவர்கள்தான் என்று சரியாக சமாளித்தார். நான் ஹீரோவாக நடித்தால் எனக்கு பாலிவுட் நடிகைகள்தான் ஜோடியாக நடிக்கவேண்டும் என்று எஸ்கேப் பதிலை கூறிவிட்டு விடை பெற்றார் ஜி.வி. பிரகாஷ்குமார்.