இன்று முதல் அஜீத்தின் வீரம் ட்ரைலர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: அஜீத் நடித்துள்ள வீரம் படத்தின் முன்னோட்டக் காட்சி இன்று வெளியாகிறது. இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஆரம்பம் படத்துக்குப் பிறகு, அஜீத் நடித்துள்ள படம் வீரம். இது கிராமத்துக் கதை. அதே நரைத்த தலை, ஆனால் வேட்டி சட்டையில் தோன்றுகிறார் அஜீத்.

அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இந்தப் படத்தில் இன்னொரு இணையாக விதார்த் - மனோசித்ரா நடித்துள்ளனர்.

சந்தானம் இந்தப் படத்தில் பிரதான வேடத்தில் தோன்றுகிறார்.

இன்று முதல் அஜீத்தின் வீரம் ட்ரைலர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கார்த்தி - தமன்னாவை வைத்து சிறுத்தை படத்தை இயக்கிய சிவா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

விஜயா கம்பைன்ஸ் நிறவனம் தயாரிப்பில், விறுவிறுப்பாக நடந்து முடிந்துவிட்டது இதன் படப்பிடிப்பு.

படத்தின் ட்ரைலரை இன்று வெளியிடுகின்றனர். இதற்காக தனியாக விழா எதுவும் நடத்தப்படவில்லை. யு ட்யூப் இணையதளத்தில் வெளியிடுகின்றனர்.

சென்னையில் உள்ள அரங்குகளில் இன்றும், வெளியூர்களில் நாளையும் இந்த ட்ரைலர் திரையிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எட்டு நாட்கள் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா - டிச 12-ம் தேதி தொடங்குகிறது!

சென்னை: சென்னையில் சர்வதேச திரைப்பட விழா 8 நாட்கள் நடக்கிறது. இதில், 25 தமிழ்ப் படங்கள் உள்பட 150 படங்கள் திரையிடப்படுகின்றன.

தமிழ் சினிமாவில் உள்ள பிரபல இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை உறுப்பினர்களாகக்கொண்ட ‘இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேசன்' அமைப்பு கடந்த 2003-ம் ஆண்டு முதல் சென்னையில் சர்வதேச பட விழாக்களை நடத்தி வருகிறது.

எட்டு நாட்கள் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா - டிச 12-ம் தேதி தொடங்குகிறது!

‘இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேசன்' நடத்தும் 11-வது சர்வதேச திரைப்படவிழா சென்னையில் அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.

விழாவில், சிறந்த தமிழ் படங்களுக்கான விருதுகளும், சிறப்பு நடுவர் விருதுகளும் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு நடைபெறும் சர்வதேச படவிழாவில் 55 நாடுகளைச் சேர்ந்த 150 படங்கள் திரையிடப்படுகின்றன. தமிழ் படங்களுக்கிடையே போட்டி நடத்தி, தரம் வாய்ந்த படங்களுக்கு விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

2012-ம் ஆண்டு அக்டோபர் 16-ந் தேதி தொடங்கி 2013-ம் ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி வரை தயாரிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்கள் இந்த போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷபனா ஆஸ்மி

இந்த சர்வதேச படவிழாவின் நிறைவு விழா டிசம்பர் 19-ந் தேதி நடைபெற இருக்கிறது. அதில், பிரபல இந்தி நடிகை ஷபனா ஆஸ்மி கலந்துகொள்கிறார். தமிழக அரசு உதவியுடன் இந்த சர்வதேச படவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் கணிசமான தொகையை இதற்காக தமிழக அரசு வழங்கி வருகிறது.

 

கமல்ஹாஸன்... ஒரு மகத்தான கலைஞனை வாழ்த்துவோம்!

கமல்ஹாஸன்...

இந்தியத் திரையுலகின் ஒரு பெரிய அத்தியாயம் அவர். ஐந்து வயதில் தொடங்கிய அவரது திரைப் பயணத்துக்கு இன்று வயது 54. அவருக்கு வயது 59!

சினிமாவுக்கு வந்த ஆரம்ப கட்டத்தில் ஒரு நடிகராக மட்டும் அவர் இருக்கவில்லை. உதவி நடன இயக்குநராக, உதவி ஒளிப்பதிவாளராக, உதவி இயக்குநராக.. என அத்தனை துறையிலும் தலையிட்டு வேலை பார்த்திருக்கிறார்.

அப்போதெல்லாம் அவரை ஆர்வக் கோளாறு என்று கமெண்ட் அடித்தவர்கள் உண்டு. ஆனால் அதுவல்ல உண்மை. அவரது அதீத ஆர்வமே, அவரை அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய வைத்தது. அதுவே அவரை பின்னாளில் சிறந்த இயக்குநராக, சினிமாவின் அனைத்து நுட்பங்களையும் புரிந்த கலைஞராக மாற்றியது.

ஒரு முறை இயக்குநர் பாலச்சந்தர், 'கமல் எல்லா விஷயத்தையும் ஒற்றை ஆளாகச் செய்ய நினைக்கிறார். ஆனால் அது அவருக்கு நல்லதல்ல. ஒரு ஸ்பீட் பிரேக் வேணும்பா' என கமலை வைத்துக் கொண்டே மேடையில் சொன்னார்.

அதற்கு கமல் சொன்ன பதில், 'என்னால் இன்னும் எத்தனை ஆண்டுகள் சினிமாவில் பணியாற்ற முடியும் என யோசித்தால், வருகிற பயம்தான் என்னை வேகப்படுத்துகிறது. இருக்கிற இந்த கொஞ்ச நாளைக்குள் என்னால் முடிந்த அத்தனையையும் செய்துவிட வேண்டும் எனத் துடிக்கிறேன்,' என்றார்.

எத்தனை பொருள் பொதிந்த பதில்... ஒரு உண்மையான கலைஞனுக்கே உரிய துடிப்பு இது.

கமல் தன்னைத்தானே நொந்து கொள்வது இந்த ஒரு விஷயத்துக்காகத்தான் என்பது அவரது பல மேடைகளைப் பார்த்தவர்களுக்குப் புரியும்.

கமல்ஹாஸன்... ஒரு மகத்தான கலைஞனை வாழ்த்துவோம்!

"முன்பெல்லாம் சினிமா வியாபாரம் சின்னதாக இருந்தது.. நிறைய படங்கள் பண்ணோம். இப்போது வியாபாரம் பெரிசாகி விட்டது. எங்கள் வயசும்தான். ஆனால் படங்கள் குறைந்துவிட்டன... அதை நினைத்தால் கவலையாகத்தான் உள்ளது," என்பார் அடிக்கடி.

அந்தக் கவலை இல்லாமல், இனி வரும் ஆண்டுகளில் உன்னதமான படைப்புகளைத் தர இந்த மாபெரும் கலைஞனுக்கு இயற்கை துணையிருக்க வாழ்த்துவோம்!

 

மீண்டும் ஆர்யா - சந்தானம் - ராஜேஷ்... இமேஜை நிமிர்த்த ஒரு அவசர கூட்டணி!!

இயக்குநர் ராஜேஷ், நடிகர் ஆர்யா மற்றும் காமெடியன் சந்தானம் மூவரும் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தை ஆர்யாவே தனது தி நெக்ஸ்ட் பிக் நிறுவனம் மூலம் தயாரிக்கிறாராம்.

இயக்குநர் ராஜேஷ் மற்றும் அவரது நிரந்தர காமெடியன் சந்தானம் ஆகிய இருவருக்கும் இப்போது பெரிய ஹிட் அவசியம் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது சமீபத்தில் வெளிவந்த அழகுராஜா.

மீண்டும் ஆர்யா - சந்தானம் - ராஜேஷ்... இமேஜை நிமிர்த்த ஒரு அவசர கூட்டணி!!

யாரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு எதிர்மறைக் கருத்துகள், விமர்சனங்கள் அந்தப் படத்துக்கு எதிராகக் குவிகின்றன. சந்தானத்துக்கும் ஏகப்பட்ட எதிர்ப்புகள், அவரது சமீபத்திய சில வசனங்களால்.

இந்த சூழலில், சட்டென தனது நண்பர்களுக்கு கைகொடுக்க வந்துள்ளார் ஆர்யா. ராஜேஷ் இயக்கிய முதல் மூன்று படங்களிலும் நடித்தவர் ஆர்யா. சிவா மனசுல சக்தி மற்றும ஓகே ஓகே போன்றவற்றில் முக்கிய வேடத்திலும், பாஸ் என்கிற பாஸ்கரனில் ஹீரோவாகவும் நடித்திருந்தார் ஆர்யா. மூன்றுமே சூப்பர் ஹிட் படங்கள்.

இப்போது ஆர்யா - சந்தானம் நடிக்கும் புதிய படத்தை சூட்டோடு சூடாக உருவாக்குகிறார் ராஜேஷ்.

ஆர்யா இப்போது மகிழ் திருமேனியின் படம் மற்றும் எஸ்பி ஜனநாதனின் புறம்போக்கு போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் ராஜேஷுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவருக்கும் கால்ஷீட்டுகள் தந்துள்ளார்.

அநேகமாக டிசம்பரில் இந்த புதிய படம் தொடங்கிவிடும் என்கிறார்கள்.