வாடகைக் கட்டட பிரச்சினை: கமிஷனரிடம், நடிகை சோனா புகார்

|


சென்னை: வாடகை கட்டடத்துக்கு கொடுத்த அட்வான்ஸை திருப்பித்தர உரிமையாளர் மறுத்ததால், அவர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் நடிகை சோனா நேரில் புகார் கொடுத்தார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு, நடிகை சோனா நேற்று வந்தார். போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை அவர் கொடுத்தார்.

பின்னர் நிருபர்களிடம், அவர் கூறுகையில், "நான், 'எத்ரியல் இண்டீரியர்ஸ்' என்ற மரச்சாமான்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறேன். இது போரூர் ஆலப்பாக்கம் கணேஷ் நகரில் உள்ளது. இந்த தொழிற்சாலை நடக்கும் இடத்தின் உரிமையாளர்கள் ராமலிங்கம், உஷா, ராணி, சாந்தி ஆகியோராகும்.

இவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, தொழிற்சாலையை நடத்தி வந்தேன். போரூரில் இருந்து படப்பைக்கு எனது தொழிற்சாலையை மாற்றுவதற்கு விரும்பியதால், மே மாதம் இடத்தை காலி செய்யப்போகிறேன் என்று கடந்த மார்ச் மாதம் ராமலிங்கத்துக்கு நோட்டீஸ் கொடுத்தேன்.

எனவே அட்வான்சாக கொடுத்த பணம் ரூ.7 லட்சத்தில், 3 மாத வாடகையை பிடித்தம் செய்துவிட்டு மீதியை தர வேண்டுமென்று கேட்டேன். ஆனால் பெயிண்டிங், பாத்ரூம் சுத்தம் செய்யும் பணி போன்றவற்றுக்காக பணம் சரியாக போய்விட்டது என்று பணத்தை திருப்பித்தர மறுத்துவிட்டார்.

இதனால் நாங்கள் அந்த கட்டிடத்துக்கு வேறு பூட்டுபோட்டோம். ஆனால் அதை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டனர். அங்கு எங்களுக்குச் சொந்தமான ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் உள்ளன.

இதுபற்றி மதுரவாயல் போலீசிடம் புகார் கொடுத்தேன். சிவில் வழக்கு என்பதால் வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர். எனவே இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். இந்த வழக்குக்கான அதிகார வரம்பு, புறநகர் போலீஸ் கமிஷனர் வசத்தில் வருவதால் அங்கு சென்று புகார் கொடுக்கும்படி கமிஷனர் அறிவுறுத்தினார்," என்றார்.
 

Post a Comment