மதிமுக, இயக்குநர்கள் ஆர்ப்பாட்டம்... டேம் 999 பிரஸ் மீட் ரத்து... எஸ்கேப் ஆன மலையாள இயக்குநர்!


சென்னை: தமிழர்களின் ஜீவாதாரப் பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும், அதனால் பல லட்சம் தமிழர்கள் மடிவார்கள் என்ற கருத்தை வலியுறுத்தி மலையாள இயக்குநர் எடுத்த 'டேம் 999' என்ற படத்தின் பிரஸ்மீட், மதிமுக மற்றும் திரைப்பட இயக்குநர்களின் போராட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்த போராட்டத்தால் சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

டேம்999 என்ற படம் தமிழருக்கு எதிரான கேரளாவின் விஷமப் பிரச்சாரம் என்றும் இந்தப் படத்தை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்கும் வெளியிடக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடப்பதாக இருந்தது.

இந்த விஷயம் தெரிந்ததும் மதிமுகவினர் பிரசாத் லேபில் குவிந்தனர். நாம் கட்சியினரும் அவர்களுடன் சேர்ந்து தமிழருக்கு எதிரான ஒரு படத்துக்கு சென்னையில் பிரஸ் மீட் வைப்பதா என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

படச்சுருளை உருவினர் போராட்டக்காரர்கள்

மேலும் பிரசாத் லேபில்தான் இந்த டேம் 999 படத்துக்கு பிரிண்ட் போடுகிறார்கள் என்ற தகவல் பரவியதால், அந்த படச்சுருளை கைப்பற்ற லேபுக்குள் புகுந்தனர் ஆர்ப்பாட்டக்காரர்கள். இதில் டேம் 999 படம் என நினைத்து வேறு ஒரு படத்தின் நெகடிவ்வை சில அடிகளுக்கு உருவிவிட்டனர்.

அது ஒரு கன்னடப் படம் என்பது தெரிந்ததும் விட்டுவிட்டனர்.

போராட்டக்காரர்களை அடக்க பெரும் போலீஸ் பட்டாளம் குவிக்கப்பட்டிருந்தது. தடியடிக்கு தயாராக பெரிய லட்டிகளை வைத்துக் கொண்டு நின்றனர் போலீசார்.

இதனால் கொதித்துப் போன இயக்குநர் வ கவுதமன், "தமிழருக்கு எதிராக, தமிழர் நலனுக்கு எதிராக வேண்டுமென்றே படம் எடுக்கிறார்கள். அதை எதிர்க்க வந்த எங்களை கைது செய்வதாக மிரட்டுகிறது நமது போலீஸ். இது என்ன நியாயம்? தமிழ்நாட்டுப் போலீஸ் தமிழருக்கு பாதுகாப்பாக இல்லையே... இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவிக்க இலங்கை அரசுக்கு மாஸ்டர் பிளான் போட்டுக் கொடுத்தது சிவசங்கர மேனன், எம்கே நாராயணன் என்ற இரு மலையாளிகள்தான். இப்போது, இங்கே தமிழ்நாட்டிலும் ஒன்றரை லட்சம் பேரை கொல்ல சினி்மா மூலம் திட்டம் போட்டுக் கொடுக்கிறார் இன்னொரு மலையாளி... இதை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா...

இந்தப் படத்தை தமிழகத்தில் எந்த திரையரங்கிலும் திரையிட விடமாட்டோம். மீறி திரையிட்டால், அந்த திரையரங்கம் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். அனைத்து திரையரங்குகள் முன்பும் தமிழ் சினிமா இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் போராட்டம் நடத்துவார்கள்," என்றார்.

இயக்குநர் ஐந்துகோவிலான் உள்பட சினிமா இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் மதிமுகவினர் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

பாமக ஆர்ப்பாட்டம்

இதைத் தொடர்ந்து பிரஸ் மீட் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அடுத்த சில நிமிடங்களில் பாமகவினர் வந்து டேம் 999 படத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பிரசாத் லேபுக்கு போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மலையாள இயக்குநர் எஸ்கேப்

இந்தப் போராட்டம் குறித்த தகவல் எட்டியதும் படத்தின் இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அடங்கிய குழு, பிரசாத் லேபுக்கு வராமலேயே எஸ்கேப் ஆனது. இதனால் அவர்கள் தங்கியுள்ள விடுதியைத் தேடி புறப்பட்டனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்.
 

பாலிவுட்டில் ஹீரோயினாக உருவெடுக்க வேண்டும் என துடித்தேன், முடியவில்லை-சன்னி லியோன்


இந்திய-கனடிய ஆபாசப் பட நடிகை சன்னி லியோனுக்குள் ஆரம்பத்திலிருந்தே ரபாலிவுட்டில் ஹீரோயினாக புகழ் பெற வேண்டும் என்ற ஆசைதான் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததாம். ஆனால் கை கூடாமல் போய் விட்டதாம்.

தன்னை யாரும் ஆபாசப் பட நடிகை என்று அழைப்பதை அவர் வெறுக்கிறாராம். நடிகை என்று சொன்னால் போதாதா, அது என்ன ஆபாசப் பட நடிகை என்றும் விசனப்படுகிறார் இந்த கவர்ச்சி களேபரம்.

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் புதிதாக சேர்ந்துள்ளார் சன்னி. கவர்ச்சியிலும், ஆபாச நடிப்பிலும் இவருக்கு நிகர் இவர்தான் என்பது கனடா நாட்டில் அனைவருக்கும் தெரியும். கரேன் மல்ஹோத்ரா என்ற இயற்பெயருடைய இவரை சன்னி லியோன் என்றால்தான் யாருக்குமே அடையாளம் தெரியும்.

தன்னைப் பற்றியும், தனது இந்தியத் தொடர்புகள் குறித்தும் சன்னி லியோன் மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், என்னை யாரும் ஆபாசப் பட நடிகை என்று கூறாதீர்கள். அது எனக்குப் பிடிக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் இடம் பெற்றுள்ளதன் மூலம் பாலியல் தொடர்பான திரைப்படங்களுக்கும், விபச்சாரத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை இந்திய மக்கள் புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.

எனக்கு ஆரம்பத்தில் பாலிவுட்டில் பெரிய ஹீரோயினாக வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது. இங்கு வந்து நிறையப் படங்களில் நடிக்க ஆசைப்பட்டேன்.

நான் நர்ஸ் படிப்பில் இருந்தபோதே போர்ன் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் எனக்குள் ஹீரோயினாக ஆக வேண்டும் என்பதே வெறியாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. எனக்கு விதிக்கப்பட்டது இதுதான் என்று இதை ஏற்றுக் கொண்டேன். இதற்காக நான் வருத்தப்படவில்லை. அப்படி நடிக்கப் போய்த்தானே இன்று அடையாளம் கிடைத்து இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். எனவே சன்னி லியோன் என்பதற்கான அடையாளம் குறித்து எனக்கு பெருமைதான்.

எல்லாப் பெண்களையும் போலத்தான் நானும். எனக்கும் கல்யாணம் நடக்கும், நானும் குழந்தைகளைப் பெற்று அவர்களை கொஞ்சி மகிழ்வேன். மற்றவர்களிடம் அன்பாக பழக வேண்டும் என்று எனது பெற்றோர் எனக்கு கூறி வளர்த்துள்ளனர். எனவே என்னால் யாரிடமும் கோப்படத் தெரியாது.

எனக்குக் கொடுக்கப்படும் வேலையை 100 சதவீத திருப்தியுடன் முடித்துக் கொடுப்பேன். இது எனக்குள் ஒழுக்கத்தையும் ஏற்படுத்த உதவுகிறது என்றார் சன்னி.

சரி பாலிவுட்டில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்றால் இந்த ஷோவுக்கு வரும் வரை அப்படி யாரும் எனக்குப் பிடித்தவராக இல்லை. ஆனால் ஷோவுக்கு வரும் முன்பு பாடிகார்ட் படத்தைப் பார்த்தேன். உடனே சல்மான் கானைப் பிடித்து விட்டது. மிக அழகாக, கம்பீரமாக இருக்கிறார். அவரை சந்திப்பேன் என்று நம்புகிறேன். அவருடன் பணியாற்றவும் ஆர்வமாக இருக்கிறேன் என்றார் சன்னி.

சல்மான் பத்திரம்...!
 

பூஜா குமாருடன் ஜோர்டான் போனார் கமல்ஹாஸன்!


விஸ்வரூபம் படத்துக்காக கதாநாயகி பூஜா குமார் மற்றும் படக்குழுவினருடன் ஜோர்டான் நாட்டுக்குப் பயணமானார் கமல்ஹாஸன்.

கமல்ஹாசன் இப்போது, 'விஸ்வரூபம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் கதாநாயகனாக நடிப்பதுடன், படத்தை தாயரித்து இயக்குகிறார்.

இந்த படத்தில், கமல்ஹாசன் ஜோடியாக ஆன்ட்ரியா, பூஜா குமார் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

முதல் கட்ட படப்பிடிப்பு, சென்னையில் நடந்து முடிந்தது. 40 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. அடுத்த கட்ட படப்பிடிப்பு, ஜோர்டான் நாட்டில் நடக்கிறது.

அங்கு ஷூட்டிங் நடத்தப்படும் முதல் படம் என்ற பெருமை கமல்ஹாசனின் விஸ்வரூபம்தான் என்று கூறப்படும். அடுத்த 15 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது.

50 பேர்களுடன்...

கமல்ஹாசனுடன், படப்பிடிப்பு குழுவினர் 50 பேர் ஜோர்டான் நாட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.

சில முக்கிய காட்சிகளும், 2 பாடல் காட்சிகளும் அங்கு படமாக்கப்பட உள்ளன. அடுத்த மாதம் (டிசம்பர்) முதல் வாரத்தில் கமல்ஹாசனும், 'விஸ்வரூபம்' படக்குழுவினரும் சென்னை திரும்புகிறார்கள்.

ஆரம்பத்தில் இந்தப் படம் அமெரிக்கா மற்றும் கனடாவில் படமாகும் என்று கூறப்பட்டது. ஆனால் படக்குழுவினருக்கு கனடா விசா மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.
 

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால்.... சர்ச்சைப் படம் எடுத்த மலையாள இயக்குநர்!


தமிழக மக்களின் உணர்வுப் பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி ஒரு படம் ஆங்கிலத்தில் உருவாகியுள்ளது. டேம்999 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை எடுத்திருப்பவர் ஒரு மலையாளி. இந்தப் படம் தமிழிலும் வெளியாகப் போகிறது. இந்தப் படத்தில் அணை உடைந்தால் என்னவாகும் என்பதை கிராபிக்ஸில் காட்டி மக்களைப் பீதிக்குள்ளாக்கியுள்ளனர்.

சொத்தை விற்று அணை கட்டிய பென்னி குக்

நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது முல்லைப் பெரியாறு அணை. ஆங்கிலேயர்தான் என்றாலும் பென்னிகுக் என்ற மக்கள் நல விரும்பியால் கட்டப்பட்ட இந்த அணை தமிழகத்தின் ஜீவாதாரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த அணை கட்டும் பணியின்போது நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதால் இங்கிலாந்தில் இருந்த தனது சொத்துக்களை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு அணை கட்டினாராம் பென்னி குக்.

நமது நாட்டுக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத பென்னி குக் இப்படி ஒரு மகா சேவையைச் செய்தார். ஆனால் இந்த அணையை இடித்துத் தள்ளி விட்டு, தான் ஒரு அணையை கட்டி தன்னிடம் தமிழகத்தை கெஞ்ச வைக்க வேண்டும் என்ற நோக்கில் கேரள அரசு செயல்பட்டு வருகிறது.

இந்த அணை ஸ்திரத்தன்மை இல்லாதது என்றும், இந்த அணை உடையும் அபாயம் உள்ளதாகவும், கற்பனையாகக் கூறிக் கொண்டு, பல ஆண்டுகளாக பிரச்சினை செய்துவரும் கேரளா, இதை இடித்துவிட்டு புதிய அணை கட்டப்போவதாக கூறி வருகிறது. இதற்காக டேம் உடைவது போல ஒரு கிராபிக்ஸ் சிடியையும் வெளியிட்டு பரபரப்பு செய்தது.

ஆனால் தமிழகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வைகோ போன்ற தலைவர்கள் முழு வீச்சில் இப்பிரச்சினைக்கு குரல் கொடுத்து வருகின்றனர்.

வம்பை வளர்க்கும் ஆங்கிலப் படம்

இந்நிலையில், அணை உடைவது போலவும் அதில் வெளியாகும் வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கி உயிரிழப்பது போலவும் காட்சிகளைக் கொண்ட ஒரு படம் வெளியாக இருக்கிறது.

அதுதான் 'டேம் 999' எனும் ஆங்கிலத் திரைப்படம். இந்தியாவில் வரும் வெள்ளிக்கிழமை இந்தப் படம் வெளியாகிறது. ஆங்கிலம் தவிர, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

'100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையை முன்னெச்சரிக்கையாக இடிக்காவிட்டால் பேரிடர் ஏற்படும்' என்பது போல் இப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கேரளாவைச் சேர்ந்த மாலுமி

கேரளத்தைச் சேர்ந்த கடற்படை மாலுமியாக இருந்து திரைப்பட இயக்குநராக மாறிய சோஹன் ராய் தான் இப்படத்தை இயக்கியுள்ளார்.

'இந்தப் படத்தை பார்த்த பின்னர், முல்லைப் பெரியாறு பழைய அணையை உடைக்க தமிழக அரசே சம்மதம் தெரிவிக்கும்' என்றும் திருவாய் மலர்ந்துள்ளார் சோஹன் ராய்.

தமிழர்கள்தானே சாகப் போகிறார்கள்

இந்த அணை உடைவதால் தமிழர்கள்தான் சாவார்கள் என்றும் கூறுகிறார் சோஹன் ராய்.

ஏற்கனவே இவர் முல்லைப் பெரியாறு அணையை மையமாக வைத்து எடுத்துள்ள 'டாம்ஸ்' டாகுமெண்டரிக்கு ஹாலிவுட்டில் விருது கிடைத்துள்ளது. தற்போது பழங்கால அணை உடைவதை மையமாக வைத்து இவர் படம் எடுத்துள்ளார்.

'டேம் 999' படத்தில் ஊழல்வாதியான மேயர் அரசியல் ஆதாயத்துக்காக வலுவற்ற அணையைக் கட்டுகிறார் (இது சில ஆண்டுகளுக்கு முன் வந்த நோவாஸ் ஆர்க் ஆங்கிலப் படத்தின் மையக் கருத்து). அதனால் ஏற்படும் அணையின் உடைப்பால் ஏராளமான பேர் உயிர் இழப்பதையும், பழைய அணைகள் குறித்து விழிப்புணர்வையும் மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான நேரடித் தாக்குதலா என்ற கேள்விக்கு சோஹன் ராய் அளித்துள்ள பதில் இது:

"நூறு ஆண்டு கால பழமைவாய்ந்த முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆய்வு மேற்கொண்டேன். சீனாவில் 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற பான்கியோ டாம் பேரிடரில் சிக்கி இரண்டரை லட்சம் பேர் உயிர் இழந்தார்கள். அதே அபாயம் முல்லைப் பெரியாறு அணையிலும் உள்ளது.

அரசியல் சிக்கல் காரணமாக இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்தப் படத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் காண்பிக்காவிட்டாலும், கேரள மாநிலம் ஆலப்புழையில் படமாக்கப்பட்ட காட்சிகள் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையைப் பிரதிபலிக்கும்.

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தான். இந்தப் படத்தைப் பார்த்த பின்பு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து புதிய அணையை கட்டுவதற்கு தமிழக அரசே ஒத்துழைக்கும்," என்றார்.

ஆக, முல்லைப் பெரியாறுக்கு எதிரான பரப்புரையை சினிமா மூலமும் தொடங்கியிருக்கிறார்கள் கேரளத்துக்காரர்கள்.
 

'கேரளாவின் திட்டமிட்ட விஷமப் பிரச்சாரம்... டேம் 999 வெளியாகக் கூடாது!' - டாக்டர் ராமதாஸ்


சென்னை: கேரள அரசின் நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்ட 'டேம் 999' என்ற திரைப்படத்தை இந்தியாவில் வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

கேரளத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணியாற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் ஆகியவற்றின் நிதி உதவியுடன் டேம் 999 என்ற பெயரில் ஆங்கில திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் இந்தியாவில் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

முல்லைப் பெரியாற்று அணை உடைந்து பேரழிவு ஏற்படுவது போன்ற காட்சிகள் நிறைந்த இப்படம் வெளியானால் தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களிலும் பொது அமைதி பாதிக்கப்படும்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று பல்வேறு வல்லுநர் குழுக்கள் ஏற்கனவே அறிக்கை அளித்துள்ள நிலையில் எப்படியாவது அந்த அணையை உடைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் 'டேம் 999' திரைப்படத்தை கேரள அரசு நிதி உதவி செய்து தயாரித்திருக்கிறது.

இது கேரளாவின் திட்டமிட்ட விஷமப் பிரச்சாரம். எனவே இந்த திரைப்படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக வலியுறுத்த வேண்டும்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

மனைவி-குழந்தையை அபகரித்துக் கொண்டார் 'உயர்திரு 420' சினேகன்!- எஞ்ஜினீயர் புகார்


சென்னை: தன் மனைவி மற்றும் குழந்தையை அபகரித்துக் கொண்டார் என பிரபல பாடல் ஆசிரியரும், நடிகருமான சினேகன் மீது என்ஜினீயர் ஒருவர் பரபரப்பான புகார் கொடுத்துள்ளார்.

சென்னை மடிப்பாக்கம், சக்தி நகர், எழில் அவென்யூவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 34). என்ஜினீயரான இவர், தனியாக கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் ஜமுனா கலாதேவி (27).

இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரபாகரன் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில், "நான் சொந்தமாக தொழில் செய்கிறேன். எனது மனைவி நடனக் கலைஞர். கீழ்கட்டளையிலும், வேளச்சேரியிலும் நடனம் கற்றுக்கொடுக்கும் பயிற்சி பள்ளியை நடத்தி வந்தார்.

நாங்கள் காதல் பதிவு திருமணம் செய்து கொண்டோம். பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி எங்களது திருமண வாழ்க்கையை அமைத்துக் கொண்டோம். எங்களுக்கு சஞ்சனா ஸ்ரீ என்ற 5 வயது பெண் குழந்தை இருக்கிறாள். யு.கே.ஜி. படிக்கிறாள்.

'உயர்திரு 420' சினேகன்!

பாம்பு புற்றுக்குள் கருநாகம் புகுந்ததுபோல, நடிகரும், பாடல் ஆசிரியருமான சினேகன் எங்கள் குடும்ப நண்பரானது, எங்கள் இல்லற வாழ்க்கையையே இப்போது சீரழித்துவிட்டது. எனது மனைவியின் நடன பயிற்சி பள்ளியை சினேகன் திறந்து வைத்தார். அதுமுதல் எங்கள் குடும்ப நண்பரானார். எனது மனைவியை சினிமாவில் நடன இயக்குனராக உருவாக்குவதாக சினேகன் ஆசைவார்த்தை காட்டினார்.

எனது மனைவி ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். அது நடக்கவில்லை. சினேகன் மூலம் நடன இயக்குனர் வாய்ப்பு வந்ததால், எனது மனைவிக்கு அதில் விருப்பம் ஏற்பட்டது. நானும் அதை எதிர்க்கவில்லை. சினேகன் நடித்த 'உயர்திரு 420' என்ற படத்தில் எனது மனைவியை நடன இயக்குனராக அறிமுகப்படுத்தினார். நாளடைவில் அவர்களுக்கிடையே உள்ள பழக்கம் தவறாக போனது.

கடத்திவிட்டார் சினேகன்...

எனது மனைவியை நான் கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது. நாளடைவில் எனது மனைவி, சினேகன் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டார். கடந்த 2 ஆண்டுகளாக என்னைவிட்டு பிரிந்துவிட்டார். நானும், குழந்தை நலன் கருதி இதுபற்றி புகார் கொடுக்கவில்லை. இப்போது எனது குழந்தையையும், வீட்டில் நான் இல்லாத நேரத்தில் கடத்தி சென்றுவிட்டனர்.

எவ்வளவோ சமாதானப்படுத்தி பேசியும், எனது மனைவி என்னுடன் வாழ மறுக்கிறார். விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த சூழ்நிலையில், எனது மனைவி திரும்பி வந்தாலும் நான் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். எனது மனைவியையும், குழந்தையையும் கடத்திச்சென்று எனது குடும்பத்தை சீரழித்த சினேகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்

புகார் கொடுத்துவிட்டு நிருபர்களிடம் பேசிய பிரபாகரன், "சினேகனிடம் போய்விட்ட என் மனைவி இப்போது ரூ.20 லட்சம் பணம் தரவேண்டும் என்றும், இல்லாவிட்டால் வரதட்சணை கொடுமை புகார் கொடுப்பேன் என்றும் மிரட்டுகிறாள். குழந்தையையும் என்னிடம் தர மறுக்கிறார். என்னையும் தனிப்பட்ட முறையில் மிரட்டுகிறார்கள்" என்றார்.

இவர்களின் தவறான உறவுக்கு ஆதாரம் ஏதும் உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டபோது, `எனது மனைவியும், சினேகனும் ரூ.24 ஆயிரம் பில் வரும் அளவுக்கு செல்போனில் பேசியுள்ளார்கள். அதுதான் ஆதாரம். இருவரும் ஒன்றாக சுற்றுவதை பலரும் பார்த்துள்ளனர். நானே விருகம்பாக்கத்தில் உள்ள சினேகன் வீட்டுக்கு சென்றபோது, அங்கு என் மனைவி, சினேகனுடன் இருப்பதைப் பார்த்தேன். வேறென்ன சொல்ல..." என்றார்.

இந்த புகார் மனு மீது மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை, பிரபாகரனையும், அவரது மனைவியையும் அழைத்து கவுன்சிலிங் மூலம் விசாரணை நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் கூறினார்கள்.

பிரபாகரனின் மனைவி கண்ணீர் பேட்டி

பிரபாகரனின் மனைவி ஜமுனா கலாதேவி மடிப்பாக்கத்தில் அவரது தாயார் வீட்டில் வசிக்கிறார். அவரிடமும், நிருபர்கள் செல்போனில் பேசி கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறுகையில், "எனது குழந்தையை, எனது கணவர்தான் என்னிடம் அனுப்பாமல் சிறை வைத்திருந்தார். அது தொடர்பாக நான் போலீசில் புகார் கொடுத்துள்ளேன். அவரிடம் விவாகரத்து கேட்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். இதிலிருந்து தப்புவதற்காக என் மீதும், சினேகன் மீதும் அபாண்டமான பழி சுமத்தி எனது கணவர் பொய் புகார்," கொடுத்துள்ளார் என்றார்.

அவர் எதற்காக பொய் புகார் கொடுக்கிறார்? எதற்காக விவாகரத்து கேட்டீர்கள்? என்று கேட்டதற்கு 'அது தனிப்பட்ட விஷயம்' என்றார்.
 

யார் மனைவியையும் நான் கடத்தவில்லை... கற்பனையான குற்றச்சாட்டு! - சினேகன்


உயர்திரு 420 ஹீரோவும் பாடலாசிரியருமான சினேகன், மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு எஞ்ஜினீயரின் மனைவியை குழந்தையோடு அபகரித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு கோடம்பாக்கத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளது.

இந்த புகார் குறித்து சினேகனிடம் விசாரித்தபோது, "பிரபாகரனின் விருப்பத்தோடுதான் அவரது மனைவியை நான் நடித்த படத்தில் நடன இயக்குனராக அறிமுகப்படுத்தினேன். ஒருநாள்தான் அவர் படப்பிடிப்புக்கு வந்தார்.

அதற்குள் பிரபாகரன் சந்தேகப்பட்டு சண்டை போட ஆரம்பித்துவிட்டார். இதனால் அவரது மனைவியை படப்பிடிப்புக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டேன்.

அவர்களது குடும்ப பிரச்சினையில், என்னை தேவையில்லாமல் இழுத்துள்ளார். என்மீது அவதூறாக புகார் கொடுத்துள்ளார். அவரது மனைவியை நான் கடத்தவில்லை. அவரது தாயார் வீட்டில் இருக்கிறார். குழந்தையை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

என்மீது கொடுக்கப்பட்டுள்ள பொய் புகாரை சட்டப்படி சந்திப்பேன். கமிஷனரை சந்தித்து நானும் புகார் மனு கொடுப்பேன்," என்றார்.

உங்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்ததாக பிரபாகரன் கூறியுள்ளாரே, என்று கேட்டதற்கு, "அது அவரது கற்பனையாக இருக்கும்" என்றார்.