ராசு மதுரவன் தந்த ரூ.75 லட்சம் மோசடி புகார்: சக்சேனா மீது புதிய வழக்கு

|


சென்னை: சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா மீது இன்னுமொரு புதிய புகார் போடப்பட்டுள்ளது. ரூ.75 லட்சம் மோசடி புகாரில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சக்சேனா மீது போலீசார் 5 மோசடி வழக்குகள் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரது உதவியாளர் அய்யப்பனும் அதே வழக்குகளில் கைது செய்யப்பட்டார். இருவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முதலில் சென்னை கே.கே.நகர் போலீசில் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் சக்சேனாவுக்கு ஜாமீன் கிடைத்தது. அந்த வழக்குகளை புகார்தாரர் கேட்டுக்கொண்டதன்பேரில் ரத்து செய்துவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். தற்போது சக்சேனா, அய்யப்பன் ஆகிய இருவர் மீதும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ராசு மதுரவன் புதிய வழக்கு

இந்த நிலையில், 'முத்துக்கு முத்தாக' படத்தின் தயாரிப்பாளர் ராசு மதுரவன், பட்டினப்பாக்கம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் மீது புதிய மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 'முத்துக்கு முத்தாக' படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ரூ.1.25 கோடிக்கு வாங்கினார்கள் என்றும், ரூ.50 லட்சம் மட்டும் தந்துவிட்டு, மீதி ரூ.75 லட்சத்தை தராமல் மோசடி செய்துவிட்டதாக கொடுத்த புகாரின் பேரில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கிலும் அவர்கள் இருவரும் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சக்சேனாவின் வங்கி கணக்கையும் முடக்கி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

Post a Comment