-எஸ் ஷங்கர்
நடிகர்கள்: உதயா, கனிகா திவாரி, நாசர், ஜெகன், மனோபாலா
ஒளிப்பதிவு: ராஜேஷ் கே நாராயணன்
இசை: விஜய் ஆன்டனி - ஸ்ரீகாந்த் தேவா
தயாரிப்பு: ஸ்ரீதர் நாராயணன், சிவ சரவணன்
இயக்கம்: காண்டீபன் கே
இந்த பேய்ப் பட சீஸனில் வந்திருக்கும் இன்னுமொரு படம் ஆவிகுமார். பேய்ப் படம் என்பதற்காக இஷ்டத்துக்கும் ரீல் சுத்தாமல், பார்க்கும்படி எடுத்திருக்கிறார்கள்.
ஆவிகளுடன் பேசும் மீடியமான உதயாவை, ஒரு முறை மலேசிய தொலைக்காட்சி ஒன்றில் போலீஸ் அதிகாரி நாசர் நேர்காணல் நடத்துகிறார். அப்போது ஒரு டாக்டர் கொலையில் கொலையாளி யார் என்ற கேள்விக்கு உதயா சொல்லும் பதிலும் நாசர் சொல்வதும் முரண்படுகிறது. ஆனால் தான் சொன்னதே சரி என்பதில் உறுதியாக இருக்கிறார் உதயா. அதை நிரூபிப்பதாகவும் கூற, ஒரு போலீசை அனுப்பி உதயாவை பின் தொடர வைக்கிறார் நாசர்.
இந்த நேரத்தில் உதயா தங்கியிருக்கும் வீட்டின் மேல்மாடியில் ஒரு அழகான பெண். அவளைப் பார்த்ததுமே அவள் ஆவி என்பதைப் புரிந்து கொள்ளும் உதயா அதை அவளிடம் சொல்ல, அவளோ தான் நிஜப் பெண் என வாதிடுகிறாள். ஒரு நாள் உண்மை அவளுக்கும் புரிகிறது. அப்படியானால் அவள் உடல் எங்கே? இதைக் கண்டுபிடிக்க முயல்கிறார் உதயா. அப்போது ஆவிக்கும் உதயாவுக்கும் காதல் வருகிறது.
ஆவியின் உடலை உதயா கண்டுபிடித்தாரா? காதல் என்ன ஆனது? கொலைகாரனைக் கண்டுபிடித்தாரா? என்பது திரையில் பார்க்க வேண்டியவை.
கதையின் நாயகனாக வந்து கவர்கிறார் உதயா. கதைக்கும் காட்சி அமைப்புக்கும் என்ன தேவையோ அந்த அளவு அடக்கமாக நடித்திருக்கிறார். காதலியின் ஆவியையும் உடலையும் சேர்த்து வைக்க அவர் போராடும் காட்சிகளில் கதைக்குள்ளே முழுமையாக போய்விடுகிறோம்.
கனிகா திவாரிதான் பேய். ஆனால் அழகான பேய். நல்ல நடிப்பையும் தந்திருக்கிறார்.
நாசர் பாத்திரம் குறிப்பிட்டுச் சொல்லும்படி உள்ளது. படத்துக்கு பெரிய திருஷ்டி ஜெகன். அரைவேக்காட்டுத்தனமாக உள்ளன ஜோக் என்ற பெயரில் அவர் அடிக்கும் கமெண்டுகள்.
முனீஸ்காந்த் - தேவதர்ஷினி, மனோபாலா காமெடி ரசிக்க வைக்கிறது.
ராஜேஷ் கே நாராயணன் ஒளிப்பதிவு மலேசியாவை சுற்றிப் பார்த்த உணர்வைத் தருகிறது. பிரமாதம். ஆனால் இசை, பாடல்களை அப்படிச் சொல்ல முடியவில்லை.
எடுத்துக் கொண்ட கதை மற்றும் களம் புதிது மட்டுமல்ல, ரசிக்கும்படியாகவும் இருப்பதுதான் ஆவிகுமாரின் ப்ளஸ். ஆனால் காமெடியிலும், சில பாத்திரங்களைக் கையாள்வதிலும் தனி கவனம் செலுத்தியிருந்தால் இந்தப் படம் வேறு ரேஞ்சுக்குப் போயிருக்கும். ஆனால் ஆவிகுமாரை ரசிக்க இந்த மைனஸ்கள் பெரிய தடையல்ல!