சினிமா துறையின் நலன் பாதுகாக்கப்படும்! - அமைச்சர் செந்தமிழன்

|


சென்னை: தமிழகத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் திரைப்பட துறையினருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. முதல்வர் ஜெயலலிதா திரைத்துறையினரின் நலன் காப்பார் என்று செய்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் உறுதியளித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று கடந்த திமுக ஆட்சியினரால் திரைப்படத் துறைக்கு ஏற்பட்ட நெருக்கடி குறித்தும், தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிட இயலாத நிலை இருப்பது குறித்தும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் மீது சிபிஐ உறுப்பினர் ஆறுமுகம், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் பேசினார்கள்.

கடந்த ஆட்சியில் ஒரு குறிப்பிட்ட குடும்பமே சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்தியது. மற்ற தயாரிப்பாளர்கள் படங்களை திரையிட முடியவில்லை.

தமிழ் பெயருக்கு வரி விலக்கு என்று அறிவித்து விட்டு அவர்கள் குடும்பம் தயாரித்த தமிழக்கு எந்த சம்பந்தமே இல்லாத எந்திரன் என்ற படத்திற்கு பல கோடி ரூபாய் வரி விலக்கு பெற்றவர்கள்.

புதிய ஆட்சி அமைந்த பிறகு அந்த நிலைமை இல்லை. சிறிய படத்தயாரிப்பாளர்கள் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும். திரைவுலகின் நலன் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அமைச்சர் உறுதி

இதற்கு பதிலளித்து செய்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் கூறியதாவது:

திரைப்படத்தை தயாரிப்பதோ, வெளியிடுவதோ தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லை. திரைப்படங்களை தயாரித்து அதனை வெளியிட முடியாத நிலை இருப்பதாக இந்த துறைக்கு புகார் எதுவும் வரவில்லை.

எவ்வளவு தொகையில் படங்கள் தயாரிக்கப்படுகிறது, அதை எப்படி வெளியிடுவது என்பதெல்லாம் தனியார் தயாரிப்பாளர்களின் பொறுப்பாகவே இருந்து வந்துள்ளது. தமிழக அரசை பொறுத்தவரை தரமான திரைப்படங்களை தயாரிப்பவர்களுக்கு 7 லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

சின்னத்திரை கலைஞர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. சிறந்த திரைப்படங்கள் நடிகர், நடிகைகளுக்கு இந்த துறையின் சார்பாக விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் திரைப்பட நகரில் பயிற்சி பெறும் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சின்னத்திரையினரையும் சேர்த்து திரைப்படத் துறையினருக்காக நல வாரியம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, முதியோர் ஓய்வுத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தவர்கள் குறிப்பிட்டது போல கடந்த ஐந்தாண்டு காலமாக திரைப்படத் துறை அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டது நூற்றுக்கு நூறு உண்மை.

இந்த துறையை கைப்பற்றிக் கொண்டு மற்றவர்களை வளர விடாமல் அவர்கள் நசுக்கினார்கள். தங்களுக்கு தெரியாமல் யாருமே திரைப்படம் தயாரிக்கவோ, வெளியிடவோ கூடாது என்று அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடியை கடைப்பிடித்து வந்தனர்.

தமிழ் தமிழ் என பேசும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் ரெட் ஜெயன்ட் கிளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொண்டு இவர்களுடைய படம் ஓடுவதற்காகவே தியேட்டர் அதிபர்களை மிரட்டி ஏற்கனவே ஓடிய படங்களை எடுக்க சொல்லும் நிலைமை எல்லாம் நடந்திருக்கிறது.

இது பற்றி நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதே பேசினோம். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகி விட்டது; எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 100 நாட்களில் நூறாண்டு சாதனைகளை புரிந்த முதல்வர் இனி திரைப்படத் துறையினரின் நலன்களையும் காப்பாற்றுவார்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

Post a Comment