சிரஞ்சீவியின் ஓய்வு: ட்விட்டரில் அசிங்கமாக திட்டிய ராம் கோபால் வர்மா


ஹைதராபாத்: நடிகர் சிரஞ்சீவியின் ஓய்வு குறி்த்து இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் அசிங்கமாக திட்டியுள்ளார்.

நடிகர் சிரஞ்சீவி சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது ரசிகர்கள் மனதில் இடிபோல் விழுந்துள்ளது. இதில் சிரஞ்சீவியின் தீவிர ரசிகரான இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் இதில் அடக்கம். என்ன... மற்ற ரசிகர்கள் 'என்ன தலைவா இப்படி சொல்லிட்டியே?' என்று வருத்தப்படுகின்றனர். ஆனால் ராம் கோபால் வர்மாவோஅசிங்கமாக தி்ட்டியுள்ளார்.

இது குறித்து ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

நான் ஆந்திர மக்கள் சிரஞ்சீவியின் படத்தை பார்க்க டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பதைத்தான் பார்க்க விரும்புகிறேன். மாறாக அவர் மக்களிடம் (கெட்ட வார்த்தை) ஓட்டு கேட்டு நிற்பதை பார்க்க விரும்பவில்லை.

நான் சிரஞ்சீவியை அசிங்கமான வார்த்தையால் திட்டினேன். ஒப்புக் கொள்கிறேன். ஏனென்றால் நான் ஆந்திர மக்களை விட அவரை அதிகம் நேசிக்கிறேன். ஆந்திர மக்கள் சிரஞ்சீவியை முதல்வராக்காதது அவர்களது துரதிர்ஷ்டம். அத்தகைய மக்கள் ஓட்டுபோடவில்லை என்றால் அது அவரது அதிர்ஷ்டம், என்று கூறியுள்ளார்.

ராம் கோபால் வர்மா அசிங்கமான வார்த்தைகளை டுவிட்டரில் பயன்படுத்துவது இது முதல் முறையன்று. ஏற்கனவே புத்தா படத்தில் அமிதாபின் நடிப்பை பாராட்டவும் அவர் கெட்ட வார்த்தையைத் தான் பயன்படுத்தினார்.

சர்ச்சையின் மறுபெயர் தான் ராம் கோபால் வர்மாவோ!
 

கார்த்தி கல்யாணம்.... களைகட்டும் காசிகவுண்டன் புதூர்!


ஒரு ஊரே திருமணத்துக்கு தயாராகிறது... நண்டு சிண்டு பொண்டு பொடிசு என ஒருவர் பாக்கியில்லாமல் 'நான் கல்யாணத்துக்கு போறேனுங்...' என்று மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த ஊர் காசிகவுண்டன் புதூர். கோவை சூலூருக்குப் பக்கத்தில் உள்ள கிராமம். சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி - ரஞ்சனிக்கு நடக்கும் திருமணம்தான் இந்த கிராமத்தினரின் மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாக மாறியுள்ளது. இங்குள்ள 250 குடும்பங்களும் இதனை தங்கள் வீட்டு திருமணமாகவே நினைத்து, தயாராகி வருகிறார்கள்.

நடிகர் சிவகுமாரின் சொந்த ஊர்தான் இந்த காசிகவுண்டன் புதூர். இங்கு இன்னும் அவரது பழைய வீடு அந்த கிராமத்துக்கே உரிய மணம் மாறாமல் அப்படியே உள்ளது. சிவகுமாரின் சொந்த அக்கா உள்ளிட்ட உறவுக்காரர்கள் அத்தனைபேரும் கிராமத்தில் வசிக்கின்றனர்.

கார்த்தி-ரஞ்சனி திருமணம் வருகிற 3-ந் தேதி கோவையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்த திருமணத்துக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

கார்த்தியின் அண்ணன் சூர்யா-ஜோதிகா திருமணத்தின் போது குறிப்பிட்டவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். உறவினர்கள் அனைவரையும் மகன் திருமணத்திற்கு அழைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் சிவகுமாருக்கு.

அதனை போக்கும் வகையில் கார்த்தி-ரஞ்சனி திருமணத்திற்கு உறவினர்கள் அனைவரையும் அழைத்து விருந்து படைக்க முடிவு செய்து, அத்தனை பேருக்கும் நேரில் போய் அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார்.

ஒவ்வொரு உறவினரிடமும், "இது உங்கள் வீட்டு திருமணம். கண்டிப்பாக திருமணத்துக்கு வந்து மணமக்களை ஆசீர்வதிக்க வேண்டும்" என்று அன்பாக அழைப்பு விடுத்தனர்.

"நீங்கள் சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி, இது எங்கள் வீட்டு திருமணம்தான். கண்டிப்பாக வருவோம் என்று கூறியுள்ளனர். திருமணத்திற்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் அனைத்து ஏற்பாடுகளும் ஜரூராக நடக்கின்றன.

சிவகுமாரின் பாரம்பரிய குல வழக்கப்படி திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முந்தின நாள் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கோவைக்கு வந்து தங்குகிறார்கள். திருமணத்தன்று காலை சிவகுமார் குடும்பத்தினர் காசி கவுண்டன்புதூரில் உள்ள தங்களது சொந்த வீட்டுக்கு செல்கின்றனர்.

அதைத் தொடர்ந்து திருமண சடங்குகள் நடக்கின்றன. பின்னர் கார்த்தி ரஞ்சனிக்கு தாலி கட்டுகிறார்.

திருமணத்தை சொந்த ஊரில் நடத்துவது குறித்து கார்த்தி கூறுகையில், "சென்னையில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றுதான் முதலில் நினைத்தோம். அப்புறம் ஒரு ஊரையே சென்னைக்கு அழைத்து வருவதில் உள்ள சிரமம், டிராபிக் ஜாம் மற்றும் சில இடையூறுகள் என எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தோம்.

நமக்காக ஏன் ஒரு ஊரையே சிரமப்பட வைக்கணும். அதைவிட அந்த ஊரிலேயே நடத்திவிட்டால் என்ன என்று எண்ணிதான் கோவையில் திருமண விழா நடத்த ஏற்பாடுகள் செய்தோம். கல்யாணத்துக்காக ஒரு மாதம் படப்பிடிப்புக்கு லீவு போட்டுள்ளேன். ஒரு மாதம் கழித்து சகுனி ஷுட்டிங் ஆரம்பிக்கும்.

சிறு வயதில் அடிக்கடி குடும்பத்துடன் கோவை சென்று வருவோம். அப்போதெல்லாம் விவசாயம் பிரமாதமாக நடக்கும். இப்போது எல்லாருமே வேலை விஷயமாக ஊரை காலி செய்துவிட்டு வெளியூருக்கு வந்துவிட்டனர். விவசாயமும் அங்கு இல்லாமல் போனது.

இருந்தாலும் கோவையின் குளிரும், பசுமையும் இங்கு அப்படியே உள்ளது. ஒரு ஊருக்கே ஏ.சி. போட்ட மாதிரி அப்படி ஒரு ஜில் க்ளைமேட்... அங்கு உள்ளது," என்றார்.

பிரமாண்ட ஏற்பாடுகள்...

கார்த்தி திருமணம் நடைபெற உள்ள கொடிசியா அரங்கம் வெகு விசேஷமாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது. வேறு உலகத்துக்கே வந்தது போன்ற நினைப்பை பார்ப்பவருக்கு உண்டாக்கும் விதத்தில் அலங்கார வேலைகள் கடந்த 1 வாரமாக நடந்து வருகின்றன.

மணமகன்- மணமகளுக்கு தனித்தனி அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த திருமணத்தில் சைவ சாப்பாடு மட்டுமே பரிமாறப்பட உள்ளது.

இந்த உணவு 2 வகைகளில் பரிமாறப்படுகிறது. வழக்கமான கல்யாண பந்தி மற்றும் பஃபே முறை என இரு விதங்களில் உணவுகள் பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பட்டினி சாத விருந்து...

திருமணத்துக்கு முந்தின நாள் அதாவது சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு பாரம்பரிய முறைப்படி பட்டினி சாத விருந்து நடைபெறுகிறது.

இதில் நடிகர் சிவகுமார் உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள். 3 நாட்கள் நடைபெறும் திருமண விழாவில் முதல் நாள் நடைபெறுவதுதான் இந்த பட்டினி சாத விருந்து. அதாவது மணமக்களுக்கு அளவு குறைவான சத்தான உணவு வழங்கப்படும். மணமக்களுடன் மற்றவர்களும் சாப்பிடலாம். இதில் கொஞ்சம் சாதத்துடன் (சோறு) பழம், பழச்சாறு இடம் பெறும். வயிற்றுக்கு முழுச் சாப்பாடு சாப்பிடக் கூடாது. இது முகூர்த்தம் முடியும் வரை தொடரும்.

ரசிகர்களுக்கும்....

இந்த சிக்கன சாப்பாட்டைத்தான் பட்டினி சாத விருந்து என்கிறார்கள். முன்னதாக காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் பந்தக் கால் நடப்படுகிறது. அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை வரவேற்பு நிகழ்ச்சியும், 9.10 மணிக்கு இணை சீர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ரசிகர் மன்றத்தினருக்கு விருந்து அளிக்கிறார் கார்த்தி. இதற்காக அனைத்து மன்றத்தினருக்கும் தனித்தனியாக அழைப்பு அனுப்பியுள்ளார்.
 

மீண்டும் மணல் கயிறு - எஸ்வி சேகர்


தனது பிரபல 'மணல் கயிறு' படத்தின் இரண்டாம் பாகத்தை, மகன் அஸ்வினை வைத்து எடுக்கப் போவதாக நடிகர் எஸ் வி சேகர் கூறினார்.

விசு எழுதி இயக்கிய சூப்பர் ஹிட் படம் மணல் கயிறு. 1982-ல் வெளியான இந்தப் படம் விசுவின் வசனங்கள் மற்றும் எஸ்வி சேகர், கிஷ்மூ, மனோரமா போன்றவர்களின் நடிப்புக்காக பெரிதும் பேசப்பட்டது. தமிழ் சினிமாவில் விசுவுக்கென்று ஒரு இடத்தை இந்தப் படம் பெற்றுத்தந்தது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கப் போவதாக எஸ்வி சேகர் நீண்ட நாட்களாகக் கூறி வந்தார்.

இப்போது இதுபற்றி அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த ஸ்ருதிக்கும் சேகரின் மகன் அஸ்வினுக்கும் விரைவில் திருமணம் நடக்கிறது. இதையொட்டி சமீபத்தில் ஈரோடு கூடுதுறைக்கு மகன் மற்றும் வருங்கால மருமகளுடன் வந்த அவர் நிருபர்களிடும் கூறுகையில், "அஸ்வின் நடித்துள்ள இரண்டாவது படம், 'நினைவில் நின்றாய்' விரைவில் வெளிவருகிறது. இந்தப் படம் வெற்றி பெறவும், அஸ்வின் - ஸ்ருதி திருமணம் சிறப்பாக நடைபெறவும் பவானி கூடுதுறைக்கு வந்து வழிபட்டேன்.

நினைவில் நின்றாய் திரைப்படம் வித்தியாசமான கதை. கருணைக் கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத் திரைப்படத்தில், ஒரு இடத்தில்கூட தணிக்கைக் குழுவினர் காட்சிகளைத் துண்டிக்கவில்லை.

'மணல் கயிறு' இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது. 1982 ல் இப் படத்தில் நடித்த விசு உள்பட அனைவரும் நடிக்கின்றனர்," என்றார்.

மணல் கயிறு ஒரிஜினல் படத்தில் நடித்த விசுவின் தம்பியும் படத்தின் இணை இயக்குநருமான கிஷ்மூ இப்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

கமலை 'ஏற்பாரா' தீபிகா?


விஸ்வரூபத்தில் சோனாக்ஷி இல்லை என்றாகிவிட்டதால், அவருக்குப் பதில் அதே அந்தஸ்துள்ள நடிகைக்கு வலைவீசி வருகிறார்கள்.

சோனாக்ஷிக்கு பதில் இப்போது 'இயக்குநர் கமல்ஹாஸன்' தேதி கேட்டிருப்பது தீபிகா படுகோனேவிடம் என்று கூறப்படுகிறது.

தீபிகா ஏற்கெனவே இந்தியாவின் காஸ்ட்லி படங்களுள் ஒன்றான ரஜினியின் ராணாவில் ஒப்பந்தமாகியுள்ளார். ரஜினியுடம் உடல் நலம் தேறி மீண்டும் படப்பிடிப்புக்குத் தயாராகி வரும் சூழலில், கமல் பட வாய்ப்பும் வந்திருப்பது தீபிகாவை திகைக்க வைத்துள்ளது.

'கமல் வாய்ப்பை ஏற்றால் கைவசம் உள்ள இந்திப் படங்களை இழக்க வேண்டி வரும். ஆனால் ஒரே நேரத்தில் ரஜினி, கமல் என இரு பெரும் சிகரங்களோடு நடிக்கும் வாய்ப்பையும் இழக்க மனமில்லை, என்ன செய்யலாம்?' என யோசித்து வருகிறாராம் தீபிகா.

ராணா படத்துக்கு முதலில் தேர்வானவர் சோனாக்ஷி. ஆனால் நண்பரின் மகள் என்பதால் ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார் ரஜினி. அதன்பிறகுதான் தீபிகா வந்தார்.

விஸ்வரூபத்தில் முதலில் ஒப்பந்தம் போட்ட சோனாக்ஷி இப்போது விலகிவிட்டதால், இந்த வாய்ப்பும் தீபிகாவுக்கு வந்திருக்கிறது. ஏற்பாரா?
 

நட்சத்திர திருமணங்கள்.... கோலிவுட்டுக்கு அறிவிக்கப்படாத லீவு!


சென்னை: நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் செல்வராகவனின் திருமணம் ஒரே நாளில் ஜூலை 3-ம் தேதி நடக்கிறது.

கார்த்தி - ரஞ்சனி திருமணம் கோவையிலும், செல்வராகவன் - கீதாஞ்சலி திருமணம் சென்னையிலும் நடக்கிறது.

இரண்டு திருமணங்களுமே முக்கியம் என்பதால், எந்த திருமணத்துக்கு யார் யார் போவது என இப்போதே திட்டமிட்டு வருகின்றனர் திரையுலகப் பிரமுகர்கள்.

கார்த்தி - ரஞ்சனியின் திருமணத்துக்கு சீனியர் நடிகர் நடிகைகள் அனைவருமே கிளம்பிச் செல்கிறார்கள். கமல் உள்ளிட்ட நடிகர்கள் கோவை சென்று திருமணத்துக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள் என்று தெரிகிறது.

அதேநேரம், செல்வராகவன் திருமணம் சென்னையிலேயே நடப்பதால், இங்குள்ள நட்சத்திரங்கள் அனைவருமே அதில் கலந்து கொள்கிறார்கள்.

இதனால் ஜூலை 3-ம் தேதி கோடம்பாக்கத்துக்கே அறிவிக்கப்படாத விடுமுறை தினமாக மாறியுள்ளது. அன்றைய தினம் அனைத்துப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதனை ஒரு அறிவிப்பாக வெளியிடவில்லை திரையுலக சங்கங்கள்.

திருமணம்தான் ஒரே நாள்... ஆனால் வரவேற்பு நிகழ்ச்சி வெவ்வேறு தினங்களில் வைக்கப்பட்டுள்ளது.

செல்வராகவனின் திருமண வரவேற்பு ஜூலை 4-ம் தேதி மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் நடக்கிறது. கார்த்தி-ரஞ்சனி திருமண வரவேற்பு ஜூலை 7-ம் தேதி ஹோட்டல் லீ ராயல் மெரிடியனில் நடக்கிறது.
 

பிரபு தேவா - ரம்லத் விவாகரத்து வழக்கு தள்ளி வைப்பு!


நேரில் ஆஜராகாததால் பிரபு தேவா - ரம்லத் விவாகரத்து வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.

நடிகர் பிரபு தேவா, அவரது மனைவி ரமலத் ஆகியோர் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். இவ் வழக்கு இன்று முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இருவரும் நேரில் ஆஜராக முடியாததற்காக காரணம் தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி 10-ந் தேதிக்கு விசாணையை தள்ளி வைத்தார்.

ஜூலை மாத இறுதிக்குள் இந்த வழக்கில் விவாகரத்து வழங்கப்பட்டு விடும் என்று தெரிகிறது. இதற்காக, ரம்லத்துக்கு தருவதாக ஒப்புக் கொண்ட செட்டில்மெண்டை முழுவதுமாக பிரபு தேவா கொடுத்துவிட்டதாகத் தெரிகிறது.
 

இன்று லண்டனில் மைக்கேல் ஜாக்சனுடன் டூயட் பாடும் ஜானட் ஜாக்சன்


நியூயார்க்: ஜானட் ஜாக்சன் தனது மறைந்த சகோதரர் மைக்கேல் ஜாக்சனுடன் சேர்ந்து இன்றிரவு டூயட் பாடவுள்ளார்.

மைக்கேல் ஜாக்சனின் தங்கை பாடகி ஜானட் ஜாக்சன். தனது மறைந்த அண்ணனுடன் சேர்ந்து ஸ்கிரீம் என்ற டூயட் பாடலை பாடவிருக்கிறார் ஜானட். இது கதையல்ல. இறந்தவர் எப்படி வந்து பாடுவார் என்று தானே நினைக்கிறீர்கள்?

வெர்ச்சுவல் ஸ்கிரீன் மூலம் மைக்கேல் ஜாக்சன் திரையில் தோன்றி மக்களை மகிழ்விக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சி இன்று இரவு லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் நடக்கிறது.

இது குறித்து ஜானட் கூறியதாவது,

எனது அண்ணனின் குரலைக் கேட்கும்போதெல்லாம் அவர் என் அருகில் இருப்பது போன்று உள்ளது. அவரின் ஸ்கிரீம் பாட்டைக் கேட்கையில் நான் எனக்குள் சிரித்துக் கொள்வேன், என்றார்.
 

வேங்கை... தனுஷுக்கு சிக்கல் தீர்ந்தது!


வேங்கை படத் தலைப்பை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை விலக்கிக் கொண்ட உயர்நீதிமன்றம், தனுஷ் நடிக்கும் படத்துக்கு அந்தத் தலைப்பை பயன்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளது.

தனுஷ் - தமன்னா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வேங்கை. விஜயா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட போதே, வேங்கை என்ற தலைப்பில் இன்னொரு படம் உருவாவது குறித்த அறிவிப்பும் வெளியானது. ஏக சக்ரா மீடியா எனும் நிறுவனத்தின் கலைச்செல்வன் இந்தத் தலைப்பை ஹரிக்கு முன்பே பதிவு செய்து வைத்திருந்ததாகக் கூறி, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார்.

பின்னர் இந்த விவகாரத்தை பேசி முடித்துவிட்டதாக ஹரி தரப்பில் கூறி, படப்பிடிப்பைத் தொடர்ந்தனர்.

இப்போது வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது வேங்கை. இந்த நிலையில் மீண்டும் இந்த தலைப்புக்கு உரிமைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கலைச்செல்வன். விசாரித்த நீதிபதிகள், ஒரு வார காலம் இந்தத் தலைப்பைப் பயன்படுத்த ஹரி மற்றும் தயாரிப்பாளருக்கு தடை விதித்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய உயர்நீதிமன்றம், வேங்கை தலைப்பைப் பயன்படுத்த விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு எந்தத் தடையும் இல்லை என அறிவித்துவிட்டது.
 

விண்ணைத் தாண்டி வருவாயா -2 எடுக்கும் திட்டமில்லை! - கவுதம் மேனன்


விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை. இதுகுறித்து சும்மா பேசிக் கொண்டிருந்தோம். அது செய்தியாகிவிட்டது, என்று இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு - த்ரிஷா நடிப்பில் வந்த விண்ணைத் தாண்டி வருவாயா படம் பெரும் வெற்றியடைந்தது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை கவுதம் மேனன் எடுப்பார் என்றும் அதில் சிம்பு நடிப்பார் என்றும் கூறப்பட்டது. நாயகியாக எமி ஜாக்ஸன் நடிப்பார் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த செய்திக்கு இப்போது மறுப்பு தெரிவித்துள்ளார் கவுதம் மேனன். தனது பிஆர்ஓ மூலம் அவர் விடுத்துள்ள அறிக்கையில், "விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாமா என நாங்கள் ஆலோசித்து வந்தோம். அது ஒரு ஐடியாதான். முடிவல்ல. ஆனால் அதற்குள் செய்தி வந்துவிட்டது.

நிச்சயம் சிம்புவுடன் இணைந்து ஒரு படம் பண்ணும் திட்டம் உள்ளது. 2012 ஜூனில் இந்தப் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளேன். அவருடன் பணியாற்றுவது சுவாரஸ்யமான அனுபவம். இந்தப்படம் குறித்து இருவரும் பேசிக் கொண்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.
 

தாய்மையால் ஐஸ்வர்யாவின் அழகு மேலும் பல மடங்கு அதிகரிக்கும்-சுஷ்மிதா சென்


மிகவும் அழகான பெண் ஐஸ்வர்யா ராய். இப்போது தாய்மயடைந்திருப்பதால் அவரது அழகு மேலும் பல மடங்கு கூடவே செய்யும். அழகான தாயாக ஐஸ்வர்யா விளங்குவார் என்று கூறியுள்ளார் சுஷ்மிதா சென்.

ஐஸ்வர்யாவும், சுஷ்மிதாவும் சம காலத்து அழகிகள். இருவருமே சர்வதேச அளவில் உலக அழகிப் பட்டங்களை தட்டிச் சென்றவர்கள். 1994ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை முதலில் சுஷ்மிதா வெல்ல, அதே ஆண்டில் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை ஐஸ்வர்யா அள்ள, இந்தியாவுக்கு இரட்டை சந்தோஷமாகியது. அழகிய இந்தியாவுக்கு இருவருமே இரு கண்கள் போன்றவர்கள்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் தாய்மையடைந்திருப்பது குறித்தும், இதன் காரணமாக அவரை ஹீரோயின் படத்திலிருந்து நிறுத்தி வைக்கும் முடிவு குறித்தும் சுஷ்மிதா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுஷ்மிதா கூறுகையில், ஐஸ்வர்யா மிகவும் அழகான பெண். நமது நாட்டுக்கு நிறைய பெருமைகளைத் தேடிக் கொடுத்தவர். நாங்கள் இருவருமே சர்வதேச அளவில் வெற்றி பெற்றவர்கள். ஐஸ்வர்யா ராய் ஒரு அழகான தாயாக விளங்குவார். தாய்மையால் அவரது அழகு மேலும் பல மடங்கு கூடும் என்பதில் சந்தேகமில்லை.

இயற்கையாகவோ அல்லது மன ரீதியாகவோ நீங்கள் தாய்மை உணர்வை உணரும்போது, நீங்கள் புதிய வாழ்க்கை அத்தியாயத்தில் புகும் அனுபவத்தைப் பெறுவீர்கள். எனக்கு அந்த உணர்வு நிச்சயம் உண்டு. இப்போது ஐஸ்வர்யாவும் அந்த தாய்மை உணர்வை அனுபவித்து வருகிறார்.

ஐஸ்வர்யாவுக்காக நான் சந்தோஷப்படுகிறேன், அபிஷேக், அவரது குடும்பத்தினர் அனைவரையும் வாழ்த்துகிறேன். கடவுள் ஐஸ்வர்யாவின் குழ்நதையை ஆசிர்வதிக்கட்டும் என்றார்.

சில தயாரிப்பாளர்கள் ஒரு படத்தில் ஒப்பந்தமாகும் நடிகைகள் அதை முடித்துக் கொடுக்கும் வரை கர்ப்பமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனையை ஒப்பந்தத்தில் சேர்க்கவுள்ளதாக கூறப்படுவது குறித்த கேள்வியைக் கேட்டதும் பொங்கி விட்டார் சுஷ்மிதா.

அப்படி யாராவது என்னிடம் வந்து கூறினால், அந்த தயாரிப்பாளரை முதலில் எழுந்து போங்கள் என்று கூறி விடுவேன். நான் ஒரு தொழில் முறையிலான நடிகை என்பதை நீங்கள் அங்கீகரிக்காவிட்டால் என்னிடம் வரக் கூடாது. நான் ஒரு தொழில்ரீதியான நடிகை என்பதில் நம்பிக்கை வைத்தால் எனது தொழில் பக்தியை சந்தேகப்படக் கூடாது, கேள்வி கேட்கக் கூடாது, நிபந்தனை போடக் கூடாது.

இந்த காலகட்டத்துக்குள் நீங்கள் கர்ப்பம் தரிக்கக் கூடாது என்று யாராவது கூறினால் அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றார் சுஷ்மிதா.

சுஷ்மிதா சென் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.
 

கமல் படம்: சோனாக்ஷியும் விலகினார்!!


கமல் ஹாஸன் நடித்து இயக்கும் விஸ்வரூபம் படத்திலிருந்து அதன் நாயகி சோனாக்ஷி சின்ஹா விலகிவிட்டார். அவருக்குப் பதில் வேறு நாயகியைத் தேட ஆரம்பித்துள்ளனர் படக்குழுவினர்.

இந்தப் படத்தின் ஆரம்பமே பெரும் சிக்கலாக உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்குவதாகக் கூறப்பட்ட படம் இது. அப்போது படத்துக்கு இயக்குநர் செல்வராகவன்.

திடீரென்று கமலுடன் அவருக்கு உரசல் ஏற்பட்டுவிட, படத்திலிருந்தே அவர் விலகிக் கொண்டார்.

இப்போது கமல்ஹாஸனே இயக்குவதாக அறிவித்தார் தயாரிப்பாளர். ஜூன் முதல் வாரம் படப்பிடிப்பு என்றார்கள். ஆனால் இதுவரை படம் துவங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை.

இந்த தாமதத்தைப் பார்த்து வெறுத்துப் போன படத்தின் நாயகி சோனாக்ஷி சின்ஹா, படத்திலிருந்தே விலகிக் கொண்டார். இந்தத் தாமதத்தால் சஞ்சய் லீலா பன்சாலி படத்துக்கு தான் கொடுத்த கால்ஷீட் பாதிக்கும் சூழல் உள்ளதால், இனி படத்தில் தொடர முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்க மிக ஆர்வம் காட்டினார் சோனாக்ஷி. கமல் வயதில் பாதிகூட இல்லையே, அவருடன் எப்படி ஜோடி சேர்வீர்கள் என்று கேட்டபோது, காமிரா முன்னால் நின்றபிறகு நான் அதையெல்லாம் பார்ப்பதில்லை என்றார்.

ஆனால் தொடர்ச்சியான தாமதம் அவரது உற்சாகத்தை வற்றச் செய்துவிட்டது.

இந்தியில் இன்றைய தேதிக்கு பரபரப்பான நடிகை சோனாக்ஷிதான். எப்போது துவங்கும் என்றே தெரியாத படத்தில் மாட்டிக் கொண்டு நல்ல இந்தி வாய்ப்புகளை இழப்பதா என்ற நினைப்பில் அவர் கழன்று கொண்டார்.

இப்போது புதிய நாயகியைத் தேட ஆரம்பித்துள்ளார்களாம்!
 

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு: ப்ரியா ஆனந்த்தின் அக்கறை!


பொதுவாக நடிக்க வந்து கொஞ்ச காலம் சம்பாதித்த பிறகு, சமூக அக்கறை காட்டுவார்கள் நடிகைகள்.

இவர்களில் ப்ரியா ஆனந்த் கொஞ்சம் விதிவிலக்கு. நடிக்க வந்து ஓரிரு ஆண்டுகளுக்குள் அவர் தனது கவனத்தை குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பில் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

வாமனன், புகைப்படம், சமீபத்தில் ரிலீசான '180' ஆகிய தமிழ்ப் படங்களிலும், லீடர் உள்ளிட்ட சில தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார் ப்ரியா.

நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் சமூக சேவையே தனது பிரதான நோக்கம் என்கிறார் ப்ரியா.
"கல்வி கற்கும் வயதில் குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவது பின்னாளில் பள சமூகக் குற்றங்களுக்கு காரணமாகிவிடுகிறது. எனவே குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புதான் நாட்டின் முக்கியமான முன்னேற்றம் என நினைக்கிறேன். இது குறித்து நிறைய படித்திருக்கிறேன். தென்னிந்தியாவில் செயல்பட்டு வந்த சமூக சேவை அமைப்பில் சேர்ந்து செயல்பட்டு வருகிறேன்.

சினிமா, அரசியல், விளையாட்டு ஆகிய துறைகளை சார்ந்தவர்கள் இப்பணிகளில் ஈடுபடும் போது, நிறைய பேருக்கு இது போன்று பணிகளில் ஆர்வம் வரும். குறிப்பாக நடிகைகள் சமூக பணிகளில் ஈடுபட வேண்டும்'' என்கிறார் ப்ரியா.

சமீபத்தில் இவர் நடித்த 180 படத்தின் வெளியீட்டையொட்டி, ரத்ததானம் செய்தனர் படத்தின் இயக்குநர் உள்ளிட்ட குழுவினர். இந்த முகாமில் பங்கேற்று ரத்ததானம் செய்ய முன்வந்தார் ப்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.
 

மும்பை கோக்கைன் போதை விருந்தில் நடிகர் வினோத் கன்னா மகன்: போலீஸ் தகவல்


நவி மும்பை: மும்பை அருகே கோலாபூர் போதைமருந்து களியாட்டத்தில் சிக்கிய சுமார் 300 பேரில் இந்தி நடிகர் வினோத் கன்னாவின் மகன் சாக்ஷி கன்னாவும் ஒருவர் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 27-ம் தேதி மும்பை-புனே நெடுஞ்சாலையில் காலாபூரில் உள்ள மவுண்ட் வியூ ரிசார்ட்டில் போதை மருந்துகள் வினியோகத்துடன் இரவு நேர ஆட்டம், பாட்டம் நடந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று 60 இளம் பெண்கள் உள்பட 300 பேரை சுற்றி வளைத்தனர். அவர்களின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டது.

இவர்களுக்கு போதை மருந்து சப்ளை செய்த நபர்கள், இந்த இரவு நேர விருந்துக்கு ஏற்பாடு செய்தவர்கள், ரிசார்ட்டின் மேனேஜர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களுடன் போதை மருந்து தடுப்புப் பிரிவின் இன்ஸ்பெக்ட்ரான அனில் ஜாதவ் என்பவரும் சிக்கினார்.

இது குறித்து ரைகாட் எஸ்.பி. ஆர்.டி. ஷின்டே கூறியதாவது,

போதை விருந்தில் கலந்து கொண்டவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகள் பரிசோதனை முடிவுகள் வர இன்னும் சில நாட்கள் ஆகும். முடிவுகள் வந்த பிறகு தான் அவர்கள் எந்த வகையான போதைப் பொருட்கள் பயன்படுத்தினார்கள் என்று தெரியும். இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான விக்கி ஷா என்பவரை தேடி வருகிறோம்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேரும் வரும் ஜூலை மாதம் 2-ம் தேதி வரை போலீஸ் காவலில் இருப்பார்கள் என்றார்.

இதற்கிடையே காலாபூர் மவுண்ட் வியூ ரிசார்ட்டில் சிக்கிய 300 பேரில் பிரபல இந்தி நடிகர் வினோத் கன்னாவின் மகன் சாக்ஷி கன்னாவும் ஒருவர் என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த விருந்தில் ஆட்டம் போட்டவர்கள் பெரும்பாலும் மும்பை, நவி மும்பையைச் சேர்ந்தவர்கள். சிலர் இதற்காக பூனேவில் இருந்து வந்துள்ளனர்.

300 பேர் சிக்கிய விவரம் அறிந்த பெற்றோர் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு காலாபூர் வந்தனர். ஒரு பெற்றோர் கூறுகையில், எங்கள் பிள்ளைகள் அப்பாவிகள். அவர்கள் விருந்திற்காகத் தான் இங்கு வந்தனர். அவர்கள் யாரும் போதைப் பொருள் உட்கொள்ளவில்லை என்றார்.

விருந்தில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவர் கூறுகையில், நான் இந்த விருந்தில் கலந்துகொள்ள ரூ. 20 ஆயிரம் தேவைப்பட்டதால் எனது செல்போனை விற்றேன். நான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை. இந்த விருந்து குறி்த்து விளம்பரதாரர்கள் சமூக வளைதளங்களில் விளம்பரம் செய்தனர் என்றார்.

வினோத் கன்னாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி அவரை விட்டுப் பிரிந்து போய் விட்டார். 2வது மனைவி கவிதா. அவருக்கு ஒரு மகன், ஒரு மகள். அந்த மகன்தான் இந்த சாக்ஷி.