த்ரிஷா - விஷால் படம் 'சமரன்'!


விஷால் ஜோடியாக த்ரிஷா நடிக்கும் புதிய படத்துக்கு சமரன் என்று தலைப்பிட்டுள்ளனர்.

சமர் என்றால் போர் என்று அர்த்தம். சமரன் என்றால் போராளி! தலைப்பே சொல்கிறது, இந்தப் படம் அதிரடி அடிதடிப் படம் என்பதை!

திரு இயக்கும் இந்தப் படத்தை பாலாஜி ரியல் மீடியா தயாரிக்கிறது. தீராத விளையாட்டுப் பிள்ளைக்குப் பிறகு விஷாலை வைத்து திரு இயக்கும் இரண்டாவது படம் இது.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பாலிவுட்டிலிருந்து புதிய வில்லனை அறிமுகப்படுத்துகிறார்கள்.

ஊட்டி, சாலக்குடி என இங்கு சில அழகிய இடங்களில் முதல்கட்டப் படப்பிடிப்பை நடத்தும் திரு, தென் அமெரிக்காவிலும் பாங்காக்கிலும் முக்கிய காட்சிகளை எடுக்கிறார்.
 

பாட்மிண்டனில் கலக்கிய ஷாலினி!


நடிகர்களில் அஜீத் எப்படி வித்தியாசமான மனிதராக திகழ்கிறாரோ, அப்படித்தான் அவர் மனைவி ஷாலினியும்.

விளையாட்டில் கவனம் செலுத்தும் ஷாலினி, பாட்மிண்டன் போட்டியில் மாநில அளவில் வெற்றியைப் பெற்றுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று நடந்த கலப்பு இரட்டையர் போட்டியில் ஷாலினி - பிரகாஷ் ஜோடி வெற்றி பெற்றது. இவர்கள் இருவரும் சூர்ய பிரகாஷ் - ரேஷ்மா ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்தப் போட்டியில் கடந்த இரண்டு வருடங்களாக ஷாலினி கலந்துகொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்மிண்டன் தவிர, நீச்சலிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஷாலினி என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஹஸாரேவுக்காக முதல்வர் மகாத்மா படம் சிறப்புக் காட்சி!


அ பாலகிருஷ்ணன் இயக்கியுள்ள முதல்வர் மகாத்மா படத்தை, அன்னா ஹஸாரேவுக்காக புனே நகரில் திரையிட்டுக் காட்டுகிறார்கள்.

மகாத்மா காந்தி இருந்திருந்தால், இன்றைய அரசியல் சூழ்நிலை எப்படியிருக்கும் மற்றும் ஊழல் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வார் என்ற கதையம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ள படம் முதல்வர் மகாத்மா.

காமராஜர் படத்தை இயக்கிய அ பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இதில் காந்தி வேடத்தில் கனகராஜ் நடிக்க இன்னொரு முக்கிய வேடத்தில் அனுபம்கெர் நடித்துள்ளார்.

இந்தியிலும் இப்படம் உருவாகி உள்ளது. காந்தி படம் பற்றி கேள்விப்பட்ட அன்னா ஹசாரே, இயக்குனர் பாலகிருஷ்ணனை அழைத்து பேசினாராம். தனது போராட்டத்தை பிரதிபலிப்பது போல் கதை அமைந்துள்ளதால் அந்த படத்தை திரையில் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார் ஹஸாரே.

இதையடுத்து புனே நகரில் பிரத்யேகமாக இப்படத்தை திரையிட்டு காட்ட ஏற்பாடு நடக்கிறது.
 

தர்ஷனுடன் தொடர்பா? - நிகிதா விளக்கம்


கன்னட நடிகர் தர்ஷனுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளதாக என்னைப் பற்றி வரும் வதந்திகள் என்னை கவலையடை வைக்கின்றன என்றார் நடிகை நிகிதா.

கன்னட நடிகர் தர்ஷன், தன் மனைவி விஜயலட்சுமியை அடித்து உதைத்து காயப்படுத்தியதாகவும் கத்தியால் குத்த முயன்றதாகவும் கூறி கைது செய்யப்பட்டார்.

நடிகை நிகிதாவுக்கும் தர்ஷனுக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும் இதனால்தான் அவர் தன்னை கொல்ல முயன்றார் என்றும் விஜயலட்சுமி பரபரப்பான புகார் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து தனது விளக்கத்தை அளித்துள்ளார் நடிகை நிகிதா.

அவர் கூறுகையில், "தர்ஷனுடன் நட்பாகத்தான் பழகினேன். எங்களுக்குள் வேறு மாதிரி தொடர்பு இல்லை.

நான் ஏற்கெனவே மனம் நொந்து போய் இருக்கிறேன். எனது தந்தை சமீபத்தில்தான் மரணம் அடைந்தார். குடும்ப ரீதியாக, தொழில்ரீதியாக நிறைய பிரச்சினைகளிலும் சிக்கியுள்ளேன். இந்த நிலையில் இதுபோன்ற அவதூறுகள் என்னை கவலை அடைய செய்கின்றன," என்றார்.

புகார் வாபஸ்

இதற்கிடையே தர்ஷன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் மீது அளித்த புகாரை மனைவி விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ளார்.
 

ஜெயம் ரவி பிறந்தநாள்... ரசிகர்கள், நடிகர்கள் வாழ்த்து!


நடிகர் ஜெயம் ரவி இன்று தனது பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினார். அவருக்கு சக, நடிக நடிகைகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

இளம் நடிகர்களில் எந்த போட்டியிலும் இல்லாத, தனக்கென தனி பாணியை வைத்துள்ள நடிகர் ஜெயம் ரவி. தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து வருபவர்.

இப்போது அமீரின் ஆதி பகவன் படத்தில் நடித்துவரும் அவர், அடுத்ததாக எஸ்பி ஜனநாதன் இயக்கும் படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடிக்கிறார்.

இன்று தனது பிறந்த நாளை குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் கொண்டாடினார் ஜெயம் ரவி.

அவருக்கு நடிகர் நடிகைகள் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இதுகுறித்து ஜெயம் ரவி கூறுகையில், "பிறந்த நாளின் போது அனைவரது வாழ்த்துக்களையும் கேட்பது சந்தோஷமாக உள்ளது. நிறைய சாதிக்க வேண்டும் என்ற வேகத்தை ஏற்படுத்துகிறது. ரசிகர்கள் நிறைய பேர் எனக்கு இன்று வாழ்த்து சொன்னார்கள். அவர்கள் அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வது? நல்ல படத்தைத் தருவேன். இதுதான் நான் செலுத்தும் நன்றி," என்றார்.
 

கலாநிதி மாறனுக்கு எதிராக வாக்குமூலம் தரச்சொல்லி அடித்து உதைத்த போலீஸ்! - சக்ஸேனா, அய்யப்பன் கதறல்


சென்னை: சன் நெட்வொர்க் அதிபர் கலாநிதி மாறனுக்கு எதிராக வாக்கு மூலம் தரச்சொல்லி தங்களை அடித்து உதைத்து கொடும் சித்திரவதை செய்தனர் சிபிசிஐடி போலீசார் என சன் பிக்சர்ஸ் சக்ஸேனா மற்றும் அவரது உதவியாளர் அய்யப்பன் நீதிமன்றத்தில் கதறி அழுதனர்.

சன் பிக்சர்ஸ் சக்ஸேனா மற்றும் அய்யப்பன் ஆகியோரை பல்வேறு வழக்குகளில் போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்து அவர்கள் வெளியில் வருவதற்குள் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், தம்பிக்கோட்டை படம் தொடர்பாக சக்ஸேனாவும் அய்யப்பனும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர் சிபிசிஐடி போலீசார். பின்னர் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருவரையும் அழைத்துவந்தனர் போலீசார்.

அப்போது வேனிலிருந்து இறங்கிய அய்யப்பன் மிகவும் தளர்ந்த நிலையில், நடக்க முடியாத அளவுக்கு தள்ளாடினார். சக்ஸேனாவும் மிகவும் தளர்ந்து காணப்பட்டார்.

அங்கிருந்த நிருபர்களைப் பார்த்ததும் கதறி அழ ஆரம்பித்தனர் சக்ஸேனாவும் அய்யப்பனும். தங்களை போலீசார் கடுமையாக அடித்து உதைத்ததாக கதறினர்.

அய்யப்பன் உடலில் ஏராளமான காயங்கள் காணப்பட்டன. சில இடங்களில் சதை பிய்ந்து, சீழ் வைத்திருந்தது. வலியில் கதறிய அய்யப்பன், கலாநிதி மாறனுக்கு எதிராக வாக்கு மூலம் தரச்சொல்லி போலீசார் அடித்து உதைக்கின்றனர் என்றும், இதனை நீதிமன்றத்தில் தெரிவித்தால் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியதாகவும் கூறினார்.

பின்னர் நீதிபதி முன் விசாரணைக்கு நிறுத்தப்பட்டபோது, அய்யப்பன் தன் வேட்டியை அவிழ்த்து, போலீசார் அடித்த காயத்தைக் காட்டினார். இடுப்புப் பகுதியில் கடுமையான காயம் இருந்ததைப் பார்த்த நீதிபதி அதுகுறித்த காரணத்தைக் கேட்டார்.

அப்போது விசாரணையின்போது டிஐஜி ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் தன்னையும் சக்ஸேனாவையும் ரத்தகாயம் ஏற்படும் அளவுக்கு தாக்கியதாகக் கூறினார்.

வரும் செப்டம்பர் 23-ம் தேதி வரை இருவருக்கும் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பதை நீதிபதி அறிவித்தபோது, அய்யப்பன் மயங்கி விழுந்தார். பின்னர் சக்சேனா மற்றும் அய்யப்பனை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

போலீசார் மீது அய்யப்பன் கூறிய புகாரை தனி மனுவாக எழுதி வாங்கிக் கொண்டார் நீதிபதி.

சக்சேனா, அய்யப்பன் இருவரையும் போலீசார் இந்த அளவு கடுமையாக தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை நீதிமன்ற வளாகத்தில் ஏற்படுத்தியது.
 

நடிகர் சங்கக் கூட்டம்: வருவாரா சூப்பர் ஸ்டார்?


நடிகர் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்களாக இருந்தாலும் இன்றைய முன்னணி நடிகர்கள் பெரும்பாலும் 'அந்த அரசியலில்' ஆர்வம் காட்டுவதில்லை.

குறிப்பாக ரஜினி, கமல் போன்றோர் பெரிய அளவில் ஈடுபாடு காட்டாமல் ஒதுங்கி இருந்தனர். ஆனால் ரஜினி மட்டும் சில ஆண்டுகளாக நடிகர் சங்கத்தின் கூட்டங்கள், விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்று வந்தார்.

நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரதம், போராட்டம், கண்டனக் கூட்டம், நிதி திரட்டும் நிகழ்ச்சி, கலை விழா அனைத்திலும் ரஜினி தவறாமல் கலந்து கொண்டார்.

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய், அவர் குணமாகி வந்த பிறகு நடிகர் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் நாளை நடக்கிறது. அதேபோல தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படுவதால் முதல் தடவையாக சங்க வளாகத்துக்கு வெளியே காமராஜர் அரங்கில் இப்பொதுக்குழு கூடுகிறது.

இந்த கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு ரஜினிக்கு அழைப்பு அனுப்பியுள்ளனர் நிர்வாகிகள்.

இப்பொதுக்குழுவில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. பெப்சி தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே சம்பள பிரச்சினையில் மோதல் போக்கு உருவாகி உள்ளது. இதனால் புதுப்படங்களுக்கு பூஜை போட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை நடிகர், நடிகைகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. புதுப்படங்களில் நடிக்க முடியாமல் பலர் வீட்டில் இருக்கின்றனர். இப்பிரச்சினை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது.

எனவே ரஜினி, கமல் ஆகிய இருபெரும் கலைஞர்களும் நிச்சயம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

தற்போது ஓய்வெடுத்து வரும் ரஜினி, கடந்த 5 மாதங்களாக எந்த வெளி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இப்போது நடிகர் சங்கக் கூட்டத்துக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

நாளை தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம்... பரபரப்பில் திரையுலகம்!


சென்னை: சினிமா தொழிலாளர்கள் சம்பள பிரச்சினை, பெப்சி - பிலிம் சேம்பர் மோதல், தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கான போட்டி என பல்வேறு சிக்கல்கள் சூழ்ந்துள்ள இந்த நேரத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூடுகிறது.

கடந்த வாரம் நடப்பதாக இருந்த இந்தக் கூட்டம், தள்ளி வைக்கப்பட்டு, நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் கே.முரளிதரன் ஆகிய இருவரும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், "கடந்த 4-ந் தேதி நடப்பதாக அறிவித்திருந்த பொதுக்குழு கூட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.

ஆனால் நேற்று கூடிய தயாரிப்பாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட தயாரிப்பாளர்களின் வேண்டுகோளை ஏற்று, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10-30 மணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில், தயாரிப்பாளர்களின் சிறப்புக்கூட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

அந்த கூட்டத்தில், வருகிற அக்டோபர் மாதம் 9-ந் தேதி நடப்பதாக முடிவெடுக்கப்பட்ட சங்க தேர்தலை நடத்துவதற்கு, தேர்தல் அதிகாரியை நியமிப்பது பற்றியும், மற்றும் பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளன.

முக்கியமாக சிறப்பு கூட்டத்துக்கு வருகிற நிரந்தர உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் அடையாள அட்டையுடன் வருமாறு கேட்டுக்கொள்கிறோம்,'' என்று கூறியுள்ளனர்.
 

தனியே தன்னந்தனியே... டாப்ஸி!


பொதுவாக நடிகைகள் படப்பிடிப்புக்கு தனியாக வருவது அரிதான விஷயம். காரணம், தனிப்பட்ட பாதுகாப்பு மட்டுமல்ல, 'திடீர் டிஸ்கஷன்' தொல்லை, ரசிகர்களின் அன்புத் தொல்லை... என ஏக சிக்கல்கள்.

ஆனால் மிகச் சில நடிகைகள் எதற்கும் கலங்காமல், தன்னந்தனியாக படப்பிடிப்புக்கு வருகிறார்கள். எல்லா பிரச்சினைகளையும் சமாளிக்கவும் செய்கிறார்கள்.

லேட்டஸ்டாக இந்தப் பட்டியலில் சேர்ந்திருப்பவர் டாப்ஸி.

படப்பிடிப்பு நடக்கும் இடம் உள்ளூராக இருந்தாலும் சரி, வெளியூராக இருந்தாலும் சரி, தனியாகத்தான் வருகிறாராம் இந்த ஆடுகளம் நாயகி.

இதனால் செலவும் கணிசமாகக் குறைகிறதாம் தயாரிப்பாளருக்கு.

தயாரிப்பாளர், இயக்குநர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க இந்த டெக்னிக்கை கடைப்பிடிக்கிறாரா அல்லது சுபாவமே இதுதானா என்பது போகப் போகத்தான் தெரியும்!
 

பால்கே விருது பெற்றார் பாலச்சந்தர்... தனுஷ், சரண்யா, சீனு ராமசாமிக்கு தேசிய விருது!


டெல்லி: திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த தாதா சாகேப் பால்கே விருதினை இயக்குநர் கே பாலச்சந்தருக்கு வழங்கினார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.

சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷ்சும், சிறந்த நடிகைக்கான விருதை நடிகை சரண்யாவும் பெற்றனர்.

58-வது தேசிய விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நடந்தது.

குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார். தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி முன்னிலை வகித்தார்.

முதல் முறையாக இந்த ஆண்டுதான் தமிழ் மற்றும் மலையாள படங்கள் அதிக அளவில் விருதுகளை அள்ளின.

பாலச்சந்தருக்கு பால்கே விருது

திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே விருது' தமிழ்ப்பட உலகில் இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்படும் கே.பாலச்சந்தருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு பிரதீபா பட்டீல் விருதை வழங்கினார்.

சினிமா வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட மூத்த சினிமா கலைஞருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. தங்கத் தாமரையும், ரூ.10 லட்சம் ரொக்கமும், விருதும், சால்வையும் அடங்கியது இந்த பரிசு.

சிறந்த நடிகர் தனுஷ்

இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது 2 பேருக்கு வழங்கப்பட்டது.

'ஆடுகளம்' தமிழ் படத்தில் நடித்த தனுஷ், 'ஆதாமிண்டே மகன் அபு' என்ற மலையாள படத்தில் நடித்த சலீம் குமார் ஆகியோர் இந்த விருதுகளை பெற்றனர்.

சிறந்த நடிகைக்கான விருது 'தென் மேற்கு பருவ காற்று' தமிழ் படத்தில் நடித்த சரண்யாவுக்கும், 'பாபு பாண்ட் பாஜா' என்ற மராத்தி படத்தில் நடித்த மிட்டாலே ஜக்தாப் வரத்கர் என்ற நடிகைக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது.

கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றார். 'தென் மேற்கு பருவ காற்று' சினிமாவில், 'கள்ளிக்காட்டு தாயே' என்று அவர் எழுதிய பாட்டுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

'தென் மேற்கு பருவக்காற்று' படத்தை இயக்கிய சீனு ராமசாமி சிறந்த தமிழ் பட தயாரிப்பாளருக்கான விருதையும், 'மைனா' படத்தில் நடித்த இயக்குனரும், நடிகருமான தம்பி ராமையா சிறந்த துணை நடிகருக்கான விருதையும், நடிகை சுகுமாரி சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றனர்.

ஆடுகளம் படத்துக்கு 6 விருதுகள்

'ஆடுகளம்' தமிழ்ப்படம் மொத்தம் 6 விருதுகளை அள்ளியது. சிறந்த நடிகர் தனுஷ் தவிர, சிறந்த இயக்குனர் (டைரக்டர் வெற்றி மாறன்), சிறந்த திரைக்கதை (டைரக்டர் வெற்றி மாறன்), சிறந்த நடன இயக்குனர் (வி.தினேஷ்குமார்), சிறந்த படத்தொகுப்பு (டி.இ.கிஷோர்), சிறப்பு பரிசு (இலங்கை நடிகர் ஜெயபாலன்) ஆகிய விருதுகள் இந்த படத்துக்கு வழங்கப்பட்டன.

அதேபோல் 'ஆதாமிண்டே மகன் அபு' மலையாளப்படம் 4 விருதுகளை பெற்றது. சிறந்த நடிகருக்கான விருது (சலீம் குமார்) தவிர, சிறந்த திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவாளர் (மது அம்பட்), சிறந்த இசையமைப்பாளர் (ஐசக் தாமஸ்) ஆகிய விருதுகளும் இந்த படத்துக்கு வழங்கப்பட்டது.

4 குழந்தை நட்சத்திரங்களுக்கு விருது

'ஐ ஆம் கலாம்' என்ற படத்தில் நடித்த ஹர்ஸ் மேயர், 'சாம்பியன்ஸ்' படத்தில் நடித்த சாந்தனு ரங்னேகர், மச்சிந்திரா கடேகர், ஆகியோரும், 'பாபு பாண்ட் பாஜா' படத்தில் நடித்த விவேக் சாபுக்ஷ்வர் ஆகிய 4 சிறுவர்கள் இந்த ஆண்டுக்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதுகளை பெற்றனர்.

எந்திரன் படத்துக்கு 2 விருதுகள்

சிறந்த உடையலங்காரம் (ஜெயன்), சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (ஸ்ரீனிவாசன் மோகன்) ஆகிய விருதுகள் ரஜினி நடித்த எந்திரன் படத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஜெயனும், ஸ்ரீனிவாசனும் இந்த விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

இந்திரா காந்தி விருது

'பாபு பாண்ட் பாஜா' என்ற மராத்தி படம் இந்திரா காந்தி விருதை பெற்றது.

சல்மான்கான் நடித்த 'தபாங்' என்ற இந்திப் படம் சிறந்த ஜனரஞ்சகமான படத்துக்கான விருதை பெற்றது.

'தோ தோனி சார்' என்ற இந்திப் படம் சிறந்த இந்திப் படத்துக்கான விருதையும், 'இஷாகியா' என்ற படம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட 4 விருதுகளை பெற்றது.

வராத இந்தி நடிகர்-நடிகைகள்

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் வழக்கமாக இந்தி நடிகர்-நடிகைகளும், கலைஞர்களும் அதிக அளவில் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு இந்தி திரைப்படங்கள் குறைந்த அளவில் விருதுகளை பெற்றதால் தபாங் படத் தயாரிப்பாளர் அர்பாஸ்கான், மலைச்சா அரோரா உள்ளிட்ட ஒரு சில இந்தி சினிமா உலகப் பிரமுகர்களே விழாவில் பங்கேற்றனர்.