தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் தனுஷ் இப்போது பாலிவுட், டோலிவுட், என அனைத்து திரை உலக ஹீரோக்களும் விரும்பும் நடிகராகி வருகிறார். பாலிவுட்டைச் சேர்ந்த ரன்பீர் கபூர் தனது வீட்டிற்கு வருமாறு தனுஷ்சிற்கு அழைப்பு விடுத்துள்ளதுதான் இப்போதைய ஹாட் டாபிக் ஆக உள்ளது.
ஆள் ஒல்லியாக இருந்தாலும் கதாபாத்திரங்களை உள்வாங்கி நடிக்கும் தனுஷ், எந்த மாதிரி கேரக்டர் என்றாலும் அதுவாகவே தன்னை மாற்றிக்கொள்வார். இதனாலேயே இளம் வயதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார்.
இதுவே தனுஷை சிறந்த நடிகர் என்று ஆளாலுக்கு புகழ்ந்து தள்ளும் நிலைமை கோலிவுட்டில் உருவாகியிருக்கிறது. விருது வழங்கும் விழாவில் விஜய் பேசிய போது தன்னைவிட சிறந்த நடிகர் தனுஷ் என்று புகழ்ந்தார். இப்போது பல நடிகர்கள் தனுசுடன் நட்பு பாராட்டி வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ள தனுஷ் அங்கும் தன்னுடைய நடிப்பை நிரூபித்துள்ளார். இப்போதைய கதாநாயகிகள் மட்டுமல்லாது முன்னாள் கனவுக் கன்னிகள் கூட டுவிட்டரில் பாராட்டி எழுதும் அளவிற்கு அங்கு இடம் பிடித்துவிட்டார்.
இந்த நிலையில் தனுஷ் உடன் போனில் பேசிய ரன்பீர் கபூர், அவருடைய ராஞ்சனா படம் பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டாராம். அதோடு நிற்காமல் பந்த்ரா பகுதியில் உள்ள தனது வீடான கிருஷ்ணாராஜ்க்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
தனுஷ் தமிழ்நாட்டு நடிகர் மட்டுமல்ல அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாப்பிள்ளையும் கூட அந்த புகழோடு மட்டுமல்லாது தனக்கென்று தனி இடத்தை போகும் இடமெங்கும் தக்க வைத்துக் கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.